LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Friday, May 9, 2025

நிகழ்த்துகலை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நிகழ்த்துகலை

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

ஒரு கட்சிக்கு கொள்கை யிருக்கிறதோ இல்லையோ
கொள்கைப்பரப்புச் செயலாளர்(கள்) கட்டாயம் தேவை.
எத்தனைக்கெத்தனை அதிகம் ’கொபசெ’க்கள் இருக்கிறார்களோ
அத்தனைக்கத்தனை அந்தக் கட்சி
சத்தான முத்தான கெத்தான கட்சியாகக்
கொள்ளப்படும்.
ஒரு கொபசெவுக்கான அடிப்படைத் தகுதி
ஒரே விஷயத்திற்காகத்
தனது கட்சியை வானளாவப் புகழ்ந்து
எதிர்க்கட்சியை ஆனமட்டும் இகழ்ந்து
அதலபாதாளத்தில் வீசியெறிவது.
ஒரு கட்சியின் கொபசெ நியமனத்தையும்
நியமனமான கொபசெவையும்
கொச்சையாய் எள்ளியவாறே
தன் கட்சிக்குக் கச்சிதமாய்ப் பொருந்தும் கொபசெவை
எங்கிருந்தும் இழுத்துவர
வலைவீசித் தேடிக்கொண்டிருப்பதே தலைமைக்கு அழகு.
ரௌத்ரம் பழகு
தேவையான இடங்களில் ஒரு துருப்புச்சீட்டாகப்
பயன்படுத்த மட்டும்.
எட்டுத்திக்குமுள்ள படைப்பாளிகள்
அரசியல் பேசாமலிருக்கப்போமோ?
எனில் _
அரசியல் பேசுவதில் அரசியலிருக்கலாமோ?
அறச்சீற்றத்தோடு அரசியல் பேசினால் - சரி
ஆதாயத்திற்காகப் பேசினால் –
அது ஒரு மாதிரி…..
கடித்துத்துப்புவதாய் சில வார்த்தைகளை
உதிர்க்கத் தெரிந்தால்
கலகக்காரர்களாகிவிடல் எளிது;
சில கவிஞர்களும் கொபசெக்களாக மாறிவரும் காலமிது.


Like
Comment
Share

சங்கக் கவிதைகளும், சமகாலத் தமிழ்க்கவிதைகளும் Dr.கே.எஸ்.சுப்பிரமணியனின் ஆங்கில மொழிபெயர்ப்பும் அரிய பங்களிப்பும்!

 சங்கக் கவிதைகளும்,

சமகாலத் தமிழ்க்கவிதைகளும்

Dr.கே.எஸ்.சுப்பிரமணியனின் ஆங்கில மொழிபெயர்ப்பும் அரிய பங்களிப்பும்!



_ லதா ராமகிருஷ்ணன்


எனக்குத் தெரிந்து நவீன தமிழ்க்கவிதைகள் ஆங்கிலத்தில் ஒரு தொகுப்பாக வந்தது ஏறத்தாழ கதா வெளியீடாக 2005இல் வெளிவந்த TAMIL NEW POETRY என்ற நூல். 90 தமிழ்க்கவிதை களின் ஆங்கில மொழிபெயர்ப்பு அதில் இடம்பெற்றிருந்தன. Translator -DR.K.S.SUBRAMANIAN.

அடுத்து 2007இல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட TAMIL POETRY TODAY தொகுப்பில் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்த தமிழ்க்கவிதைகள் 106 மற்றும் அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் இடம் பெற்றிருந்தன. ஆளுக்கொரு கவிதை என்று 106 கவிஞர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்த நூல் பின்னர் புஸ்தகா மின் நூல் பதிப்பகத்தால் மின் நூலாக வெளியாகியுள்ளது.

2010இல் தஞ்சாவூர் பல்கலைக்கழகம் வெளியிட்ட TAMIL WOMEN POETS - SANGAM TO THE PRESENTஎன்ற தொகுப்பில் சங்கப் பாடல்கள்(42 கவிஞர்கள்), நல்வழி, ஆத்திச்சூடி போன்ற நன்னெறிப் பாடல்கள்(நான்கைந்து கவிஞர்கள்), பக்தி இலக்கியம் (நான்கைந்து கவிஞர்கள்), தனிப்பாடல்கள்(20 கவிஞர்கள்), நாட்டுப்புறப் பாடல்கள்(😎, தற்காலத் தமிழ்க் கவிதைகள்(33) என ஆறு பகுதிகளாய் கவிதை எழுதும் பெண்களின் எழுத்தாக்கங்களும், அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் டாக்டர் கே.எஸ்.சுப்பிர மணியனின் தேர்வும், மொழிபெயர்ப்புமாக வெளியாகின.

இந்த இரண்டு தொகுப்புகளிலுமே விரிவான அறிமுகக் கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன.

இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் டாக்டர் கே.எஸ். சுப்பிர மணியனின் தேர்வும் ஆங்கில மொழி பெயர்ப்புமாக சங்கப் பெண்கவிஞர்கள் அனைவருடைய கவிதைகளும் ஆங்கிலத் தில் இடம்பெற்றிருந்தன.

இது தவிர, கவிஞர்கள் உமா மகேஸ்வரி, தமிழன்பன் போன்று ஏறத்தாழ 10 தனிக் கவிஞர்களின் கவிதைகளும் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டு தொகுப்பாக வெளியாகியுள்ளன.

கவிஞர் இளம்பிறையின் தேர்ந்தெடுத்த கவிதைகள் அடங் கிய தொகுப்பு டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனின் ஆங்கில மொழிபெயர்ப்பில் விரைவில் நூலாக வெளிவரப்போகிறது!
பாரதியாரின் மொத்தக் கவிதைகளும் ஆங்கில மொழி பெயர்ப்பில் சாகித்ய அகாதெமி வெளியீடாக பிரசுரமாகி யிருக்கின்றன. அதில் ஏறத்தாழ 40% டாக்டர் கே.எஸ்.சுப்பிர மணியன் மொழிபெயர்த்தது.
(இவை தவிர டாக்டர் மணி பௌமிக் எழுதிய பெயர்பெற்ற படைப்பான CODE NAME GOD இன் தமிழ் மொழிபெயர்ப்பு – கடவுளின் கையெழுத்து (கவிதா பதிப்பக வெளியீடு) , தமிழ்-சமஸ்கிருத இணை அர்த்தம் கொண்ட பாடல்கள், கவிதைகள் அடங்கிய ’சிந்தனை ஒன்றுடையாள்’ என்ற நூல், எழுத்தாளர் ஜெயகாந்தனின் 20க்கும் மேற்பட்ட படைப்புகளின் ஆங்கில மொழியாக்கம், அனுபவச்சுவடுகள் முதலான கட்டுரைத் தொகுப்புகள், சமீபத்தில் சாகித்ய அகாதெமி வெளியிட்டுள்ள உ.வே.சாமிநாதய்யரின் என் சரித்திரம் என்ற தன் வரலாற்று நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு ஆகியவையும் மிகவும் குறிப்பிடத்தக்கவை)

டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனின் இந்த இலக்கியப் பங்களிப்பு கவனம் பெறவேண்டிய அளவு கவனம் பெற வில்லை என்பது வருத்தத்திற்குரியது.

இன்றும் சங்க இலக்கிய மொழிபெயர்ப்பு என்றால் ஏ.கே.ராமா னுஜம் பெயர் தான் கூறப்படுகிறது. டாக்டர் கே.எஸ்.சுப்பிர மணியனின் தரமான ஆங்கில மொழிபெயர்ப் பில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள சங்ககாலப் பெண்கவிஞர்கள் இடம்பெறும் கவிதைத் தொகுப்பு எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரிய வில்லை.


பொம்மிக்குட்டியின் கதை! - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 பொம்மிக்குட்டியின் கதை!

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
[I]

தலையாட்டி பொம்மைகளை யாருக்குத் தான் பிடிக்காது?
அதுவும், சின்னக்கண்ணனின் பொம்மை அத்தனை கலைவண்ண கைநேர்த்தியோடு
கிடைக்கோடாய் அசைவதைத் தவிர்த்து
மேலுங்கீழுமாய் மட்டும் முகம் ஆட்டிக் காட்டும்!
எதைச் சொன்னாலும் கண்சிமிட்டிப் புன்சிரிக்கும்.
கைகால் இயக்கங்களெல்லாம் குழந்தைக் கண்ணனின் மனம் போன போக்கில்;
அல்லாது தலையாட்டி பொம்மைக்கு
ஏது தனிப்பட்ட இயக்கம்...?
குறும்புச் சிறுவனின் கைகளிலும், மடியிலும்
தயக்கமில்லாமல் பொருந்தியமர்ந்திருக்கும்.
தனக்குப் பிடித்தமான பெயரை தலையாட்டி பொம்மைக்குத் தந்து
அதைத் திரும்பத் திரும்பக் கூவியழைத்துக்
குதூகலிக்கும் குழந்தை...
"பொம்மிக்குட்டீ வா.. வா.. பூ பூவாய் முத்தம் தா..."
பஞ்சுப்பொதியாய் பொம்மையின் உடல்.
பிஞ்சுக் கைகள் மென்மையாய் வருடித் தரும்.
துஞ்சும் நேரமெல்லாம் பொம்மிக்குட்டியைத்
தன்னருகே பத்திரப்படுத்திக் கொள்வான் சின்னக் கண்ணன்.
ஆனா- ஆவன்னா, A B C, 1 2 3...
அவனுக்குத் தெரிந்ததெல்லாமும்
சொல்லித் தரப்படும் பொம்மிக்குட்டிக்கும்.

II
பள்ளிக்குப் போய் வந்து கொண்டிருந்த சின்னக்கண்ணன்
கூடப் படிப்பவர்களைப் பற்றியெல்லாம் தினமும்
வீடு திரும்பிய பிறகு
வண்டிவண்டியாய் பொம்மிக்குட்டிக்குக் தவறாமல் கதை சொல்வான்.
கண்கொட்டாமல் கேட்டுக் கொண்டிருக்கும் பொம்மிக்குட்டி.
அடிக்கொரு தரம் தலையை ஆட்டும் - மேலுங்கீழுமாய்.
"அச்சுதன் அடித்தான், அவனைத் திருப்பியடித்தேன் - சரிதானே?"
"ஆம், ஆம்". ஆனால்...
"முகுந்தன் என்னுடைய பென்சிலை உடைத்துவிட்டான் என்பதால்
அவனை நையப் புடைத்து விட்டேன்" என்று சின்னக் கண்ணன்
சொன்னபோது
செய்த குற்றத்திற்கு தண்டனை அதிகம் என்றுதோன்றியது
பொம்மிக்குட்டிக்கு. சற்றே தயக்கமாய்
தலையை ஆம் - இல்லையாய் ஆட்டியது பொம்மை.
உயிருள்ளது பொம்மை என்று நம்பும் சிறுவன் கொஞ்சம்போல்
திகைத்துச் சினந்தான்.
தகப்பன்சாமி தான் என்றாலும்
"எனக்குப் பிடிக்கவில்லை என்பதற்காய் தருணுடைய கையைக்
கடித்துக் குதறி விட்டேன், கத்தியாலும் வெட்டி விட்டேன்"
என்று பெருமைபீற்றிக்கொண்டபோது
பொம்மிக்குட்டியின் தலை தவிர்க்கமுடியாமல் இடவலமாய்
ஆட ஆரம்பித்ததைக் கண்டு
மட்டுமீறிப் புகைந்த கோபத்தில் சிறுவனின் கரம்
பொம்மிக்குட்டியின் சிகையைக் கொத்தாய்ப் பிடித்து
கதவிற்கு அப்பால் வீசியெறிந்தது.
'பதிலுக்கு புதிய பொம்மைகள்
காசு கொடுத்தால் கிடைத்துவிட்டுப் போகிறது...
அதுவும், ஓசியில் கிடைத்ததுதான் பொம்மிக்குட்டி.
போதாக்குறைக்கு, நிறைய நைந்துபோய் விட்டது.
ஆய் பொம்மை; பீத்த பொம்மி..'

III

காரிருள் கவிய விழுந்தது விழுந்தவாறு
கிடந்தது பொம்மிக்குட்டி.
முதுகெலும்பு முறிந்ததுபோல் ஒரு சுளீர் வலி படர
உயிர்ப்பின் அடையாளம் பொம்மைதானோ வென
தனக்கெட்டிய பட்டறிவில் படித்துக் கொண்ட
விடையே கேள்வியாக அனத்திக் கொண்டிருந்தது நெடுநேரம்.
பின், கனவே போல் காற்றுத் தடத்தில் கிளம்பிச் சென்று
கதவிடுக்கில் மனம்நுழைத்துப் பார்த்தது.
பரிச்சயமான அறை.
பழகிய சின்னக்கண்ணன் வழக்கம்போல்
கைகொட்டிச் சிரித்தவாறு கட்டளையிட்டுக் கொண்டிருக்க,
எதிரே
சாவிகொடுத்தால் ஓடும் பொம்மை_
சல்யூட் அடிக்கும் பொம்மை_
சிரியென்றால் சிரிக்கும் பொம்மை_
சீறிபாயச் சொல்லி தள்ளிவிட்டால்
சரவென்று நெளிந்தோடும் நாகப்பாம்பு பொம்மை_
குத்தினாலும், எத்தினாலும் சத்தமெழுப்பாமல்
சிறுவனின் வீரசாகச் செயல் என்பதாய்
பெருமையில் பூரிக்கும் கைதட்டி பொம்மை_
'வெல்கம்' பொம்மை,ரிம்-ஜிம் நாட்டிய பொம்மை_
பெருந்தனக்காரர் பரிசளித்த பொம்மை_
பல வருடங்களுக்குப் பிறகு சாவகாசமாய் ஊரைப்
பார்க்கத் திரும்பி வந்திருக்கும் உறவொன்று
வாங்கிவந்த பொம்மை_
விரல்சொடுக்கிற்கேற்ப விரைந்தோடி
சுவற்றில் முட்டி நிற்கும் பொம்மை_
அலங்கார பொம்மைகள்,அவதார பொம்மைகள்_
வைக்கோல் பொம்மைகள், வெண்கல பொம்மைகள்_
பைக்குள் போட்டுக் கொள்ளுவதற்கேற்ற சிறிய பொம்மைகள்_
பூதாகார கரடி பொம்மைகள்...
அறையில் ஒரே நெரிசலாயிருந்தது.

IV

பிடிக்கவில்லை யென்று கடித்துத் துப்பியிருந்த பொம்மை
பரணிலிருந்து கீழே இறங்கி வந்திருந்தது.
பல ஆண்டுகளுக்கு முன் இன்னொரு குழந்தையின்
கைக்குப் போய்ச் சேர்ந்துவிட்ட பொம்மையும்
அருகமர்ந்து கொண்டிருந்தது.
கிழிந்த பொம்மைகள் சிலவற்றிற்கு
ஆயத்தஆடைகள் அணிவித்து
அழகுபார்த்துக் கொண்டிருந்தான் சின்னக்கண்ணன்.
சிறுவனின் கண்களே உதடுகளாய், வெளிப்பட்ட கூற்றுக்கு
மாற்று குறையாமல்
ஆடிக் கொண்டிருந்த தலைகள்
பொம்மைகளின் மேலும், கீழுமாய்.
காரியார்த்தமாய் வால்களைச் சுருட்டிக் கொண்டு
கூர்வளைநகங்களை செல்லப்பிராணிகளாய்
உள்ளிழுத்துக் கொண்ட வாக்கில்
அமர்ந்துகொண்டிருப்பவைகளைக்
காட்டும் அடையாளம் காலம்
எனப் பின்னேகி
பஞ்சுப் பிரிகளாய்
வெளியில் கலந்து திரியும்
பொம்மிக்குட்டியின் குரல் எட்டுமோ
உன்னை என்னை நம்மை...?

"நீயும் பொம்மை, நானும் பொம்மை,
நினைத்துப் பார்த்தால் எல்லாம் பொம்மை"