LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Friday, June 20, 2025

புரியும்போல் கவிதைகள் சில….. ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

புரியும்போல் கவிதைகள் சில…..

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
(*’இப்போது’ கவிதைத் தொகுப்பிலிருந்து)

 (*சமர்ப்பணம் : கவிதை புரியவில்லை என்று திரும்பத் திரும்ப நவீன தமிழ்க்கவிஞர்களை கழுவேற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு)

1.
குட்டை குளம் ஏரி ஆறு கடல் சமுத்திரம்
இன்னும் கிணறு வாய்க்கால் நீர்த்தேக்கங்கள்
எல்லாமும் மழையுமாய்
எங்கெங்கும் நீராகி நிற்கும் நிலத்தில்தான்
தண்ணீர்ப் பற்றாக்குறையும் குடிநீர் கிட்டாநிலையும்
எனத் தெள்ளத்தெளிவாய்த் தத்துவம் பேசுவோர்க்குத்
தெரியுமோ
ஒரு துளி நீரில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையும்
அவற்றின் அலை-துகள் நிலையும்
களி நடனமும் பிறவும்….?

2.

ஒன்றிரண்டு மூன்றுநான்கு ஐந்தாறு எட்டுபத்து….
ஏழும் ஒன்பதும் விட்டுப்போனதேன்
என்று வாய்ப்பாடு ஒப்பித்தலாய்க் கேட்பதற்கு முன்
இரண்டான ஒன்றின் நான்கான மூன்றின்
ஆறான ஐந்தின் பத்தான எட்டின்
நேர்க்கோடுகள், நெளிவு சுளிவுகள்
வாத்தின் எலும்பு மார்பக வளைவு
வாலுடன் காத்தாடி சிரசாசன நிலை
உள்வாங்கிய சறுக்குமரம்
இருவட்டச்சிறைகளுக்குள்ளிருந்து
வெளியேறும் வழி -
என எண்ணிப்பார்த்துக்கொள்ள
எத்தனையோ இருக்கு பார்.

3.
சிட்டுக்குருவி காக்கை புறா கோழி குயில் கழுகு மயில்
வான்கோழி இன்னுமுள ஈராயிரத்திற்கு மேலான
பறவையினங்களில்
விரும்பித் தேன்குடிப்பது எது
தேன்குழலைக் கடிப்பது எதுவெனத்
தெரியுமோ எவருக்கேனும்…?
அட, தெரியாவிட்டால்தான் என்ன?
ருசியறியாதவரை தேன் வெறும்
பிசுபிசுப்பானஅடர்பழுப்புநிற திரவம்தான்.
அருந்திய பறவை ஆனந்தமாய்ச் சிறகடிப்பதைப் பார்த்து
அடித்துப்பிடித்து உண்டிவில்லைத் தேடிக்கொண்டிருப்போர்
கண்டிலரே வெளியெங்கும் பறத்தலின் காற்றுத்தடங்களை.
உண்டல்லோ அவ்வண்ணமாய் புரியாக் கவிதையும்!

4
ஸ்கூட்டி, பைக், கார், லாரி, குப்பை லாரி
மினி பஸ், மாம்பலம் - டு - லஸ் மாக்ஸி பஸ்
ரயில் கப்பல் ஆகாயவிமானம்……
எல்லாம் இருந்தும் கடற்கரையில்
கையைத் தலைக்கு அண்டக்கொடுத்தொருவன்
அண்டவெளிக்குள் பல உன்னதங்களைக் கண்டவண்ணம்
படுத்திருக்கிறானே….
அந்த வேளையில் பயணம் என்ற சொல்லின் அர்த்தம்
அவனுக்குப் பிரத்யேகமானது.
அவன் நகர்வதாகவே தெரியவில்லையே என்று
அங்கலாய்த்து
அத்தனை முனைப்போடு
அங்கொன்றும் இங்கொன்றுமாய் கற்களைத் திரட்டி
அவன் மீது குறிபார்த்து எறிவதில் காட்டும் அக்கறையில்
ஒரு துளி கவிதை மீது காட்டினாலும் போதும் -
நிறையவே புரிந்துவிடும்.

5.
திருக்குறள் நாலடியார் குறுந்தொகை
நற்றிணை தேவாரம் திருவாசகம்
சித்தர் பாடல்கள் சிலப்பதிகாரம்
எல்லாம் புரிந்துவிட்டதுபோலும்
புரியாக் கவிதை எழுதுகிறான் என
புகார் மேல் புகார் அளித்தவண்ணம்
அண்டவெளியைக் கூண்டிலேற்றி
குறுக்குவிசாரணை செய்ய
முடிந்தால் நிலவறைக்குள் அடைத்துவிடவும்
அன்றும் இன்றுமாய் அவர்கள்
ஆயுதபாணிகளாய் வந்தபடி வந்தபடி…..
காக்கும் கவிதை காக்க
அகாலத்தின் விரிபரப்பில்
காற்றுச்சித்திரங்களைத் தீட்டிக்
களித்திருப்பானே கவிஞன்!

6
இந்த வாசகருக்குப் புரியுமென்று
வெந்த சாதம் பற்றி எழுதினார்’
வந்ததே கோபம் வேறொருவர்க்கு.
பச்சைக் காய்கறிகளே சத்துள்ள உணவு
என்று கடித்துக்குதறிவிட்டார்.
வம்பெதற்கு என்று
நெல்லிக்கனியின் மகத்துவம் குறித்தொரு
கவிதை எழுதினார்.
பாகற்காயைப் பற்றிப் புனையத் தோன்றவில்லையே என்று
கண்டனத்தைப் பதிவு செய்தார் இன்னொரு வாசகர்.
ஆகா மறந்துவிட்டேனே என்று அளப்பரிய வருத்தத்துடன்
மருந்துக் கசப்புக்கோர் எடுத்துக்காட்டு பாகற்காய்
எனக் கவிதையெழுத
சுண்டைக்காயின் கசப்பைச் சொல்லாமல் விட்ட பாவி
என மண்ணை வாரித் தூற்றிச் சென்றார்
மா வாசகரொருவர்.
என்ன செய்வதென்றே தெரியாமல்
எழுதியவற்றையெல்லாம் கிழித்தெறிந்துவிட்டு
உறங்கச் சென்றார் கவிஞர்.
கனவிலும் அந்த வாசகர்கள் வந்து
அவர் உருகியுருகி யெழுதியதையெல்லாம்
உள்வாங்க மனமின்றி
கருகக் கருகக் கண்களால் எரித்து
சாம்பலை காலால் கெந்திவிட்டு
கெக்கலித்துக்கொண்டிருந்தார்கள்.

7
இரவு இரண்டுமணியைத் தாண்டிவிட்டது.
உறக்கம் வந்தும் உறங்க முடியாமல்
வரிகள் சில மனதிற்குள் குறுகுறுக்கின்றன.
கொஞ்சுகின்றன.
ஏந்திக்கொள்கின்றன.
வெளியே கூட்டிக்கொண்டுபோயேன் என்று கையைப்
பிடித்திழுக்கின்றன.
எழுதத் தொடங்கும் நேரம்
எழுதும் நேரம்
எழுதி முடிக்கும் நேரம்
நானே கவிதையின் பாடுபொருளாய்
இலக்கு வாசகராய் -
விலகிய பார்வையில்.
அதிவிழிப்பு நிலையில்…..
சாதியின் பெயரால் சக கவிஞர்களைச் சிரச்சேதம் செய்பவர்கள்
தமிழ்க்கவிதைத் தாளாளர்களாய்
கண்டம் விட்டுக் கண்டம் தாண்டிச் சென்றவண்ணம்.
இன்னும் ராமேசுவரத்தைக்கூடக் கண்டிலேன் நான்.
என்றாலும், ”குறையொன்றுமில்லை” எனச் சொல்வேன் -மறைமூர்த்திக் கண்ணனிடம் இல்லை -
மனம் நிறைக்கும் கவிதையிடம்.
பின் ஏன் 'திண்ணை'க்கு அனுப்புகிறாய் என்பார்க்கு:
”கல்லுக்குள் தேரைக்கு உணவிருக்கையில்
என் கவிதைக்குள் கரைபவரும் எங்கோ இருக்கக்கூடும்தானே!”

வாய்கள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 வாய்கள்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)



பேசுவதற்கென்றே சில வாய்கள்
மூடியிருக்கவென்றே சில வாய்கள்
பேசும் வாய்களைப் பகடி செய்யவும் பழிக்கவும்
பேசவிடாமல் செய்யவும்
சில வாய்கள்
பேசினால் பிடாரி
பேசாவிட்டால் பயந்தாங்கொள்ளி
நாவடக்கம் எல்லோரிடமும் ஒரேயளவாய்ப் பகுக்கப்படுவதில்லை.
நாவினாற் சுட்ட வடு இல்லாதார் யார்?
ஊர் பேர் உள்ள காருக்கேற்ப
ஒருவர் ஏற்படுத்திய காயம் உட்காயமாக
இன்னொருவர் உண்டாக்கியது அங்கிங்கெனாதபடி
எல்லாவிடமும் சுவரொட்டிகளாகும்.
சிலர் வாயால் வடைமட்டுமா சுடுகிறார்கள்?
பஜ்ஜி போண்டா பராத்தா பிரியாணி
பக்கோடா இன்னும் என்னென்னவோ
உள்ளூர்வாசிகளுக்கும் சுற்றுலாப்பயணிகளுக்குமாய்
வியாபாரம் அமோகமாய்.
பேச்சுரிமை சில வாய்களின் தனிச்சொத்தாக
சகமனிதர்களின் குரல்வளைகளை நெரித்துக்
குரலற்றவர்களாக்கி
அவர்களுக்காகப் பேசியவாறிருக்கும் சில வாய்கள்.
விளம்பரங்களால் பெண்ணுரிமையின் வாயில் நஞ்சூற்றிப் பொசுக்கியபடியே
பெண்விடுதலையை முழங்கிக்கொண்டிருக்கும் அச்சு ஒளி-ஒலி ஊடக வாய்கள்.
சின்னக் குழந்தைகளின் வாய்களில் நுழையமுடியாத சொற்களைத் திணித்துத்
தங்களுடைய வெறுப்பையும் வன்மத்தையும்
கக்கவைத்துக்கொண்டிருக்கும் பெரியவர்களின் வாய்கள் இப்போதெல்லாம் வெற்றிலைக்கு பதிலாக
அரசியலையே அதிகம் குதப்பியபடி.
பிறவியிலேயே வாய்பேச முடியாதவளின்
மனமெல்லாம் பேசும் வாய்களாக
நிலைக்கண்ணாடி முன் நின்றவண்ணம் பேச முயற்சித்துக்கொண்டிருக்கும் அவளுடைய
நாபியிலிருந்து பீறிடும் அமானுஷ்ய ஒலிகளின்
மொழியறிந்ததாய் அருகிலிருந்த மரத்திலிருந்து
ஒரு பறவை கீச்சிடுகிறது.
அவளுக்கு அது கேட்குமோ தெரியவில்லை.
வாயிருப்பதால் மட்டும் எல்லாவற்றையும் பேசிவிட முடிகிறதா என்ன?
மூடிய அறைக்குள் யாருமற்ற நேரத்தில் உரக்கத் தானும் தானான பிறனுமாக உரையாடிக்கொண்டிருந்தால்
மனநல விடுதிக்கு அனுப்பிவைக்கப்படும் சாத்தியக்கூறுகள் அதிகம்.
அதனால்தானோ என்னவோ
அடித்தால் பதிலடிகொடுக்கவியலாத பலவீனராய்த் தேர்ந்தெடுத்து
அடித்துக்கொண்டேயிருக்கின்றன சில வாய்கள்.

அவரவர் நிலம் _ ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அவரவர் நிலம்

_ ‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)

2005இல் வெளியான என் _ காலத்தின் சில ‘தோற்ற நிலைகள்’ கவிதைத்தொகுப்பிலிருந்து

.................................................................................................................

உனக்குக் கால் கால் மண் தரை

எனக்கு மனம் தாள் நிலம் அலை
உன் காலே எனதுமாக நிர்பந்தம் ஏதுமிலை
காற்றோ மழையோ கடலோ முகிலோ
நடக்கப் பழகிய பின் நிலம் தானே…
பிடிப்பற்றது திடமில்லை யெனில்
தரையுனதெனக்கமிலமாய்.

மாய யதார்த்தம் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 மாய யதார்த்தம்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
......................................................

அத்தனை அழகான எழுதாக் கவிதை வரியொன்று
என்னை தத்தெடுத்துக்கொள்ளேன் என்கிறது.
திருமணமாகவில்லையே என்றால்
SINGLE PARENT கேள்விப்பட்டதில்லையா என்று
செல்லமாய் சிரிக்கிறது.
செயற்கை முறையில் கருத்தரிப்பதில்லையா என்ன
என்று பெரியமனுஷத்தனமாய் கண்களை விரித்துப்
பார்க்கிறது.
அதன் பிஞ்சுக்கைவிரல்களைக் கோர்த்துக்கொண்டு
போய்க்கொண்டேயிருக்கவேண்டுமென்று
தோன்றுகிறது.
எங்கேயென்று தெரியவில்லை.
பற்ற நீளும் என் கையில் எங்கிருந்தோ ஒரு
பஞ்சுமிட்டாயைத் திரட்டித்தந்து
போயேபோய்விடுகிறது.
உண்மையான விழைவோடு உள்ளங்கையை
முகர்ந்துபார்த்தால் ஆப்பிள் வாசனையடிக்கும்
என்று யாரோ என்றோ எதற்கோ சொன்னது
நினைவுக்கு வர
அனிச்சையாய் நாசி நோக்கி மேலெழும்பும்
உள்ளங்கையின்
விரலிடுக்குகளின் வழியே கசிந்துருண்டுகொண்டிருந்த
நீர்த்துளிகளில் ஏதோவொன்று என் ஆப்பிளின்
மினியேச்சர் வடிவமாகிறது.

அதோகதி - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 அதோகதி

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

கதியற்ற மக்களைக் கதைத்தேற்றுவதாய்
கதைத்துக் கதைத்துத்
தன் சக மனிதர்களின் தலைகளை கைகால்களை
மிதித்தபடி
தன்னையொரு உயரமான மேடையில் ஏற்றிக்கொண்டுவிட்டவர்
அங்கிருந்து யார்யார் மீதோ காறியுமிழ்ந்துகொண்டேயிருந்ததையும்
அவருடைய அருவருப்புப் பேச்சை
வாய்பிளந்து கேட்டபடியிருந்த
மனிதர்களையும்
கண்ட காகம் ஒன்று
விர்ரென்று பறந்துவந்து
அன்னாருடைய தலையில் எச்சமிட்டுப்
பறந்துசென்றது.

பாசாங்குகள் பல வகை - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 பாசாங்குகள் பல வகை

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
அமைதியே உருவானவராக இருந்தவரிடமிருந்தா
அம்புகள் இப்படி சீறிப்பாய்கின்றன!
விஷம் தோய்ந்த முனைகளில் தீராவெறி தளும்பியவாறிருக்கிறது.
நஞ்சூறிய அம்பு ஒன்றை சரியாகக் குறிபார்த்து எய்தால்
ஒரு பதவி சில லட்சங்கள் கிடைக்க வாய்ப்புண்டு
இன்றில்லாவிடினும் நாளை – நாளை மறுநாள்
என்ற மனக்கணக்கு சரியாகிவிட்டதில் அவரடைந்த ஆனந்தத்திற்கு
அளவேயில்லை என்பதை
அவருடைய முப்பத்தியிரண்டு பற்கள்
தன்னிச்சையாய் இருமடங்காகிச் சிரிப்பதிலிருந்தே
அறியமுடியவில்லையா என்ன?
வெள்ளந்தியாகச் சிரித்துக்கொண்டே
என்னமாய் வெறுப்பரசியலை விதைதூவலாய்
வீசிக்கொண்டேபோகிறார்.
சென்ற வருடம் வலம் வந்த காரை விட
இந்த வருடம் கிடைக்கப்பெற்ற காரும்
இருமடங்கு பெரியதுதான்.
அதனாலேயே முன்பிருந்த சிறிய தெரு வீட்டை விற்று
பெரிய சாலையின் முகப்பில்
முன்னதை விட இருமடங்கு பெரிய வீடு
வாங்கவேண்டிவந்தது.
எல்லாவற்றுக்குமாக அவருடைய நாவு
நற்றமிழை நாறடிப்பதாய்
நிதம் நூறு தடவை சுழற்றியடித்துக்கொண்டிருக்கிறது
அவரை யிவரை யெவரெவரையோ
ஆனால் எப்போதும் எதிர்தரப்பினரை மட்டுமே;
ஆணோ பெண்ணோ –
கோணல்புத்தி நாக்குக்குப் பாலினம் உண்டோ
நீதி நியாயம் மனிதாபிமானம் மகத்துவம் என்ற வார்த்தைகளை
இடையிடையே தெளித்தபடி
மற்றபடி நற்றமிழை நாறடித்தபடி…..
மனசாட்சியை குழிதோண்டிப்புதைத்தபடி
கண்டதையும் கதைத்தபடியிருக்கு மவர்
பெற்ற நற்பயனாய் _
இவ்வருட முடிவில் அவருக்கு இரண்டுமூன்று பட்டங்களும்
(கௌரவ டாக்டர் பட்டம் உட்பட)
அடுத்தவருடம் ஆகாயவிமானங்கள் இரண்டும்
அன்பளிப்பாய்க் கிடைக்கக்கூடும்;...

நான் யார் தெரியுமா!?!? - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நான் யார் தெரியுமா!?!?

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

_ என்று கேட்பதாய்
சில அமைச்சர்களுடன் தான் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.

_ என்று புரியச்செய்வதாய்
மறவாமல் சில முன்னணி நடிக நடிகையர்
இயக்குனர் இசையமைப்பாளர்களுடன்
புதுப்பட பூஜை நிகழ்வில்
பங்கேற்ற செய்திகள் படங்களோடு
வெளியாகச் செய்திருக்கிறார்.

_ என்று அடிக்கோடிட்டுக்காட்டுவதாய்
சர்வதேச (நாலாந்தர) எழுத்தாளருடன்
தோளோடு தோள் சேர்த்து நின்ற, நடந்த
காணொளிக் காட்சிகளை
வெளியிட்டிருக் கிறார்.

_ என்று வீரமுழக்கம் செய்வதாய் தலைமறைவுப்போராளிகள் சிலருடன்
காட்டில் குத்துக்காலிட்டு அமர்ந்து
உணவுண்ட காட்சிகளின்
(அதற்கென்றே பிரத்யேகமாக அழைத்துச்
செல்லப்பட்ட சித்திரக் கலைஞரான
தோழரால் கிறுக்கப்பட்ட)
கோட்டோவியங்களை
சுற்றிலும் இறைத்து
நடுவே சிந்தனையார்ந்த முகபாவத்துடன்
தன்னை இருத்திக்கொண்டு எடுத்த
செல்ஃபிகளை
சரசரசரவென்று தொடர்ச்சியாக சில நாட்கள் வெளியிட்டிருக்கிறார்.

_ என்று அழுத்தமாக எடுத்துரைப்பதாய்
மெய்நிகர் மலையொன்றின் உச்சியில்
அமர்ந்தவாறு
சுற்றிலும் பல வயதுகளிலான ஆண்களும்
பெண்களும்
அவர் வாயிலிருந்து விழும் முத்துக்களை
ஆவேசமாகப் பாய்ந்து பாய்ந்து பொறுக்கி யெடுத்துக்கொள்வதை
ஒரு மந்தகாசப் புன்னகையுடன் பார்த்தவா
றிருக்கும் புகைப்படங்களை
அவருடைய நான்கைந்து பக்தகோடிகள்
Bit Noticeகளாய் வினியோகித்துக்கொண்
டிருக்கிறார்கள்.

என்றென்றென்றெனக் கேட்பதான
அத்தனை படங்கள், கோட்டோவியங்கள்,
காணொளிகள், குறுஞ் சுவரொட்டிகளைப்
பார்த்தபின்பும் அசராமல் நின்று கொண்டிருக்கும் வாசகரைப் பார்த்து

‘நான் யார் தெரிகிறதா?’
என்று கேட்டவரிடம் _

_ உங்கள் எழுத்தின் மூலமே தெரிகிறது –
இத்தனை ‘Stage Props’ எதற்கு
என்று எதிர்க்கேள்வி கேட்ட வாசகர்
தன் கையிலிருந்த முகமறியாக் கவியின்
தொகுப்புக்குள்
கூடுவிட்டுக்கூடு பாய்ந்தார்!