'அன்பே உருவாதலு'க்கான
அதி எளிய வழி
'அன்பே உருவாதலு'க்கான
அதி எளிய வழி
மகளிர் தின சிறப்புமலர்
ஒரே பாதை வெவ்வேறு கால்கள்
அவரவர் வேலை அவரவருக்கு
காலாவதியாகாக் கவி பிரம்மராஜன்!

[சில மாதங்களுக்கு முன்பு கவி பிரம்மராஜனைக் காலாவதியாகி விட்ட கவிஞர் என்று சக கவிஞர் ஒருவர் எழுதியிருந்ததைப் படிக்க நேர்ந்தது. ஒரு கவிஞரின் கவிதைகள் பிரசுரமாகாததாலேயே அவர் கவிதை எழுதவில்லை என்று கூறிவிடலாமா? அவர் கவிதைகள் எழுதிக்கொண் டிருக்கலாம். பிரசுரத்திற்கு அனுப்பாமலிருக்கலாம். ஒரு கவிஞர் இப்போது கவிதை எழுதுவதில்லை என்பதாலேயே அவர் காலாவதி யாகிவிட்ட கவிஞர் என்று சொல்வது எத்தனை அபத்தம். தமிழ்க் கவிதை வெளியில் கவிஞர் பிரம்மராஜனுக்கு ஒரு தனியிடம் என்றும் உண்டு. அவருடைய கவிதைகளில் சில இங்கே தரப்பட்டுள் ளன]

நிலாமயம்!

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
(*12 மார்ச் 2023 திண்ணை இணைய இதழில் வெளியாகியுள்ள கவிதை)
சிலருடைய கவிதைகளில் நிலவு கறைபடிந்ததாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு களங்கமற்றதாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு சந்திரனாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு அம்புலிமாமாவாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு கொஞ்சிக்குலவும் காதலியாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு அஞ்சிப் பதுங்கும் குழந்தையாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு உலவிக்கொண்டி ருப்பதாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு மிதந்துகொண்டி ருப்பதாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு மேகத்தைத்
தழுவு வதாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு மேகத்தைக் கண்டு நழுவியோடுவதாய்.
சிலருடைய கவிதைகளில் நிலவு உருண்டோடும் பந்தாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு உடையும் நீர்க்குமிழியாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு
இரவின் குறியீடாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு
கனவின் அறிகுறியாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு நாடோடியாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு காத்தாடியாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு காலமாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு அகாலமாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு மரணமாய்
சிலருடைய கவிதைகளில் நிலவு மறுபிறப்பாய்
நிஜத்தில் நீ யார் எனக் கேட்டால்
புவியின் ஒரே துணைக்கோள் அறிவியலின்படி
என்று குறுநகையோடொரு விடைகிடைக்கக்கூடும்….
எனில் நிலா முயல் வேண்டுமா வேண்டாமா என்று
நாம்தானே முடிவுசெய்யவேண்டும்!
தாமரையிலைத்தண்ணீர்ப்பற்று
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
(12 மார்ச் 223 திண்ணை இணைய இதழில் வெளியாகியுள்ளது)

தாமரையிலைத் தண்ணீரை தூலமாக நேரில் பார்த்திருக்கிறேனா, தெரியவில்லை….
அப்படிப் பார்த்தால்
தாகூரைப் பார்த்ததில்லை,
ஷேக்ஸ்பியரைப் பார்த்ததில்லை
லதா மங்கேஷ்கரைப் பார்த்ததில்லை,
மம்முட்டியைப் பார்த்ததில்லை,
இமயமலையைப் பார்த்ததில்லை.
இக்குனூண்டு முளைவிதையைப்
பார்த்ததில்லை
பார்த்தல் என்பதன் நேரில் என்பதன்
அர்த்தார்த்தங்களில்
பார்த்திராதவையே அதிகம் பார்க்கப்பட்டதாய்…..
நான் பார்த்திராத தாமரையிலைத்
தண்ணீர்த்துளிகள்
இருக்குமிடமெங்கும் உருண்டோடியவாறே…
உணர்ந்தும் உணராமலுமா யதன் ஈரம் _
காய சி்றிது நேரமாகும்.
சில நாட்கள் அலைபேசியில் 6 மணிக்கு அலாரம் வைத்து எழுந்துவிட்டால், பின்
அந்த அலாரம் எப்படியோ ஆழ்மனதில்
அடிக்க ஆரம்பித்துவிடுவது போலவே _
பழகிவிட்ட தாமரையிலைத்தண்ணீர்
வாழ்வில்
இலை நீர்த் துளிகள் மேல்
நிலைகொள் மனது _
பற்றுடைத்து என் றொரு சொல்லின்
இருபொருளுணர்த்தி.
மௌனம்
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
(*12 மார்ச் 2023 திண்ணை இணைய இதழில் வெளியான கவிதை)

மௌனம் சம்மதமல்ல
மந்திரக்கோல்
மாயாஜால மொழி
மனதின் அரூபச் சித்திரம்
மேற்தோலின் உள்ளூறும் காற்றின் ருசி
மகோன்னத நறுமணம்
மரித்தார் உயிர்த்தெழல்
மாகடலின் அடியாழ வெளி
மையிருட்டிலான ஒளி
மாமாங்க ஏக்கம்
மீள் பயணம்
மருகும் இதயத்தின் முனகல்
மனசாட்சியின் குரல்
மிதமிஞ்சிய துக்கம்
மகா அதிர்ச்சி
முறிக்கும் புயலுக்கு முந்தைய அமைதி
வழிமறந்தொழியும் சூன்யவெளி
மொழியிழந்தழியும் எழுத்துக் கலை
மரணமனைய உறைநிலை……..
மாற்றீடுகள்
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
குழந்தைகள் இயல்பிலேயே புரட்சியாளர்கள்.
கஷ்டப்பட்டுக் கட்டிய மணல்வீட்டை ஒரு நொடியில் காலால் எட்டியுதைப்பது எத்தனை அளப்பரிய, விடுதலையுணர்வு, தாமரையிலைத் தண்ணீர்த்துவம்!
ஒரு குழந்தையின் சேமிப்பில் இருக்கலாகும் குந்துமணிகள் விலைமதிப்பற்றவை!
வாழ்வதும் வளர்வதும் குழந்தைக்கு ’இங்கே
– இப்போது’ மட்டுமேயாகிறது.
ஒருவேளை அவர்களுக்குத் தெரிந்திருக்கக்கூடும் வளர்ந்தவர்கள் சூழ்நிலைக் கைதிகள், சமூக பலியாடுகள், என்பதெல்லாம்....
***