LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Friday, January 3, 2014

அகமும் புறமும்
ரிஷி
[முதல் தொகுப்பு அலைமுகம்-இலிருந்து]


‘ஹிட்லர்’ இறந்துவிட்ட பிறகும்
நகரும் வதைமுகாம்களில்
ஊன் கருகி யுடலங்களிலிருந்து பிதுங்கி
உயிர் தெறித்து விழுந்த ஐம்பதின் மேற்பட்டோர் தம்
அகில உலகப் பிரதிநிதிகளாய்.
பத்துத் துப்பாக்கிகளும் துக்கிரிகளும் இருந்தால் போதும்
சுத்த மொட்டைத் தலையன்களும்
சர்வாதிகாரியாகிவிட லாகும்.
நாளும் பட்டினியில் இறப்போர் புள்ளிவிவரங்களில்
கூட்டல் கழித்தல் திறம் கைவரப் பெறும்.
உறும் அதிநெருக்க உறவின் செக்குச்சுழற்சி யழிக்கும்
ஆசுவாசம் சாசுவதத்தின்
பேசுமொழியில் புரிபடாதொழியும் பெருங்
குறுங்கதைகள்
உன் என் கண் வழியாது இறுகிக் கிடக்கும்
கணங்களின் வாசப் பூவும் வீசும்
கையெறிகுண்டுகளிலுண்டு
தின்று தீராப் பாவம் ஆதாமும் ஏவாளும்
தத்தமது வழி மேவப் பிறந்திருக்காது
வையகம் போலும் கையகம் நாலிருக்க
நன்னுமோ ஒன்றிரண்டெனும் நம்பிக்கை
வழிநடத்த அக புறங்களி லகப்பட்ட உயிர்
மருளும் இருளும் பகலுமாய்
உருளும் பயணத்தில்
இங்குமங்குமாய் முளைக்கும் சில மயானங்கள்
சிதையிலிருந்து என் கை கிளம்பி
நெருப்பைத் தள்ளிய வாறு
தன்னைக் கிள்ளிப்பார்த்திருக்கும் தானே
யான பிறிதாய் சிறிதாய் பெரிதாய்
ஆட்சிகள் மாறி மாறி அரங்கேற்றும் எதிர்
பார்ப்புகளி லூறி வரும் ஏமாற்றம் என்றும்
அடிபட்டு மிதிபட்டுக் கைப்பற்றிய காசில்
வலிமறந்த கிரிக்கெட் தாகம்
கானல்நீராகும் சூதாட்டத்தில்
பாதாள உலகையும் படம்பிடிக்கும் தனியார்
அலைவரிசைகளில்
சாணம் மணப்பது தலைப்புச் செய்தியாகும்
கொலையுண்டு தேயும் இலங்கைத் தீவில்
பூச்சூடும் நினைப்புண்டாமோ பேதையர்க்கு?
யாதும் ஊர் யாவரும் கேளிரானதில்
அடித்துக்கொல்ல அனுமதி தேவையில்லை
இல்லாரும் இருப்பாரும் மலிந்த உலகில்
யானை வலையில் சிக்கிக் கொள்ள
பூனை எக்கித் தப்பிவிடும்.
ஒப்பித்தல் கலையில் தேர்ச்சி பெற்றால் போதும்
ஓஹோவென்றாகிவிட முடியும்.
படியுமென்றால் படியா நெஞ்சின் வசமாகும்
ஒரு துளி வானம் பூத்திருக்கும்
கனவில் கோணித் தெரியும்
திருமுகம் அரூபமாய்…..




No comments:

Post a Comment