LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Wednesday, September 13, 2017

பாரதியார் - பன்முகங்கள், பல்கோணங்கள்- டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன்

பாரதியார்
பன்முகங்கள் - பல்கோணங்கள்
டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன்
கட்டுரைகள்
தொகுப்பாக்கம்
லதா ராமகிருஷ்ணன்
(
வெளியீடு : அநாமிகா ஆல்ஃபபெட்ஸ்
பக்கங்கள் : 200
விலை: ரூ.150
(
விற்பனைக்கு: புதுப்புனல் பதிப்பகத்தில்)

ஏன் இந்த நூல்?

பாரதியாரைப் பற்றி ஏராளமான நூல்கள் வெளிவந்திருக்கின்றன. இனியும் வெளிவரும்.அத்தனை அகல்விரிவும் பல்பரிமாணமும் கொண்டவை பாரதியின் கவித்துவம்.

பாரதி ஒருவரேயென்றாலும் அவரை வாசிப்பவர்கள் அனேகம். எனவே பல வாசிப்புப்பிரதிகளும் சாத்தியம்.

அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு பாரதியை புதிதாக அறிமுகம் செய்துவைக்க வேண்டிய தேவையிருக்கிறது.

பாரதியை அணுகுபவர்களில் நுனிப்புல் மேய்கிறவர்களுண்டு; நாவன்மையை வெளிப்படுத்துவதற்காகப் பயன்படுத்திக் கொள்பவர்கள் உண்டு. ஆய்வுநோக்கில் மட்டுமே அணுகுபவர்கள் உண்டு. வாழ்வனுபவமாக அவரை வாசித்து உள்வாங்கிக் கொள்பவர்கள் உண்டு.

டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் நான்காம் வகை.

பாரதியாரின் ஏராளமான கவிதைகள் அவருக்கு மனப்பாடம். பேச்சின் நடுவே, மனதிற்குப் பிடித்த வரிகளை வெகு இயல்பாக நினைவுகூர்வார்; மேற்கோள்காட்டுவார். வாய்விட்டு அவற்றைஉரக்கச் சொல்லிக்காட்டுவார். அவர் குரல் தழுதழுத்து கண்ணில் நீர் துளிர்ப்பதைப் பார்த்திருக்கிறேன்.

பாரதியை வாழ்நெறியாக வரித்துக்கொண்டவராய் எத்தரப்பு மனிதர்களையும் உரிய மரியாதையோடு சமமாக நடத்துவார். குறிப்பாக, எழுத்தாளர்களை, அவர்கள் வயிற்றுப்பிழைப்புக்காக எந்தப் பணியில் இருப்பினும், படைப்பாளியாய் மட்டுமே பார்த்து அன்போடும் தோழமையோடும் நடத்துவார். திறந்த மனதோடு பிரதிகளையும் மனிதர்களையும் அணுகுபவர். எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் என்ற வள்ளுவன் வாக்கின்படி, யார் சொல்லால், செயலால், படைப்பால் என்ன நல்லது, செறிவானது செய்தாலும் மனதாரப் பாராட்டுவார்.

அவர் மொழிபெயர்த்துள்ள படைப்புகள் - ஜெயகாந்தன் எழுத்தாக்கங்கள், பாரதியினுடைய கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நவீன தமிழ்க்கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு, CODE NAME GOD என்ற உலகப்புகழ் பெற்ற நூலின் மிகச் செறிவான தமிழ்மொழியாக்கம் - கடவுளின் கையெழுத்து -- ஆன்மிகம் - அறிவியலின் சந்திப்புப் புள்ளிகளைத் தொட்டுக் காட்டும் படைப்பு, சிந்தனை ஒன்றுடையாள் என்ற அரிய தமிழ்சமஸ்கிருத இணைவரிகள் இடம்பெற்றிருக்கும் நூல்குறிப்பிடத்தக்கவை. கே. எஸ்.சுப்பிரமணியத்தின் சமூகம்-இலக்கியம்ஆளுமைகள் தொடர்பான கட்டுரைகள் அடங்கிய தொகுதிகளும் குறிப்பிடத்தக்கவை

பாரதியாரின் பல்பரிமாணங்களைப் பற்றி டாக்டர் கே.எஸ்.சுப்பிர மணியன் விரிவாக எழுதியுள்ள கட்டுரைகளை அவருடைய கட்டுரைத் தொகுப்புகள் சிலவற்றில் படிக்கக் கிடைத்தபோது இவையனைத்தும் ஒரே தொகுப்பாக வெளிவந்தால் நன்றாயிருக்குமே என்று தோன்றியது

அப்படி ஒரு தொகுப்பைக் கொண்டு வர அவரிடம் அனுமதி கோரிய போது, வெவ்வேறு தருணங்களில் எழுதப்பட்ட கட்டுரைகள் என்பதால் சில கருத்துகள் திரும்பத்திரும்பச் சொல்லப்பட்டி ருக்குமே என்று தயங்கினார். பரவாயில்லை, ஒருவிதத்தில் அவை பாரதியின் சில முக்கிய அம்சங்களை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக அமையும் என்று சொல்லி ஒப்புதல் பெற்றேன்

அனுமதியளித்த டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் அவர்களுக்கு என் ஆத்மார்த்தமான நன்றி

பாரதியார் கவிதைகள் பலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக் கிறார் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன். அவற்றில் சிலவற்றை பாரதியின் மூல கவிதைகளோடு இந்தத் தொகுப்பில் இடம்பெறச் செய்திருப்பது நிறைவளிக்கிறது
இந்த நூலின் முகப்பு அட்டைக்கு பரீக்க்ஷா ஞாநி அவர்களின் பாரதி கோட்டோவியத்தைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி கேட்டபோதுஉள்ளது உள்ளபடிவெளியிடுங்கள் என்ற வேண்டுகோளுடன் அனுமதி அளித்தார். அவருக்கும் என் நன்றி உரித்தாகிறது

நூலை நேர்த்தியாக வடிவமைத்திருக்கும் விக்னேஷ் பிரிண்ட்ஸ்க்கு என் அன்பும் நன்றியும்

தோழமையுடன் 
லதா ராமகிருஷ்ணன் 
மே 2017

கவிஞர் வைதீஸ்வரன் - தமிழ் இலக்கியவிரிவெளியில்

மதிப்புரைகள், அறிமுகங்களை எதிர்பார்த்து எதுவும் எழுதுவதில்லை, வெளியிடுவதில்லை என்றாலும், நம்முடைய எழுத்துமுயற்சி, வெளியீட்டு முயற்சி குறித்து ஒரு நடுநிலையான, அகல்விரிவான, நம் முயற்சியின் சாரத்தை அருமையாக எடுத்துக்காட்டுவதாய் அமையும் மதிப்புரைகள் நமக்கு என்றுமே உற்சாகமளிக்கத் தவறுவதில்லை. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் சார்பில் வெளியாகும் உங்கள் நூலகம் மாத இதழில் இந்த மாதம் அநாமிகா ஆல்ஃபபெட்ஸ் வெளியீடானவைதீஸ்வரன் கவிதைகள் - தமிழ் இலக்கிய விரிவெளியில் என்ற நூல் குறித்து வெளியாகியுள்ள அகல்விரிவான மதிப்புரை அத்தகைய உத்வேகமளிக்கிறது. மூத்த கவிஞர் வைதீஸ்வரன் இன்றளவும் இலக்கியப் பங்களிப்பு செய்துவருபவர். தமிழ் இலக்கிய வெளியில் அவருடைய பங்களிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து, உணர்த்துவதாய் எழுதப்பட்டிருக்கும் இந்த மதிப்புரையை எழுதியிருக்கும் திரு. ஜி. சரவணனுக்கும், வெளியிட்டிருக்கும் உங்கள் நூலகம் ஆசிரியர் குழுவுக்கும் என் மனமார்ந்த நன்றி உரித்தாகிறது. தோழமையுடன் லதா ராமகிருஷ்ணன்.

யார் (* குறிப்பு – என்னளவில் இது கவிதையாகாத கவிதை!) ரிஷி

யார்
(*
குறிப்புஎன்னளவில் இது கவிதையாகாத கவிதை!)
ரிஷி



நீ யார்
நான்தான்
நான் யார்
நீதான்
யார் தான்
நான் நீ
யார்
தான் அறியா
நான் அறியா
நீ அறியா
யார் தான்
நான் நீ
தான்

உட்குறிப்புகள் ’ரிஷி’ ((லதா ராமகிருஷ்ணன்)


உட்குறிப்புகள்
ரிஷி’ ((லதா ராமகிருஷ்ணன்)
அஞ்சலிக்கூட்ட இதழை ஆரவாரமாக நடத்துவது
அந்த மாமாற்றிதழின் மனிதநேயக் கோட்பாடு
இதழின் நான்கு மூலைகளிலும் மங்கல மஞ்சளாய்க் காணும் _
படைப்பாளி உயிரோடிருந்தபோது (அப் பத்திரிகை) அவரை அவமதித்த
காயத்தின் ரணக்கசிவுச் சிவப்பு.
Ø
இருக்கும்போதெல்லாம் ஏசிக்கொண்டிருந்தவரை இறந்தவுடன் பூசனைக்குரியவராக்கிப் பேசியது ஏனென்று புரியாமல்
நாளெல்லாம் குழம்பிநின்றேன் ரொம்பத்தான்
வாழ்ந்தகாலத்தில் வாழ்த்திப்போற்றிப் பிரசுரித்தோரை
வாகாய் ஓரங்கட்டி
இறந்துவிட்ட படைப்பாளியின் எழுத்துகளைப் பிரசுரிக்கும் உரிமையைப் பறித்துக்கொண்டதைப் பார்த்ததில்
பிடிபட்டுவிட்டது போதிமரம்.
Ø
உண்மைக்கவியைக் கொண்டாட ஒருநாளும் தவறமாட்டார் அவர்....
மரத்தில் கட்டிவைத்து, மளுக்கென்று எலும்பு முறித்து
ஒரு கண்ணைப் பிடுங்கியெறிந்து, முதுகில் முட்கம்பி நுழைத்து
விதவிதமாய்ச் சித்திரவதை செய்து, சிறுகச் சிறுகச் சாகடித்து
கொண்டாடிக்கொண்டிருக்கிறார் அவர்
உண்மைக்கவிகளையெல்லாம்.
Ø
அதிநவீன தமிழ்க்கவிதைக்கு நாலாயிர சொச்சம் பக்கங்களில்
ஒற்றையர்த்தத்தை நிறுவிகொண்டேபோய்
நல்லதொரு மாமுனைவர் பட்டம் பெற்றுவிட்டபின்
தன் மாணாக்கர்களுக்கு அன்பளிப்பாய்த் தந்தார்
தானெழுதிய கண்றாவிக் கவிதைகளடங்கிய தொகுப்பை.
Ø
ஐந்து வார்த்தைகள் தமிழில், இரண்டொன்று ஆங்கிலத்தில்;
தேவைப்பட்டால் இந்தி, ஹீப்ரூ, இஸ்பானிய மொழிகள்
இடையிடையே சிலகணங்கள் மௌனம்,
கூரையை வெறிக்கும் பார்வை கையறுநிலையைக் குறிக்க,
பையப்பையச் சுருங்கிவிரியும் புருவம் பேரறிவுசாலியாக்க,
மேலுயரும் மூடிய உள்ளங்கை
மானுடவாழ்வின் ரகசியங்களைக் குறிப்புணர்த்த,
ஊறிக்கொண்டேயிருக்கும் உதட்டோர இகழ்ச்சிச்சிரிப்பு
உன்னதங்களெல்லாம் தானே என பறையறிவித்தபடியிருக்க

இதுபோதும் _
எல்லா உளறல்களும் உத்தமப்பேச்சாகிவிடும்.


Thursday, January 26, 2017

ஆளுமை

ஆளுமை
ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)


 ஆம், நான் ராணிதான்.
தங்கமும் வைரமும் இழைத்த கிரீடத்தைவிட
இந்தச் சிறகுகள் செருகப்பட்ட மணிமகுடம்தான்
விலைமதிப்பற்றது எனக்கு.
எனக்கு நட்சத்திரங்களோடு விளையாடப்போகவேண்டும்.
எனக்காக ஐஸ்க்ரீமும் பொம்மைக்காரும் வாங்கிவரப்போகின்றன
சிங்கமும் புலியும்.
நடுக்கடலில் எனக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது திமிங்கலம்
தின்பண்டம் ஏதாவது தரும்....

தத்துப்பித்தென்று பேசுவது குழந்தையின் இயல்பு;
வளர்ந்தவர்களுக்கு அழகு குத்திக்கிழிப்பது

இரங்கற்பா

இரங்கற்பா
ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)
   

பின்பக்கத்தாளின் கீழ்க்கோடியில்
பொடி எழுத்துகள் அடுக்கப்பட்ட வரிகளில்
கருப்பு-வெள்ளையிலோ
கண்கவர் வண்ணத்திலோ,

அல்லது _
இரண்டாம் பக்கத்தில்
சற்றே பெரிய அச்சிலான
இரு பத்திகளில்

இல்லை, டோலக்கு ஆட ஆட
அதற்கேற்ப தலையும் கையும் அபிநயிக்க
மைக்கை நேராக உங்கள் குரல்வளைக்குள் இறக்கி
கருத்துரைக்கச்சொல்லும்
இருபது தேசிய பிரதேசிய, பரதேசிய
முக்கியத் தொலைக்காட்சிச் சானல்களில்

சில சாவுகள் அடக்கம்செய்யப்பட்டுவிடுகின்றன
வெறும் செய்தியாக மட்டுமே.



எளிய வேண்டுகோள்

எளிய வேண்டுகோள்
'ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)
 

 என் அன்பில் உயிர்க்கும் குட்டியானை.
நீங்கள் பழமும் தரவேண்டாம்;
பள்ளத்தில் விழச்செய்து 
கால்களில் சங்கிலியும் இடவேண்டாம்.
இன்னும் அரைமணிநேரம் 
எங்களை விளையாட விடுங்கள் போதும்.
பின் என் குட்டியானை மீண்டும் உங்கள் 
கைப்பாவையாகிவிடும்;

நானும்.

பறவைப்பார்வையைப் பொருள்பெயர்த்தல் - 1

பறவைப்பார்வையைப் பொருள்பெயர்த்தல் - 1
ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

புள்ளினம் பேசாது;
புதுக்கண்டுபிடிப்புகள் அதற்கில்லை;
ஆறாம் அறிவில்லை;
அந்த நாள் ஞாபகம் வந்ததில்லை
யார் சொன்னது சகவுயிரே….
எம் ஒரு சிறகடிப்பு உங்கள் ஓராயிரம் வார்த்தைகளைப் பொருளற்றதாக்கும்;
எங்கள் ஞாபக விரிவு வாமனனின் மூவடித்திறம்.
இருந்தும் நாம் ஒருங்கிணைந்த வெளியொன்றில்
என் சிறகை உனக்கு உயில் எழுதவும்
உன் குரலில் உருகிக் கரையவும்
ஏங்கும் என் மனதின் கனாவில்
நாமொரு உடலின் முதலும் முடிவுமாய்.

* * * * *

உணவுக்கான இரையாக கணப்பொழுதில்
சுட்டுவீழ்த்திவிட்டால்கூடப் பரவாயில்லை.
காலில் நூல் கட்டி வானத்தில் பறக்கவிட்டு
ஒரேநேரத்தில் அத்தனை பேரும்
கைத்துப்பாக்கிகளை உயரே குறிபார்த்து நீட்டும்போது
என்னமாய் நடுங்கித் துவள்கிறது என் சின்ன மனம்….
வலுவிழந்துபோகும் இறக்கைகளுடன்
வானக்கூரையின் கீழ் என்னைக் காப்பாற்றிக்கொள்ள வழிதெரியாமல் எப்படியெல்லாம் பரிதவித்துப்போகிகிறேன்…..
அவர்கள் கையிலிருப்பது பொம்மைத்துப்பாக்கிகளாம்
ஆனால் என் உயிர்வலி எத்தனை உண்மையானது.

* * * * *

சில நேரம் Sea-gull;
சில நேரம்சிட்டுக்குருவி;
சில நேரம் காகம்;
சில நேரம் சக்கரவாகம்;
சில நேரம் கொக்கு;
சில நேரம்…….
எக்குத்தப்பாய் போட்டுவிட்ட எதுகைக்கு
மோனை கிடைக்காத துக்கத்தில்
உனக்குள்ளிருக்கும் நீ பார்த்தறியாபுல்புல்பறவை
இசைக்க மறக்க,
இன்றோ என்றோ இன்றான என்றோ
என்றான இன்றோ
இந்தக் கவிதை தொடர்வதும்,
காலாவதியாவதும்
கவிதை யாவதும்
ஆகாததுமான யாவுமே
ஆன வாழ்வின்
ஆகச்சிறந்த கொடுப்பினை
(
நீயே)தானாக.