LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, December 10, 2022

மந்திரமாவது சொல் - லதா ராமகிருஷ்ணன்

மந்திரமாவது சொல்

- லதா ராமகிருஷ்ணன்



சொற்களுக்கு சக்தி உண்டு.

படைப்பாளிகள் கையாளும் சொற்களுக்கு சக்தி அதிகம். அல்லது, அதிகமாக இருக்க வேண்டும் என்று விரும்பு கிறேன் என்று சொல்லலாம்.

சொற்களும் வாக்கியங்களுமாக அவை ஒலி வடிவிலும் வரி வடிவிலுமாக வெளிப்பட்டு நிகழ்ந்த புரட்சிகள் எத்தனையோ.

இன்றும் குழந்தைகளுக்கான எத்தனையோ கதைகளில் முதியவரான வேலையாள் அவன் இவன் என்றே குறிப் பிடப் படுவதும், முதலாளி வீட்டு சின்னப்பையனும் அவரைப் பெயரிட்டு அழைப்பதும் இயல்பாக எழுதப்படுகின்றன.

அறிந்தும் அறியாமலுமாய் இவை முன்வைக்கும் உட்குறிப்பு கள் எத்தகையவை.

மனித நுண்ணுணர்வுகளை எழுதுவதாகப் போற்றப்படும் படைப்பாளியின் கதையொன்றில் விந்தி விந்தி நடக்கும் கதாபாத்திரம் ஒன்றை மற்ற கதாபாத்திரங்களெல்லாம் ‘நொண்டி’ என்று கூப்பிடுவார்கள். அவர்களுக்கு அந்த மாற்றுத்திறனாளி மேல் மிகுந்த அன்பு இருப்பதாகக் கதை அமைந்திருக்கும். ஆனாலும், அந்த அன்பு அவர்கள் அந்த மாற்றுத்திறனாளியை விளிக்கும் விதத்தில் மட்டுப்பட்டு விட்டதாகவே எனக்குத் தோன்றும்.

ஒருவரிடம் அன்பிருந்தால் அவரைக் காயப்படுத்தும் ஒரு வார்த்தையால் அவரை விளிக்க, குறிக்க மனம் வருமா?

தொலைக்காட்சி மெகாத்தொடர்களில் ’அநாதை, வாழா வெட்டி, நாசமாப் போயிடுவே, கைகால் வெளங்காதவனே’, போன்ற வார்த்தைகளெல்லாம் மிக அதிக அளவில் புழங்குகின்றன.

இப்படி அடைமொழிகளால் மதிப்பழிக்கப்படும் இன் னொரு பிரிவினர் முதியவர்கள்; மூத்த குடிமக்கள்.

‘பெரிசு’ என்று பரிகாசமாய் அழைக்கப்படுகிறார்கள்; குறிப்பிடப்படுகிறார்கள். மூத்த குடிமக்கள் என்றாலே சிலருக்கு நகைச்சுவை பொங்கும். LAUGHING AT THE EXPENSE OF OTHERS சிலருக்கு மிகவும் பிடித்த பொழுது போக்கு.

ஆனால், படைப்பாளிகளும் இதையே செய்தால்….?

'வட்டார வழக்கைப் பயன்படுத்தினோம்', 'என் படைப்பில் வரும் கதாபாத்திரம் அந்த வார்த்தையைப் பேசியிருக்கிறது – அது நான் பேசுவதல்ல', என்றவிதமாய் எத்த னையோ வழிகளில் பொறுப்புத்துறப்பு செய்தாலும் ஒரு படைப்பாளி தன் படைப்பு களில் சக மனிதர்களை மதிப்பழிக்கும்படியான சொற்களை, சொற்பிரயோகங் களை வெகு இயல்பாகக் கையாள்வதில் ஒரு ABJECT INSENSITIVITY இருப்பதாக உணர்வதை என்னால் தவிர்க்க முடியவில்லை.

சற்றுமுன் ஒரு கவிதையில் ’செவிட்டுக் கிழத்துக்கு’ என்ற சொல்லாடலைப் படித்து மிகவும் வருத்தமாக இருந்தது.

தினசரி வாழ்க்கையிலும் சரி, படைப்பாக்கங்களிலும் சரி நாம் பயன்படுத்தும் சொற்கள் நம்மை அடையாளங் காட் டும் என்பதை நாம் மறந்துவிடலாகாது.

No comments:

Post a Comment