LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, May 26, 2020

நோஞ்சான் உண்மையிடம் இல்லாத ஒளிவட்டம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

நோஞ்சான் உண்மையிடம் 

இல்லாத 
ஒளிவட்டம்

‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)

நலிவடைந்து நோஞ்சானாய் நிற்கும் 

நிஜத்தைப் பார்க்கவோ பேசவோ

யாருக்கும் நேரமிருப்பதில்லை.


உலகம் உருண்டையானது என்று

கூறியவருக்கு என்ன நேர்ந்தது 

நினைவிருக்கிறதா?


நினைத்த நேரத்தில் நினைத்த வடிவத்தில்

உண்மையை வனைய முடியாது என்பதால்

யாருக்கு வேண்டும் இந்த உண்மை?


பொய்யின் பலவண்ணங்களோடு ஒப்பிட

உண்மையின் நிறமின்மையைை எப்படி

சிலாகிக்கமுடியும்?


தவிர, அதை அரசியல்வாதிகளுடைய வேட்டி

சட்டையோடு

ஒப்பிட்டுக் கறைப்படுத்திவிடுவதும்

எளிதுதானே.

பேருக்கு உண்மைவிளம்பிகளாக 

இருந்துகொண்டே

நூறுவிதமாகப் பொய்யை

உயர்த்திப்பிடிப்பதில்தான் உயர்விருக்கிறது

என்பதை அறிந்தபின்

கூறத்தகுமோ உண்மையை உண்மையாக?


’பாதி உண்மை’ என்று சொல்ல

பொய்க்கும் ஒரு ’பவுசு’ கிடைத்துவிடும்.


அயராமல் பொய்யுரைத்துக்கொண்டே அந்தப்

பொய்களையெல்லாம்
உண்மையின் பன்முகங்களாகப் 

புரியவைப்பதில்
ஆளுக்கொன்றோ சிலவோ
ஒளிவட்டங்களும் கிடைக்க வழியுண்டு.

பின், வேறென்ன வேண்டும்?

No comments:

Post a Comment