LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, December 17, 2022

குக்குறுங்கவிதைக்கதைகள் / சொல்லடி சிவசக்தி 26 - 28

 

குக்குறுங்கவிதைக்கதைகள்  / சொல்லடி சிவசக்தி  26 - 28


26. மதிநுட்பமும் மொழித்திட்பமும்

 


எனக்குக் காபி என்றால் உயிர்என்றார் பரவசத்தோடு.

உயிரை எத்தனை மலிவாகப் பேசுகிறார் பார்த்தீர்களாஎன்று

ஒரு கரும்புள்ளியிட்டனர்.

உயிரென்ன வெல்லமா?’ என்று அவர் கோபத்தோடு கேட்டபோது

வெல்லத்தை இழிவுபடுத்துவதில் வெட்டவெளிச்ச மாகிறது இவருடைய புல்லுருவித்தனம்என்று

ஒரு செம்புள்ளியிட்டனர்.

நல்ல மனம் வாழ்கஎன்றதை

தன்னைத்தான் சொல்லிக்கொள்கிறார்என்பதாகவும்

அல்பகல் அயராதுழைத்தார்கள்என்றதை

அப்படி அல்லாடத்தான் அவர்கள் பிறந்திருப்பதாகமூளைச்சலவை செய்வதாகவும்

காலைமாலையெவ்வேளையும் புதுப்புது

()ர்த்தங் கற்பித்துக்கொண்டே போவதில்

ஒருவேளை

கைவசமிருக்கும் கரும்புள்ளி செம்புள்ளிகள் தீர்ந்துபோட்விட்டால் என்ன செய்வது என்று

சீரிய மதிநுட்பமும் மொழித்திட்பமும் வாய்க்கப்பெற்றவர்கள்

சிந்தித்துச்சிந்தித்துச்சிந்தித்து

ஸ்விஸ் வங்கி லாக்கரில் நிரம்பி வழியுமளவு

வெகு அதிகமாகவே கரும்புள்ளி செம்புள்ளி சொல்பொருள் ()ர்த்தாத்தங்களை

சேமித்துவைப்பதென்று ஒருமனதாய் முடிவுசெய்திருக்கிறார்கள்.

 

 27. கருமமே கண்ணாயினார்

 

கருமம் எப்படிக் கண்ணாகும்?’ எனக் கேட்டார்

ஒருவர்.

அல்லது கண் எப்படிக் கருமமாகும்?’ என்றார் இன்னொருவர்.

கருமம் கருமம்என்று முகத்தை கோணலாக்கி தலையிலடித்துக்கொண்டார் வேறொருவர்.

கருமம் பிடித்தவர்என்று காறித்துப்பினார்

மற்றொருவர்.

நார் கண்ணானதோ யார் கண்டார்என்றார்

காணாமலே விண்டிலராயிருப்பவர்.

கண்ணன் + நயினார் கண்ணாயினார்என்றார்

பன்மொழிப்புலவராக அறியப்படப்

பெருமுயற்சி செய்துகொண்டிருப்பவர்.

கரு, மரு மேருஎன்று WORD BUILDING கட்டி

இறும்பூதடைந்தார் சொற்கட்டிடக்கலைஞர்.

நயினாவுக்குத் தரப்பட்டிருக்கும்ர்விகுதியை

நிறையவே சிலாகித்தார் மொழியியலாளர்.

கண் ஆய் என்கிறாரேஇது என்ன கூத்துஎன்று

அவிட்டுச்சிரிப்போடு கேட்டவர்க்கு

வெண்பட்டுச் சால்வை போர்த்தப்பட்டது.

அவரவர் கண்ணும் கருமமும் நாரும் வேறும்

அவரவர்க்கேயாகுமாம்

என்றொரு அசரீரி எந்நேரமும் கூறும்…….

 

  28.வேடதாரிகளும் 

  விஷமுறிப்பான்களும்

 

அத்தனை கவனமாகப் பார்த்துப்பார்த்துத் தேர்ந்தெடுத்து

ஊரிலேயே மிகச் சிறந்த தையற்காரரிடம் கொடுத்துத்

தைக்கச்சொல்லி

மீண்டுமொருமுறை திருத்தமாய் நீவி மடித்து

பதவிசாக அதையணிந்துகொண்டு

ஆடியின் முன் நின்றவண்ணம்

அரங்கில் நளினமாக நடந்துவருவதை

ஆயிரம் முறை ஒத்திகை பார்த்து முடித்து

அப்படியே நீ வந்தாலும்

அடி! உன் விழியோரம் படமெடுக்கும் நாகம்

வழியெங்கும் நஞ்சு கக்கும் என

அறிந்திருக்குமெனக்குண்டாம்

குறைந்தபட்சம்

இருபது திருநீலகண்டங்கள்!

 

Saturday, December 10, 2022

அகமும் புறமும் கவிதையும் ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 அகமும் புறமும் கவிதையும்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
‘இதோ நான் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன் பாருங்கள்’ என்கிறார்.
’இதோ இங்கே பாருங்களேன் நான் கவிதை எழுதிக் கொண் டிருக்கிறேன்’, என்கிறார்.
’இதோ சற்றே இப்படித் திரும்பிப்பாருங்களேன். நான் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன்’, என்கிறார்.
’கண்டிப்பாகக் கவிதைதான் எழுதுகிறாயா’ என்று கேட்க வேண்டும் போலிருக்கிறது கவிதைக்கு.
ஆனால் அது கண்ணாடிக்கு அப்பாலிருக்கிறது.
அதற்கு அசரீரியாகப் பேச வராது.
வேண்டும்போது ரௌத்ரம் பழகினாலும்
பொதுவாக கவிதை கனிவானது
குட்டிப்பாப்பா போல் மென்மையானது.
புறாக்கண்களை உருட்டி உருட்டிப் பார்ப்பதே
அதற்கு மிகவும் பிடிக்கும்.
சண்டை பிடிக்கவே பிடிக்காது.
’இத்தனை சொல்லியும் திரும்பிப்பார்க்க மறுக்கிறாயே -
என்னவொரு திமிர்
எத்தனை தெனாவெட்டு
என்னோடு சேர்ந்து செல்ஃபி எடுத்துக்கொள்ள
எத்தனை பேர் காத்துக்கொண்டிருக்கிறார்கள் தெரியுமா
சுண்டைக்காய் நீ – சோப்ளாங்கி'
என்று அன்னார் உச்சஸ்தாயியில் கூவக்கூவ
கமறிய அவர் குரல்வளையிலிருந்து
இருமல் பெருகிவர
வேகவேகமாய்ச் சென்று எங்கிருந்தோ வொரு
மினரல் வாட்டர் புட்டியையும்
ஒலிவாங்கியையும்
கொண்டுவந்து கொடுத்துவிட்டுத்
தன்வழியே செல்கிறது கவிதை.


கோயில்களில் கைபேசி _ லதா ராமகிருஷ்ணன்

 கோயில்களில் கைபேசி

_ லதா ராமகிருஷ்ணன்

(4 டிசம்பர் 2022 தேதியிட்ட *திண்ணை இணைய இதழில்
வெளியாகி யுள்ளது)

இன்று கோயில்களில் அலைபேசி கொண்டுவரலாகாது என்று இடப்பட்டி ருக்கும் உத்தரவு பலரால் கண்டனத்திற்கும் பரிகாசத்திற்கும் ஆளாகியிருக்கிறது.
எங்கே குற்றங்கள் நடக்குமோ அங்கேதான் இத்தகைய கட்டுப் பாடுகள் விதிக்கப்படும் என்று இந்த உத்தரவுக்குத் தன் பாரபட்ச அரசியல்பார்வையில் வியாக்கியானம் செய்பவர்களும் இருக்கி றார்கள். அலைபேசிகள் பயன் படுத்தப்படுவது தடைசெய்யப்பட் டிருக்கும் எல்லா இடங்கள், சூழ்நிலைகள் குறித்தும் இவர்கள் இதே ஆணவமான, அரைவேக்காட்டுத்தனமான பார்வையை முன் வைப்பார்களா தெரியவில்லை.
இப்படி மற்ற மத வழிபாட்டுத் தலங்கள் குறித்து யாரும் பேசியிருக் கிறார்களா, பேசமுடியுமா என்றும் தெரிய வில்லை.
எந்த மதத்தையும் கேள்விக்குட்படுத்துவது என்ற பெயரில் தரக் குறைவாகப் பழிக்க யாருக்கும் உரிமை யில்லை; அது கண்ணிய மான செயலுமல்ல.
மேற்கண்ட உத்தரவு அமுலுக்கு வந்துவிட்டதா, அதன்படி கோயி லுக்குள் அலைபேசி கொண்டு செல்ல லாகாதா அல்லது பயன் படுத்தலாகாதா, பேசக்கூடாதா படமெடுக்கலாகாதா என்ற விவரங் கள் இன்னும் தெளிவாகவில்லை.
இந்தத் தடை நடைமுறையில் சாத்தியமா என்பதும் தெளிவாக வில்லை.
கோயில்களை கடற்கரையாகவும், கடைவீதியாகவும், காதலர் பூங்கா வாகவும், வம்புமடமாகவும் பெண்களை நோட்டமிடக் கிடைத்த வாய்ப்பாகவும் இன்னும் பலவாக வும் பயன்படுத்தும் மனிதர்கள் உண்டு.
எவரொருவருடைய தனிமனித உரிமையும் அது அடுத்தவருக்கு ஊறு விளை விக்காதவரையில்தான் அப்படியிருக்க முடியும். கோயில்களுக்கு மக்கள் வருவதற்கான முதன்மைக்காரணத்தை ஓரங்கட்டிவிட்டு அவற்றை எல்லோருக்குமான பொழுதுபோக்கு மனமகிழ் மன்ற மாக மாற்றிவிட இயலாது.
பிற மதங்களின் வழிபாட்டுத்தலங்களிலும் சில அடிப்படை விதி முறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.
இன்று பிரதானமான தொலைக்காட்சி சேனல்களாக உள்ள சன், விஜய், ஜீ தமிழ் முதலியவற்றில் ஒளிபரப்பப் படும் அபத்தமோ அபத்த மெகா சீரியல்களிலெல்லாம், கோயில்களில் கடவுளின் திருவுருவச்சிலையின் முன் னிலையில் சக்களத்தியை அல்லது பங்காளியைக் கொலைசெய்வதற்கான திட்டங்கள் தீட்டப்படுகின் றன. கொள்ளையடிக்கக் கூட்டாளிகள் கூடிப் பேசுகிறார்கள். குழந் தைகள் கடத்தப்படுகின்றன. பிரசாதத்தில் விஷம் வைத்து அக்காக் காரி தங்கையை அல்லது அண்ணன் காரன் அண்ணியைக் கொல் கிறார்கள்.
இன் னும் எத்தனையோ அக்கிரமங்கள் கோயில்களில் தான் திட் டம் தீட்டப்படுவதாகத் தொடர்ந்த ரீதியில் காட்டப்பட்டுக்கொண்டே யிருக்கின்றன.
கோயில்கள் என்றாலே சடங்கு சம்பிரதாயங்கள் மட் டுமே என்ப தாக ஒரு மதம் மேம் போக்காய் குறுக்கப்பட்டு விடுவதும், அம் மதத்தின் தத்துவம், ஒருமையுணர்வு போன்ற பலப்பல அம்சங்கள் ஒட்டுமொத்தமாகப் புறக் கணிக்கப்படுவதும் தொடர்ந்து இந்த நாடகங்களில் இடம்பெறும் அம்சங்கள்.
குடிப்பதையும் புகைபிடிப்பதையும் காட்டிக்கொண்டே குடி குடி யைக் கெடுக்கும் போன்ற வாசகங்களை கண்ணுக்குத் தெரியாத அளவு குட்டியாகத் திரையின் அடிப்பகுதியில் மின்னலெனக் காட்டி மறைப்பதைப் போல் இப்போ தெல்லாம் ‘பொறுப்புத்துறப்பு’ என்று ஒரு சிறு பத்தியும் இந்த நாடகங்களின் ஆரம்பத்தில் அவசர அவசர மாகக் காட்டப்படுகிறது.
அப்படியெல்லாம் யாரும் பொறுப்பேற்பைத் துறந்துவிட முடியாது.
முழுவிழிப்போடு இந்துமதத்தை இந்துக் கடவுளர்களை இழிவு படுத்துவதற்கென்றே இத்தகைய சித்தரிப்புகள் இந்தத் தொடர் நாட கங்களில் இடம்பெறுகின்றனவா அல்லது ‘ஜாலியாக’ இந்துமதத் தைப் பொழுதுபோக்கு அம்சமாகக் கையாள்கிறார்களா – தெரிய வில்லை.
இத்தகைய காட்சிச் சித்திரங்கள் இளம் தலைமுறையினர் மனதில் எத்தகைய எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை உரியவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.
எப்படியிருந்தாலும் காட்சி ஊடகங்களில் இடம்பெறும் பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் மதத்தை மேம்போக்காகக் கையாளும், சித்தரிக்கும் போக்கு கண்டனத்திற்குரியது.
மதத்தை எதிர்ப்பது, கேள்வி கேட்பது என்றால்கூட அதை in all seriousness, in right earnest, கண்ணியமாகச் செய்ய வேண்டும்.
அதற்கு ஒரு தார்மீகத் திராணி வேண்டும்.

வெற்று முழக்கங்கள் - லதா ராமகிருஷ்ணன்

 வெற்று முழக்கங்கள் 

- லதா ராமகிருஷ்ணன்

முன்பு ஒரு முறை நடிகர் விசு நடத்திக்கொண்டிருந்த ஏதோவொரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவேண்டாம் என்று அந்தப் பெண்ணின் கணவர் அல்லது கணவர் வீட்டார் தடுத்தார்கள் என்று ஆணாதிக்கம், வெட்கக்கேடு என்றெல்லாம் அவர்களைப் பொது வெளியில் சாடினார் நிகழ்ச்சியை நடத்தும் நடிகர். அவர் நடத்திக்கொண்டிருந்த நிகழ்ச்சிக்கு அதுவொரு விளம்பரம். மற்ற படி, இப்படி மேடையில் முழங்குவோர் தங்கள் படைப்புகளில் கருத்துரீதியாக பெண்களை எப்படி காலங்காலமாகக் காண்பிக்கி றார்கள் என்பது தெரிந்த கதைதான்.

இந்த மேம்போக்கு முழக்கங்கள் பெண்களிடமிருந்தும் பீறிட்டுக் கிளம்புவதுண்டு. பொதுவாகவே இருபாலரிலும் சக உயிர்களுக் காகப் பேசுவதான பாவனையில் ஒரே SWEEPING STATEMENTSஆக, உளவியலாய்வாளர் பாவனையில் மிக மிக மேம்போக்காகக் கருத்துகளை அள்ளியிறைப்பது இயல்பாகவே ஆகிப்போனவர்கள் உண்டு.
இப்போது படிக்கக் கிடைத்த ஒரு கட்டுரையில் பெண்ணை நிர்வா ணமாகப் படமெடுத்து பயமுறுத்துவது போல் ஆணை யாரும் செய் வதில்லையே - ஏன் என்று கேட்டிருப்பதைப் பார்த்ததும் எரிச்சல் ஏற்பட்டது. இது உண்மையில்லை என்பதே உண்மை.

செய்தித்தாளில் அன்றாடம் சமூக ஊடகங்களின் வழியாக ஆண் களை ஏமாற்றும் பெண்களைப் பற்றிய செய்திகள் படிக்கக் கிடைக் கின்றன. அவமானத்திற்கு பயந்து சில ஆண்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் அறியாமல் அல்லது பொருட்படுத்தாமல் மேற்படி கட்டுரையாளர் பேசிக் கொண்டே போகிறார்.

இவரொத்த வர்களெல்லாம் பெண்ணியம் பேசுவதால் பெண்ணி யத்திற்குப் பின்னடைவுதானே தவிர ஒரு பயனும் இருக்க வழி யில்லை.

இன்று புதிதாய்ப் பிறந்தோம்! _ லதா ராமகிருஷ்ணன்

 இன்று புதிதாய்ப் பிறந்தோம்!

_ லதா ராமகிருஷ்ணன்
வயதானவர்களையெல்லாம் ஒரு மொந்தையாக பாவிக் கும் வழக்கம் நம்மி டையே பரவலாக இருந்துவருகிறது.
மருத்துவ வசதிகள், வயதானவர்களுக்கு நிதியாதாரம், ஓய்வூதியம், தங்குமிடவசதி, தலைச்சாயம் முதலிய வசதிகள் அதிகரித்துள்ள இந்நாளில் (இந்த வசதிகள் வயதா னவர்கள் அனைவருக்கும் ஒரேபோல் கிடைக்கிற தென்று சொல்லமுடியாது என்பதும் உண்மையே) முன்பு அறுபது வயதே முதுமையாகக் கருதப்பட்ட நிலை மாறி இன்றைய 60 வயது 40 வயதின் அளவே யாகியிருப்பதாகச் சொல்ல வழியுண்டு. ஆனாலும் 60 - 90 வரையான அனைத்து வயதினரையும் முதியவர்கள் (மூத்த குடிமக் கள் அழகான விவரிப்பு!) என்ற ஒரே அடைமொழியில் அடை யாளப்படுத்தும் போக்கே இன்றளவும் பரவலாக இருக்கிறது
வயதானவர்கள் என்றால் ஏக்கத்தோடு தன் இளமைக் காலத்தைத் திரும்பிப் பார்த்துக்கொண்டேயிருப்பார்கள். தன்னால் இப்போது இதைச் செய்ய முடிய வில்லையே, அதைச் செய்ய முடியவில் லையே, தன்னை யாரும் கவனிக்கவில்லையே, தன்னோடு யாரும் பேசுவதில் லையே, தன்னை யாரும் பொருட்படுத்தவில்லையே, தன்னிடம் யாரும் அறிவுரை கேட்கவில்லையே – இப்படி ஏங்கு பவர்களாகவே, அங்கலாய்ப்பவர்களாகவே வயதா னவர்களைச் சித்தரிப்பதில் நிறைய பேருக்கு ஒரு சந்தோஷம்.
இப்படியிருக்கும் வயதானவர்களும் உண்டு என்பது உண்மைதான்.
ஆனால் இந்த அங்கலாய்ப்புகளும், ஆற்றாமைகளும் இளைய வயதினருக்கு இல்லையா என்ன?
சில நாட்களுக்கு முன்பு ஒருவர் முதுமை என்றால் பொய்ப்பல், ஹியரிங் எய்ட், மருந்து மாத்திரை, கைத்தடி என்று நிறைய வெளியாதரவுகளின் துணையோடு வாழும்படியாகிறது என்று வருத்தப்பட்டிருந்தார். ஒருவகையில் அது உண்மைதான் என்றா லும் அப்படிப் பார்த்தால் இளம் வயதில் பவுடர், குறிப்பிட்ட உடை கள், சிகையலங்காரம், பர்ஃப்யூம், என்று பல தேவைப் படுகின்ற னவே? பிடிக்காத படிப்பு, அந்நியவுணர்வூட்டும் இடத்தில் வாழ்வா தாரத்திற்காக வாசம், என்று நிறைய சொல்லலாம்.
இந்த கையறு நிலையுணர்வுகளையெல்லாம் கடந்து தானே மாற்றுத்திறனாளிகள் தினசரி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்?
பத்மினி மேடமுக்கு இப்போது 90 வயதுக்கு மேலேயிருக்கும். (எனக்கே 65 வயதாகிவிட்டது). ஆனால் வாழ்வை ஏக்கத்தோடு பின்னோக்கிப் பார்ப்பதோ, அங்கலாய்ப் பதோ அவரிடம் கிடை யவே கிடையாது. அவருக்குக் காலாறக் கடற்கரையில் நடப்பதும், கடலைப் பார்த்துக் கொண்டிருப்பதும் மிகவும் பிடிக்கும். பத்து வருடங்கள் முன்புவரை கூட தினசரி தன் நட்பினர் சிலரோடு போய்க் கொண்டிருந்தார். இப்போது முடியவில்லை. அது குறித்து மனதில் அவ்வப்போது தோன்றக்கூடிய ஒரு சிறு இழப்புணர்வு அங்கலாய்ப்பாக உருவெடுக்க அவர் அனுமதித் ததேயில்லை!
ஒவ்வொரு வயதுக்கும், பருவத்துக்கும் அதற்கான அனுகூலங்கள் உண்டு என்று பத்மினி கோபாலன் கூறியது எவ்வளவு உண்மை என்பதை 40 வயதுகளில் தனியாக இயல்பாக ஹோட்டலுக்குச் சென்று, யாரும் பார்ப்பார் களோ என்று self-conscious ஆக படபடப் பாக உணராமல் ஆற அமர ருசித்துச் சாப்பிடும் போது உணர்ந்தி ருக்கிறேன்!
70 வயதுகளில் இளையதலைமுறையினர் பயிலும் கணினிப் பயிற்சி மையத்திற்குச் சென்று கணிப்பொறியைக் கையாளும் பயிற்சி பெற்றார்.
சில வருடங்களுக்கு முன்பு வீதியோரம் வசிக்கும் ஏழைப் பெண் மணி யொருவரின் மகள் விபத்தாக கருவுற்றபோது அவளுக்கு உதவ எங்கோ தொலைதூரத்திலிருந்த அமைப்பு ஒன்றுக்கு தோழர் மோகன் தாஸின் உதவி யோடு அந்தப் பெண்ணையும் அழைத்துக்கொண்டு போய் அங்கே மணிக்கணக்காகக் காத்தி ருந்து அந்தப் பெண் ணுக்கு உதவமுடிந்த வழிவகைகளை அணுகி வேண்டி னார் பத்மினி மேடம்.
இப்போது மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தும் தமிழ் படிக் கவே வராமலிருக்கும் (தமிழ் வழியில் கல்வி பயின்ற) ஒரு இளம் பெண்ணுக்கு தமிழ் கற்றுத்தரும் வேலையில் இறங்கியிருக்கிறார்! எளிய தமிழிலான கதைப்புத்தகங்கள் இருக்கின்றனவா என்று என்னிடம் கேட்டிருக்கிறார்!
சமூகத்தின் அடித்தட்டு மக்களின் பிள்ளைகளுக்காக இயங்கும் அரசுப் பள்ளிகளின் தர மேம்பாடு பற்றிப் பேசினால் ’உடனே தனி யார் பள்ளிகள் மட்டும் ஒழுங்கா என்று கேட்க நிறைய பேர் கிளம்பு கிறார்கள். இது ஏன் என்றே தெரியவில்லை’ என்று ஆதங்கப் படுவார்.
(அவருடைய ஆதங்கமெல்லாம் சமூகம் சார்ந்ததாகத் தான் இருக் குமே தவிர அவருடைய வயது காரணமாக எழுவதாக இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது).
இன்றைய இளந்தலைமுறையினர் பலருக்கு (தனியார் பள்ளி களில் பயிலும் பிள்ளைகளுக்குக்கூட) தாய்மொழியில் தங்கு தடையின்றி வாசிக்கவும் எழுத வும் தெரியாத நிலை பரவலாக இருக்கிறது. இந்நிலை மாறவேண்டியது மிக அவசியம்.
மாண்டிசோரி கல்விமுறையில் ஒன்றரை அல்லது இரண்டு மாதங் களில் தமிழ் எழுதவும் வாசிக்கவும் பள்ளிமாணாக்கர்களுக்குக் கற்றுத்தர முடியும் என்று பத்மினி கோபாலனின் முன்முயற்சியில் உருவான அமைப்பின் வழி மாண்டிசோரி ஆசிரியைகளாக உரு வாகியுள்ளவர்கள் சமூகத்தின் அடித்தட்டிலிருந்து வரும் பள்ளிப் பிள்ளைகளிடையே நிரூபித்திருக்கிறார்கள். இந்த வழி முறையி லான மொழிப்பயிற்சி பரவலாக்கப்பட்டால் நிறைய மாணாக்கர் கள் பயனடைவார்கள்.
பத்மினி மேடமைப் பார்க்கும்போது என்னால் புரிந்துகொள்ள முடிவது –
• நம்மைப் பற்றி மட்டுமே எண்ணாமல் நமக்கு வெளியே பார்க்கும் போது நம்மை அங்கலாய்ப்புகளும் தன்னிரக்கமும் அதிகம் பாதிக்காது.
• எந்த வயதிலும் மற்றவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய முடியும்.
• இன்னொருவரோடு போட்டிபோடுவதாய், மூன்றாமவரை பிர மிக்கவைப்ப தற்காக வாழ்வது என்ற மன நிலையை வளர்த்துக் கொள்ளக்கூடாது.
• நம் வீட்டுக் குழந்தைகளையும் நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளி லான குழந்தைகளுக்கும் ஒரு நல்ல வீட்டுச் சூழல், பள்ளிச் சூழலை உருவாக்கித்தர நம்மால் இயன்ற முயற்சிகளை மேற் கொள்ள வேண்டும்.
• எதற்காகவும் மனதில் வெறுப்பும், ஆணவமும், கழி விரக்கமும் மண்ட அனுமதிக்கலாகாது.
• தன்மதிப்பை வளர்த்துக்கொள்ளவேண்டும்.
இன்னும் நிறைய எழுதலாம்……..

கிணற்றில் விழுந்த நிலவு - கவிஞர் வைதீஸ்வரனைப் பற்றிய காணொளி

 கிணற்றில் விழுந்த நிலவு 

- கவிஞர் வைதீஸ்வரனைப் பற்றிய காணொளி

https://www.youtube.com/watch?v=5ThsZDRFJEs

கவிஞர் வைதீஸ்வரனின் கலை இலக்கியப் பங்களிப்பு குறித்த காணொளி - குவிகம் இலக்கிய அமைப்பு வெளியிட்டிருக்கிறது.

https://www.youtube.com/watch?v=5ThsZDRFJEs

இன்று நம்மிடையே உள்ள, இன்றளவும் எழுதிக்கொண்டி ருக்கும் கவிஞர் வைதீஸ்வரனைப் பற்றி குவிகம் இலக்கிய அமைப்பு உருவாக்கியிருக்கும் காணொளி இது.

தோழர் நிழல் திருநாவுக்கரசு அருமையாக உருவாக்கியிருக் கிறார்.

சமீபத்தில் இந்தக் காணொளியின் வெளியீட்டுவிழா சென்னை யில் செப்டெம்பர் 22 கவிஞரின் பிறந்த நாள் அன்று இனிதே நடந்தேறியது.

87 வயதாகும் கவிஞர் வைதீஸ்வரன் நவம்பர் மாத இறுதியில் தனது மகன்கள் இருக்கும் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுவிட்டார். இந்தத் தருணத்தில் குவிகம் அமைப்பு கவிஞர் வைதீஸ்வரனுக்கு செய்திருக்கும் இந்த அன்புநிறைந்த மரியாதை குறிப்பிடத்தக்கது; பாராட்டுக்குரியது.


மந்திரமாவது சொல் - லதா ராமகிருஷ்ணன்

மந்திரமாவது சொல்

- லதா ராமகிருஷ்ணன்



சொற்களுக்கு சக்தி உண்டு.

படைப்பாளிகள் கையாளும் சொற்களுக்கு சக்தி அதிகம். அல்லது, அதிகமாக இருக்க வேண்டும் என்று விரும்பு கிறேன் என்று சொல்லலாம்.

சொற்களும் வாக்கியங்களுமாக அவை ஒலி வடிவிலும் வரி வடிவிலுமாக வெளிப்பட்டு நிகழ்ந்த புரட்சிகள் எத்தனையோ.

இன்றும் குழந்தைகளுக்கான எத்தனையோ கதைகளில் முதியவரான வேலையாள் அவன் இவன் என்றே குறிப் பிடப் படுவதும், முதலாளி வீட்டு சின்னப்பையனும் அவரைப் பெயரிட்டு அழைப்பதும் இயல்பாக எழுதப்படுகின்றன.

அறிந்தும் அறியாமலுமாய் இவை முன்வைக்கும் உட்குறிப்பு கள் எத்தகையவை.

மனித நுண்ணுணர்வுகளை எழுதுவதாகப் போற்றப்படும் படைப்பாளியின் கதையொன்றில் விந்தி விந்தி நடக்கும் கதாபாத்திரம் ஒன்றை மற்ற கதாபாத்திரங்களெல்லாம் ‘நொண்டி’ என்று கூப்பிடுவார்கள். அவர்களுக்கு அந்த மாற்றுத்திறனாளி மேல் மிகுந்த அன்பு இருப்பதாகக் கதை அமைந்திருக்கும். ஆனாலும், அந்த அன்பு அவர்கள் அந்த மாற்றுத்திறனாளியை விளிக்கும் விதத்தில் மட்டுப்பட்டு விட்டதாகவே எனக்குத் தோன்றும்.

ஒருவரிடம் அன்பிருந்தால் அவரைக் காயப்படுத்தும் ஒரு வார்த்தையால் அவரை விளிக்க, குறிக்க மனம் வருமா?

தொலைக்காட்சி மெகாத்தொடர்களில் ’அநாதை, வாழா வெட்டி, நாசமாப் போயிடுவே, கைகால் வெளங்காதவனே’, போன்ற வார்த்தைகளெல்லாம் மிக அதிக அளவில் புழங்குகின்றன.

இப்படி அடைமொழிகளால் மதிப்பழிக்கப்படும் இன் னொரு பிரிவினர் முதியவர்கள்; மூத்த குடிமக்கள்.

‘பெரிசு’ என்று பரிகாசமாய் அழைக்கப்படுகிறார்கள்; குறிப்பிடப்படுகிறார்கள். மூத்த குடிமக்கள் என்றாலே சிலருக்கு நகைச்சுவை பொங்கும். LAUGHING AT THE EXPENSE OF OTHERS சிலருக்கு மிகவும் பிடித்த பொழுது போக்கு.

ஆனால், படைப்பாளிகளும் இதையே செய்தால்….?

'வட்டார வழக்கைப் பயன்படுத்தினோம்', 'என் படைப்பில் வரும் கதாபாத்திரம் அந்த வார்த்தையைப் பேசியிருக்கிறது – அது நான் பேசுவதல்ல', என்றவிதமாய் எத்த னையோ வழிகளில் பொறுப்புத்துறப்பு செய்தாலும் ஒரு படைப்பாளி தன் படைப்பு களில் சக மனிதர்களை மதிப்பழிக்கும்படியான சொற்களை, சொற்பிரயோகங் களை வெகு இயல்பாகக் கையாள்வதில் ஒரு ABJECT INSENSITIVITY இருப்பதாக உணர்வதை என்னால் தவிர்க்க முடியவில்லை.

சற்றுமுன் ஒரு கவிதையில் ’செவிட்டுக் கிழத்துக்கு’ என்ற சொல்லாடலைப் படித்து மிகவும் வருத்தமாக இருந்தது.

தினசரி வாழ்க்கையிலும் சரி, படைப்பாக்கங்களிலும் சரி நாம் பயன்படுத்தும் சொற்கள் நம்மை அடையாளங் காட் டும் என்பதை நாம் மறந்துவிடலாகாது.