LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Wednesday, August 8, 2018

அப்பால்….. ‘ரிஷி’ லதா ராமகிருஷ்ணன்)


அப்பால்…..
ரிஷி 

லதா ராமகிருஷ்ணன்)



என்னிடம் பூனை பேசியது'
'
என்றாள் சிறுமி.

பூனை பேசாது' என்றார் பெரியவர்.

'பூனையின் பேச்சுக்கு தனியாக
இரண்டு காதுகள் என்னிடமிருக்கின்றன -
பாவம் உங்களுக்கு இல்லையே'
என்று இருசெவிகளின் பக்கமாக
கைகளால் சிறகடித்துக்காட்டி
மெய்யாகவே பரிதாபப்பட்டாள் சிறுமி.

''எங்கே, பூனையை பேசச்சொல்லு
பார்க்கலாம் என்றார்
மெத்தப் படித்த அந்த மனிதர்
மிக எகத்தாளமாய்.

நமக்கு வேண்டுமென்றால்
'
நாம் தான் பூனையிடம் பேசவேண்டும்
என்ற சிறுமி
மியா….வ்.... மியாவ்.....என்று
மென்மையாக அன்பொழுக
தன்பாட்டில் அழைத்தபடியே
அவரைக் கடந்துசென்றுவிட்டாள்.

Shame(less) Rishi (Latha Ramakrishnan)

Shame(less)


Rishi
(Latha Ramakrishnan)



Playing to the gallery
with all its permutations and 
combinations
day-in and day-out
come so easily to some
as their second skin…..
an all-time hideout….

Truth is not just 
stranger than fiction…….


வரலாறு - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


வரலாறு

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


சில தலைகள் எப்போதும் கைவசம் தேவை.
குட்டக் குட்டக் குனியவைக்க;
பட்டப்பகற்கொலைகொள்ளைக்கெல்லாம் பொறுப்பேற்கச் செய்ய;
தட்டுவதாலேயே தன் கையை மோதிரக்கையாக்கிக்கொள்ள;
தன் முதலாளித்துவத்தை சாதுர்யமாய் மனிதநேயவிரிப்பின் கீழ் தள்ள;
சரித்திரக் குற்றவாளியாக்கி  சரேலென்று அறுத்தெறிய;
பொருத்தமற்ற பொய்யுரைத்து புழுதிவாரியிறைக்க;
பேயரசைப் போர்த்திமறைக்க;
பிணந்தின்னும் சாத்திரங்களை ஒருசாராருக்கே உரித்தாக்க;
அவரவர் அதிகாரவெறியை அருவமாக்கித் திரிய....

வலியோரும் தம்மை எளியோராய் காட்டிக்கொள்ள வாகாய்;
மலிவாகும் வாழ்வுமதிப்புகளுக்கெல்லாம் கழுவேற்றத் தோதாய்;
பொத்தாம்பொதுவாய் போகிறபோக்கில் குண்டாந்தடியால் ஒரு போடு போட்டு உயிர்போக்க;
ஊருக்காயதைச் செய்ததாய்த் தன்னைக் கொலைக்குற்றத்திலிருந்து சுலபமாய்க் காக்க;
தத்தம் தீவினைகளையெல்லாம் தார்மீக எதிர்வினையாக நிலைநாட்ட….


எளிய தலைகளாய் எப்போதும் நான்கைந்து தலைகளைத் தயராய்க் கைக்கொள்ளத் தெரியவேண்டும்.
போலவே, மொந்தைகளாக்கப்பட்ட எளிய தலைகளை
மந்தைகளாக்கப்பட்ட மூளைகளில் 
முதன்மை எதிரிகளாக மிகச் சுலபமாய் சுட்டிக்காட்டவும்.


நேரங்கிடைக்கும்போதெல்லாம் ஆள்காட்டி அடையாளங் காட்டி உருவேற்ற மறக்கலாகாது.


பெரிதாக எதையும் செய்யத் தேவையில்லை.
பலிகடாக்களாக வாகாய் சில எளிய தலைகளை எப்போதும்
வன்முறையார்ந்த சொற்களால் எட்டித்தள்ளி யுருட்டிக்கொண்டே போகத் தெரிந்தால் போதும்.
ஏற்றத்தாழ்வுகளுக்கெல்லாமான சகலரோகத்தொற்றாகக் 
காட்டத் தெரிந்துவிட்டால் போதும் -
பல்லக்குகளையும் பல்லக்குத்தூக்கிகளையும் உங்கள் உடைமைகளாக
பலகாலம் பத்திரப்படுத்திக்கொண்டுவிட முடியும்.








சட்டி அகப்பை நாம் - ’ரிஷி' (லதா ராமகிருஷ்ணன்)


சட்டி அகப்பை நாம்

’ரிஷி'
(லதா ராமகிருஷ்ணன்)


எதுவும்

தெரியாவிட்டாலென்ன 

பரவாயில்லை_

எல்லாம் தெரிந்ததாகக்

காட்டிக்கொள்வதே

(உன்) அறிவின் 

எல்லையான பின்….


முன்னுக்கு 

வந்துவிடால் பின்

உண்மையென்ன

பொய்யென்ன 

அறிவில்….


என்னவொன்று

கண்ணுங்கருத்துமாய் என்னதான் நீ மறைத்தாலும்

புரையோடிய புண்வலியாய்

பொய் கொல்லும் நின்று..




அச்சம்(என்பது மடமையடா!) ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

அச்சம்(என்பது மடமையடா!)


ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)






அசாதாரணக்கவிதைகளை எழுதியவர்
அதிசாதாரணக் கவிதைகளையும் எழுதினா
ரென்றால்
அடிக்கவந்துவிடுவார்களோ…..?


Thursday, July 19, 2018

பாவமும் பாவமன்னிப்பும் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)


 பாவமும் பாவமன்னிப்பும்
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

குழந்தைகளிடம் என்னவென்று மன்னிப்பு கோருவது?

நாம் கண்கலங்கினால் சட்டைநுனியால்
கண்களைத் துடைத்துவிடக்கூடும்….

கைகூப்பினால் முகம் மலர பதிலுக்குத் தங்கள்
சின்னக்கைகளைச் சேர்த்துக் குவிக்கக் கூடும்

மண்டியிட்டால் சக குழந்தையாய் நம்மை பாவித்து
வாய்நிறைய சிரிக்கக்கூடும்….

நெடுஞ்சாண்கிடையாகக் காலடியில் விழுந்தால்
தவறி விழுந்துவிட்டோமோ எனப் பதறி
தாங்கிப் பிடிக்கத் தாவிவரக்கூடும்…..

அதுவும்

அடிபட்ட குழந்தைகளிடம் எப்படி மன்னிப்பு கோருவது _

அவர்களின் வலிகளை வாங்கிக்கொள்ள வழியில்லாது?


அந்தச் சிறுமியை விட்டுவிடுங்கள் - லதா ராமகிருஷ்ணன்

அந்தச் சிறுமியை விட்டுவிடுங்கள்  
 லதா ராமகிருஷ்ணன்





வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது என்பார்கள்.

இங்கே காது கேளாத வாய் பேசவியலாத சிறுமியொருத்தியை systematic ஆக மாதக்கணக்கில் சீரழித்த கொடூரன்களை அடித்தட்டு ஆண்களின் பிரதிகளாக்கி, பிரதிநிதிகளாக்கி, அவர்கள் சார்பில் வாதாடும் வழக்குரை ஞர்களாக, ஆளாளுக்கு உளவிய லாளர்களாகி சில எழுத்துலகப் பெருந்தகை யாளர்கள், பேரறிவுசாலிகள், ஈடு இணையற்ற மனிதநேயவாதிகள் முன்வைக்கும் சில கருத்துகளைப் படிக்கும்போது அந்தக் குழந்தையை அதன் ரணவலியை, கையறுநிலையை இதைவிட மோசமாகக் கேவலப்படுத்த முடியுமா, இதைவிட இலகுவாகக் கடந்துபோக முடியுமா என்று அதிர்ச்சியாக இருக்கிறது.

இவர்கள் யாருக்காகப் பேசுவதாக இப்படியெல்லாம் வக்கிரமாகக் கருத்துரைக்கிறார்களோ அந்த சமூகத்தட்டு மக்களிடம் போய்க் கேட்கட்டும் – எந்த சாதியைச் சேர்ந்தவளா யிருந்தாலும், எந்த வர்க்கத்தைச் சேர்ந்தவளாயிருந்தாலும் ஒரு பெண்ணை, சிறுமியை, வாய் பேச முடியாத காது கேளாத குழந்தையை இப்படிச் சீரழிப்பவர்கள் மனிதர்கள்தானா என்று

யார் சார்பாகவோ பேசுவதாக, வாதாடுவதாக சிலுப்பிக் கொண்டு இப்படியெல்லாம் அநாகரீகமாக, அராஜகமாகக் கருத்துதிர்த்துக் கொண்டிருப்பவர்கள் தமக்கான சுயமதிப் போடும், வாழ்நெறிக ளோடும் வாழும் அந்த மக்களை உண்மையில் அவமதித்துக் கொண்டிருக்கிறார்கள், மனித நேயம், சமூகப் பிரக்ஞை என்ற பாவனையில் தங்கள் மன வக்கிரங்களையெல்லாம் அம்மக்கள் மீது வலிந்தேற்றி அவர்களை மதிப்பழித்துக்கொண்டிருக் கிறார்கள் என்பதை உணரவியலாதவர்களாய் இப்படித்தான், இறுதிவரை புண்மொழி உதிர்த்துக் கொண்டேயிருப்பார்களோ இவர்கள்?

 



Saturday, July 14, 2018

சிலபல நேரங்களில் சிலபல மனிதர்கள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

சிலபல நேரங்களில்

சிலபல மனிதர்கள்


‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)






சிலருக்கு இவரைப் பிடிக்காது;
அசிங்க அசிங்கமான வார்த்தைகளில்
வசைபாடுவார்
ஆங்காரத்துடன் 
அதிமேதாவித்தனத்துடன் _
கவிதை கட்டுரை கதை விமர்சனம் 
முகநூல் பதிவு
இன்னும் நிறைய நிறைய 
நுண்வெளிகளில்.

அவருக்கு இவரைப் பிடிக்காது
அதனினும் அசிங்கமான வார்த்தைகளில் வசைபாடுவார்
அதனினும் அதிகமான ஆங்காரத்துடன்
அதிமேதாவித்தனத்துடன்
அதே யதே நுண்வெளிகளில்.

அவர்கள் செய்வது சமூகப்பணி;
அவர்கள் காட்டுவது மனிதநேயம்.

அறிந்துகொண்டு அங்கீகரிக்க முடியாதவர்கள்
அலைகடலில் மூழ்கி மாளவேண்டியவர்களே.

மெத்தப்படித்தவர் அவர் _
சத்தம்போட்டுத் தூற்றிக்கொண்டேயிருக்கிறார்
இந்த நாடு நாசமாய்ப் போகட்டும் என்று.

போனால் நானும் அவரும் என்னாவது என்று கேட்டால்
என்னைப் போன்ற சுயநலவாதியும் இருக்கமுடியுமோ?

இவருக்கு முன் இன்னொருவர்
’இந்த நாடு நாசமாய்ப்போகட்டும்,
இருக்கும் ஆறுகளெல்லாம் வறளட்டும்’
என்று அடுக்கிக்கொண்டே போய்
இறுதியில்
’குழந்தைகள் மட்டும் சிரித்துக்கொண்டிருக்கட்டும்’ என்றார்.

அதெப்படி முடியும் என்று எத்தனை யோசித்தும்
விடை கிடைக்கவில்லை எனக்கு
அன்றும் இன்றும்.

ஆகச்சிறந்த அறிவீலி நான் என்று
ஏகமாய் துக்கம் சூழ்ந்ததுதான் மிச்சம்.



இச்சகம் பேசிப்பேசியே .
கச்சிதமாய்க் காரியத்தை முடித்துக்கொள்பவர்
’இச்சகத்திலோரெல்லாம் எதிர்த்துநின்றபோதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே’
என்று பாரதியைத் துணைக்கிழுத்துக்கொள்வதைக்
கேட்கப் பொறுக்காமல்
உச்சிமீது வானிடிந்து வீழ _

வச்ச சோறு வாய்க்குள் போவதற்கு முன்
விரைந்தோடிவந்து அவரை
அப்பால் இழுத்துதள்ளிக் காப்பாற்றியவர்
அடிபட்டுக்கிடப்பதைக் கண்டுங்காணாமல் அப்பால் நகர்ந்தவர்
மெச்சிக்கொண்டார் தன்னைத்தானே.




கிச்சுகிச்சுமூட்டினாலும் சிரிக்கவைக்கமுடியாதவர்களெல்லாம்
சாப்ளினைத் தம் குருவாகச் சொல்லிக்கொள்கிறார்களென
மிச்சம் மீதி இல்லாமல் திட்டித் தீர்த்தவர்
தன் கவிதையை புல்தடுக்கிப்பயில்வானொத்த கோமாளியாக்கி நடத்திக்கொண்டிருக்கும்
சர்க்கஸைக் காணக்
கட்டணமுண்டு கட்டாயம்.

ரொக்கமாகத்தான் தரவேண்டும் என்றில்லை…….

என்றாலும்
அவர் சகாக்களுக்கு மட்டும்
என்றுமுண்டு இலவஸ பாஸ்கள்..

Ø