ஒரே பாதை வெவ்வேறு கால்கள்
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
(*15 மார்ச், 2023 பதிவுகள் இணையட் இதழில் பிரசுரமான கவிதை)
இருமருங்கிலுமான மரங்களும் மைல்கற்களும்
தெருவோரக் கடைகளும் திருப்பங்களும்
மறுசீரமைக்கப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன.
அவர் நடக்கும்போது அந்தச் சாலையோரங்களிலிருந்த
அருநிழற் தருக்கள்
அடுத்தவர் நடக்கும்போது மாயமாய் மறைந்துபோய்விடுகின்றன.
அதற்கு பதில்
அங்கே கூர்முனைக் கற்கள் இறைந்துகிடக்கின்றன.
அவர் நடக்கும்போதெல்லாம் அங்கே நாள்தவறாமல் இளநீர் வெட்டிக்கொண்டிருக்கும் வியாபாரி
அடுத்தவர் அவ்வழியே செல்லும்போது
வெடிகுண்டு வண்டியில் கூவிக்கொண்டே செல்கிறார்.
அவர் நடக்கும்போது வீசும் தென்றல்
அடுத்தவர் நடக்கும்போது சூறாவளியாகிவிடுகிறது.
அவர் நடக்கும்போது ஆயிரத்தெட்டு யோசனைகளோடு சென்றாலும்
வழுக்கிவிட அங்கேயிருக்காத சாணிமொந்தையும் போட்டுடைத்த பூசணிக்காயும்
நாறும் சாம்பார்ப் பொட்டலமும் செத்த எலியும்
குழியும் குண்டும் வழியெலாம் உருண்டோடும் கோலிகுண்டுகளும்
யாவும் அடுத்தவர் செல்லும்நேரம்
அங்கே ஆஜராகிவிடுகின்றன.
அப்படியுமிப்படியும் ஆடித் தள்ளாடித் தத்தளிக்கும் ஒருவரை
யடுத்தவர் தம்பிடி பெறாதவர் என்று எக்களிப்பதும்
வம்படியாய்ப் பிடித்திழுத்துத் தள்ளிவிடுவதும்
சாலைவிதிகளிலேயே மீறப்படாமல் மிக கவனமாய்ப்
பேணப்படுவதாகிறது.
அடிக்கடி விபத்துகள் நேரும் அந்த அபாயகரமான வளைவு
மட்டும் இருந்தவிடத்திலேயே இருந்துவிடுமா என்ன….
No comments:
Post a Comment