‘ரிஷி’
(லதா
ராமகிருஷ்ணன்)
உதிர்க்கப்படாத வார்த்தைகளாலான
ஒரு வாசகம் உருவாக்கப்படுகிறது.
கூறப்பட்டதாய்
பொய்சாட்சியம் தரும்படி
சிலரிடம் சொல்லிவைக்கப்படுகிறது.
தெருவெங்கும் அந்த
வாசகத்தை
உரத்த குரலில்
அடிக்கோடிட்டுக் காட்டும்
சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன.
உதிர்க்கப்படாத
சொற்களாலான அந்த வாசகத்தின்
முன்னும் பின்னும்
வெகு கவனமாய் இன்னும்
சில சொற்கள்
கோர்க்கப்படுகின்றன.
உதிர்க்கப்படாத
சொற்களாலான அந்த வாசகத்தின்
சந்துபொந்துகளில்
மறைந்திருக்கும்
சொற்கள் அவை என்று
முந்திக்கொண்டு
பொழிப்புரை தருவதற்கென்றே
சிலர் வழியெங்கும்
அணிவகுத்து நிற்கிறார்கள்.
அவர்களுக்கு நன்றாகவே
தெரியும் _
உதிர்க்கப்பட்ட
சொற்களைக் காட்டிலும்
உதிர்க்கப்படாத
சொற்களாலான வாசகமே
உடனடிக் கலவரத்திற்கு
அதிகம் உதவி புரியும்.
Ø
No comments:
Post a Comment