LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, October 6, 2019

BIGG BOSSம் BRAINWASHம் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


BIGG BOSSம் 
BRAINWASHம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

(*6.10.2019 தேதியிட்ட திண்ணை இணைய இதழில் வெளியாகியுள்ளது)




பெரியோர்களே தாய்மார்களே!
பத்தரைமாற்றுத் தங்கத் தோழர்களே தோழிகளே!
சிறுபிள்ளைகளே கைக்குழந்தைகளே!
சுற்றியுள்ள சடப்பொருள்களே!
சூழ்ந்திருக்கும் அணுத்திரள்களே!
ஆகாச வெண்ணிலவே! ஆதவனே! நட்சத்திரங்களே!
ஆற்றுமீன்களே!
வேற்றுகிரகவாசிகளே!
இன்னும் விடுபட்டுப்போன ஜீவராசிகள்
விலங்கினங்கள் புள்ளினங்கள்
மரம் செடி கொடிகளெல்லாம் _

BIGG BOSS பாருங்கள் –
BIGG BOSSஐயே பாருங்கள்!
காணக்கிடைக்காத தரிசனம் இது;
காணவேண்டியது;
கண்ணாடியாய் நம்மைப் பிரதிபலிப்பது;

(*பொறுப்புத்துறப்பு: எத்தனை சொல்லியும் உங்களை யதில் காணமுடியவில்லையென்றால் காவல்நிலையத்தில் புகார் தந்துவிடவும்)

வீட்டிலும் வெளியிலும் முடிந்தால் கடலுக்கடியிலும்
முட்டாள்பெட்டியிலும் மடிக்கணினியிலும் மௌபைலிலும்
பாருங்கள் பாருங்கள்
BIGG BOSS பாருங்கள்!

BIGG BOSS பார்த்தால் நமக்கு ஞானக்கண் திறக்கும்
பின், அதையும் பயன்படுத்திவீர் BIGG BOSS பார்ப்பதற்கே!

தமிழ்க் கலாச்சாரம் பற்றி அறியவேண்டுமா?
தொலைவிலுள்ள கீழடிக்கெல்லாம் ஏன் போகவேண்டும்?
BIGG BOSS பாருங்கள்
தொடையைக் காட்டிக்கொண்டு கால்மேல் கால் போட்டுக்கொண்டு அமர்ந்திருக்கும் பெண்கள்
திடீரென்று தழையத் தழைய பாவாடையோடு
தாவணிக்கு மாறிவிடுவார்கள்
(மார்பை போர்த்துவதற்கு தாவணி என்பது பழமைவாதம் என்றால்
மறுக்க முடியுமா உங்களால்?)

பாருங்கள் பாருங்கள் BIGG BOSS பாருங்கள்
BIGG BOSS போட்டியாளர்கள் குடிக்கும் குளிர்பானம்
உங்கள் குரல்வளைக்குள் சில்லென்று இறங்குவதாக உணரமுடியவில்லையென்றால் நாமெல்லாம் என்ன தமிழர்கள்?

பாடுங்கள் பாடுங்கள் BIGG BOSSஸைப் போற்றிப் பாடுங்கள்
அசந்தால் உங்களையுமறியாமல் பேட்டியெடுக்கப்பட்டுவிடுவீர்கள்
BIGG BOSSஸை ஒட்டிப் பேசினாலும் வெட்டிப் பேசினாலும்
அது BIGG BOSSக்குப் பெருமைதானே!

’போற்றி’ பாடலும் ’அறம்’ பாடலும்
பழந்தமிழர் மரபு என்று தெரியாதவர்கள்
காற்றடைத்த பையாய் மண்ணோடு மண்ணாகிப் போக.

ஆக, அப்பா தன் மனைவியைத் தனியறையில் கட்டித்தழுவி
முத்தமிட்டு அன்பைக் காட்டினால் மட்டும் போதாது –
அனைவரும் காண அதைச் செய்யவேண்டும்;
அத்தோடு, மகளைக் கட்டியணைக்கவேண்டும்
மருமகளைக் கட்டியணைக்கவேண்டும்
மாமியாரைக் கட்டியணைக்கவேண்டும்
மாட்டேன் என்று சொல்லலாகாது
மடிசஞ்சியா நீங்கள்?

மொழியறிவு updated ஆக இருக்கவேண்டியது அவசியம்
ஆம், தமிழ் பேசுவதாக தங்கிலீஷ் பேசவேண்டும்
அத்தையை ஆண்ட்டி என்றழைக்கலாம்
ஆண்ட்டியை அத்தை என்று அழைத்தால்
அது பிழையாகிவிடலாம் – அதிகவனம் தேவை
அங்கங்கே மானே தேனே சேர்த்துக்கொள்ளலாம்
அத்தோடு நிறுத்திக்கொண்டால் நல்லது.
தமிழ் வளர்ப்போம் என்று முழங்கினாலும்
மழலை உச்சரிப்பைப் பழகவேண்டியது அவசியம்.

அது சரி TASK TASK என்கிறார்களே- அது என்ன?
அட வெண்ண – இதுகூடவா தெரியாது?
நன்கு துவைக்கப்பட்டிருக்கும், அல்லது புத்தம்புதிய
துணியின் ஓரங்களில்
சிறிதே மண்ணொட்டித் தந்தால்
இல்லாத நெற்றிவியர்வையைத் துடைத்தபடி யதை
அடிஅடியென்று அலுங்காமல் நலுங்காமல் அடித்துத்
துவைக்கவேண்டும்

வேண்டும் வேண்டும் BIGG BOSS வேண்டும்
மீண்டும் மீண்டும் BIGG BOSS பார்க்கவேண்டும்.
அவர் சொல்கிறார் இவர் சொல்கிறார் எவரெவரோ சொல்கிறார்கள் எல்லோருமே சொல்கிறார்கள்.
எனவே, ஊரோடு ஒத்துவாழ்வதே மேல்

கேள், நாளொன்றுக்கு நாற்பதாயிரம்போல் ஊதியத்தில்
BIGG BOSS போட்டியாளர்கள் இடுப்புவளையாமல் பெருக்குவார்களே –
அதற்கு இணையாகிடுமா
நாள்தவறாத துப்புரவுத்தொழிலாளர்களின்
அற்பக்கூலி பெறும் உழைப்பு?

கம்பின் மேல் நடக்கும் கழைக்கூத்தாடிச் சிறுமிக்காய்
கண்கலங்கத் தெரிய வேண்டும் – கலையாத ஒப்பனையோடு.

பருவமழை பொய்த்தாலும் நாள்தவறாமல் காண்பீர் BIGG BOSS
விற்பனைக்குக் கடைவிரிக்கப்படும் மனித உணர்வுகள்
மலிவு விலையில்; தள்ளுபடி யுண்டு.

சமூகத்தின் நான்காவது தூணான இதழியலாளர்களிடமே பத்து கேள்விகள்
முன்கூட்டியே எழுதி வாங்கி அதில் மூன்றை மட்டுமே கேட்கச் சொல்லி
அதில் ஒன்றைமட்டுமே ஒளிபரப்பி
‘Paid News’ பற்றி நினைக்கச் செய்த BIGG BOSS புகழ்
பாரெங்கும் ஓங்கட்டும்!
ஓங்கட்டும் ஓங்கட்டும் BIGG BOSS புகழ் ஓங்கட்டும்

முடிக்கு முன் ஒரு கேள்வி:
(*சரியான பதில் சொல்லும் பார்வையாளருக்கு
தொலைவிலிருந்து BIGG BOSS இல்லத்தை தரிசிக்கும் பேறு கிட்டும்)
நகைச்சுவையென்ற பெயரில் கிச்சுகிச்சுமூட்டியும்கூட நம்மால் சிரிக்கவியலாதுபோக
ஒலிப்பதிவுக்கருவிமூலம் சிரிப்பையும் கைத்தட்டலையும்
ஒரே சீரான இடைவெளியில் அரங்கம் அதிர
எதிரொலிக்கச் செய்யும்
BIGG BOSS நிகழ்ச்சியே
பெரும் பொய் புரட்டு அரசியலாயிருக்கையில்
தனியாக அதில் அரசியல் பேசத்
தேவையிருக்கிறதா என்ன?

  


கனவின் மெய்ப்பாடு ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


கனவின் மெய்ப்பாடு
ரிஷி
(
லதா ராமகிருஷ்ணன்)


ஒளிக்கீற்றுகள் சில -
அவை சூரியனுடையதா சந்திரனுடையதா தெரியவில்லை.....
சில நீர்க்குமிழிகள்
அவற்றுள் கோட்டுருவாய் தெரியும் பிரபஞ்சங்கள்
அங்கங்கே கொஞ்சம் அழிந்தும் கிழிந்தும்....
தெரியும் முகங்கள் எனக்குப் பரிச்சயமானவைபோலும்
நெருக்கமானவை போலும்
அதேசமயம் நான் அறியாதனவாகவும்.....
அமர்ந்துகொண்டோ நின்றுகொண்டோ அல்லது நீந்திக்கொண்டோ
உருவந்தாங்கியோ அருவமாகவோ
நான் அந்தச் சட்டகத்திற்குள் கண்டிப்பாக எங்காவது இருப்பேன்;
கண்டுபிடிக்க முடியவில்லை.
இடைவழி காற்றாலான பாறாங்கல்லால் அடைபட்டிருக்கிறது.
இந்த கணத்தை இப்படியே உறையச்செய்ய வழியில்லை.
கீற்றுகளை zoom செய்ய கருவிகளேதும் கைவசம் இல்லை.
சிறு அசைவில் குலைந்துவிடலாகும் கனவிற்குள்
நான் முழுப்பிரக்ஞையோடுதான் இருக்கிறேன்.
ஆனால் இங்கே உறங்கிக்கொண்டிருக்கும் என்னால் அந்த நானை
அடையாளங்காண இயலவில்லை.
கையறுநிலையில் கண்ணோரம் நீர்கசிய -
கலைந்துவிடும் கனவு
நினைவாகவோ நனவாகவோ
வழியில்லாத நிலையாமையே
வாழ்வுப்பயனாய்.

நீக்கமற…. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

நீக்கமற….
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

வீடுவந்து சேர்ந்த பிறகும்
நான் வீதியிலேயே நடந்துகொண்டிருப்பதை
தாழிட்ட கதவுகளுக்கு இப்பால் உள்ள
அறையிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும்
நானின் மண்டையில் உச்சிவெயில் சுரீரெனத் தைக்க
கிழிந்த நாளொன்றிலிருந்து சில நூலிழைகள் நைந்து தொங்க
உட்கார்ந்த நிலையில் என் பாதங்கள் இருமாடிப்படிகளிலேறிச் செல்லும்நேரம் வலியெடுக்கும் முழங்கால்கள்
முதுகுமாக மாறிக்கொள்ள
வழங்க வழியில்லாத உணவின் அளிப்புக்காக
அந்தத் தெருமூலையில் சுருண்டுகிடக்குமொரு உருவம்
அழகென்பதன் அர்த்தமாக இருந்திருக்கும் அக்காலம்
திரும்பிக்கொண்டிருக்கலாகும் இச்சமயம் அதனுள்
புள்ளுக்கும் புல்லுக்கும் இடையான வேறுபாடு
உண்டென்றால் உண்டு இல்லையென்றால் இல்லை
யெனச் சொல்லுமாறு ஊரு பேரு காரு தேரு
நீறு சேறு பேறு வேறு கூறு பாரு
போகுமாறு
பாரு பாரு நல்லாப் பாரு
பயாஸ்கோப்பு படத்தைப் பாரு
என்னான்னு வந்து பாரு என்றழைக்கும் மனம்
கூவியவாறிருக்க
கேட்டுக் காலெட்டிப் போட்டபடி போய்க்கொண்டிருக்கும் 

என் மெய் உயரத்தைச்
சிறிதே கூட்டிக்காண்பிக்க 
விரும்பி அணிந்துகொண்டிருக்கும் காலணிகளில் ஒன்று 
என்னை வீதியோரம் உருட்டப் பார்ப்பதை
ஜன்னல்வழியாகப் பார்த்துக்கொண்டிருந்த 
அணிலின் குட்டிவால் சற்றே விலகிக் காட்டியதில் 
பதறும் மனம்
நிதானமாய் நிறுத்தி அழுத்திக் கேட்கும்
வழக்கம்போல்
நான் எங்கே இருக்கிறேன்


மைலி – சிறுவர் கதைகள் - TALES FOR CHILDREN – MYLEE SERIES

மைலி – சிறுவர் கதைகள் -
TALES FOR CHILDREN – MYLEE SERIES












நட்பினருக்கு வணக்கம். புதுப்புனல் பதிப்பகம் சார்பில் நான் ருக்லதா என்ற பெயரில் எழுதி வெளியான மைலி என்ற கடற்குதிரையின் சாகசங்களை, நல்ல செயல்களை எடுத்துரைக்கும் கதைகள் இப்போது ஆங்கிலத்தில்!


என்னுடைய எளிய பதிப்பக முயற்சியான ANAAMIKAA ALPHABETS வெளியீடாக!
1.Balloon! Balloon!!
2. Demon on the Mountain!
3.Pebble fallen into the Pond!
4.Building constructed in the air!
5.Ten Hands for Babu!
6.Eight feet tall Butterfly!
7.It is not raining there!
8.Mylee’s Magical Tail!
9. Blue Tomato!
10.Orange in Appu’s mouth!
11.Have you seen Green Jasmine?
12.Let’s save the Little Rabbit!
13. Ringa Ringa Lotus..!
விற்பனை உரிமை – புதுப்புனல் பதிப்பகத்திற்கு.
13 புத்தகங்கள் – வண்ணப்படங்களோடு. அடுத்த வாரம் கிடைத்துவிடும்! ஒரு புத்தகம் 100 ரூபாய். 13 நூல்களுக்கு முன்பதிவு செய்தால் விலை ரூ1000. முன்பதிவு செய்துகொள்ள புதுப்புனல் பதிப்பகத்தை அணுகவும்.

புதுப்புனல் வற்றிவிடாது காப்போம்




புதுப்புனல் வற்றிவிடாது காப்போம்

புதுப்புனல் பதிப்பக ரவிச்சந்திரன் – சாந்தி தம்பதியர் தங்கள் பதிப்பகத்தையும் புதுப்புனல் மாத இதழை யும் எத்தனையோ இன்னல்களுக்கிடையில் தொடர்ந்து நடத்திக்கொண்டுவருகிறார்கள்.

இதற்கு முன்பு தன் நண்பர் எழுத்தாளர் எம்.ஜி.சுரேஷு டன் பன்முகம் என்ற நவீன தமிழ் இலக்கிய இதழை நடத்தி பல நல்ல படைப்புகள், திறனாய்வுகள் வெளியாக வழிசெய்தார் ரவிச்சந்திரன்.

அவரைத் திருமணம் செய்த போது தோழி சாந்திக்கு( திருமதி சாந்தி ரவிச்சந்திரன்) பதிப்பகம், நூல் வெளி யீடு என்பதெல்லாம் புதிது. ஆனால், அவற்றில் ஆர்வம் காட்டி தன் கணவரோடு புதுப்புனல் பதிப்பக வெளி யீட்டு முயற்சிகளிலும், புதுப்புனல் இதழ் வெளியீட்டி லும் முனைப்பாக அயராது உழைத்துவருகிறார் அவர்.

எந்தவொரு அரசியல்கட்சியின் ஆதரவும் இன்றி, ஏதொரு புரவலரும் இன்றி, பதிப்பகத்தை இயக்குவதற்கான வைப்புநிதி, சேமிப்பு என்று எதுவுமின்றி இலக்கிய இதழை, பதிப்பகத்தை நடத்துவது என்பது பெரிய போராட்டம் இன்று. பெரிய பொருளாதார நெருக்கடியிலுள்ள புதுப்புனல் பதிப்பகம் இந்த இக்கட்டான சூழலிலிருந்து மீள தமது வெளியீடுகளை 50% அல்லது அதற்கும் மேலான தள்ளுபடி விலையில் விற்க முன்வந்திருக்கிறது.

நல்ல பல புத்தகங்களை – புனைவு, புனைவல்லாதது – கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக வெளியிட்டி ருக்கிறது. தள்ளுபடி விலையில் அவர்களுடைய வெளியீடுகளை வாங்கி நூலகங்களுக்கு நன்கொடை யாகத் தரலாம். நண்பர்களுக்கு அன்பளிப்பாகத் தர லாம். நாமே வாங்கிப் படிக்கலாம்.

நிதியுதவி செய்ய முடிந்தவர்கள் அதைச் செய்யலாம்.

மனமிருந்தால் வழியுண்டு.

QUOTABLE QUOTE


INSIGHT - A BILINGUAL BLOG FOR TAMIL POETRY

INSIGHT - A BILINGUAL BLOG FOR TAMIL POETRY
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துவைத்திருக்கும் கவிதைகள் நிறைய உள்ளன. அவற்றை அவ்வப்போது பதிவேற்றுவதற்கென ஓர் எளிய முயற்சியாய் ஒரு வலைப்பூ தொடங்கியுள்ளேன். 

15 நாட்களுக்கு ஒரு முறையேனும் சில மொழிபெயர்ப்புகளைப் பதிவேற்ற எண்ணம். பார்க்கலாம்.

கவிஞர்கள் ரியாஸ் குரானா, ராகவப்ரியன் தேஜஸ்வி, அய்யப்ப மாதவன், கோ.கண்ணன், கோசின்ரா,யூமா வாசுகி ஆகியோருடைய கவிதை களை (ஆளுக்கு ஒன்றுபோல் - சிலருடையது ஒன்றுக்கு மேல் இருக்கும். சிலருடையதில் தமிழ் மூலம் தரப்பட்டிருக்கும். சிலவற்றில் இருக்காது. சில கவிஞர்களைப் பற்றி சிறு குறிப்பு தரப்பட்டி ருக்கும். சிலருக்குத் தரப்பட்டிருக்காது. இவையெல் லாம் சீராக்கப்படவேண்டும்.) 

ஆங்கில மொழிபெயர்ப்பில் பதிவேற்றியுள்ளேன்.
சில மொழிபெயர்ப்பு நூல்களைப் பற்றியும் அறிமுகக் குறிப்புகள் தந்துள்ளேன்.

நட்பினருடைய படைப்பாக்கங்களை, குறிப்பாக ஏற்கெனவே நான் மொழிபெயர்த்திருக்கும் கவிதை களை ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளியிட எண்ணம். அப்படி நான் வெளியிட்டு அது வேண்டா மென்றால் தயங்காமல் தெரியப்படுத்தவும்.

blogspot id: www.2019insight.blogspot.com. முடிந்தால் போய்ப் பாருங்கள்.