LIFE GOES ON.....

LIFE GOES ON.....
Showing posts with label பல்கோணங்கள்- டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன். Show all posts
Showing posts with label பல்கோணங்கள்- டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன். Show all posts

Wednesday, September 13, 2017

பாரதியார் - பன்முகங்கள், பல்கோணங்கள்- டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன்

பாரதியார்
பன்முகங்கள் - பல்கோணங்கள்
டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன்
கட்டுரைகள்
தொகுப்பாக்கம்
லதா ராமகிருஷ்ணன்
(
வெளியீடு : அநாமிகா ஆல்ஃபபெட்ஸ்
பக்கங்கள் : 200
விலை: ரூ.150
(
விற்பனைக்கு: புதுப்புனல் பதிப்பகத்தில்)

ஏன் இந்த நூல்?

பாரதியாரைப் பற்றி ஏராளமான நூல்கள் வெளிவந்திருக்கின்றன. இனியும் வெளிவரும்.அத்தனை அகல்விரிவும் பல்பரிமாணமும் கொண்டவை பாரதியின் கவித்துவம்.

பாரதி ஒருவரேயென்றாலும் அவரை வாசிப்பவர்கள் அனேகம். எனவே பல வாசிப்புப்பிரதிகளும் சாத்தியம்.

அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு பாரதியை புதிதாக அறிமுகம் செய்துவைக்க வேண்டிய தேவையிருக்கிறது.

பாரதியை அணுகுபவர்களில் நுனிப்புல் மேய்கிறவர்களுண்டு; நாவன்மையை வெளிப்படுத்துவதற்காகப் பயன்படுத்திக் கொள்பவர்கள் உண்டு. ஆய்வுநோக்கில் மட்டுமே அணுகுபவர்கள் உண்டு. வாழ்வனுபவமாக அவரை வாசித்து உள்வாங்கிக் கொள்பவர்கள் உண்டு.

டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் நான்காம் வகை.

பாரதியாரின் ஏராளமான கவிதைகள் அவருக்கு மனப்பாடம். பேச்சின் நடுவே, மனதிற்குப் பிடித்த வரிகளை வெகு இயல்பாக நினைவுகூர்வார்; மேற்கோள்காட்டுவார். வாய்விட்டு அவற்றைஉரக்கச் சொல்லிக்காட்டுவார். அவர் குரல் தழுதழுத்து கண்ணில் நீர் துளிர்ப்பதைப் பார்த்திருக்கிறேன்.

பாரதியை வாழ்நெறியாக வரித்துக்கொண்டவராய் எத்தரப்பு மனிதர்களையும் உரிய மரியாதையோடு சமமாக நடத்துவார். குறிப்பாக, எழுத்தாளர்களை, அவர்கள் வயிற்றுப்பிழைப்புக்காக எந்தப் பணியில் இருப்பினும், படைப்பாளியாய் மட்டுமே பார்த்து அன்போடும் தோழமையோடும் நடத்துவார். திறந்த மனதோடு பிரதிகளையும் மனிதர்களையும் அணுகுபவர். எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் என்ற வள்ளுவன் வாக்கின்படி, யார் சொல்லால், செயலால், படைப்பால் என்ன நல்லது, செறிவானது செய்தாலும் மனதாரப் பாராட்டுவார்.

அவர் மொழிபெயர்த்துள்ள படைப்புகள் - ஜெயகாந்தன் எழுத்தாக்கங்கள், பாரதியினுடைய கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நவீன தமிழ்க்கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு, CODE NAME GOD என்ற உலகப்புகழ் பெற்ற நூலின் மிகச் செறிவான தமிழ்மொழியாக்கம் - கடவுளின் கையெழுத்து -- ஆன்மிகம் - அறிவியலின் சந்திப்புப் புள்ளிகளைத் தொட்டுக் காட்டும் படைப்பு, சிந்தனை ஒன்றுடையாள் என்ற அரிய தமிழ்சமஸ்கிருத இணைவரிகள் இடம்பெற்றிருக்கும் நூல்குறிப்பிடத்தக்கவை. கே. எஸ்.சுப்பிரமணியத்தின் சமூகம்-இலக்கியம்ஆளுமைகள் தொடர்பான கட்டுரைகள் அடங்கிய தொகுதிகளும் குறிப்பிடத்தக்கவை

பாரதியாரின் பல்பரிமாணங்களைப் பற்றி டாக்டர் கே.எஸ்.சுப்பிர மணியன் விரிவாக எழுதியுள்ள கட்டுரைகளை அவருடைய கட்டுரைத் தொகுப்புகள் சிலவற்றில் படிக்கக் கிடைத்தபோது இவையனைத்தும் ஒரே தொகுப்பாக வெளிவந்தால் நன்றாயிருக்குமே என்று தோன்றியது

அப்படி ஒரு தொகுப்பைக் கொண்டு வர அவரிடம் அனுமதி கோரிய போது, வெவ்வேறு தருணங்களில் எழுதப்பட்ட கட்டுரைகள் என்பதால் சில கருத்துகள் திரும்பத்திரும்பச் சொல்லப்பட்டி ருக்குமே என்று தயங்கினார். பரவாயில்லை, ஒருவிதத்தில் அவை பாரதியின் சில முக்கிய அம்சங்களை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக அமையும் என்று சொல்லி ஒப்புதல் பெற்றேன்

அனுமதியளித்த டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் அவர்களுக்கு என் ஆத்மார்த்தமான நன்றி

பாரதியார் கவிதைகள் பலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக் கிறார் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன். அவற்றில் சிலவற்றை பாரதியின் மூல கவிதைகளோடு இந்தத் தொகுப்பில் இடம்பெறச் செய்திருப்பது நிறைவளிக்கிறது
இந்த நூலின் முகப்பு அட்டைக்கு பரீக்க்ஷா ஞாநி அவர்களின் பாரதி கோட்டோவியத்தைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதி கேட்டபோதுஉள்ளது உள்ளபடிவெளியிடுங்கள் என்ற வேண்டுகோளுடன் அனுமதி அளித்தார். அவருக்கும் என் நன்றி உரித்தாகிறது

நூலை நேர்த்தியாக வடிவமைத்திருக்கும் விக்னேஷ் பிரிண்ட்ஸ்க்கு என் அன்பும் நன்றியும்

தோழமையுடன் 
லதா ராமகிருஷ்ணன் 
மே 2017