LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, August 23, 2018

சொற்களம் - 'ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

சொற்களம்

'ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

 போர்க்களம் என்றாலே குறைந்தபட்சம் 
இரண்டு அணிகள் எதிரிகளாய்ப்
பொருதவேண்டும்.
பேரரசர்கள் எதிரெதியேயிருப்பின்
அவரவருக்கான சிற்றரசர்கள்
அவரவர் தரப்பில் இருப்பதுதான்
வழக்கம்.
நியாயம் யார் பக்கம்
என்று பார்ப்பதைக் காட்டிலும்
நியாயம் ஒன்றல்ல
என்று நியாயம் கற்பிப்பது சுலபம்.
அந்தந்த அரசர்களின் ராணிகள்
இளவரசிகள்
பெரும்பாலும் அவர்கள் பக்கமேதான்
இருப்பார்கள்.
அப்படியிருக்கவே பயிற்றுவிக்கப்
படுகிறார்கள் என்பதோடுகூட
நியாய தர்மமெல்லாம் ஆனை
சேனை பரிவாரங்கள் அதிகாரங்களைத்
தருமா என்ன? என்று
அவர்களுடைய இயங்கியல் அறிவு
எப்போதும் அறிவுறுத்திக்
கொண்டேயிருக்கிறது.
அவரவர் அமைச்சுகள்
ஆலோசகர்கள்
அடிப்பொடிகள் எல்லோரும்
ஆஹா ஆஹா என்ற
சேர்ந்திசைக்கே.
அல்லாமல் ஆலோசனை கூற
முற்படுவோர்
கருத்துரிமையின் பெயரால்
கழுவேற்றப்படுவது உறுதி.
இறுதியென்பதே இல்லாதது
போரொன்றே இங்கே
என்ப.
எல்லாவற்றையும் அழித்தபின்
இரங்கற்பா பாடினால் ஆயிற்று.
நவீன யுகத்தில் கூர்தீட்டப்பட்ட
போராயுதங்கள்
வாளோ ஈட்டியோ,
விஷம்தோய்ந்த வில்லம்புகளோ
அல்ல.
எங்கிருந்து வருகிறதென்றே தெரியாமல்
வருபவை,
எப்படி வருகிறதென்றே தெரியாமல்
வருபவை,
நேரிடையாய் நெஞ்சைத் துளைத்து
முதுகின் வழியே வெளியேறுவதிலிருந்து
வீசிய சுவடேயின்றி கழுத்தறுப்பது வரை
நரகல்லில் தோய்த்தெடுத்ததிலிருந்து
நவீன மோஸ்தரிலான ஏவுகணைவரை
எல்லாமே
வார்த்தைகள்.
மாட மாளிகைகளும்
கூடகோபுரங்களுமாய் வாழ்ந்துவரும் -
கனகச்சிதமாய் கவசமணிந்து
கொண்டிருக்கும்
யாரோ யாருடனோ
வீண்சண்டையிடப்
புறப்பட
பெருகும் குருதியெல்லாம்
சாமானியனுடையதாக……..



No comments:

Post a Comment