’மரம் சொன்னது’ என்ற தலைப்பிலான பிரம்மராஜனின் கவிதையை முன்வைத்து....
- லதா ராமகிருஷ்ணன்
மரம் சொன்னது
ஒரு சாதாரணம்தான்
என ஒரு முட்சொல் கிழிக்கிறது.
இல்லாத ஓவியத்தைச் சட்டகத்தினுள்
பொருத்திப் பார்ப்பதுபோல்தான்
அதன் அளவு என்பார்
வலியறியா வறியோர்.
எனினும் வலியின் வயது
தொன்மையின் முன்மை’
பரசுராமனின் உடல் உறக்கத்திற்கு
முன் தன் விழிப்புடல் துடையை
வண்டுத் துளைப்புக்குத் தந்த
கர்ணத் தன்மை.
மரப்பட்டையை மகிழ்ச்சிப்படுத்தவே
முடியாது
பாம்பின் சட்டையை மாற்றுதல் போல்
மாறுதலுக்கு மாற்றுதல் முடியாது
என்றவனுக்கு
காதல் முட்டாள்கள் செதுக்கிச்சென்ற
தேதிகள் பெயர்களுடன் வளர்மரம்
கனத்துச் சொல்கிறது
வெட்டிக் கிழித்தலின் வலியைவிட
வடுவின் வளர்வேகம்
பொருக்குச் சேதம்
பொறுத்தல்
கொலையின் முடிவற்ற நீள்கோடாகும்.
RENDERED IN ENGLISH BY LATHA RAMAKRISHNAN(*FIRST DRAFT)
TREE'S VERSION
...........................................
The onset of pain too
is but a common one
So a thorny word tears
They who claim that its
volume is but
like fixing inside the Frame
the painting that is not
are poor being unaware of pain.
Yet the age of pain
is that which is the
Before of
Time immemorial;
Karnan’s disposition in
offering his own wakeful body’s check
before Parasuraman’s bodily sleep
to bee’s and giant worm’s sharp pierce.
For he who said that
never can one make merry
the bark of a tree
Never can change it to Change
as like changing snake’s skin
The tree that grows with
the dates and names carved on it
by love-gullibles
declares weighing heavy that
more than the pain of felling
and tearing apart
bearing with the rapidity of the scar’s growth
flakial damage
is murder’s unending long line.
......................................................................................
_ // மரம் சொன்னது என்ற தலைப்பிலான பிரம்ம ராஜனின் இக் கவிதை ‘மரம் இறுகியது, உறுதியானது, முரடானது என்பதாக நான் கொண்டிருந்த, என் மனதில் படிந்திருந்த பிம்பங்களை அடியோடு மாற்றியது. மரத்தின் நெகிழ்வும் ரணம் பொருக்குத் தட்டிநிற்கும் அதன் வலியும், நிராதரவு நிலையும் பிடிபட்டது. //
_ இவ்வாறு ‘சொல்லும் சொல் பிரம்மராஜனின்’ என்ற தலைப்பில் ஜூன்2016இல் அநாமிகா ஆல்ஃபெபெட்ஸ் மூலம் வெளியான நூலில் நான் குறிப்பிட்டிருப்பேன். இது எனக்குக் கிடைத்த வாசிப்பனுபவம்.
இந்தக் கவிதை மரத்தை மட்டும் பேசுவதில்லை என்பது வெளிப்படை. இன்னும் சொல்லப்போனால், இதில் மரம் மனித மனதின், வலி ஏமாற்றங்கள் ரணங்களையெல்லாம் சுமந்திருக்கும் அதன் தன்மையையும், வெளியே தெரியாத மனிதமன நெகிழ்வுகள், நிலைகுலைவுகளையும் இன்னும் எத்தனை யெத்தனையோ விஷயங்களுக்கு, மனித இயல்புகளுக்குக் குறியீடாகி நிற்கிறது.
எதற்கெடுத்தாலும் அழுபவர்களைக் கண்டால் அதிராத நம் மனம் ஒருபோதும் அழாதவர்களின் கண்ணில் நீர்த்துளியைக் கண்டால் ஒரேயடி யாக அதிர்ந்துபோய்விடும். அப்படித்தான் மரம் பிளக்கப்படுவது, கொல்லப்படும் யானையின் சிறுகண்களில் தெரியும் நிராதரவு எல்லாம் மனிதமன சமன்நிலையைப் பெரிதும் குலைத்து விடுகிறது.
இத்தகைய கவிதைகளை மொழிபெயர்க்கும்போது மரத்தின் உறுதியான மனம் என்பதாய் கவிதையில் இடம்பெற்றிருக்கக் கூடிய வரியை மொழிபெயர்க்கையில் மனம் என்பதை மரத்தின் ‘மார்புப்பகுதி’ என்பதாக மொழிபெயர்க்க வேண்டுமா அல்லது மனிதமனம் என்ற பொருளைத்தரும் சொற்களைப் பயன்படுத்த வேண்டுமா?
மார்பு, இருதயம் இரண்டுக்கும்கூட நுட்பமான வேறு பாடு உண்டு. மார்பு உடலின் வெளிப்புறப் பகுதியையும், இருதயம் உடலின் உள்ளே இருக்கும் பகுதியையும் குறிப்பதாகச் சொல்லலாம். ஆனால், இவை ‘overlap’ _’ ஒன்று மற்றொன்றாகப் பொருள்படும் அளவில் பயன் படுத்தப்படுவதும் உண்டு.
மனம் என்று பொருள்படும் இதயம் என்ற சொல்லுக்கும் இருதயம் என்ற சொல்லுக்கும் இடைவெளி இன்னும் அதிகம் என்று தோன்றுகிறது. இருதயம் என்பது மனித உடலினுள்ளே இயங்கிக்கொண்டிருக்கும் உறுப்பைப் பிரதானப் படுத்தும் சொல். ஆனால், இருதய அறுவை சிகிச்சை என்று கூறுவார்கள். ஆங்கிலத்தில் Heart Surgery என்றுதான் கூறுகிறார்கள். ஆங்கிலத்தில் Heart என்ற சொல் இருதயம் என்ற உறுப்புக்கும், மனம் இதயம் என்ற ‘உறுப்பாலான அதேசமயம் உறுப்புக்கப் பாலான ஒன்றைக் குறிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
தமிழில் இருதயம் என்ற சொல்லின் பொருளும் பயன் பாடும் வேறாகவும், மனம், இதயம் ஆகிய சொற்களின் பொருளும் பயன்பாடும் வேறாகவுமே இருக்கிறது.
மனம் என்பதை Heart, Mind ஆகிய இரு சொற்களால் குறிப்பதுண்டு. சமயங்களில் Heart, வேறாகவும் Mind வேறாகவும் அர்த்தம் தருவதுமுண்டு. Brain என்ற சொல் மனம் கலக்காத மூளை என்ற உறுப்பைக் குறிப்பதாகவே அமையுமென்றாலும் Brain என்பதுதான் மனித உயிருக்கே மூலாதாரம் என்ற அளவில் இந்த வார்த்தை மனதுக்கும் பயன்படுத்தப்படுவதும் உண்டு.
Bosom, breast chest முதலிய வார்த்தைகள் இருதயம், மார்புப்பகுதி என்ற உறுப்புரீதியான பொருளையே அதிகம் தருகின்றன. என்றாலும் ஆருயிர்த்தோழன் என்பதை bosom friend என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். மற்ற இரண்டு வார்த்தைகளும் மனம் என்ற பொருளைத் தருவதாகப் பயன்படுத்தப்படுவது அரிது என்றே தோன்றுகிறது.
பொதுவாக heart, mind ஆகிய இரு சொற்களும் மனித உடலுக்குள் இருக்கும் உறுப்புகளிலான உறுப்புகளுக் கப்பாலானதுமான சிலவற்றைக் குறிக்கப் பயன்படும் வார்த்தைகள் எனலாம்.
மரம் ஒரு குறியீடாகப் பயன்படுத்தப்படும் கவிதை முழுக்க முழுக்க மரத்தின் உறைநிலையை, கிளைகளை, கனிகளை காய்களை, உதிரும் இலைகளை அது அடை யும் சிதிலத்தை அது வெட்டப்படுதலையெல்லாம் பேசிக் கொண்டே போனாலும் அந்தக் கவிதையை மொழி பெயர்க்கும்போது மரத்தின் மார்புப் பகுதியைக் குறிக்கும், இருதயம் என்ற உறுப்பைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்தவேண்டுமா, அல்லது உறுப்பும் உறுப் பைத்தாண்டிய ஒன்றும் சேர்ந்ததைக் குறிக்கும் மனம் என்ற பொருளைத் தரும் சொல்லைப் பயன்படுத்த வேண்டுமா என்பதில் மொழிபெயர்ப்பாளர் கூடுதல் கவனம் செலுத்தவேண்டிய அவசியமிருக்கிறது.










