LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, June 20, 2024

நான் யார் தெரியுமா!?!? - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நான் யார் தெரியுமா!?!?

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
_ என்று கேட்பதாய்
சில அமைச்சர்களுடன் தான் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.
_ என்று புரியச்செய்வதாய்
மறவாமல் சில முன்னணி நடிக நடிகையர்
இயக்குனர் இசையமைப்பாளர்களுடன்
புதுப்பட பூஜை நிகழ்வில்
பங்கேற்ற செய்திகள் படங்களோடு
வெளியாகச் செய்திருக்கிறார்.
_ என்று அடிக்கோடிட்டுக்காட்டுவதாய்
சர்வதேச (நாலாந்தர) எழுத்தாளருடன்
தோளோடு தோள் சேர்த்து நின்ற, நடந்த
காணொளிக் காட்சிகளை
வெளியிட்டிருக் கிறார்.
_ என்று வீரமுழக்கம் செய்வதாய் தலைமறைவுப்போராளிகள் சிலருடன்
காட்டில் குத்துக்காலிட்டு அமர்ந்து
உணவுண்ட காட்சிகளின்
(அதற்கென்றே பிரத்யேகமாக அழைத்துச்
செல்லப்பட்ட சித்திரக் கலைஞரான
தோழரால் கிறுக்கப்பட்ட)
கோட்டோவியங்களை
சுற்றிலும் இறைத்து
நடுவே சிந்தனையார்ந்த முகபாவத்துடன்
தன்னை இருத்திக்கொண்டு எடுத்த
செல்ஃபிகளை
சரசரசரவென்று தொடர்ச்சியாக சில நாட்கள் வெளியிட்டிருக்கிறார்.
_ என்று அழுத்தமாக எடுத்துரைப்பதாய்
மெய்நிகர் மலையொன்றின் உச்சியில்
அமர்ந்தவாறு
சுற்றிலும் பல வயதுகளிலான ஆண்களும்
பெண்களும்
அவர் வாயிலிருந்து விழும் முத்துக்களை
ஆவேசமாகப் பாய்ந்து பாய்ந்து பொறுக்கி யெடுத்துக்கொள்வதை
ஒரு மந்த காசப் புன்னகையுடன் பார்த்தவா
றிருக்கும் புகைப்படங்களை
அவருடைய நான்கைந்து பக்தகோடிகள்
Bit Noticeகளாய் வினியோகித்துக்கொண்
டிருக்கிறார்கள்.
என்றென்றென்றெனக் கேட்பதான
அத்தனை படங்கள், கோட்டோவியங்கள்,
காணொளிகள், குறுஞ் சுவரொட்டிகளைப்
பார்த்தபின்பும் அசராமல் நின்று கொண்டிருக்கும் வாசகரைப் பார்த்து
‘நான் யார் தெரிகிறதா?’
என்று கேட்டவரிடம் _
_ உங்கள் எழுத்தின் மூலமே தெரிகிறது –
இத்தனை ‘Stage Props’ எதற்கு
என்று எதிர்க்கேள்வி கேட்ட வாசகர்
தன் கையிலிருந்த முகமறியாக் கவியின்
தொகுப்புக்குள்
கூடுவிட்டுக்கூடு பாய்ந்தார்!

கிளைபிரியும் குறுக்குவழிகள் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 கிளைபிரியும் குறுக்குவழிகள்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

அறுபது பேரோ அறுநூறு பேரோ
ஆறாயிரம் பேரோ
எந்தக் கூட்டமானாலும் விவிஐபிக்களோடு
‘குழுவாக நின்று படமெடுப்பது இயல்புதான்.
வட்டமேஜை அமர்வுகளையும் படமெடுப்பார்கள்;
உணவு இடைவேளையில் கையில் தட்டுடன்
சிறு சிறு வட்டங்களாக நின்றவண்ணமே செவிக்குணவும் வயிற்றுக்குணவுமாக பசியாறுவதையும் படமெடுப்பார்கள்;
கவனமாகப் பார்த்துப்பார்த்து
பிரபலங்கள் பக்கத்தில் இடம்பிடித்துவிட்டால்
பின் புகைப்படங்களில் இருக்கும் மற்றவர்களை
‘க்ராப்’ செய்து நீக்கிவிடலாம்.
பிறகென்ன
தானும் பிரபலமும்
நகையும் சதையும்போலவென்றால்
நம்பித்தானே ஆகவேண்டும்
நாங்கள் நீங்கள் அவர்களெல்லாம்….

மொழிபெயர்ப்புச் சுதந்திரமும் அத்துமீறலும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மொழிபெயர்ப்புச் சுதந்திரமும் அத்துமீறலும்


‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

மொழிபெயர்ப்பாளர் மூல ஆசிரியரின் அடிமையில்லைதான்
அதற்காக, மூல ஆசிரியராகிவிட
முடியுமா என்ன?
அன்றி மூல ஆசிரியரின் இணையாசிரியராகி
விடலாகுமா?
கேள்வி முடியும் முன்பே
முடியும் ஆகும் முடியும் ஆகுமென்று
முடிந்த முடிவாக மொழிபெயர்ப்பாளர்
முன்மொழிய
அன்பு காரணமாகவோ பண்பு காரணமாகவோ
மூல ஆசிரியர் அதை வழிமொழிய
மகிழ்ந்துபோன மொழிபெயர்ப்பாளர்
உருவைக் கருவாக்கி
எருவை வெறுவாக்கி
பருவை மருவாக்கி
சிறுவை பெருவாக்கியதோடு நில்லாமல்
ஒருவை ஓரங்கட்டி
திருவைத் திருட்டுப்போகச் செய்து
இரவைப் பகலாக்கி
பறவையை பிராணியாக்கி
பிரண்டையை யாளியாக்கிக்கொண்டே போக
மொழிபெயர்ப்பொரு மீள்கவிதையாக்கம்
என்று முழங்கி
மூல கவிதையின் நுட்பங்களெல்லாம்
மொழிபெயர்ப்பில் வெட்டி
யகற்றப்பட்டுவிட்டதில்
மூல கவிதையின் ஆணிவேர்
ஆட்டங்காண
முளைவிதை முடங்கிக்கொண்டது
அடியாழத்தில்!

நேர்காணல் ...........’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

நேர்காணல்
............................................................
’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

தரப்பட்ட கேள்விகளை ஒருசில வாசிப்பில் மனப்பாடம் செய்துகொண்டுவிடுவதில்
மகா திறமைசாலி அந்தப் பெண் என்று
பார்த்தாலே தெரிந்தது.
மேலும்,
அவளுடைய காதுக்குள்ளிருக்கும் கருவி
அவளிடம் அடுத்தடுத்த கேள்விகளை
எடுத்துக்கொடுத்துக்கொண்டிருக்கக்கூடும்.
அழகாகவே இருந்தாள்.
அவளுடைய அடுத்த இலக்கு
வெள்ளித்திரையாக இருக்கலாம்.
அதில் எனக்கென்ன வந்தது?
கேட்ட கேள்விகளுக்கான பதில்களை
அவள் பொருட்படுத்தவேயில்லை.
அப்படி எதிர்பார்ப்பது நியாயம்தானா என்று தெரியவில்லை.
அந்தப் பெண்ணின் முகம் எதற்குப் புன்னகைக்கவேண்டும்
எதற்கு ஆர்வமாகத் தலையசைக்கவேண்டும், எதற்கு ‘அடடா ‘பாவ’த்தைத் தாங்கவேண்டும், எதற்கு உச்சுக்கொட்டி கன்னத்தைக் கையிலேந்த வேண்டும் என்று எல்லாமே ‘ப்ரோகிராம்’ செய்யப்பட்டிருந்தன.
அவள் பணி கேள்விகள் கேட்பது.
அறுபதாயிரத்திற்கு கூடக்குறைய இருக்கும்
மாதவருமானம்.
”எப்போது கவிதை எழுதத் தொடங்கினீர்கள்?”
”கி.மு. 300”
”நல்லது. உங்களுடைய அடுத்த கவிதை?”
”பி.கி 32”
”நீங்கள் இதுவரை எவ்வளவு கவிதைகள் எழுதி யிருக்கிறீர்கள்?”
ஒரு லட்சம்.
”மிக்க மகிழ்ச்சி. ஒரு கவிதைக்கு உங்களுக்குக் கிடைக் கும் அதிகபட்ச சன்மானம்?”
”ஆறு கோடி”.
”அவ்வளவா? வாழ்த்துகள்.” ”உங்களுக்குப்
பிடித்த கவிஞர் யார்?”
”நான் தான்”.
”அந்தப் புனைப்பெயரில் எழுதும் கவிஞரை நான் இதுவரை படித்ததில்லை” என்று அழகாகப் புருவத்தைச் சுளுக்கிய பேட்டியாளரிடம்
'உங்களுக்குப் பிடித்த கவிஞர் யார்?' என்றேன்.
'நிச்சயமாக நீங்களில்லை' என்று சொல்லியிருந்தாலும் பரவாயில்லை.
'நிலாமுகக்கதிர்ச்சக்ரவர்த்தி நீலாம்பரன்' என்று
ஒரு நாலாந்தரக் கவிப்பெயரைச் சொன்னபோது
அந்த முகத்தில் தெரிந்த விகசிப்பைக்
காண சகியாமல்
அரங்கிலிருந்து எழுந்தோடிய என்னை _
அன்போடு துரத்திவந்து
என் கையில் நீலாம்பரனின் (அ)கவிதைத் தொகுப்பொன்றை
அன்பளிப்பாகத் திணித்துவிட்டுத்
நன்றி நவின்று திரும்பிச் சென்றாள்
நேர்காணல் நடத்திய அந்தப் பெண்.

அடையாளமும் அங்கீகாரமும் ......... ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அடையாளமும் அங்கீகாரமும்

......................................................................................
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)



இத்தனையத்தனை யெனச் சொல்லவியலா
எத்தனையெத்தனையோ காக்கைகளில்
தனித்தொரு காக்கையாகத் தன்னை யாரும் பார்க்கவில்லையே
என்ற ஏக்கம்
எந்தக் காக்கையையும் தாக்கியிருக்காது
என்றே தோன்றுகிறது.
சக பறவைகள் இரைதேடப்
பறக்கவேண்டும்.
தூண்டில்களுக்கும் துப்பாக்கிகளுக்கும்
இரையாகாமல் தப்பிக்கவேண்டும்.
நிழல் தேடி நிறைய தூரம் செல்லவேண்டும்...
தன் கூடிருக்கும் மரம் தொலையாதிருக்கிறதா
என்று தொடர்ந்து கண்காணித்துவரவேண்டும்...
தானியமென்று சிறுகல்லை முழுங்கியதில்
ஏற்பட்ட உபாதைகளை
யாரிடம் பகிர்ந்துகொள்வது?
இதில் யாரை யார் புகழ்ந்துபோற்றுவது.....
அலகுகளின் நீள அகலங்களைத்
துல்லியமாக அளப்பதாய்
ஆளுக்கொரு அளவை வைத்திருக்க
வழியில்லை காக்கைகளுக்கு.
சினிமாவில் நடிக்கவைப்பதற்கென்று
ஃபோட்டோஷூட் நடத்தி
ஒரு காக்காயைத் தேர்ந்தெடுத்து
அழைத்து வந்து
நூறு வருடத் தொன்மை வாய்ந்த
ஆறு நட்சத்திர மரமொன்றின் கிளையில்
யாரேனும் இதுவரை தங்கவைத்ததாகத்
தெரியவில்லை.
அதற்காக அங்கலாய்ப்பதெல்லாம்
காக்கைகளின் வழக்கமில்லை.
காக்கையை அழகென்று போற்றிப்
பாடுவதில்லை யுலகு.
அதன் கரும்பட்டொளிர் பூமென்மைச்
சருமம் பற்றி யொரு வரியேனும்
இதுவரை பேசி யறியோம்.
இனிமையற்ற அதன் குரலின்
கரகரப்பை
எப்படியெல்லாம் பரிகசித்திருக்கிறோம்.
ஆகாயத்தோட்டி என்று குறிப்பிடுவதிலும்
ஓர் உட்குறிப்பு இருக்கத்தானே செய்கிறது.
கிளியின் அழகை
குயிலின் குரலினிமையை
மயிலின் எழில்நடனத்தை
குருவியின் குட்டியுருவை
யெல்லாம் எடுத்துக்காட்டிக்
காட்டிக்காட்டி
காக்காயைப் பழிப்பதுமட்டும்
ஒருநாளும் வழக்கொழிந்துபோகாததாய்….
சிறுகல்லைப் போட்டுப்போட்டு
நீர்மட்டத்தை உயர்த்தி
தாகம் தீர்த்துக்கொண்டதாய்
காக்காயின் அறிவுக்கூர்மைக்கு
கைவசமிருப்பது ஒரேயொரு கதை....
ஆனால்
பாட்டி சுட்ட வடையைத் தட்டிப்பறித்த
வில்லன் காக்காய்க்கு
பட்டிதொட்டியெல்லாம்
கரும்புள்ளி செம்புள்ளி
குத்தப்பட்டவண்ணமே....
காக்கை காக்காய் காகம் – எல்லாமே
மனிதர்கள் சூட்டிய பெயர்கள்.
எனில்,
காக்கை காக்கைக்கு என்ன?
எண்ண நேரமின்றி
ஏதொரு அவசியமுமின்றி
என்றும்போல் காகங்களாகிய
காக்காய்களாகிய
காக்கைகள்
வலம் வந்தபடி வானிலும்
விளக்குக்கம்பத்தில் அமர்ந்துகொண்டும்…..
காக்கையின் வாழ்க்கைக்கு
நோக்கம் கற்பிக்க விரும்பும்
நம் அறியாமையை அறியாமலும்…..

சொல்லத்தோன்றும் சில லதா ராமகிருஷ்ணன்

 சொல்லத்தோன்றும் சில

லதா ராமகிருஷ்ணன்




என்ன டப்பா சினிமாவானாலும் அதில் மம்முட்டி நடித்தால் அதற்கென்று ஒரு தரம் வந்துவிடும் என்ற நம்பிக்கையுண்டு!.
இறுதியாகப் பார்த்த படம் மௌனம் சம்மதம் (அதுதான் தலைப்பு என்று நினைக்கிறேன்) மம்முட்டி நடித்தது.
அதற்குப் பிறகு பல வருடங்கள் கழித்து தியேட்டருக்குப் போய் தெனாலி பார்த்த போது தொலைக்காட்சித் திரைக் குப் பழகிய கண்களுக்கு கதாநாயகன், கதாநாயகியெல் லாம் ராட்சஸ பூதங்களாய் எங்கோ உயரத் தில் தெரிந்தார்கள்!.
கதாநாயகி அணிந்திருந்த அதிகுட்டைப் பாவாடை அத்தனை அதிர்ச்சியளித்தது! பொதுவாக அத்தகைய ‘டூ மினி ஸ்கர்ட்ட் களை’ வில்லிகள் தான் அணிந்துகொண்டு வருவார்கள்!.
அதுவும், கதாநாயகி அதை அணிந்து கொண்டு காதலனோடு போனாலாவது பரவாயில்லை. ஆனால் அவள் அண்ண னோடல்லவா போகிறாள்! உண்மையாகவே பயங்கர அதிர்ச்சி தான்!
தெனாலி படம் அந்த ஒரு காட்சி – தனக்கு எதைப் பார்த் தாலும் பயம் என்பதையும் அதற்கான காரணத்தையும் கண்கள் மருண்டு கலங்க கதாநாயகன் (கமலஹாஸன்) மனநோய் மருத்துவரிடம் தெரிவிப்பாரே – அந்த ஒரு காட்சியோடு அந்த மொத்தப் படமும் முடிந்துவிட்டது; முடிந்திருக்கவேண்டும்.
ஆனால், ஹாஸ்யம் என்ற பெயரில் எத்தனை யெத்தனை அபத்தக்காட்சிகள் நம்மீது திணிக் கப்படுகின்றன.
அவை ஒருவிதத்தில் ஒரு சீரியஸ் விஷயத் தைப் பேசுவதிலுள்ள மன நேர்மையை, ஆதாயநோக்கைத் தெரியப் படுத்திவிடுவ தாகவே தோன்றுகிறது.
ஹமாம் சோப் விளம்பரம்போல். கோவிட் காலத்தில் பாதுகாப்பாய் இருப்பது குறித்த பிரக்ஞையேற்படுத் துவது என்ற பெயரில் சின்னப் பெண்ணின் வெற்றுத் தோளைக் காண்பித்து அதில் அவள் சோப்பை உருட்டும் படி செய்திருக்கிறார்கள். கைவிரல்களை சோப்பால் அழுத்தித் தேய்த்துக் காட்டியிருக் கலாம். செய்யவில்லை.
தொலைக்காட்சியில் விளம்பரங்களுக்கு நடுநடுவே வரும் திரைப்படத்தைப் பார்ப்பது தாங்கமுடியாத துயரம்.
எது அதிக திராபை என்று பட்டிமன்றமே நடத்தலாம்.
மாஸ்டர் படம் பார்க்க நேர்ந்தது அத்தகைய துயரம்தான். சமூகப்பிரக்ஞை மிக்க கதை முடிச்சு. சிறுவர்களை, சின்ன தவறுகள் செய்து கூர்நோக்குப்பள்ளிகளில் இருப்ப வர்களை போதைப்பொருள் கடத்துதல் போன்ற சமூக விரோத நடவடிக்கைகளில், குற்றச்செயல்களில் ஈடுபடுத்தும் ஒரு நாசகார கும்பலை எதிர்க்கும் கதா நாயகன்.
அவன் எதற்கு எப்போதுமே குடிப்பதாகக் காட்டப்பட வேண்டும், தெரியவில்லை. அவன் குடிக்கும்போதெல்லாம் ‘குடி குடி யைக் கெடுக்கும்’ என்பதாக ஏதோ வாசகம் வேறு திரையில் வந்து வந்து போகிறது.
ஒரு நல்ல கதைக்கருவை இப்படி வீணாக்க இத்தனை கோடிகள் செலவழிப்பதற்கு பதில் அந்தப் பணத்தை உருப்படியாக ஏழைச் சிறுவர்களுக்கான நலத்திட்டம் எதிலாவது முதலீடு செய்யலாம்.
அதுவும், எம்.ஜி.ஆர் – சிவாஜி ஒரே நேரத்தில் 10 பேரை அடித்துவீழ்த்தி வெற்றிபெற்றார் களென்றால் ரஜினி கமலஹாஸன் 100 பேர், சூர்யா தனுஷ் விஜய் 1000 பேர் என்ற ரீதியில் போய்க்கொண்டிருக்கிறது.
விஜய் தொலைக்காட்சியில் சும்மாவே கம்பு, கத்தி, கதாயுதன் என பலவற்றால் அடுத்திருப் பவரை அடித்து விளையாடுவது அத்தனை காமெடியாகத் திரும்பத் திரும்பக் காட்சிப் படுத்தப்பட்டுக்கொண்டே.
அவர்களுடைய கத்தியும் கம்பும் பிரத்யேக மாக காகிதத் தால் செய்யப்பட்ட தாயிருக்க லாம். அதைப் பார்த்து அதேபோல் நிஜக் கத்தியால் விளையாடக் கூடும் சிறுவர்கள், வளரிளம்பருவத்தினரை நினைக்க பயமா கவே இருக்கிறது.
அதைப்பற்றியெல்லாம் சின்னத்திரைக்கோ பெரிய திரைக்கோ என்ன கவலை.

DEAR FACEBOOK

 
DEAR FACEBOOK

There used to be a list of reasons given by you for reporting an uploading. Not that you always take prompt action if something is reported against. But, you do take prompt action sometimes.

But, of late clauses like 'Misinformation or Hate Speech ' are not there in the list of Reporting.
Why so? Are they not good enough reasons for reporting?

Don't they have any potential danger?

Encouraging all kinds of soft porno, porno shorts and long videos to have a free run in Facebook , isn't it kind of pretentious asking us to report about them?