மனிதநேயம் கேள்விக்குறியாகும் மணிப்பூர் கலவரம்!
மணிப்பூர் கலவரத்தைப் பற்றி மத்திய அரசு பேச மறுப்பது ஏன்? என்ற கேள்வியைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் எழுப்பிக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக, பிரதம மந்திரி இது குறித்துப் பேசுவதில்லை என்றும் ஏற்கெனவே பேசியிருக்கவேண்டும் என்றும் குற்றஞ்சாட்டுகின்றன. நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பேசும்போது இந்தியப் பிரதமர் மணிப்பூரில் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த பயங்கரங்களைப் பட்டியலிட்டார். இப்போதைய கலவரங்களுக்குப் பொறுப் பேற்காமல் நழுவுகிறார், பாராளுமன்றத்தை அரசியல் மேடையாக்குகிறார் என்று எதிர்ப்புக்குரல்கள் எழுப்பப்பட்டன.
இன்னொரு புறம் திரு.ராகுல் காந்தி பிரதம மந்திரியை எத்தனைத் தரக்குறைவாகப் பேசமுடியுமோ அப்படிப் பேசிக்கொண்டே யிருக்கிறார். அதைக் கொண்டாடும் படைப்பாளிகளும், அறிவுசாலிகளும் சமூக ஊடகங்களில் அனேகம். மணிப்பூர் பயங்கரங்களை நேரில் பார்த்ததுபோல் கிளுகிளுப்புச் செய்திகளாக வெளியிடுவதும் நடக்கிறது. மணிப்பூர் நிலவரங்களை சனாதம், இந்துத்துவம் என்ற வழக்கமான வசைச்சொற்களால் வெகுசுலபமாக கட்டங்கட்டிவிடுபவர்களும் உண்டு.
நிலம் உடைமைகொள்ளல் தொடர்பான பிரச்னை, மெய்தி இனத்தவர் தங்களுக்கும் scheduled tribe என்ற அந்தஸ்து வேண்டும் என்று கோரியது, அதை பரிசீலிக்க வேண்டும் என்று நீதிமன்றம் பரிந்துரைத்தது, அதிக எண்ணிக்கையில் கிறித்துவ அமைப்புகள் அந்தப் பகுதியில் செயல்பட்டுக்கொண்டிருப்பது, அதிக அளவு கஞ்சாச்செடிகள் அங்கே பயிராவது, சமீபத்திய பாஜக அரசு அதற்குத் தடை விதித்திருப்பது, அடுத்துள்ள நாடான சீனாவின் குறுக்கீடு என பல காரணங்கள் மணிப்பூரின் இன்றைய கலவர நிலவரத்திற்குக் காரணங்களாக எடுத்துரைக்கப் படுகின்றன.
ஒரு கோர நிகழ்வைக்கூட தொடர்ந்து வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டேயிருந்தால் ‘நாமும் அதைச் செய்துபார்த்தால் என்ன?’ என்றோ, ‘ஓ, இப்படிக்கூட அவமானப்படுத்த வழியிருக்கிறதோ’ என்றோ, சிலர் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது நடக்கிறது. மனைவியைத் துண்டு துண்டாக வெட்டியவனைப் பற்றிய செய்தியைத் தொடர்ந்து வெளியிட்டு வந்த பின் அதைப்போலவே ஒன்றிரண்டு அவல நிகழ்வுகள் நடந்தேறியதைப் படித்தோம்.
ஒரு அவல நிகழ்வைப் பரபரப்புச் செய்தியாக அணுகு வோர் நம்மிடையே கணிசமானோர். நேற்று மணிப்பூர் அவல நிகழ்வு குறித்துப் பேட்டி காணப்பட்ட பெண்ணொருவர் நிர்வாணமாக நடத்திச்செல்லப்பட்ட பெண்ணை அந்தக் கேவமான ஆண்கள் எங்கெல்லாம் தொட்டுக்கொண்டிருந்தார்கள் என்று சொன்னார். பெண் என்பதால் அவளைப் பண்டமாக பாவித்து நுகரும் காமுகனோ அல்லது பழிவாங்கக்கிடைத்த பொருளாக எதிரி யின் பெண்களைப் பாவிக்கும் கொடூரனோ அந்தப் பெண்களை எங்கே தொடுவான் என்பது யாருக்கும் தெரியாத விஷயமா? அதையே ஏன் எடுத்துச்சொல்ல வேண்டும் என்று வருத்தமாக இருந்தது.
பெண்களுக்கெதிரான் இத்தகைய அவமானகரமான நிகழ்வுகள் கொல்கத்தா, ராஜஸ்தான் போன்ற இடங்களிலும் நடந்திருக்கின்றன. அவற்றிற்கான காணொளிகள் இல்லை அல்லது காணொளிகள் வெளியிடப்படவில்லை என்பதால் நடந்த அவலங்கள் இல்லை யென்றாகிவிடாது.
நம் மாநிலத்தில் பெண்களுக்கெதிராக நிகழ்ந்துவரும் அவலங்களைப் பற்றியும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும் என்று சொன்ன அமைச்சரை ராஜஸ்தான் முதல் மந்திரி கெலாட் உடனடியாக அமைச்சரவை யிலிருந்து நீக்கியிருக்கிறார். ஒரு கட்சிக்குள் நிலவும் ( எந்தக் கட்சியும் இதற்கு விதிவிலக்கல்ல என்றே தோன்றுகிறது ) பேச்சுரிமை, கருத்துரிமையெல்லாம் இந்த அளவில்தான் இருக்கிறது.
நடந்தது மிக அவலமான நிகழ்வு. இது காலங்காலமாக ஆணாதிக்க சமூகத் தில் ஊறியிருக்கும் பேணிப்பராமரிக் கப்படும் மனோபாவத்தின் ஒரு வெளிப்பாடும்கூட. ஊடகங்களிலெல்லாம் பெண்ணை பண்டமாகக் காட்டும் அராஜக மனோபாவத்தின், தனக்குப் பிடித்தவனைக் காதலித்து மணந்த பெண்ணை உனக்கு ஆண் உடம்பு தானே கேட்கிறது – இந்தா என்று வன்புணர்ச்சி செய்யும் அராஜக மனோபாவத்தின் , தன் எதிராளியைப் பழிவாங்க அந்த ஆணின் மனைவி, மகள், அம்மாவைக் ‘கெட்ட வார்த்தைகளால் இழிவுபடுத்தும் அல்லது கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிக் கொலை செய்யும் அராஜக மனப்போக்கின் எதிரொலியே அல்லது வெவ்வேறு வடிவங்களே இத்தகைய இழிவுச் செயல்பாடுகள்.
இப்படியொரு கோர நிகழ்வு நடந்தால் உடனே சிலர் சகட்டுமேனிக்கு ‘ஆண்களே இப்படித்தான் – மிருகங்கள்’ என்ற ரீதியில், அல்லது குறிப்பிட்ட கட்சியினரே, மதத்தினரே இப்படித்தான் என்ற ரீதியில் பேச ஆரம்பித்துவிடுகிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்களின் தந்தை, சகோதரன், நண்பன், ஏன், மனசாட்சியுள்ள எந்த ஆணுக் கும் இத்தகைய கோர நிகழ்வுகள் மிகுந்த வேதனை யளிக்கக்கூடியவையே.
மணிப்பூரில் காணொளிகளுக்கு அப்பாற்பட்டு நிறைய கொடூர நிகழ்வுகள் நடந்திருக் கின்றன. எல்லாக் கொடூர நிகழ்வுகளிலும் ஒரே இனத்தவர்களே சம்பந்தப்ப்ட்டிருக் கிறார்களா, வெவ்வேறு இனத்தவர்கள் மாறிமாறி ஒருவர்மீதொருவர் இத்தகைய கொடூரங்களை நடத்தியிருக்கிறார்களா போன்ற விவரங்கள் இன்னும் வரவில்லை. மணிப்பூரில் இத்தகைய கலவரங்கள் இதற்கு முன்பும் நடந்திருக்கின்றன.
( இப்போது வெளியாகியிருக்கும் காணொளிகள் முன்பே வெளியிடப்படாமல் இப்போது வெளியிடப்பட்டிருப்ப தற்கு ஏதேனும் பிரத்யேகக் காரணங்கள் உள்ளனவா? யார் இந்தக் காணொளிகளை வெளியிட்டார்கள் என்ற கேள்விகளும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப் பட வேண்டும். அதே சமயம், இத்தகைய அவல நிகழ்வுகள் நடந்திருக்கிறதே என்ற வருத்தத்தை மீறி, ஐயோ, இந்தச் செய்திகள் எப்படியோ வெளியே தெரியவந்துவிட்டதே என்ற நினைப்பே அதிகமாக இருக்கும் மனப்போக்கு ஏற்புடையதல்ல.
கைது செய்யப்பட்டிருக்கும் ஆண் ஒருவரின் இனத்தைச் சேர்ந்த பெண்கள் அவருடைய வீட்டுக்குத் தீவைத்திருப்ப தாகச் செய்தி வருகிறது. இன்னொரு பக்கம், ஒரு கடை யில் இருக்கும் பெண்களைப் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கும்படி கும்பலிலிருந்த பெண்களே கூவியதாக வும் செய்தி வருகிறது.
எனவே, இத்தகைய விஷயங்களைப் பற்றிப் பேசுவோர், எழுதுவோர் மிகுந்த பொறுப்புணர் வுடன் தங்கள் கருத்துகளைப் பகிரவேண்டியது இன்றியமையாதது. பொதுப்படையாக ஆணினத்தை, இந்த மதத்தை, அந்த இனத்தை ஒட்டுமொத்த பொறுப்பாளியாக்கிப் பேசுவது சுலபம். ஆனால், அது சரியான அணுகுமுறையல்ல.
மேம்போக்கு அரசியல் விமர்சகர்கள், சமூகப்பிரக்ஞையாளர்கள், ஒரே அஜெண்டா வுடன் சமூகத்தில் நடக்கும் சீர்கேடுகளையெல்லாம் அணுகும் அரசியல் விமர்சகர்கள், சமூகப் பிரக்ஞையாளர்கள் – அவர்கள் ஆணோ, பெண்ணோ – மறைமுகமாக இத்தகைய அராஜகச் செயல்களை ஊக்குவிப்பவர்களாவார்களே தவிர (ஒரு தரப்பினர் செய்தால் அதை நியாயப்படுத்தியும் இன்னொரு தரப்பினர் செய்தால் அதை எதிர்த்துப் பேசியும்) அவர்களால் வேறெந்த நன்மையும் கிடைக்க வழியில்லை.
No comments:
Post a Comment