நாடாவிட்டால் ஏது வீடு?
LIFE GOES ON.....
Tuesday, August 15, 2023
நாடு, அதை நாடு
கடவுள், மதம், சமத்துவம், சமூகநீதி........
கடவுள், மதம், சமத்துவம், சமூகநீதி........
கடவுள், மதம், சமத்துவம், சமூகநீதி என்று எல்லாவற் றின் சாரத்தையும் எளிய வரிகளில் எடுத்துரைக்கும் பாடல் இது. இதுபோல் கவிஞர்களெல்லாம் வெறுப்பை விதைக்காத, ஒரு சார்பாகப் பேசாத கவிதைகள் ஆளுக் கொன்று எழுதி அவற்றைத் தொகுப்பாக வெளியிட்டு மாணவ சமுதாயத்தினருக்கு, இளைய தலைமுறையின ருக்கு அன்பளிப்பாகத் தரவேண்டும் என்ற பெருவிருப்பம் எனக்குண்டு. அதை கவிஞர்களாக நமது கடமையாகவும் நான் கருதுகிறேன். முடிந்தவர்கள் எழுதியனுப்பினால் இதைச் செய்யலாம்.
மனிதநேயம் கேள்விக்குறியாகும் மணிப்பூர் கலவரம்! - லதா ராமகிருஷ்ணன்
மனிதநேயம் கேள்விக்குறியாகும் மணிப்பூர் கலவரம்!
மணிப்பூர் கலவரத்தைப் பற்றி மத்திய அரசு பேச மறுப்பது ஏன்? என்ற கேள்வியைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் எழுப்பிக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக, பிரதம மந்திரி இது குறித்துப் பேசுவதில்லை என்றும் ஏற்கெனவே பேசியிருக்கவேண்டும் என்றும் குற்றஞ்சாட்டுகின்றன. நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பேசும்போது இந்தியப் பிரதமர் மணிப்பூரில் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த பயங்கரங்களைப் பட்டியலிட்டார். இப்போதைய கலவரங்களுக்குப் பொறுப் பேற்காமல் நழுவுகிறார், பாராளுமன்றத்தை அரசியல் மேடையாக்குகிறார் என்று எதிர்ப்புக்குரல்கள் எழுப்பப்பட்டன.
இன்னொரு புறம் திரு.ராகுல் காந்தி பிரதம மந்திரியை எத்தனைத் தரக்குறைவாகப் பேசமுடியுமோ அப்படிப் பேசிக்கொண்டே யிருக்கிறார். அதைக் கொண்டாடும் படைப்பாளிகளும், அறிவுசாலிகளும் சமூக ஊடகங்களில் அனேகம். மணிப்பூர் பயங்கரங்களை நேரில் பார்த்ததுபோல் கிளுகிளுப்புச் செய்திகளாக வெளியிடுவதும் நடக்கிறது. மணிப்பூர் நிலவரங்களை சனாதம், இந்துத்துவம் என்ற வழக்கமான வசைச்சொற்களால் வெகுசுலபமாக கட்டங்கட்டிவிடுபவர்களும் உண்டு.
நிலம் உடைமைகொள்ளல் தொடர்பான பிரச்னை, மெய்தி இனத்தவர் தங்களுக்கும் scheduled tribe என்ற அந்தஸ்து வேண்டும் என்று கோரியது, அதை பரிசீலிக்க வேண்டும் என்று நீதிமன்றம் பரிந்துரைத்தது, அதிக எண்ணிக்கையில் கிறித்துவ அமைப்புகள் அந்தப் பகுதியில் செயல்பட்டுக்கொண்டிருப்பது, அதிக அளவு கஞ்சாச்செடிகள் அங்கே பயிராவது, சமீபத்திய பாஜக அரசு அதற்குத் தடை விதித்திருப்பது, அடுத்துள்ள நாடான சீனாவின் குறுக்கீடு என பல காரணங்கள் மணிப்பூரின் இன்றைய கலவர நிலவரத்திற்குக் காரணங்களாக எடுத்துரைக்கப் படுகின்றன.
ஒரு கோர நிகழ்வைக்கூட தொடர்ந்து வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டேயிருந்தால் ‘நாமும் அதைச் செய்துபார்த்தால் என்ன?’ என்றோ, ‘ஓ, இப்படிக்கூட அவமானப்படுத்த வழியிருக்கிறதோ’ என்றோ, சிலர் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது நடக்கிறது. மனைவியைத் துண்டு துண்டாக வெட்டியவனைப் பற்றிய செய்தியைத் தொடர்ந்து வெளியிட்டு வந்த பின் அதைப்போலவே ஒன்றிரண்டு அவல நிகழ்வுகள் நடந்தேறியதைப் படித்தோம்.
ஒரு அவல நிகழ்வைப் பரபரப்புச் செய்தியாக அணுகு வோர் நம்மிடையே கணிசமானோர். நேற்று மணிப்பூர் அவல நிகழ்வு குறித்துப் பேட்டி காணப்பட்ட பெண்ணொருவர் நிர்வாணமாக நடத்திச்செல்லப்பட்ட பெண்ணை அந்தக் கேவமான ஆண்கள் எங்கெல்லாம் தொட்டுக்கொண்டிருந்தார்கள் என்று சொன்னார். பெண் என்பதால் அவளைப் பண்டமாக பாவித்து நுகரும் காமுகனோ அல்லது பழிவாங்கக்கிடைத்த பொருளாக எதிரி யின் பெண்களைப் பாவிக்கும் கொடூரனோ அந்தப் பெண்களை எங்கே தொடுவான் என்பது யாருக்கும் தெரியாத விஷயமா? அதையே ஏன் எடுத்துச்சொல்ல வேண்டும் என்று வருத்தமாக இருந்தது.
பெண்களுக்கெதிரான் இத்தகைய அவமானகரமான நிகழ்வுகள் கொல்கத்தா, ராஜஸ்தான் போன்ற இடங்களிலும் நடந்திருக்கின்றன. அவற்றிற்கான காணொளிகள் இல்லை அல்லது காணொளிகள் வெளியிடப்படவில்லை என்பதால் நடந்த அவலங்கள் இல்லை யென்றாகிவிடாது.
நம் மாநிலத்தில் பெண்களுக்கெதிராக நிகழ்ந்துவரும் அவலங்களைப் பற்றியும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும் என்று சொன்ன அமைச்சரை ராஜஸ்தான் முதல் மந்திரி கெலாட் உடனடியாக அமைச்சரவை யிலிருந்து நீக்கியிருக்கிறார். ஒரு கட்சிக்குள் நிலவும் ( எந்தக் கட்சியும் இதற்கு விதிவிலக்கல்ல என்றே தோன்றுகிறது ) பேச்சுரிமை, கருத்துரிமையெல்லாம் இந்த அளவில்தான் இருக்கிறது.
நடந்தது மிக அவலமான நிகழ்வு. இது காலங்காலமாக ஆணாதிக்க சமூகத் தில் ஊறியிருக்கும் பேணிப்பராமரிக் கப்படும் மனோபாவத்தின் ஒரு வெளிப்பாடும்கூட. ஊடகங்களிலெல்லாம் பெண்ணை பண்டமாகக் காட்டும் அராஜக மனோபாவத்தின், தனக்குப் பிடித்தவனைக் காதலித்து மணந்த பெண்ணை உனக்கு ஆண் உடம்பு தானே கேட்கிறது – இந்தா என்று வன்புணர்ச்சி செய்யும் அராஜக மனோபாவத்தின் , தன் எதிராளியைப் பழிவாங்க அந்த ஆணின் மனைவி, மகள், அம்மாவைக் ‘கெட்ட வார்த்தைகளால் இழிவுபடுத்தும் அல்லது கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிக் கொலை செய்யும் அராஜக மனப்போக்கின் எதிரொலியே அல்லது வெவ்வேறு வடிவங்களே இத்தகைய இழிவுச் செயல்பாடுகள்.
இப்படியொரு கோர நிகழ்வு நடந்தால் உடனே சிலர் சகட்டுமேனிக்கு ‘ஆண்களே இப்படித்தான் – மிருகங்கள்’ என்ற ரீதியில், அல்லது குறிப்பிட்ட கட்சியினரே, மதத்தினரே இப்படித்தான் என்ற ரீதியில் பேச ஆரம்பித்துவிடுகிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்களின் தந்தை, சகோதரன், நண்பன், ஏன், மனசாட்சியுள்ள எந்த ஆணுக் கும் இத்தகைய கோர நிகழ்வுகள் மிகுந்த வேதனை யளிக்கக்கூடியவையே.
மணிப்பூரில் காணொளிகளுக்கு அப்பாற்பட்டு நிறைய கொடூர நிகழ்வுகள் நடந்திருக் கின்றன. எல்லாக் கொடூர நிகழ்வுகளிலும் ஒரே இனத்தவர்களே சம்பந்தப்ப்ட்டிருக் கிறார்களா, வெவ்வேறு இனத்தவர்கள் மாறிமாறி ஒருவர்மீதொருவர் இத்தகைய கொடூரங்களை நடத்தியிருக்கிறார்களா போன்ற விவரங்கள் இன்னும் வரவில்லை. மணிப்பூரில் இத்தகைய கலவரங்கள் இதற்கு முன்பும் நடந்திருக்கின்றன.
( இப்போது வெளியாகியிருக்கும் காணொளிகள் முன்பே வெளியிடப்படாமல் இப்போது வெளியிடப்பட்டிருப்ப தற்கு ஏதேனும் பிரத்யேகக் காரணங்கள் உள்ளனவா? யார் இந்தக் காணொளிகளை வெளியிட்டார்கள் என்ற கேள்விகளும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப் பட வேண்டும். அதே சமயம், இத்தகைய அவல நிகழ்வுகள் நடந்திருக்கிறதே என்ற வருத்தத்தை மீறி, ஐயோ, இந்தச் செய்திகள் எப்படியோ வெளியே தெரியவந்துவிட்டதே என்ற நினைப்பே அதிகமாக இருக்கும் மனப்போக்கு ஏற்புடையதல்ல.
கைது செய்யப்பட்டிருக்கும் ஆண் ஒருவரின் இனத்தைச் சேர்ந்த பெண்கள் அவருடைய வீட்டுக்குத் தீவைத்திருப்ப தாகச் செய்தி வருகிறது. இன்னொரு பக்கம், ஒரு கடை யில் இருக்கும் பெண்களைப் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கும்படி கும்பலிலிருந்த பெண்களே கூவியதாக வும் செய்தி வருகிறது.
எனவே, இத்தகைய விஷயங்களைப் பற்றிப் பேசுவோர், எழுதுவோர் மிகுந்த பொறுப்புணர் வுடன் தங்கள் கருத்துகளைப் பகிரவேண்டியது இன்றியமையாதது. பொதுப்படையாக ஆணினத்தை, இந்த மதத்தை, அந்த இனத்தை ஒட்டுமொத்த பொறுப்பாளியாக்கிப் பேசுவது சுலபம். ஆனால், அது சரியான அணுகுமுறையல்ல.
மேம்போக்கு அரசியல் விமர்சகர்கள், சமூகப்பிரக்ஞையாளர்கள், ஒரே அஜெண்டா வுடன் சமூகத்தில் நடக்கும் சீர்கேடுகளையெல்லாம் அணுகும் அரசியல் விமர்சகர்கள், சமூகப் பிரக்ஞையாளர்கள் – அவர்கள் ஆணோ, பெண்ணோ – மறைமுகமாக இத்தகைய அராஜகச் செயல்களை ஊக்குவிப்பவர்களாவார்களே தவிர (ஒரு தரப்பினர் செய்தால் அதை நியாயப்படுத்தியும் இன்னொரு தரப்பினர் செய்தால் அதை எதிர்த்துப் பேசியும்) அவர்களால் வேறெந்த நன்மையும் கிடைக்க வழியில்லை.
கல்விக்கூடங்களும் சாதிப்பாகுபாடுகளும் லதா ராமகிருஷ்ணன்
கல்விக்கூடங்களும் சாதிப்பாகுபாடுகளும்
[*13.8.2023 தேதியிட்ட திண்ணை இணைய இதழில் வெளியாகியுள்ளது]
11.8.2023 அன்று படித்த செய்தி இது.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வள்ளியூரில் அரசு – உதவி பெறும் அரசு உதவி பெறும் பள்ளியொன் றில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த +2 பள்ளி மாணவரை அவருடைய சக மாணவர்கள் – அந்தப் பகுதியில் மேலாதிக்கம் பெற்று விளங்கும் இடைச் சாதியை சேர்ந்தவர்கள் மதிப்பழித்து நடத்தியதால் பள்ளி செல்லாமல் இருந்திருக்கிறார் அந்த மாணவர். பள்ளி ஆசிரியர் ஏன் வரவில்லை என்று கேட்க விஷயத்தைச் சொல்லியிருக்கிறார். தலைமையாசிரியர் அந்த மூன்று மாணவர்களையும் அழைத்து கண்டித்திருக் கிறார்.
ஆத்திரமடைந்த அந்த மாணவர்கள் தங்களைப் பற்றிப் புகார் தந்த மாணவர் வீட்டுக்குச் என்று அவரைக் கத்தியால் சரமாரியாகக் குத்தியிருக்கிறார்கள். தடுக்க வந்த தங்கையையும் குத்தியிருக் கிறார்கள். இருவரும் இப்போது மருத்துவமனையில். இந்த அவல நிகழ்வைத் தொடர்ந்து நடந்த போராட்டத் தில் பாதிக்கப்பட்ட மாணவனின் தாத்தா மயங்கி விழுந்து இறந்துபோயிருக் கிறார். மாணவரும் அவருடைய தங்கையும் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில்.
சாதீயக் கொடுமை நடக்கும் இடங்களாக கல்விக்கூடங்களும் இருக்கின்றன.
உடனே ‘மநு’ என்று பழித்து, அல்லது சம்பந்தப்பட்ட கொடூர மாணவர்கள் சார்ந்த சாதியை ஒட்டுமொத்த மாகப் பழித்துப் பேசி முடித்து விடுவது மிகவும் சுலபம்.
ஆனால், இப்படியொரு கொடுமை இன்றும் நடப்பதற்கான காரணங்களை அகல் விரிவாக ஆராயவேண்டிய தேவையிருக்கிறது.
அரசியல்கட்சிகள் தத்தமது ஆதரவாளர்களிடம் சாதியொழிப்பு குறித்துப் பேச வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவரின் சாதி சார்ந்த கட்சிகள் மட்டுமே இத்தகைய அவல நிகழ்வுகள் நடக்கும் இடங்களுக்குச் செல்வது என்றில்லாமல் எல்லாக் கட்சிகளும், மக்கள் நல அமைப்புகளும் அங்கே சென்று மக்களோடு பேச வேண்டும்.
வாக்குகள் போய்விடக்கூடும் என்ற எண்ணமில்லாமல் தவறு செய்யும் சாதிகளைத் தட்டிக் கேட்கவேண்டும். அவர்களோடு பேசவேண்டும்.
ஆன்மிகவாதிகள், தத்துவவாதிகள், அறிஞர்கள் என பலரும் மதம் சார்ந்த ஒற்றுமை, நல்லிணக்கம், சமத் துவம் போன்ற கருத்துகளை எடுத்துரைக்க வேண்டும்.
இதில் தன்னை முன்னிலைப்படுத்தும் நோக்கமோ, வெறுப்பை விதைக்கும் நோக்கமோ இருக்கலாகாது.
இன்று ஊடகங்கள் மிகவும் பெருகிவிட்ட நிலை. இளம் உள்ளங்களில் அதிகார ஆசை பலவிதமாகக் கட்டமைக் கப்படுகிறது. சின்னத்திரை, பெரிய திரை களிலெல்லாம் ‘ராகிங்’ என்பதும், வன்மமான பேச்சு, ஏசல் என்பதும், வீரபராக்கிரமம் என்ற பெயரில் கொடூரமான அடிதடி களும் வெகு இயல்பாக இடம்பெறுகின்றன. இவற்றை யெல்லாம் கண்காணிப்பதும், கட்டுப்படுத்து வதும் அவசியம்.
கல்விக்கூடங்களில் உள்ள வளரிளம்பருவ மாணாக்கர் களின் மனப்போக்கு கள், செயல்பாடுகளைத் தொடர்ந்த ரீதியில் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டி யது அவசியம். அப்படிச்செய்வதன் மூலம் வன்முறையைக் கையிலெடுத்து சக மாணவர்களை அச்சுறுத்தும், அடி பணிய வைக்கும் மாணவர்களை அடையாளங்கண்டு அவர்களுக்கு உரிய ஆலோசனைகள் தர முடியும்.
மாணாக்கர்களுக்கு உளவியல் மருத்துவம் அவர்களு டைய உடல்நலன், நலவாழ்வு சார் மருத்துவ ஆலோச னைகள், சிகிச்சைகளின் ஓர் அங்கமாக கிடைக்க வழி செய்யப்பட வேண்டும். மனநல மருத்துவத்தைப் பொருட் படுத்தாத, புறமொதுக்கும் மனோநிலை மாறவேண்டும்.
ஒரு கொடூர நிகழ்வு நடந்தபிறகுதான் கவனத்தை மாணவர் பக்கம் திருப்பு வோம் என்றிருப்பது சரியல்ல.
ராகிங் குறித்தும், சாதியின் பெயரால் மாணவர்கள் மதிப்பழிக்கப்படுவது குறித்தும், அவற்றைக் கையாள வேண்டிய வழிமுறைகள் குறித்தும் அந்தத் துறை சார்ந்த அதிகாரிகளுக்கும், கல்விக் கூடங்களுக்கும், நிர்வாகி களுக்கும், ஆசிரியப் பெருமக்க ளுக்கும், மாணாக்கர் களுக்கும் உரிய ஆலோசனைகளும் வழி காட்டி விதிமுறைகளும் தொடர்ந்த ரீதியில் தரப்பட வேண்டியது இன்றியமையாதது.
நான் முழு நேர வேலைக்குப் போய்க்கொண்டிருந்த சமயத் தில் – 1977 முதல் 2005 – அரசு அலுவலகங்களில் தொழிற் சங்கங்கள் வலிமையோடு இருந்தன.
அவை பிரதானமாக கம்யூனிஸ்டுகள் கையில் இருந்தன. வர்க்கம் சார்ந்து சாதி கடந்து தொழிலாளர்கள் ஒருங்கி ணைந்திருந்தனர்.
அப்போதே வர்க்கத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து சாதிய ஏற்றத்தாழ்வு களைக் கணக்கிலெடுக்காமலிருந்துவிடலாகாது என்ற கருத்தும் இருந்தது.
இரண்டு கம்யூனிஸ்டுப் பிரிவுகளுக்கிடையே கூட அதிகார ரீதியாக நட்புறவைக் காட்டிலும் போட்டிமனப் பான்மையே அதிகமாக இருந்தது.
அரசியல்கட்சி சார்ந்த தொழிற்சங்கங்கள் அதிகமாக இல்லை யென்றாலும் அறவே இல்லையென்று சொல்லவியலாது. பிரதான தொழிற்சங்கங்களில் இடம்பெற்றிருந்த உறுப்பினர்கலெல்லாம் இடதுசாரிக் கட்சியினர் என்று சொல்லிவிட இயலாது. தலைவர்கள் இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்தவர்க ளாக இருந்தார்கள்.
ஒருமுறை தொழிலாளர்களிடையே உரையாற்றிக் கொண்டிருந்த தலைவ ரொருவர் காங்கிரஸ் கட்சியைத் திட்டிக்கொண்டே போக உறுப்பினர்களிலிருந்த காங்கிரஸ் அபிமானி ஒருவர் மறுப்புத் தெரிவித்து எதிர்ப்புக்குரல் எழுப்பினார். இதை எதிர்பார்க்காத அந்தத் தலைவர் திடுக்கிட்டுப் போனாலும் நொடியில் சமாளித்துக்கொண்டு பேச்சை மடை மாற்றினார்.
இன்று வர்க்கஞ்சார்ந்த ஏற்றத்தாழ்வு குறித்த பிரக்ஞையைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு சாதிரீதியான வேறுபாடுகள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன என்று தோன்றுகிறது.
இதில் உள்ள முக்கியக் குறைபாடாக நான் கருதுவது – ஒரே சாதி யில் வர்க்க ரீதியாக நிலவும் ஏற்றத்தாழ்வு களை நாம் கணக்கிலெடுக்காமலிருந்து விடுவது.
இதனால் சில சாதிகளில் பொருளாதாரரீதியாய் வளர்ந்து முன்னேறியிருப் பவர்கள், அவ்வகையில் தமது சாதி களுக்குள்ளே அதிகாரபீடங்களாயிருப் பவர்கள், சாதிரீதி யாய் தங்களை ஒடுக்கப்படுபவர்க ளாகக் காட்டி அதன் மூலம் ஒரு சாதிக்குள் வர்க்கரீதியாய் நிலவும் ‘அதிகார நுண்பரிமாணங் களை’ சுலபமாக மறைத்து விடுவது. சுலபமாய் தங்களை வளமாக்கிக் கொண்டுவிடுவது.
சாதி – வர்க்கம் (CASTE – CLASS) ஆகிய இரண்டும் குறிப் பான அளவு வேறு வேறாக இருந்தாலும் அவை இரண்ட றக் கலக்கும் இடங்களும் கணிசமாகவே இருக்கின்றன.
சமீபத்தில் வெளியாகிய திரைப்படம் மாமன்னனின் மையக் கரு “அப்பா, உட்காருப்பா” என்று திரும்பத் திரும்பச் சொல்லும் மகனின் குரலும் அதன் வலியும் என்று ஒருவர் எழுதி யிருந்தார். சாதி ரீதியாக இப்படி உயர்வு தாழ்வு பார்க்கப்படுகிறது என்ற உண்மையோடு கூட, வர்க்க ரீதியாகவும் இது நிகழ்கிறது என்பதையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டியது அவசியம்.
எடுத்துக்காட்டாக, எங்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரி என்பவர் தனக்குக் கீழேயுள்ள அலுவலரை எதிரே நிற்க வைத்துக்கொண்டேதான் பேசுவாரே தவிர உட்காரச் சொல்லமாட்டார் – இருவருமே ஒரே சாதிக்காரராக இருந்தாலும்.
சாதிகள் ஒழிய கலப்புத்திருமணம் தான் ஒரே வழி என்ற கருத்தை சில அரசியல் தலைவர்கள் முன்வைக்கிறார் கள். இது ஒரு வழியே தவிர ஒரே வழியல்ல. இதை அளவுக்கதிகமாக வலியுறுத்தும்போது அவரவர் சாதிப் பெண்களையும், ஆண்களையும் அவரவரே குறைத்து மதிப்பது போலவும், விலக்கிவைப்பது போலவும் அவ்வச் சாதியைச் சேர்ந்த எதிர்பாலினர் எண்ணுவதற்கும் வழி வகுப்பதாகிவிடுமோ என்று தோன்றுகிறது.
காதல் என்று வரும்போது மிக இளம் வயதில் இருவர் காதல் வயப்பட்டால் அதற்கு பெற்றோர்கள் சுலபமாகப் பச்சைக்கொடி காட்டிவிட வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியல்ல. ஒரே சாதியிலான காதலுக்குப் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும்போது அதை பெற்றோரின் அக்கறை அல்லது அதிகாரம் என்ப தாக மட்டுமே பார்க்கப்படுவது, வேறு வேறு சாதிகளைச் சேர்ந்த இருவரின் காதல் பெற்றோர்களால் எதிர்க்கப்படும்போது சாதிவெறியாகப் பகுக்கப்படு வதும் நடைமுறையாக உள்ளது.
எங்கு சாதிய ரீதியான மோதல்கள் நடந்தாலும் அங்கே போய் சம்பந்தப்பட்ட இருதரப்பு மக்களோடும், மோதல் போக்கைக் கையாளாமல், இணக்கமாகப் பேசி மனிதர் கள் சாதிமதபேதமற்ற சக உயிர்கள் என்று புரியவைக்க ஏன் எந்த அரசியல் தலைவர்களுமே சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் செல்வதில்லை?
ஏட்டுச்சுரைக்காயாக இல்லாத, சுய மரியாதையையும், தன்னம்பிக்கை யையும் வளர்க்கும், வாழ்க்கைக்கான கல்வி, சாதிப்பிரிவுகளையும், பிளவுகளையும் தங்கள் அதிகார வளர்ச்சிக்கான துருப்புச்சீட்டுகளாக பாவிக்காத, எளிமைக்கும் நேர்மைக்கும் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டும் மக்கள்தலைவர்கள் இன்றைக்கான, என்றைக்குமான இன்றியமையாத் தேவை.
அருள்பாலிப்பு - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)
அருள்பாலிப்பு
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
புதிதாய்ப் பிறந்திருக்கும்
நாளை யொரு
பிள்ளையைப்போல் கையிலேந்திக்கொண்ட
அந்தப் பாடல்
தன் மாயக்கோலால்
பஞ்சுமிட்டாயை
வரவழைத்து
அதன் மென் உதட்டில்
ரோஜாவர்ண மிட்டாய்த்துளியை
மிருதுவாகத் தடவுகிறது.
இனிப்புணரும் அந்தக் குழந்தைவாய்
அதன் விழிகளாய்
விழிகள் அதன் வாயுமாய்
கூடவே யதன் சின்னக்கைகால்கள்
மேலுங்கீழுமாக
ஒரு தாளகதியில்அசைவதுமாய்
குழந்தையின் மொத்தமும் ஆனந்தம்
பொங்க
விகசித்துச் சிரிக்கிறது.
சரசரவென்று வளர்ந்துவிடும்
குட்டிப்பெண்ணை
மூடப்பட்டிருக்கும் பள்ளிக்குள்
கைப்பிடித்து
அழைத்துச்செல்லும் பாடல்
அவளோடு கலந்துரையாடவும்
குலுங்கிச்
சிரிக்கவும்
கத்தி ரைம்ஸ் சொல்லவும்
காற்றின் போக்கில் கைகளால்
ஏரோப்ளேன் ஓட்டவும்
இன்னும் சில பிள்ளைகளையும் அங்கு
கொண்டுவந்துசேர்க்கிறது.
மதியவெயிலில் நாள்பிள்ளை நாவறண்டு
தவிக்கையில்
எப்படித்தான் அந்தப்பாடல்
குச்சி ஐஸாக மாறியதோ!
மாலை வீடு திரும்பும் வழியில்
வீதியோரமாக சோப்புநுரைக்குமிழ்களாக
தலைக்குமேலே தவழ்ந்துவந்தது.
மெல்ல மெல்ல வளர்ந்து யுவதியாகிவிடும்
நாளின் கையில்
ஒற்றை ரோஜாவைத் தருகிறது.
அந்த ரோஜாவை அன்பளிப்பதற்காகவே
யாரையேனும் ஆசைதீரக் காதலிக்க
வேண்டுமென்று தவிக்கும் பெண்மனதைப்
பார்த்துக் கண்சிமிட்டும்
பாடல்
அப்படியென்றால் எனக்கில்லையா
என்று
கேட்பதுபோல் தோன்றுகிறது.
மனம் தழுதழுத்து நிற்கும் நாளின் கையில்
நான்கு வானவிற்களைத்
திணிக்கும் பாடல்
நேசம் பொங்கக் கையை நீட்டி
'அந்த நாலிலிருந்தும்
உனக்குப் பிடித்த
வண்ணங்களை எடுத்து
புதிதாயொரு வானவில் செய்து
எனக்குத் தா' என்கிறது.
அந்த நான்கு வானவிற்களையும்
ஓரமாக வைப்பவள்
எண்ணிறந்த வானவிற்கள் இரண்டறக் கலந்
தொளிருமொரு
எளிய கவிதையை
எழுத ஆரம்பிக்கிறாள்.
தன்வினை - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)
தன்வினை
’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
நிராயுதபாணியான ஒருவரைத் தேர்ந்தெடுத்துக்
குறிபார்த்து
அம்பெய்தி தலைகொய்யும்போது
அசகாயசூரராக இறுமாப்படைகிறேன்.
ஆஹா
ஓஹோ
என்று
அவரிவர் புகழும் பேரோசையில்
விழுந்தவரின் மரண
ஓலம்
எனக்குக் கேட்பதில்லை.
கேட்டாலும் கேட்டுக்கொள்ளாமல்
காலெட்டிப் பீடுநடைபோடுகிறேன்.
தேர்ந்த வில்லாளியான குரூரரொருவரின்
முனையில் நஞ்சுதோய்ந்த குத்தீட்டி பாய்ந்து வந்து
என்
நடுமார்பைப் பிளக்க
தரைசாய்ந்து குருதிபெருக்கி நினைவுதப்பும் நேரம்
அரைகுறையாய் கேட்கக் கிடைக்கும் அசரீரி
_
ஆகாயத்திலிருந்து வந்ததா?
அடிமனதிலிருந்து
வந்ததா?



