LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, September 10, 2019

கவிதையின் உயிர்த்தெழல் - 'ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


கவிதையின் உயிர்த்தெழல்

'ரிஷி’ 

(
லதா ராமகிருஷ்ணன்)



அதுவல்ல கவிதை யென்றார்; இதுவே கவிதை யென்றார்.
இதுவல்ல கவிதை யென்றார்; அதுவே கவிதை யென்றார்.
அது இருப்பதாலேயே எதுவும் கவிதையாகிவிடா தென்றார்.
எல்லாமும் கவிதையாகிவிடும் இதுவிருந்தால் என்றார்.
இதுவும் அதுவும் எதுவுமாக
'
அல்ல'வாக்கியும் 'நல்ல'வாக்கியும்
சிலவற்றைத் தூக்கியும் சிலவற்றைத் தாக்கியும்
சிலவற்றைப் புகைபோக்கிவழியே நீக்கியும்
கவிதையை ஒரு மெதுவடையாக மசாலாதோசை யாக
மாடர்ன் பிரட் துண்டங்கள் கலந்த சன்னா மசாலா வாக
முக்கோணமாய் மடிக்கப்பட்ட சப்பாத்தியாக
கேப்பங்கூழாக கொக்கோகோலாவாக
Cuba
வின் Mojitoவாக பாவித்து
யாரும் கேட்காமலேயே
நாளும் பலவிதமாய் recipe க்கள் எழுதியெழுதி
அட்டவணையாக்கி சுவரில் மாட்டி
தேவையான பொருட்களென சிலவற்றைப்
பட்டியலிட்டுக்காட்டி யவற்றை
வெதுவெதுப்பான நீரில் நான்கைந்துமுறை நனைத்துப் பிழிந்து
பதமாக வெளியே எடுத்துப் பின் வெள்ளைத்தாளில்
வரிவரியாய் முறுக்கு சுற்றி
என்னவொரு இன்சுவை பெற்றீர் - அடடா
கவிதை யிதுவே கவிதை யதுவே கவிதை யென
கதை கதையாய் கதைப்பதெல்லாம்
பாசிசமும் நார்சிசமுமாய்
தனதே கவிதை யென வாசக மனங்களில்
பதிய வைக்கவே
யென்பது உள்ளங்கை நெல்லிக்கனி யெனத்
தெள்ளத் தெளிவாகத் தெரியவர
தப்பிக்கும் பொருட்டு
விறுவிறுவென்று ஓடிச்சென்ற கவிதை
ஒரு மலையுச்சியிலிருந்து
அதலபாதாளத்திற்காய் குதித்து
You can’t write MY POEM
என்று பாடியபடியே
பாதியில் தன் பாராச்சூட்டை விரித்துக்கொள்ளும்!




தீர்ப்பும் விசாரணையும் ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


தீர்ப்பும் விசாரணையும்

ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)

அது அராஜகச் சட்டம்”

”அப்படியல்ல. வாருங்கள், சற்று அகல்விரிவாகப் பேசுவோம்”

”பகலிரவாய் அதைப்பற்றிப் பேச நான் என்ன உன்னைப் போல் வேலையில்லாத உதவாக்கரையா?
அரைகுறை அறிவைக் கொண்டு என்னிடம் கட்டம்கட்டி விளையாடப் பார்க்கவேண்டாம்.
 ஆயிரம் சொன்னாலும் அது தோல்வியடைந்த திட்டம்தான்”

”அப்படியல்ல வாருங்கள், அதன் முக்கிய அம்சங்கள், விளைவுகளைப்
பற்றி சற்று அகல்விரிவாகப் பேசுவோம்”

”அட, வெட்டு ஒன்று துண்டு இரண்டு. வீணுக்கு ஏன் வளவளாப் பேச்சு
அது நாசகாரவேலைதான். நாக்குமேல பல்லப் போட்டு நீ இல்லையென்றால்
நீச வேசக்காரன் நீயெனச் சொல்லிவிடுவேன்.”

”அப்படியல்ல,  வாருங்கள் -  அதைப் பற்றிய என் பார்வையை முன்வைக்கிறேன்”

”முன்வைத்த காலை பின்வைக்கும் ஆளில்லை நான்.
நான் சொன்னால் சொன்னதுதான்.”

“இப்படிச் சொன்னால் எப்படி?என் தரப்பைச் சொல்ல அனுமதியுங்கள்”

நீ என்ன பெரிய இவனா ?

நீங்கள் என்ன பெரிய இவரா என்று நான்
ஒருபோதும் கேட்கமாட்டேன்
பரவாயில்லை, வாருங்கள்  - அதன் முக்கியத்துவத்தைப் பற்றி சற்று
முனைப்பாய்ப் பார்க்கலாம்

நினைப்புதான் பொழப்பைக் கெடுக்கும்
– உன் நினைப்பையும் உன் பொழப்பையும்தான் சொல்கிறேன்.

அப்படியேயாகட்டும், வாருங்களேன் அதைப் பற்றி சற்று திறந்த மனதுடன் அலசிப் பார்க்கலாம்

நான் சொல்வதை சரியென்று வரவேற்க மட்டுமே உன் மனதைத் திறந்துவைக்கக் கற்றுக்கொள்.”நான் சொன்னால் சொன்னது தான் – மறுத்துப்பேசும் நீ அவருடைய கைக்கூலி – கருங்காலி
மூடிக்கொள் வாயை – இல்லையோ நீ காலி”.

Ø  

நானென்பதும் நீயென்பதும்…. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


நானென்பதும் நீயென்பதும்….

ரிஷி
(
லதா ராமகிருஷ்ணன்)


அதெப்படியோ தெரியவில்லை

அத்தனை நேரமும் உங்கள் கருத்துகளோடு


உடன்பட்டிருந்தபோதெல்லாம்


அறிவாளியாக அறியப்பட்ட நான்


ஒரு விஷயத்தில் மாறுபட்டுப் பேசியதும்


குறுகிய மனதுக்காரியாக,


கூமுட்டையாக


பாலையும் நீரையும் பிரித்தறியத் தெரியாத


பேதையாக

பிச்சியாக,


நச்சுமன நாசகாரியாக


ஏவல் பில்லி சூனியக்காரியாக


சீவலுக்கும் பாக்குக்கும்


காவலுக்கும் கடுங்காவலுக்கும்


வித்தியாசம் தெரியாத


புத்திகெட்ட கேனச் சிறுக்கியாக


மச்சு பிச்சு மலையுச்சியிலிருந்து


தள்ளிவிடப்படவேண்டியவளாக


கள்ளங்கபடப் பொய்ப்பித்தலாட்டப்


போலியாக


வேலி தாண்டிய வெள்ளாடாக


உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும்


நாசகாரியாக


பள்ளந்தோண்டிப் புதைக்கப்படவேண்டியவளாக


வெள்ளத்தில் வீசியெறியப்படத்தக்கவளாக


சுள்ளென்று தோலுரித்துக் குருதிபெருக்கும்


கசையடிக்குகந்தவளாக


அக்கிரமக்காரியாக


அவிசாரியாக


துக்கிரியாக


தூத்தெறியாக


உங்கள் தீராத ஆத்திரத்திற்குப்


பாத்திரமாகிவிடுகிறேன்.


ஆனாலுமென்ன?


நீங்கள் என்னை நோக்கி


எனக்கு மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறது


என்று சொல்லும்போது


அது உங்களுக்குமானதாகிவிடுகிறது!


Ø   

பிரதியின் பிம்பம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


பிரதியின் பிம்பம்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

(*காலத்தின் சில தோற்றநிலைகள்தொகுப்பிலிருந்து)


வெவ்வேறாகிக்கொண்டே போகும்

வாசகப் பிரதி’ _

வேறு வேறு ஜோடிக் கண்களில்,

அதே விழிகளின் மாறிய பார்வையில்,

காணத்தவறிய வரியிடை வரிகளைக்

கண்டுபிடித்துவிடும்போது,

சொலொன்றின் பொருள் பன்மையாகப்

புரிபடும் அளவில்,

எழுதியவர் பெயரைக் கொண்டு,

விழுந்துவிட்ட அச்சுப்பிழைகளைப் பொறுத்து,

கூடுவிட்டுக் கூடு பாய்வதில் சேரும்

தேர்ச்சியும் அயர்ச்சியுமாய்…..

நொடிப் பொழுதில்

நூற்றுக்கணக்கான வரிகள் என் 

பிரதிபிம்பங்களாக

இருந்த நிலை திரிய,

தலையுயர்த்தும் பிற உருவங்கள்

என்வாசிப்பாளப் பிரதிகளைக்

கழிப்பறைத்தாள்களாக்கிக்கொண்டவாறு.





பொருள்பெயர்த்தல் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)




(லதா ராமகிருஷ்ணன்)

  நல்லதோர் நாலுவரிக்கவிதையென்றார் ஒருவர்.

கேட்டு
நாலுவரியே கவிதையென்று சொல்லாமல் சொல்வதாய்
நாலுவரிகளாக கூட்டிப்போட்டு எழுதிக்கொண்டே போனார்         ஒருவர்.

நாலுவரிகள் வரைந்து நவீனசித்திரக்கவிதையென்றார் ஒருவர்.

சொத்துவரி, வருமானவரி என்று இன்னுமிரண்டை
சேர்த்தெழுதிக்கொண்டிருந்தார் ஒருவர்.

இன்னொருவர் ‘நாலு வரி’ என்றெழுதி
பூர்த்திசெய்தார் கவிதையை.




Monday, September 9, 2019

மொழிவழி….


மொழிவழி….


லதா ராமகிருஷ்ணன்

நிறைய சொல்கிறோம். ஆனால் மொழிப்பற்று என்ற பெயரில் எழுத்தா ளர்கள் கூட மொழி குறித்து நடுவண் அரசால் முன்வைக்கப்பட்டுள்ள ஆரம்ப கட்ட வரைவுத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்களை முழுமையாகத் தெரிந்துகொள்ளாமலேயே ‘இந்தித் திணிப்பு’ என்று சாடத்தொடங்கி யாயிற்று.

தொலைக்காட்சி சேனல்கள் அரசியல் கட்சிகளுடையதாய் (நேரடி யாகவும், மறைமுகமாகவும்) இருப்பதால் அவற்றில் நடைபெறும் விவாதங்களிலெல்லாம் பெயருக்குக் கல்வியாளர்கள், துறைசார் வல்லுநர்கள் இடம்பெருகிறார்களே தவிர மற்றபடி பேச எடுத்துக் கொள்ளப்படும் கருப்பொருளும் சரி, அது நெறிப்படுத்தப்படும் விதமும் சரி அவரவர் கட்சிக்கான (indoor) பிரச்சாரமேடையாகவே அமைவது கண்கூடு.

இன்று உலகமே ஒரு Global Village ஆக சுருங்கியிருக்கும் நிலையில் எத்தனை மொழிகள் கற்றுக்கொண்டாலும் நல்லதுதான். அதுவும், இன்று மொழிபெயர்ப்புக்கான தேவையும் அதன் வழியான வேலைவாய்ப்புகளும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழ் – ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழியோடு வேறு ஓரிரு இந்திய மொழிகளும், மேலைநாட்டு மொழிகளும் தெரிந்திருந்தால் எத்தனை நன்றாயிருக்கும் என்று எண்ணு வதைத் தவிர்க்கமுடிவதில்லை.

திணிப்பு என்று சொல்பவர்கள் பள்ளிப்படிப்பு என்பது மாணாக்கர்கள் விரும்பும் விதமாகவா அமைந்திருக்கிறது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். இதுவும் ஒருவகைத் திணிப்பு தான். ஒரு விஷயம் தம் மீது கட்டாயமாகத் திணிக்கப்படுகிறதா என்று அதனால் பாதிக்கப் படுகிறவர்கள் தான் சொல்லவேண்டும்.

அரசுப் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி கற்கும் பிள்ளைகளே தமிழ் உச்சரிப்பிலும் வாசிப்பிலும் எத்தனை பின் தங்கியிருக்கிறார்கள் என்று போய்ப் பார்த்தால் தெரியும். அவர்கள் நாளும் பார்த்துக்கொண்டிருக்கும் தொலைக் காட்சி சேனல்களில் எல்லாம் தமிழ் எத்தனை பாடுபடுகிறது, பிழையாக உச்சரிக்கப்படுகிறது என்று நாம் எல்லோரும் தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

தாய்மொழி வழியான கல்வி தான், குறிப்பாக ஆரம்பக் கல்விக்கு மிகவும் ஏற்றது என்பது உலகளாவிய அளவில் ஏற்றுக்கொண்டுள்ள உண்மை. அதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், இதை ஆக்கபூர்வமான வழிகளில் மக்களிடம் கொண்டு செல்லலாம்.

அதைவிட்டு, இந்தி கற்றுக்கொண்டாலே நாம் வடநாட்டவருக்கு அடிமைப்பட்டுவிடுவோம், இரண்டாந்தரப் பிரஜை களாக்கப்பட்டு விடுவோம் என்பதாகவெல்லாம் மக்களை, பள்ளி மாணாக்கர்களைக் கலவரப்படுத்து வதும், இந்தி வந்தால் இந்தியா (அல்லது குறைந்தபட்சம் தமிழகம்) கந்தகபூமியாகும் என்று மறைமுகமாக வன்முறையைத் தூண்டுவதும் தேவையற்ற விஷயம். தமிழகத்தில் எந்தக் கலவரமாவது வெடித்து ரத்த ஆறு ஓடாதா என்று வழி மேல் விழி வைத்துப் பார்த்துக்கொண்டிருப்போரை எண்ணி வருத்தமா யிருக்கிறது.

இப்படி சூளுரைப்பவர்களில் எத்தனை பேர் தங்கள் பிள்ளைகளை தமிழ்வழிக் கல்வி கற்கச் செய்திருக்கிறார்கள், செய்துகொண்டிருக் கிறார்கள் – தெரியவில்லை.

அரசுப்பள்ளிகளில் வேலைபார்க்கும் ஆசிரியர்களின் பிள்ளைகள் அரசுப் பள்ளிகளிலேயே படிக்கவேண்டும். அவர்கள் ஏன் தனியார் பள்ளிகளில் படிக்கிறார்கள் என்ற விவாதம் சில நாட்கள் முன்னர் எழுந்தபோது, அது தனிநபர் உரிமை என்றவிதமாய் எதிர்வினையாற்றப்பட்டது.

ஆனால் இப்போது ஆரம்பக்கட்டத்தில் உள்ள ஒரு வரைவுத்திட்டத்தை எதிர்த்து இத்தனை ஆக்ரோஷமாகக் குரலெழுப்பவேண்டிய அவசியம் என்ன? நிதானமாக எதிர்வாதத்தை முன்வைக்கலாமே? தமிழகத்தை நடுவண் அரசு வஞ்சிக்கிறது என்று ஏன் திரும்பத் திரும்ப இளைய தலைமுறையினர் மனங்களில் உருவேற்றப் பார்க்கவேண்டும்? அப்படிச் செய்வதால் யாருக்கு என்ன லாபம்?

முன்பொரு சமயம் இத்தகைய சூழல் ஏற்பட்டபோது ஒரு பத்திரிகை தமிழ் வழிக் கல்வி, இந்தி கற்கக்கூடாது என்று முழங்குவோரின் பிள்ளைகள் எந்தெந்த பள்ளிகளில் எந்த மொழி மூலம் பயில்கிறார்கள் என்ற பட்டியலை ஆதாரபூர்வமாக வெளியிட்டது.

ஒரு மொழியைக் கற்கவிடாமல் பாமர மக்களைத் தடுத்து, அதே மொழியின் பயன்களைத் தாமும் தம் பிள்ளைகளும் அனுபவித்துக் கொண்டிருப்பது என்பது என்னவிதமான மனிதநேயம்? சமூகப் பிரக்ஞை?