LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Friday, January 3, 2014

திக்குத்தெரியும் காடுகளும் 
செக்குமாடுகளும்!
     [சமர்ப்பணம்: பிரம்மராஜன் கவிதைகளுக்கு]

ரிஷி
[முதல் தொகுப்பு அலைமுகம் -ல் இடம்பெறுவது]






அத்தனை அக்கறையோடு 
குழந்தையைப் பராமரித்துக்கொண்டிருந்தான் அவன்
காணக் கண்கோடி வேண்டும்!
மழலையின் அழகு அடிநெஞ்சைத் தொட்டது.
அழுந்த மூடியிருந்தன உள்ளங்கைகள்.
விரலிடுக்குகளில் கசிந்தன வானவில்லின் துளிகள்.
அள்ளிக் கொண்டுவந்திருப்பவை வெள்ளிமீன்களாகத்தான் இருக்கும்.
நிறைவமைதி கூடக் கூட நின்றவன்
தோள்கண்டு தோளே கண்டு...

பறைமுழங்க வந்தார்கள் பிள்ளை பிடிப்பவர்கள்.
கத்தி, கபடா, வெட்டரிவாள், வீச்சரிவாள்,
பத்து நூறு கருங்கற்கள், பதினாயிரம் தோட்டாக்கள்
ஒவ்வொரு கோணிக்குள்ளும் பத்திரமாயிருந்தன.
சித்திரம் மட்டுமா கைபழக்கம்...?
குறிபார்த்துப் பின்மண்டையில் எறிந்தார்கள்.
தெரியும், தெறிக்கும் ஒவ்வொரு துளிக்கும்
துளிர்க்கும் தலை நூறு.
இருந்தும், அந்த முகுளப் பகுதி உதிரப்பெருக்கு
கதிகலங்கச் செய்யும்.
கட்டாயம் வலித்திருக்கும் அவனுக்கும்.
காட்டிக்கொள்ளாமல் மந்தமாருதத்தைக் கூட்டிவந்து
குழந்தைக்கு விளையாடத் தந்தான்.

தலைக்கனத்தைப் பார்”, என்று திரும்ப வளைத்தது கூட்டம்.
அண்டப்புளுகன் – ஆணறிவானோ ஈன்றெடுத்தலை?
அறிந்தாலும், அம்மணமாய் நடுவீதியில் பிரசவிக்காமல்
நான்கு சுவர்களின் இருளுக்குள் தாயாகிறவள்
பேயாகத்தான் இருக்கவேண்டும்;
பெற்றெடுத்ததும் குட்டிச்சாத்தான்.

வெட்டிச்சாய்த்திட வேண்டும் வேரோடு.
இருவரையும், இல்லை, ஒருவரையேனும்.
தாயற்ற பிள்ளை தறுதலை;
சேயற்ற சிவம் சவம்.
சங்கு முழக்கு .
கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் நடக்கட்டும்.
அத்துவானக் காடு மேய்ப்பனை
மொத்தமாய் முடித்துவிடவும்.
தார்மீக தர்மமெல்லாம் யாருக்கு வேண்டும்?
பேர்பேராய்ச் சொன்னால் ஊர் நம்பித் தீரும்.
கற்ற வித்தையெல்லாம் காட்டிக் கூறும்:
சுற்றுச்சூழல் அவனால் கெட்டுப்போனது.
எட்டிய தொடுவானெல்லாம் எட்டாமலானது.
கட்டிவைக்க வேண்டும் அவனை முச்சந்தியில்.
முட்டிக்கு முட்டி தட்டினால் போதாது.
பட்டப் பகலில் கழுவேற்ற வேண்டும்.
அவன் மடியில் தவழ்ந்திருப்பது மதலையல்ல;
முதலை.
இரு, இரு – முதலை மூச்சுவிடும்.. வேண்டாம்.
பிறிதேதாவது.
புதைத்தால் பிழைத்தெழக் கூடும்...
சிதையேற்றலே உத்தமம்.

சொற்சுள்ளிகளைக் கட்டுகட்டாகக் கிடத்தி
சுண்ணாம்பு சுடுநெருப்பும் தடவி
தினமொரு வண்ணமா உஅவனைத் துன்புறுத்தித்
தொடரும் வன்முறைக் கும்பல்.

கண்ணுங்கருத்துமாய் எணியவாறிருந்தான் அவன்_
இன்னருங் குழவியின் இரண்டொன்றுமூன்றுகளை.
காலக்கடிகாரம் கண்சிமிட்டிக்கொண்டிருந்தது.
பாலுக்கழும் பிள்ளையின் பசிநேரம்
நாளும் மனப்பாடம்.
அன்பின் வழி அன்பே யறியும்...
முன்னிரவில்
சன்னக் குரலில் மென்மையாய் தாலாட்டிக்கொண்டிருந்தான்.
கோலால் நெட்டித்தள்ளியது காலாட்படை.

குழந்தையா இது? எங்கே, தோண்டித் தா விழியை.
குரலைத் தனியாக அறுத்துக் காட்டு”.
_விரல் மிதித்துச் சிரித்தார்கள்;
குதம் மிதித்துக் குதித்தார்கள்.

வாய் திறந்தால் வாயாடி;
வாளாவிருந்தால் வெறும் பேடி...

நாடி நமபெல்லாம் நிரம்புவதை நாடி
சின்ன உயிரின் அசைவுகளை ஒன்றுவிடாமல்
என்றும்போல் பழகிக்கொண்டிருந்தான்
ஆனந்தக்கூத்தாடி!

சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா
சூரிய சந்திரரோ... ஆராரோ, ஆரீரரோ...
ஆரடிப்பாரோ செல்லக்குட்டியை...!

வெல்லக்கட்டியிசை மெல்லத் தொட்டசைக்க
துள்ளிவந்தன புள்ளிமான்கள்!
புல்லர்க்குப் பொறுக்குமோ? கல்லெறிந்தார் மறுபடி மறுபடி.
மருண்டோடின சில. மற்றவை யங்கேயே.
திரும்பத் திரும்ப வலம் வந்தேகியபடி.

பட்சியிறகின் சிற்றிழைக்கும் வக்கிலாக் கூட்டம்
கொக்கரித்தது:
காண் கண், கேள் செவி யெல்லாம்
கட்டிப் போட்டாயிற்று. இனி
நட்டப்பட்டு நலிவுறுவான் இவன்.
கலி தீரும்! பிறகென்ன?
ஆளுக்குப் பிடிமண் அள்ளிப்
போட்டுவிட்டால் போயிற்று”.

கோமாளிக்கும் வாரிசு உண்டு;
கொலையாளிக்கும் வாரிசு உண்டு.
ஊரார் பிள்ளையை ஆட்டிவதைத்தால்
தன் பிள்ளை ஆன்றோனாகும்!
பழமொழியில் புதுமை பழகுவது மரபு....

தந்தைக்கும் குழந்தைக்கும் இடையேயான
இரும்புப்பூம் பாலத்தின் கனபரிமாணம்
தொப்புள்கொடி தாண்டி
நீலவான் அம்மா அப்பா புடவை பணமாக _
புளிக்கும் பழம்.
உடைத்துவிடல் எளிதெனக்
கடைவிரித்துக் காத்திருப்பார்
கயமை கிலோ என்ன விலை?
_வலித்தழும் கிள்ளை.
வாய்விட்டுச் சிரிக்கும் பிள்ளை!
உன் தலை!


No comments:

Post a Comment