LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, August 21, 2018

ஆமையின் பெயர்மாற்றம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


 · ஆமையின் பெயர்மாற்றம்
ரிஷி
(
லதா ராமகிருஷ்ணன்)


ஆமை என்ற ஒன்று
இல்லவேயில்லை யெனச்
சொல்லியவாறே
ஆமை என்றாவது பேசுமா என்றும்
சீமைப்புறங்களிலிருந்தும் சுற்றுவட்டாரங்களிருந்தும்
கேட்டுக்கொண்டிருப்பவர்களை
ஊமைவலியோடு பார்த்துக்கொண்டிருந்த
ஆமை மிகவும் மனம் சோர்ந்துபோனது.
முன்பெல்லாம்
ஆமைமுயல் கதையை
அடிக்கடி கேட்க முடிந்தது…..
முயலை ஆமை ஜெயித்ததைச்
சொன்ன விதம்
முயலின் கர்வத்தையன்றி
முயலை வெறுக்கச் செய்யவில்லை
யொருபோதும்.
[முசுமுசு முயலை 
யாரால் வெறுக்க இயலும்!]
ஆமை தன்னம்பிக்கைக்கு
முன்மாதிரியாயிற்று.
ஆனால் தீமையல்ல முயல்
தோற்ற ஆங்காரத்தில் தன்
வாலில் மறைத்துவைத்திருந்த
வாளால்
ஆமையை வெட்டிவிடவில்லை.
தன் தவறை உணரும் ஆற்றலிருந்தது
அதற்கு.
ஆமையோட்டைத்
தங்கள் கனவுகளின் கருவூலமாகக்
கொண்டாடிய சிறுவர்சிறுமியரும்
தற்காப்புப் பதுங்குகுழியாக விவரித்த
பெரியவர்களுமாய்
ஆமையைத் தங்களில் ஒருவராக
அங்கீகரித்திருந்தனர்.
ஆமையும் அழகுதான் என்று புரிந்தது.
இன்று நிலைமை வேறு
ஆமையைச் சீந்துவார் யாருமில்லை
அதன் குந்துமணிக்கண்களை
உற்று நோக்கிப்
புன்னகைக்க
முற்றிலும் மறந்துவிட்டனர் மிகப் பலர்..
அநாதரவாய்க் கிடந்த ஆமையைப்
பார்க்கவந்தது புறா.
அதன் காலில் கட்டியிருந்த
முயலின் மடலில்
பரிவுமிக்க பரிந்துரையொன்று
இடம்பெற்றிருந்தது:
பெயரிலுள்ளவைதூவாக
மாற்றிக்கொள்வது
மிகவும் நல்லது.”

Monday, August 20, 2018

அவள் அழுதுகொண்டிருக்கிறாள் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


அவள் அழுதுகொண்டிருக்கிறாள்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

அந்த நள்ளிரவில் 
அவள் அழும் விசும்பலொலி கேட்டு
கூட்டம் கூடிவிட்டது.
ஆச்சரியத்துடன் சிலர்;
அனுதாபத்துடன் சிலர்;
அக்கறையுடன் சிலர்;
சுடச்சுடச் செய்தி சேகரிக்கும்
ஆர்வத்தில் சிலர்;
தேர் சரிந்த பீதியில் சிலர்;
பாதி புரிந்தும் புரியாமலுமாய் சிலர்;
பெருங்குரலெடுத்து அட்டகாசமாய்
இளக்காரத்தோடு சிரித்தபடி சிலர்;
இதென்ன புதுக்கதை என்று
வரிந்துகட்டிக்கொண்டு
களத்திலிறங்கியவர்கள் சிலர்….
;அங்கிங்கெனாதபடியானவள்
ஆற்றொணாத் துயரத்தில்
பொங்கியழக் காரணமென்ன?
ஆளாளுக்குக் கேட்க ஆரம்பித்தனர்;
இவர் அவரின் அன்னையை
தாசியென்று பேச
பதிலுக்கு
அவர் இவரின் அன்னையை
வேசியென்று ஏச
ஆராரோ பாடி ஊட்டிவளர்த்த
அன்னையரெல்லாம்
யாராராலோ இப்படித் தம்
அந்திமக் காலத்தில்
தீராப் பழிசுமக்கும்
கோராமையை என்ணியெண்ணி
ஆறவில்லையே எம் மனது
என்று கூறியவள்
அழுகை
நின்றபாடில்லை.


அலுவல் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


 அலுவல்

ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)



எதிரே தெரிந்த சுவரொட்டியில்
பதவிசாய் சிரித்துக்கொண்டிருந்த
பெண்ணைச் சுட்டிக்காட்டி
பாவம் பிரசவத்தின்போது வீங்கியிருந்த
இவள் வயிறு
எத்தனை பாரமாயிருந்திருக்கும்
என்றார் அடுத்திருந்தவர்.
எதற்கு வம்பென்று ஆமாமாம் என்று
சொல்லியபடியே
அடுத்துவரும் பேருந்து
என்ன வழித்தடம் என்று
கண்களை உருப்பெருக்கிக்
கண்ணாடியாக்கப்
பிரயத்தனப்பட்டார் இவர்.
வாழ்வுப் பிரயத்தனத்தில்
ஒருவேளை இவள்
சோரம்போயிருந்திருப்பாளோ,
என்று மேலும் கேட்டார்
முதலாமவர்.
போயிருக்காவிட்டாலென்ன,
போனதாகச் சொல்வது
வெல்லமல்லவா உமக்கு
என்று தன்னையும் மீறிச்
சொல்லியவண்ணம்
வண்டியில் முண்டியடித்துக்கொண்டு
ஏறினார் இவர்.



நன்னெறியென்ப…….. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


நன்னெறியென்ப……..
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


நாவடக்கம் வேண்டும்
நாலு பேருக்கு மட்டும்.
அந்த நாலு பேரும்
நான் தேர்ந்தெடுப்பவர்களாக இருக்கவேண்டும்.
நாவு எல்லோருக்கும் ஒரேபோல்தானே
என்றெல்லாம் நாக்குமேல பல்லு போட்டு
பேசிவிடலாகாது.
நாவறுந்துபோய்விடும்
(
என்று சொன்னால் அது
நகைப்புக்கிடமாக்கப்படவேண்டிய
மூடத்தனம்.
அதுவே நாக்கறுக்கப்படும் என்று சொன்னால்
அது நல்லறிவுத்திறம்).
நன்னெறியை நன்னாரி என்றெழுதினால்
என்ன குடியா முழுகிவிடும்
என்று கேட்ட கையோடு
நரியை நாய் என்றெழுதுவார்
பாயைப் பிறாண்டிக்கொண்டிருப்பார் என்றும்
காட்டமாகச் சொல்லிவிடவேண்டும்.
விதவிதமான வசைமொழிகளில் நான்
உங்கள் நம்பிக்கைகளை
குதறிக் கிழித்துக் கெக்கலிக்கலாம்.
எதிர்ப்புக்காட்டலாகாது
பொறுத்தார் பூமியாள்வார்.
(
செங்கப்பட்டிலா, சொழிங்கநல்லூரிலா
எங்கே கிடைக்கும் காணிநிலம்?
வாடகை உயர்ந்துகொண்டேபோகிறது.
வரவுக்கு மேல் செலவு
கட்டுப்படியாகவில்லை என்றெல்லாம்
முட்டாள்தனமாகக் கேட்டாலோ
பட்டென்று ஓரே போடு போட்டுவிடுவேன் வாயில்]
பட்டி என்று நீயென்னைத் திட்ட
பதிலுக்கு நான் ரெண்டு தட்டு தட்ட
கட்சொல்லாமல் ஊடகக் காமராக்கள்
படம்பிடித்துக்கொண்டிருக்கிறது பார்
விட்டகுறை தொட்ட குறையாய்
கொட்டும் அதிர்ஷ்டத்தில் உன் முகமும்
தொலைக்காட்சித்திரையில் தட்டுப்படக்கூடும்
ஓர் ஓரமாய்.
கலைந்துள்ள முடி திருத்தி வியர்வையைக்
கைக்குட்டையால்
ஒத்தியெடுக்க மறக்காதே
என்று மட்டுமே சொல்லிவைக்க முடிந்தால்
எத்தனை நன்றாயிருக்கும்