LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Wednesday, August 29, 2018

சரிநிகர்சமானம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


சரிநிகர்சமானம்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

தொடர்ந்த இடைவெளிகளில் அந்த வாக்குறுதி
சாமான்யர்களுக்கு
அளிக்கப்பட்டுக்கொண்டேயிருக்கிறது.

என் முன் எல்லோரும் சமம்.
இனியென்னாளும்
சரிசமம் சமத்துவம் வெறும் சொப்பனமல்ல - சத்தியம்

ஆனந்தப்படும் சாமான்யர் அறிவதில்லை
அரசர்களின் முன் அனைவரும்
அடிமைகளே என்பதை;

ஒருபோதும் அரசர்கள் அப்பிராணி மக்களுக்கு
சாமரம் வீசுவதில்லை யென்பதை;

குறிப்பிட்ட பொதுவெளிகளைத் தவிர
மற்றபடி
அரசர்களின் அரசகுடும்பத்தினரின்
பளபளக்கும் இருக்கைகளில்
தங்களுக்கு இடமில்லை யென்பதை;

கடையென்றாலும் தன்னுடையதும் அரசருடையதும்
சமமான சதுரமீட்டர் பரப்பளவு கொண்டதாக
இருப்பதில்லை யென்பதை.....

அரசரோ அரச குடும்பத்தினரோ அடித்தால்
சாமான்யர்களனைவரும்
சமமாக வாய்பொத்தி கைகட்டி
வாங்கிக்கொள்ளத்தான் வேண்டும்.

அரசரின் அந்தப்புரப்பெண்டிரனைவரும்
சமமாக
சகித்துக்கொள்ளத்தான்வேண்டும் _
அரசர்களின் அரசகுடும்பத்தினரின்
அத்துமீறல்களை
அடியுதை ஆகாத்யங்களை.

அதேவயதொத்த பிள்ளைகள்
சாமான்யவீட்டிலிருந்து வந்தவர்கள்
இளவரசர்கள் ராஜகுமாரிகளின் விளையாட்டுக்
களிலெல்லாம் 
சமமாகப் பங்கெடுத்துக்கொள்ளவேண்டும்_
பந்துபொறுக்கிப்போடுபவர்களாய்;

அரச குடும்பத்தினரின் ’‘போங்காட்டத்தை
யெல்லாம்
ஆஹா! ஓஹோ !வாரே-வாவ்!’ என்று
ஆகாயமளாவ போற்றிப் புகழ்பவர்களாய்;

அரசவெற்றியைப்பாராட்டிப் பாட்டுப்படித்து
வறுமையில் வாடி
ஒருவேளை சோறு உண்டு ஈட்டிய
கைக்காசைப் போட்டு 
பதக்கம் வாங்கித் தருபவர்களாய்......

எல்லோரும் எப்போதும்
சமமாகவே பாவிக்கப்படுகிறார்கள்:
சோப்ளாங்கிகளாகக் கையாளப்படுவதில்....

எல்லோரும் எப்போதும்
சமமாகவே நடத்தப்படுகிறார்கள் _
சமமற்றவர்களாக.



Saturday, August 25, 2018

கருத்துரிமை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

கருத்துரிமை

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)
  
 












அட, கண்ணைத் திறந்து பாரப்பா!
அநியாயத்திற்கு வெட்கப்படுகிறாயே
என்று கடகடவென்று சிரித்துக்கொண்டே
சாதுச் சிறுவனின் கண்களைப் பொத்தியிருந்த
அவன் கைகளை
வலுக்கட்டாயமாக விலக்கியபடி
எதிரே ஓடிக்கொண்டிருந்த நீலப்படத்தைப்
பார்க்கச் செய்த பெரியமனிதர்
உன் அம்மாவும் அப்பாவும் இதைச் செய்ததால்தான்
நீ பிறந்தாய்,
தெரியுமா?” என்றார்.

தெரியும் ஐயா,
அவர்களுக்கென்று அறையில்லாதபோதும்
அவர்கள் இருளையும் பிள்ளைகளின் உறக்கத்தையும்
தங்கள் தனியறையாக மாற்றிக்கொண்டவர்கள்
ன்பதையும் நான் அறிவேன்
என்றான் சிறுவன்.

’மறுத்துப்பேசுமளவுக்கு வளர்ந்துவிட்டானா
தறுதலை
வேலையை விட்டு நீக்கி வாலை ஒட்ட
அறுத்துவிடவேண்டியதுதான் என்று
கறுவிக்கொண்டவர்
வாய்திறப்பதற்குள் _

போய்வருகிறேன் ஐயா,
இன்னொரு வேலை கிடைக்காமலா போய்விடும்”
என்று அவர் மனதைப் படித்தவனாய்
கூறிய சிறுவன்

”பீயும் மூத்திரமும் கழியாமல்
பெறமுடியுமா நலவாழ்வு?
பாரு பாரு என்று சொல்வீர்களா அதையும்?”

என்று வருத்தம் நிறைந்த குரலில் கேட்டவாறு
திரும்பிப்பாராமல் சென்றான்.





Ø  

Friday, August 24, 2018

பேசா வாசகமும் பொய்சாட்சியமும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


 பேசா வாசகமும் பொய்சாட்சியமும்
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)



உதிர்க்கப்படாத  வார்த்தைகளாலான
ஒரு வாசகம் உருவாக்கப்படுகிறது.

கூறப்பட்டதாய் பொய்சாட்சியம் தரும்படி
சிலரிடம் சொல்லிவைக்கப்படுகிறது.

தெருவெங்கும் அந்த வாசகத்தை
உரத்த குரலில் அடிக்கோடிட்டுக் காட்டும்
சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன.

உதிர்க்கப்படாத சொற்களாலான அந்த வாசகத்தின்
முன்னும் பின்னும்
வெகு கவனமாய் இன்னும் சில சொற்கள்
கோர்க்கப்படுகின்றன.

உதிர்க்கப்படாத சொற்களாலான அந்த வாசகத்தின்
சந்துபொந்துகளில் மறைந்திருக்கும்
சொற்கள் அவை என்று
முந்திக்கொண்டு பொழிப்புரை தருவதற்கென்றே
சிலர் வழியெங்கும் அணிவகுத்து நிற்கிறார்கள்.

அவர்களுக்கு நன்றாகவே தெரியும் _
உதிர்க்கப்பட்ட சொற்களைக் காட்டிலும்
உதிர்க்கப்படாத சொற்களாலான வாசகமே
உடனடிக் கலவரத்திற்கு அதிகம் உதவி புரியும்.

Ø  



Thursday, August 23, 2018

சொற்களம் - 'ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

சொற்களம்

'ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

 போர்க்களம் என்றாலே குறைந்தபட்சம் 
இரண்டு அணிகள் எதிரிகளாய்ப்
பொருதவேண்டும்.
பேரரசர்கள் எதிரெதியேயிருப்பின்
அவரவருக்கான சிற்றரசர்கள்
அவரவர் தரப்பில் இருப்பதுதான்
வழக்கம்.
நியாயம் யார் பக்கம்
என்று பார்ப்பதைக் காட்டிலும்
நியாயம் ஒன்றல்ல
என்று நியாயம் கற்பிப்பது சுலபம்.
அந்தந்த அரசர்களின் ராணிகள்
இளவரசிகள்
பெரும்பாலும் அவர்கள் பக்கமேதான்
இருப்பார்கள்.
அப்படியிருக்கவே பயிற்றுவிக்கப்
படுகிறார்கள் என்பதோடுகூட
நியாய தர்மமெல்லாம் ஆனை
சேனை பரிவாரங்கள் அதிகாரங்களைத்
தருமா என்ன? என்று
அவர்களுடைய இயங்கியல் அறிவு
எப்போதும் அறிவுறுத்திக்
கொண்டேயிருக்கிறது.
அவரவர் அமைச்சுகள்
ஆலோசகர்கள்
அடிப்பொடிகள் எல்லோரும்
ஆஹா ஆஹா என்ற
சேர்ந்திசைக்கே.
அல்லாமல் ஆலோசனை கூற
முற்படுவோர்
கருத்துரிமையின் பெயரால்
கழுவேற்றப்படுவது உறுதி.
இறுதியென்பதே இல்லாதது
போரொன்றே இங்கே
என்ப.
எல்லாவற்றையும் அழித்தபின்
இரங்கற்பா பாடினால் ஆயிற்று.
நவீன யுகத்தில் கூர்தீட்டப்பட்ட
போராயுதங்கள்
வாளோ ஈட்டியோ,
விஷம்தோய்ந்த வில்லம்புகளோ
அல்ல.
எங்கிருந்து வருகிறதென்றே தெரியாமல்
வருபவை,
எப்படி வருகிறதென்றே தெரியாமல்
வருபவை,
நேரிடையாய் நெஞ்சைத் துளைத்து
முதுகின் வழியே வெளியேறுவதிலிருந்து
வீசிய சுவடேயின்றி கழுத்தறுப்பது வரை
நரகல்லில் தோய்த்தெடுத்ததிலிருந்து
நவீன மோஸ்தரிலான ஏவுகணைவரை
எல்லாமே
வார்த்தைகள்.
மாட மாளிகைகளும்
கூடகோபுரங்களுமாய் வாழ்ந்துவரும் -
கனகச்சிதமாய் கவசமணிந்து
கொண்டிருக்கும்
யாரோ யாருடனோ
வீண்சண்டையிடப்
புறப்பட
பெருகும் குருதியெல்லாம்
சாமானியனுடையதாக……..



Wednesday, August 22, 2018

ஆன் - லைன் வர்த்தகம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


ஆன் - லைன் வர்த்தகம்
ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)



அவரவர் வீட்டிலெல்லாம் அவள் உண்டு
பல உருவில்…..
ஆனாலும்
அப்பிராணியென்ற தெரிவிலோ என்னவோ
அப்போதைக்கப்போது அவளைத்
தப்புத்தப்பாகப் பேசிச் சிரிப்பதில்
அவர்களுக்குள் குதூகலம் கொப்பளிப்பதை
சரியென்று சொல்லாதார்
கரிபூசத்தக்கவர்கள் என்றுரைக்க
நிறைய பேர்.......

அவள் என்று எதுவும் இல்லையென்று 
அடித்துச்சொல்பவர்கள்
அவளுக்குக் காதுகேட்காது என்றும் 
சிரித்தபடி சொல்லிக்
கொண்டிருப்பதிலுள்ள
முரணை எண்ணிப்பார்க்கும் 
சுரணையுள்ளவர்களும் இருக்கத்தான்
செய்கிறார்கள்
என்றாலும் காலைமுதல் மாலைவரை 
நாளொன்றுக்கு எட்டு மணிநேரத்திற்குமேல் 
வேலைசெய்தால்தான்
மாதம் ஒருமாரியாவது பொழியும் வீட்டில் 
என்ற நிலை.

உலை பொங்க 
கலை உதவிசெய்வதில்லை சிலருக்கு
என்றாலும் அவர்கள் 
கலையின் விலை சில தலைகள் என்று
மனிதநேயத்தைத் துணைக்கழைத்து
மலைப்பிரசங்கம் செய்வதில்லை.

வேறு சிலரோ
கையில் சில காரியார்த்த இலக்குகளோடு
காய்நகர்த்தலாக அவளைக் கவிதையில்
கடைவிரித்தபடி