LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Friday, March 10, 2023

மாற்றீடுகள் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 மாற்றீடுகள்

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்) 

குழந்தைகள் இயல்பிலேயே புரட்சியாளர்கள்.

 விலைமதிப்பற்றதென சமூகம் வைத்திருக்கும் பட்டியலில் உள்ள பொருட்களை யெல்லாம் விலக்குவதாய் அவர்களிடம் ஒரு பட்டியல் உள்ளார்ந்து இருக்கும்.

 அழுக்கு மண், கசங்கிய தாள், சிகரெட் துண்டு, கையால் தொட்டுணரத் தூண்டும் சிறுநீர், ஆட்டுப்புழுக்கைகள், யாரோ துப்பிப்போட்டிருக் கும் தூசிபடிந்த மீதி மிட்டாய் விரல் நுழைத்துப் பரவசக்கூடிய ஓட்டைகளை வைத்தி ருக்கும் சாயம்போன சட்டை…..

 கோலிகுண்டைக் கண்ணருகே வைத்து உள்ளே தெரியும் வானவிற்களைப் பார்த்துப் பரவசப் பட்டுக்கொண்டி ருக்கும் சிறுவனிடம் வைரக் கல்லைக் கொடுத்தால் அவன் அதை மறு கையால் அப்பால் ஒதுக்கும் சாத்தியங்களே அதிகம்.

 மணல்வீடு கட்டிவிளையாடும் குழந்தைகளுக்கு மணலின் விலை குறித்தோ, அதன் ஒப்பீட்டு மதிப்பீடு குறித்தோ என்ன கவலையுமில்லை.

கஷ்டப்பட்டுக் கட்டிய மணல்வீட்டை ஒரு நொடியில் காலால் எட்டியுதைப்பது எத்தனை அளப்பரிய, விடுதலையுணர்வுதாமரையிலைத் தண்ணீர்த்துவம்!

 விளையாடும் சிறுமிக்கு காதில் லோலாக்கும் கணுக்காலில் கொலுசும் இடைஞ்சலாகவே இருக்கும். தாகூர் சொல்லியிருக்கிறார். அவர் சொல்லாவிட்டாலும் அதுவே உண்மை.

 குழந்தையின் பொம்மைகள் உயிருள்ளவை . அவை அழும் சிரிக்கும் அவற்றுக்கும் வலிக்கும் பசியெடுக்கும்.

 ஊர்ந்துசெல்லும் சிற்றெறும்புகளை வேண்டு மென்றே நசுக்கிவிடுவதில்லை குழந்தைகள். அவற்றோடு சேர்ந்து பொந்துக்குள் சென்று பார்க்கவே ஆவலாயிருக்கின்றன.

 கெட்ட வார்த்தை நல்ல வார்த்தை என்றெல்லாம் குழந் தைக்குத் தெரியாது. கெட்டவர் நல்லவர் ஏழை பணக்காரர் என்பதெல்லாமும்கூட.


ஒரு குழந்தையின் சேமிப்பில் இருக்கலாகும் குந்துமணிகள் விலைமதிப்பற்றவை!

 குழந்தைக்குள்ளிருக்கும் பிரபஞ்சம் அதற்குப் போதுமானதாக இருக்கிறது.

வாழ்வதும் வளர்வதும் குழந்தைக்குஇங்கேஇப்போதுமட்டுமேயாகிறது.

 தங்களுடைய தேர்வுகளுக்காக அடியுதைகளை, ஆங்கார வசைகளை எதிர்கொள்ள அவர்கள் மன அளவில் அஞ்சுவதேயில்லை.

ஒருவேளை அவர்களுக்குத் தெரிந்திருக்கக்கூடும் வளர்ந்தவர்கள் சூழ்நிலைக் கைதிகள், சமூக பலியாடுகள், என்பதெல்லாம்....



***



 

 

No comments:

Post a Comment