LIFE GOES ON.....

LIFE GOES ON.....
Showing posts with label க்ருஷ்ணார்ப்பணம் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்). Show all posts
Showing posts with label க்ருஷ்ணார்ப்பணம் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்). Show all posts

Wednesday, May 27, 2020

க்ருஷ்ணார்ப்பணம் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

க்ருஷ்ணார்ப்பணம்
ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)


1.விண்டவர் கண்டிலர்

தேடித்தேடி இளைக்கச்செய்து
அவளை ஹரி மோசம் செய்துவிட்டதாக
கரும்புள்ளி செம்புள்ளி குத்த
காலந்தோறும் பரபரத்துக்கொண்டிருப்போருக்கு
சூடிக்கொடுத்த சுடர்க்கொடி யொரு பேதை;
காதலனால் வஞ்சிக்கப்பட்டவள்;
கண்ணீர்பெருக அவனை நினைத்துப்
பாடல்கள் எழுதியெழுதி இளைத்தவள்;
இன்(ல்)வாழ்க்கையைத் தொலைத்தவள்…..
நாச்சியார் திருமொழி பாய்ச்சும் அன்பெல்லாம்
விழலுக்கு இறைத்த நீராகிவிட்டதாய்
இறுதித்தீர்ப்பு எழுதி
கழுமேடைக்கு ஹரியெனும் காற்றை
கரகரவென்று இழுத்துச்செல்லப் பார்ப்பவர்களின்
விசாரணை வளையத்திற்கு அப்பாலானது
காற்றைக் காதலனாக அடைந்தே தீருவது என்ற
அவளின்
அசாதாரண ஊற்றனைய போதமும்
பிறவிப்பெரும் பேறாய்
காற்றோடு அவள் ஆனந்தமாய் அலைந்துதிரிந்த
அரிதரிதாம் காதமும்
உருவறு விசுவரூபக் காற்று
அவளைச் சரண் புகுந்ததும்
அதுகாலை கேட்ட சுநாதமும்
மீதமும்.

***
2.கண்டவர் விண்டிலர்

அவரிவருடைய கண்ணீரின் அர்த்தங்களை யெல்லாம்
தன் கண்ணீருக்கானதாக முன்வைத்துக் கொண்டிருப்போரிடம்
மென்சிரிப்போடு ஒன்றை மட்டுமே
திரும்பத்திரும்பக் கூறிக்கொண்டிருக்கிறாள் ஆண்டாள்:
என் ஒரேயொரு கண்ணீர்த்துளியைத் தருகிறேன்
திரியாமல் முறியாமல் திறந்து
உள்ளேயிருக்கும் உணர்வின் உணர்வை
உள்ளது உள்ளபடி
கையிலேந்திக் கொண்டுவரமுடியுமா பாருங்கள்.”
அவளறிவாள் _
அதன் வட்டம் நம் உள்ளங்கைகளில் அடங்காது.
அதன் குளிர்ச்சி சுட்டெரிக்கும்.
அதனுள்ளே தெரியும் வானவிற்கள் நம் பார்வைக்குக்
காணாதொழியும் வாய்ப்புகளே அதிகம்.
அந்த ஒற்றைக் கண்ணீர்த்துளிக்குள்
புல்லாங்குழல் உண்டு;
பிரிய குசேலர் உண்டு;
உரலில் கட்டிவைக்கப்பட்டிருக்கும்
குறும்புக் குழந்தையின் குட்டி வாய்க்குள்ளான
அகில உருண்டை உண்டு.....
ஒரு கணம் யுகமாகவும்
ஒரு யுகம் கண்ணிமைப்போதாகவும்
அந்தக் கண்ணீர்த்துளிக்குள் இயங்கும்
காலம் வேறு;
காலக்கணக்கு வேறு;
காலப்பிரக்ஞை வேறு.
வேண்டாத வேலை யிது -துண்டுபோட்டுத் தாண்டாத குறையாய் அவள் காதலைத் தோற்றதாக்குவது.
மாண்டாலும் மாறாதது ஆண்டாளின் அன்பு.
தீக்குள் விரலை வைத்தால்
நந்தலாலாவைத் தீண்டும் இன்பம் தோன்றுவது
எத்தகைய திருக்கனவு!
ஒருவகையில் உலகையே புரட்டிப்போடுவது!
விரலும் தீயும் இன்பமும் தோன்றலும் நந்தலாலாவும்
ஒருங்கிணைந்திருக்குமிந்த
ஒற்றைக் கண்ணீர்த்துளி
நேற்று பாடினாலும் நாளை பாடினாலும்
வரிகளை மீறிப்பரவும்
காற்றின் வருடல்;
குரலற்ற விளி;
பொருள் மீறிய பிரபஞ்சவெளி....