LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, May 26, 2020

நோய்மை ‘ரிஷி’ - (லதா ராமகிருஷ்ணன்)


நோய்மை
ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

 அகன்று விரிந்த சாலையில் ஓரமாகக் கிடக்கும்
வறிய வாழ்வுகளைக்கண்டுங்காணாமல் விரைந்துகொண்டிருந்தவர்கள்தான் நாம்.
அடுத்தவரைக் குறைபேசியே
நம்மாலாகும் கடுகளவு சகமனிதக்
கடமையைக்கூடச் செய்யாமல்
காலெட்டிவைத்து அப்பால் போய்க்கொண்டிருக்கப்
பழகிவிட்டவர்கள்….
பாதிக்கப்பட்டவர்கள் பாவம் தாங்குவதில்
நடிப்புக்கு நோபெல் விருது இருந்தால்
அது கண்டிப்பாக நமக்குத்தான்.
ஆள்பவர்களையெல்லாம் ஆக்ரோஷமாகப்
பழிப்பதும் சபிப்பதுமே
நம் மனிதநேயத்தின்அக்மார்க்முத்திரையாக _
அதைத் ஸெல்ஃபி எடுத்துப்போடுவதைக் காட்டிலும்
ஆகப்பெரிய சமூகப்பணி இருக்கமுடியுமா என்ன?
ஒரு பேரவலத்தின் பிடியில் அகப்பட்டு
சிறிய அறையில் முடங்கிக்கிடக்கும் நேரம்
திரும்பத்திரும்ப துயருரும் வறியவர்கள்
சிறிய இன்னும் சிறிய சதுர,நீள்சதுரக் கண்ணாடிப்பெட்டிகளிலிருந்து
அத்தனை நெருக்கத்தில் கண்ணீர்பெருக்கும்போது
தன்னையுமறியாமல் மேலெழும்பும் மனசாட்சி
நம்மைக் குற்றவாளிக்கூண்டில் ஏற்றுகிறது.
அவசர அவசரமாக அதன் வாயை மூடி
பாதிக்கப்பட்டவராக நம்மை முன்னிறுத்தும் முயற்சியில்
உரக்கக் கூவுகிறோம்; கதறுகிறோம்
தாவி குதித்துத் தரையில் புரண்டு துடிக்கிறோம்;
தெரிந்தே பொய் பேசுகிறோம்.
பறந்துகொண்டிருக்கும் பணக்காரர்களால் வந்தது
இந்தப் பேரிடர்
என்று அடித்துச்சொல்கிறார் நம்மில் ஒருவர்
அடிக்கடி அவர் பல நாடுகளுக்குப் பறந்தவர்; பறந்துகொண்டிருப்பவர்;
பறக்கப்போகிறவர்
.


No comments:

Post a Comment