LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, October 15, 2022

ரௌத்ரம் பழகுதல் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ரௌத்ரம் பழகுதல்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

ஓரமாக ஒதுங்கியிருக்கவே விரும்புவேன்
அதையே காரணங்காட்டி
நீ ஒதுக்கித் தள்ள நினைத்தால்
ஓர் உதை விட்டு மையத்திற்கு வந்துவிடுவேன்.

சாமரங்கள் தேவையில்லை யென்றால்
சாமரம் வீசத் தயார் என்றா பொருள்?

தெரியாததை தெரியாதென்றுரைக்க
மனத்தெம்பு வேண்டும்
உலகிலுள்ள எல்லாமும் நல்லாத் தெரிந்ததாக
நாளெல்லாம் பாவனை செய்யும் உனக்கு
அது நிச்சயமாக இல்லைதான்.
பாவம் நீ.

ஆனால், பாவம்பார்ப்பதால்
என்னை பிடித்துத் தள்ளி விட அனுமதிப்பேன்
என்று நீ நினைத்தால்
உன்னை மோதி மிதிப்பதென் அறமெனத்
தெரிந்துகொள்.

இருளிலிருக்கப் பிடிக்கும் என்று சொன்னால்
அதற்காக என்னை குகைக்குள் தள்ளிவிட்டு
நன்மை செய்ததாக
ஊருக்குள் தம்பட்டமடித்துத் திரிந்தால்
விசுவரூபமெடுத்துவந்துன்னை
நார்நாராய்க் கிழித்தெறிய
தாராளமாய் முடியும் என்னால்.

பேர் பேராய்ப் போய் புலம்பியழக்கூடும்
உன்னை யொரு புழுவினும் கீழாய்ப்
பார்த்து
என் வழி நடப்பேன்.
என்ன செய்ய இயலும் உன்னால்?

ஒரு கூட்டத்தில் தனித்துத் தெரிய நான்
பிரயத்தனம் எதையும் செய்வதில்லை.
அதற்காய்
அடையாளம் அழித்து என்னையொரு
மொந்தைக்குள் திணிக்க முயற்சித்தால்
முற்றிலுமாய் இல்லாமலாக்க முனைந்தால்
மறுகணம் உன் கையை
முறித்துப்போடவும் தயங்க மாட்டேன்.

நான் (பாரதியாரின் வரிகள்)

 பாரதியாரின் வரிகள் 

நான்

வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்;
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;
கானிழல் வளரும் மரமெலாம் நான்,
காற்றும் புனலும் கடலுமே நான்
விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்
வெட்ட வெளியின் விரிவெலாம் நான்,
மண்ணில் கிடக்கும் புழுவெலாம் நான்,
வாரியிலுள்ள உயிரெலாம் நான்
கம்பனிசைத்த கவியெலாம் நான்,
காருகர் தீட்டும் உருவெலாம் நான்;
இம்பர் வியக்கின்ற மாட கூடம்
எழில் நகர் கோபுரம் யாவுமே நான்
இன்னிசை மாத ரிசையுளேன் நான்;
இன்பத் திரள்கள் அனைத்துமே நான்;
புன்னிலை மாந்தர் தம் பொய்யெலாம் நான்;
பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான்
மந்திரங் கோடி இயக்குவோன் நான்,
இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்,
தந்திரங் கோடி சமைத்துளோன் நான்,
சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான்
அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்,
அவை பிழையாமே சுழற்றுவோன் நான்;
கண்டநற் சக்திக் கணமெலாம் நான்,
காரண மாகிக் கதித்துளோன் நான்
நானெனும் பொய்யை நடத்துவோன் நான்;
ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்
ஆனபொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்
அறிவாய் விளங்குமுதற் சோதிநான்!
பாரதியார்

உயிர்களெல்லாம் தெய்வமன்றிப் பிறவொன் றில்லை;

  பாரதியாரின் வரிகள்

உயிர்களெல்லாம் தெய்வமன்றிப்

பிறவொன் றில்லை;

ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;
பயிலுமுயிர் வகைமட்டு மன்றி யிங்குப்
பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;
வெயிலளிக்கும் இரவி,மதி,விண்மீன்,மேகம்
மேலுமிங்குப் பலபலவாம் தோற்றங் கொண்டே
இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;
எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்;
பாரதியார்

நீக்கமற…. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நீக்கமற….

 ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

வீடுவந்து சேர்ந்த பிறகும்

நான் வீதியிலேயே நடந்துகொண்டிருப்பதை

தாழிட்ட கதவுகளுக்கு இப்பால் உள்ள

அறையிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும்

நானின் மண்டையில் உச்சிவெயில் சுரீரெனத் தைக்க

கிழிந்த நாளொன்றிலிருந்து சில நூலிழைகள் நைந்து தொங்க

உட்கார்ந்த நிலையில் என் பாதங்கள் இருமாடிப்படிகளிலேறிச் செல்லும்நேரம் வலியெடுக்கும் முழங்கால்கள்

முதுகுமாக மாறிக்கொள்ள

வழங்க வழியில்லாத உணவின் அளிப்புக்காக

அந்தத் தெருமூலையில் சுருண்டுகிடக்குமொரு உருவம்

அழகென்பதன் அர்த்தமாக இருந்திருக்கும் அக்காலம்

திரும்பிக்கொண்டிருக்கலாகும் இச்சமயம் அதனுள்

புள்ளுக்கும் புல்லுக்கும் இடையான வேறுபாடு

உண்டென்றால் உண்டு இல்லையென்றால் இல்லை

யெனச் சொல்லுமாறு ஊரு பேரு காரு தேரு

நீறு சேறு பேறு வேறு கூறு பாரு

போகுமாறு

பாரு பாரு நல்லாப் பாரு

பயாஸ்கோப்பு படத்தைப் பாரு

என்னான்னு வந்து பாரு என்றழைக்கும் மனம்

கூவியவாறிருக்க

கேட்டுக் காலெட்டிப் போட்டபடி போய்க்கொண்டிருக்கும் என் மெய் உயரத்தைச்

சிறிதே கூட்டிக்காண்பிக்க விரும்பி அணிந்துகொண்டிருக்கும் காலணிகளில் ஒன்று என்னை வீதியோரம் உருட்டப் பார்ப்பதை

ஜன்னல்வழியாகப் பார்த்துக்கொண்டிருந்த அணிலின் குட்டிவால் சற்றே விலகிக் காட்டியதில் பதறும் மனம்

நிதானமாய் நிறுத்தி அழுத்திக் கேட்கும்

வழக்கம்போல்

நான் எங்கே இருக்கிறேன்……

அழகு - ‘ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 அழகு

 

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

சுடர்விடும் கண்களில்லை; அடர்கூந்தல் அலைபாயவில்லை;

கன்னம் குழியவில்லை;

குரலில் தேன் வழியவில்லை;

குலுங்கிச் சிரிக்கும் அரிய பொழுதுகளில்

சதைப்பிடிப்பற்ற அந்த தேகத்தில் ஆங்காங்கே

எலும்புகள் புடைத்து சுருக்கங்கள் வெளிப்பட்டன.

குறுக்குமறுக்கான வினோத வரிசையிலிருந்த பற்கள்

COLGATE, SENSODYNE DABUR RED பற்பசை விளம்பரங் களுக்கான வெண்மையில்

மின்னவில்லை.

என்ன யிருந்தாலும் அதிபலவீன தருணமொன்றில்

கதிகலங்கிநின்றவனை

கைப்பிடித்தழைத்துச்சென்றொரு ஆலமர நிழலில்

அமரச்செய்தவளின் கனிவு

அழகோ அழகு!

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி

என்றவனின் கண்ணம்மா

என்னமாயிருந்தாளோயார் கண்டது?

குழந்தைகள் நம் அடிமைகளோ உடமைகளோ அல்ல

குழந்தைகள் நம் அடிமைகளோ உடமைகளோ அல்ல

 தன் மகளை முந்திக்கொண்டு அதிக மதிப்பெண் எடுக்கிறானே, வகுப்பில் முதல் ராங்க் வாங்குகிறானே என்ற வெறுப்பிலும் கோபத்திலுமாய் எட்டாம் வகுப்பு மாண வனை அதே வகுப்பு மாணவியின் தாய் குளிர்பானத்தில் ஏதோ கலந்து பள்ளிக் காவ லாளியின் கையில் கொடுத்து அந்த மாணவனின் பெற்றோர் தந்ததாகச் சொல்லி குடிக்க வைத்ததன் விளைவாக அந்த மாண வர் இறந்துவிட்டார்.

அப்படியென்றால் அந்தத் தாய் தன் மகளை எந்த அளவு படிக்கச் சொல்லி அழுத்தம் தந்திருப்பார். முதல் ராங்க் வரவில்லையே என்று சாடி அவமானப்படுத்தியிருப்பார் என்று நிகழ்ச்சியாளர் கேட்கும் கேள்வி முக்கியமானது.
இதேபோல்தான் வளரிளம்பருவத்தினருக்கு இயல்பாக வரும் எதிர்பாலின ஈர்ப்பைப் பெற்றோர்களும் சமூகமும் சரியான முறையில் கையாள்வதில்லை என்பதே பல வளரிளம்பருவத்தின ரின் தற்கொலைக்குக் காரணமாகிறது என்பதை மனநல மருத்து வர் ஷாலினி அவர்கள் கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம் தொடர்பாய் பேசியி ருக்கும் ஒரு காணொளியில் முன்வைத்திருப் பார்.
குழந்தைகள் மீது அன்பு என்ற பெயரில் பெற்றோர்கள் அவர்களை உடல்ரீதியாய், மனரீதியாய் துன்புறுத்து வதை அன்பு, அக்கறை என்று எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
குழந்தைகள் வாக்குவங்கிகள் இல்லை என்பதால் அவர்களைப் பற்றி அரசியல் கட்சிகள் அவதானிப்ப தில்லையென்றே தோன்று கிறது. ஆனால் குழந்தைகளின் உரிமைகள், அவர்களை நடத்தும் விதம் குறித்தெல்லாம் பெரியவர்களுக்கு - பெற்றோர்கள், ஆசிரி யர்கள், சமூகத் தின் அங்கத்தினரிகள் ஆகிய அனைத்துத் தரப்பின ருக்கும் sensitization, awareness programmes, அதற்கான முன்னெடுப் புகள் மிக மிக அவசி யம்.
இந்த மாதிரி ஒரு தற்கொலை அல்லது கொலை நடந் தால்தான் குழந்தைகள், வளரிளம்பருவத்தினர் பற்றி யெல்லாம் கவனம் செலுத்துவோம் என்றில்லாமல் அரசு கள் குழந்தைகள் நலன் குறித்த தொடர்ச்சியான கவனத்தையும் செயல்பாடுகளையும் கொண்டு இயங்க வேண்டியது இன்றியமையாதது.

கவிஞர் வைதீஸ்வரன் குறித்த ஆவணப்படம் - குவிகம் வெளியீடு

 //சமகாலத் தமிழ்க்கவிதையின் மூத்த கவிஞர் வைதீஸ்வரனின் படைப்புலகம் குறித்த ஆவணப்படம் குவிகம் இலக்கிய அமைப்பின் மூலம் நிழல் திருநாவுக்கரசு இயக்கத்தில் உருவாகியுள்ளது. அது சென்னையில் 22.9.2022 அன்று திரையிடப்பட்டது.



செப்டெம்பர் 30 - இன்று உலக மொழிபெயர்ப்பு நாள்!

செப்டெம்பர் 30 - இன்று உலக மொழிபெயர்ப்பு நாள்!

இலக்கியத்திலும் இவ்வாழ்வின் பல்வேறு துறைகளிலும் கட்டங் களிலும் மொழிபெயர்ப்பு முக்கியப் பங்காற்றுகிறது.
பறவையின் மொழியை, குழந்தையின் மொழியை நாம் அறிந்த மொழியில் கடத்த முற்படும், பொருள் பெயர்க்க எத்தனிக்கும் பிரயத்தனம் நம்முடைய வாழ்வின் தீராத வலியும் நிவாரணமு மாக.......
மூலப் படைப்பு இல்லையெனில் மொழிபெயர்ப்பாளர் இல்லை. எனவே என்மீது அன்பும் நம்பிக்கையும் வைத்து தங்கள் படைப்பு களை மொழிபெயர்க்க எனக்கு அனுமதி யளித்திருக்கும் நட்பின ருக்கு என் என்றுமான நன்றிகள்!

















வயதின் வயது (நிழற்படம்) ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

வயதின் வயது (நிழற்படம்)

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

தனிமொழியின் உரையாடல் என்ற தலைப்பிட்ட என் தொகுப்பில் நிழற்படம் என்ற தலைப்பில் வெளியான கவிதை இது. இதற்கு வயதின் வயது என்ற தலைப்பும் பொருந்தும் என்று தோன்றியது.

//Dedicated to AGELESS Padmini (Gopalan) Madam(91 years) and to my Mother Bhagyalakshmi (87 years) - இருவருமே பின்னோக்கிப் பார்த்துப் புலம்பாதவர்கள். சுயமாய் சிந்திப் பவர்கள்; தன்மதிப்புடையவர் கள்; முடிந்த உதவிகளை மற்றவர்களுக்குச் செய்யத் தயங்காத வர்கள் //

வயதின் வயது (நிழற்படம்)

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

மிக மிக நீண்ட தூரம் கடந்துவந்தபின்
கழுத்து முறிய திரும்பிப் பார்த்தால்....
தெரிவது இடிந்த சுவரில் காணும்
நிழலின் நிழலின் நிழலின் நிழலின்
நகலின் நகலின் நகலின் நகலின் நகலின்
முனை மழுங்கிய பாதி கிழிந்த மஞ்சளோடிய புழுதியப்பிய
அழுக்குப் பிரதியின்
பிரதியின் பிரதியின் பிரதியின் பிரதியின்
மறதியாய் ஒன்று....
ஒரு கணம் உறைந்து நின்றதொரு
தருநிழலின் கீழ் சிறு இளைப்பாறலா...?
அணுமேலமர்ந்தொரு பின்னோக்கிய ஒளிப்பயணமா?
அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசம் இருள்தானா?
இக்கணமென்பதொன்றா எண்ணிறந்ததா....?
இகம் பரம் எல்லாம் வெறும் கண்கணக்குதானா?
நகமும் சதையும் உணர்த்துவதைச் சொல்ல
நாலாயிரம் வரிகள் போதுமா?
ஆலுமா டோலுமா ஐஸாலக்கடி மாலுமா
அர்த்தமனர்த்தமெல்லாம் இருவேறுபோலுமா?
இன்னமுள காதங்கள்.....
முன்னேகவேண்டும்....
திரும்பவும் நடக்கத் தொடங்கியபோது
இருகால்களில் பெருகும் வலி
இருப்பின் அருமையாய்......