LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, June 9, 2022

காற்று நிரம்பியிருக்கும் காலிக் கைகள் ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

காற்று நிரம்பியிருக்கும்
காலிக் கைகள்
’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

காற்று நிரம்பியிருக்கும்

காலிக்கைகளை

அதிகமாய் விரிக்கலாம்

அதிகமாய் பிரிக்கலாம்

அதிகமாய் அள்ளலாம்

அதிகமாய் திறக்கலாம்

அதிகமாய் மூடலாம்

அதிகமாய் நீட்டலாம்

அதிகமாய் காற்றைத் துழாவலாம்

ஏற்கெனவே கைகளில் நிறைந்துள்ள காற்றை மாற்றி

புதிய காற்றை உள்ளங்கைகளில் நிரப்பிக்கொள்ளலாம்

தள்ளவேண்டியவற்றை இன்னும் வலுவோடு தள்ளலாம்

கும்பிட்டுக்கொள்ளலாம் அன்பின் சன்னிதானத்தில்

அதே நீள அகலங்களே யென்றாலும்

விரல்களுக்குக் கூடுதல் சுருள்விசை கிடைக்கும்

அதிகமாய் நீட்டலாம் மடக்கலாம்

காற்று நிரம்பிய காலிக்கைகளால்

முழங்கைகள் தோள்பட்டைகள் முதுகு இடுப்பு பிடரி என்று எல்லாவிடங்களும் இலேசாகி ஆசுவாசமுணர

எதிர்பார்ப்புகள் ஏதுமற்ற ஏகத்துவ நிலை

சித்தித்தல் சொல்பதருணமேயானாலும்

சொர்க்கம் என்று சொல்லும்

காலிக்கைகள்

காலியின் சூட்சுமமுணர்தலே சாலச்சிறந்த வாழ்க்கை

என்று சொல்லாமல் சொல்லும்.

காலம் மறைந்த கணத்தில் நல்ல பணம் கள்ள பணம்

செல்லுபடியாகும் பணம் காலாவதியான பணம்

எல்லாமும் இல்லாதொழிய

வழியொழிய பழியொழிய

இழிவொழிய கழிவொழிய

அலைபுரளா கடல்நடுவில்

நிலைகொள் மனம் அத்தொடலில்

தோள்கண்டு தோளே கண்டு…….

தோளின் வழி முழு உருவமும் அதன் உள்வெளியும்

குறிப்புணர்த்தப்பட

நேசிப்பவர்கள் தொடும் நேசிப்புக்குரியவர்கள் அவர்களை நேசிக்கிறார்கள்தானே? இல்லையா?

காலி தமிழ்ச்சொல்லா, இல்லையா?

காலியென்பதெல்லாம் காலியல்ல என்பதில்

இருவேறு கருத்துக்கு இடமில்லையா?


·         தொடுவுணர்வை முழுமொத்தமாய் கையகப்படுத்திக்கொள்ள? empty suggests a complete absence of contents. Here and Now மட்டுமே? எண்ணங்கள் மறைந்த நிலை? மனம் இலேசான நிலை?

(சமர்ப்பணம்: கவிஞர் ரியாஸ் குரானாவுக்கு)



ளை



வாய்ச்சொல் வீரர்கள் ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 வாய்ச்சொல் வீரர்கள்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
பல்வண்ண விளக்குகள் பொருத்தப்பட்ட
பிரம்மாண்ட மேடையில்
வெள்ளிக்கேடயம்
தங்கவாள்
வைரக்கல் பதித்த பிளாட்டினக் கிரீடம்
விமரிசையாய் ஒரு மேசையில் அடுக்கிவைக்கப் பட்டிருந்தன.
Bouncerகளும் முன்னணித் தொண்டர்களும்
ஒருமணி நேரம் முன்பாக தனி விமானத்தில் வந்திறங்கியவர்களும்
புடைசூழ வந்த பிரமுகர்
மேடையேறி நேராக மைக்கின் முன் சென்று
முழங்கத் தொடங்கினார்.
”பல்லக்குத்தூக்கிகளும்
பல்லக்கிலேறிப் பயணம் செய்பவர்களும்
என்ற பாகுபாடு ஒழிக்கப்படுவதே நம் குறிக்கோள்”.
படபடவென்று கைத்தட்டல் விண்ணைப் பிளக்க
நலத்திட்டங்களைப் பெற வெய்யிலில் வரிசையில் காத்திருந்தவர்களைப் பார்த்துக் கையாட்டியவாறே
கப்பலென நீண்டிருந்த காரிலேறிச்
சாலையின் இருமருங்கும் வெயிலில் சுருண்டுகிடந்த பிச்சைக்காரர்களைப் பார்த்தும் பாராமலே
விரைந்தார்
தனது பல்லக்குத் தயாரிப்புத் தொழிற்சாலையின்
உற்பத்திப் பெருக்க வழிமுறைகள் மாநாட்டிற்குத்
தலைமை தாங்கவும்
பன்னாட்டு நிறுவனமொன்றிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட புது மாடல் பல்லக்குகளைப்
பார்வையிடவும்.......

INSIGHT - A BILINGUAL BLOGSPOT - MAY 2022

 

INSIGHT - MAY 2022 
A BILINGUAL INITIATIVE FOR 

CONTEMPORARY TAMIL POEMS

www.2019 insight.blogspot.com

A BILINGUAL BLOGSPOT




மெய்நிகர் உண்மை _ ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மெய்நிகர் உண்மை

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
எல்லோரும் எல்லோருடனும்
நட்பாயிருக்கிறார்கள்.
யார் என்ன சொன்னாலும்
‘லைக்’ இடுகிறார்கள்.
எதிரெதிர் கருத்துடையவர்களோடு
தோளணைத்துப் புன்சிரித்துக்
கொண்டிருக்கிறார்கள்.
நேரெதிர் கருத்துடையவர்களை
ஒரே தராசுத்தட்டில் வைத்து
சரிசமாகப் பாராட்டுகிறார்கள்.
சில கொச்சை வார்த்தைகளை
தன்னிசையாயும் திட்டமிட்டரீதியிலும்
தெறிக்கவிட்டு
எதிர்க்கருத்தின் குரல்வளையை
நெறித்துவிடுவாரையும்
அந்த நெறிக்கப்படும் குரல்வளைகளின்
சொந்தக்காரர்களையும்
ஒரேயளவாய்ச் செல்லங்கொண்டாடி
‘லைக்’ குறியிடுகிறார்கள்;
’லவ்’ குறியிடுகிறார்கள்.
தன்வய முன்னிலைப்படுத்தல்களுக்கும்
வன்மம்நிறை அவதூறுகளுக்கும்
குந்துமணியளவு வித்தியாசமும் பாராமல்
புன்னகைக்கும், பொக்கைவாயை விரியத்
திறந்து சிரிக்கும் ‘இமோஜி’க்களைப்
பரிசளிக்கிறார்கள்.
தார்மீகக்கோபமென்பாரையும்
தட்டிக்கொடுக்கிறார்கள்
தரங்கெட்ட சொல்லுதிர்ப்பாரையும்
தோளணைக்கிறார்கள்
பொல்லாங்கு சொல்வார்,
போக்கிரிகள்,
பச்சைப் பொய்யர்கள்
பல்வண்ணக் கதைஞர்கள்
பதாகைகளை ஏந்தியேந்தியே சமூகப்போராளிகளாகிவிடுவோர்
செத்த பாம்பை சுழற்றியடித்து
சுத்த வீரர்களாகிவிடுவோர்
சங்கநாதம் தம் கண்டத்திலிருந்தே
எழும்புவதென்று சாதிப்போர்
தடுக்கிவிழுந்து பட்ட காயத்தின்
தழும்பை
விழுப்புண்ணென இட்டுக்கட்டும்
வழியறிந்தோர்
அழும்போதும் செல்ஃபியெடுக்கத்
தவறாதவர்கள்
அப்பிராணிகளாகக் குறிபார்த்து
அம்பெய்துவோர்
அந்திவேளையழகை யனுபவித்து
சிந்துபாடியபடியே
அவனை யிவளை உந்தித்தள்ள வாகான
மலையுச்சியைத் தேடி
யலைந்துகொண்டிருப்பவர்கள்
எல்லோரும்
எல்லோருடைய நட்புவட்டத்திலும்
நல்லவிதமாய்ப் பொருந்தி
நல்லவிதமாய் ‘லைக்’கிட்டவாறு
அன்பின் வழியது உயிர்நிலை யெனும்
உன்னத இலக்கையெட்டிவிட்டோமா?
அஞ்ஞானம் நீங்கியெல்லோரும் ஆன்ற ஞானநிலையெய்திவிட்டோமா…
சின்னதாய் உதிக்கிறது சொல்ப ஆனந்தம்…
இன்னொரு நாட்டில் போர் ஆரம்பம்.
இரண்டு சின்னஞ்சிறு செய்திகளில்
சிறுநீர் கழிக்கவேண்டுமென்ற இரு
சின்னஞ்சிறுகுழந்தைகள்
நாயடி பேயடி அடிக்கப்பட்டிருப்பது
தெரியவருகிறது.
சின்னஞ்சிறு சிறுமியும் வளரிளம்பெண்ணும்
அறிந்தவர் தெரிந்தவர் உற்றார் உறவினரால்
அடைக்கலம் புகுந்த ஆதரவில்லத்துப்
பாதுகாவலரால்
இரண்டுவருடங்களுக்கு பாலியல் வல்லுறவு
செய்யப்பட்டிருப்பதை இன்றும் நேற்றும்
இரண்டு நாளிதழ்களில் வாசிக்க நேர்கிறது….
இன்னுமின்னுமின்னுமாய்…..
எல்லோரும் எல்லோருடனும் ஒரேயளவாய் நட்பு பாராட்டியவாறே லைக்கிட்டுக்கொண்டிருக்கும்
டைம்லைன்கள்
இன்னுமின்னுமின்னுமாய்…..

அடிவானப்பறவை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அடிவானப்பறவை

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
தினமொரு சிறகிழையை மட்டுமாவது
எனக்காக உயரத்திலிருந்து மிதக்கவிடு என்று
பறவையைக் கேட்பது
பைத்தியக்காரத்தனம்…..
உயரத்தே ஒரு புள்ளியாகச் செல்லும் பறவை
யெலாம் தனதாய்க் கருதி
ஒரு சிறு சிறகுதிர்த்துச் செல்லாதாவென
சதா அண்ணாந்து பார்த்திருந்து
கழுத்துவலிக்கு அமிர்தாஞ்சனைத்
தடவிக்கொண்ட இடத்தில்
சுளீரென எரிவதில்
இரட்டிப்பாகும் இழப்புணர்வு.
இறங்கிவாராப் பறவையின் காலில்
அதற்கேயானதொரு மடலைக்
கட்டியனுப்பவும் இயலாது.
பறவைக்குப் படிக்கத் தெரிந்த மொழி
யெது?
மொழியே மனிதத்துயரின் மூலம் என்றால்
வழிமொழியுமோ பறவை?
பறவையின் அழகில் மனதைப் பறிகொடுத்ததோடு
அது எனக்கேயெனக்காய் பேசுமோ என்ற
எதிர்பார்ப்பும் சேர _
சிறகடித்துக்கொண்டிருக்கும் பறவையின்
ஆகாயமோ
விரிந்துகொண்டே போகிறது.
ஒருபோது சற்றே யப் பறவை தாழப்பறந்துவர
பேரதிர்வில் மனம் பிளக்க
’பச்’சென்று எச்சமிட்டுச் சென்றது பறவை
உச்சிமண்டையில்.
பச் எச் உச் மட்டுமே நிச்சயமான
மிச்சமாக….
அலகில் குச்சிபொறுக்கிச்செல்லக்கூடக்
கீழிறங்கிவராப் பறவையின் இறக்கைகளை
உடைமைகொள்ளும் வழி தெரியாமல்
அழப்பழகும் மனதிற்கு
சிறகிலாப் பறவையை ஒருநாளும்
பார்க்கப் பிடிப்பதில்லை.

உறக்க அரசியல் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 உறக்க அரசியல்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
தூக்கத்தில்தான் எத்தனையெத்தனை
வகைகள்!
குட்டித் தூக்கம்
கோழித்தூக்கம்
கும்பகர்ணத் தூக்கம்….
அப்பிய ஒப்பனைகளோடு
வெளுப்புப்பெண்களே கதாநாயகிகளாய் _
கதாநாயகிகளின் தங்கைகளாய்
தோழிகளாய்
திடீரென பூங்காவில் தட்டாமாலை சுற்றும்
கல்லூரி மாணவிகளாய்_
கண்கொத்திப் பாம்பாய் கதாநாயகனைக்
கவ்விச்செல்லக் காத்திருக்கும்
வில்லியாய்_
காபரே நாட்டியக்காரியாய்_
கணநேரமே கூட்டத்தில் முகங்காட்டும்
கைங்கரியக்காரியாய் என _
கட்டங்கட்டிக் காட்டும்போதெல்லாம்_
பார்த்துப்பார்த்து அண்டை அயல்
மாநிலங்களிலிருந்து
அறிமுகஞ்செய்யும்போதெல்லாம் _
அக்கடா வென்று பார்த்துக்
கொண்டிருந்தவர்கள்
இத்தனை ஆண்டுகளாக
எக்கேடோ கெட்டுப்போகட்டும்
என்றிருந்தவர்கள்
இன்று
இயல்பான தேன்கருநிறப் பெண்கள்
தமிழ்ப்படக் கதாநாயகிகளாகாதது ஏன்
என்று
துடித்தெழுந்து கேட்கும் கேள்வியின்
வரியிடை வரிகளாய்
படரும்
காரியார்த்தமான
பொய்த்தூக்கமும்
பொய்விழிப்பும்
போல் வேறும்.........

வாசிப்பு - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 வாசிப்பு

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

கவிதைவாசிப்புக்காணொளியொன்றில்
யாருடையதோ ஆவியின் குரல்
கவிதையை வாசித்துக்கொண்டிருந்தது.
அரண்டுபோய் இன்னொரு கவிதைவாசிப்புக்
காணொளிக்குச் சென்றால்
அங்கே கிசுகிசுப்பாய் வாசிக்கும் பிரயத்தனத்தில்
ஒரு குரல்
நெடுநாள் நோயாளியொருவரின் பலவீனமாய்
பாதிச்சொற்களைக் காற்றுக்குத்
தத்தம் செய்து
கவிதையின் கருப்பொருளை
மொத்தமாய் காலிசெய்தது.
ஒருவரிடமுள்ள காதலின்
லயிப்பையும் உயிர்ப்பையும் பேசும்
கவிதையை
பார்க்குமெல்லோரிடமுமான காமமாக்கிக் கிறங்கிக்கொண்டிருந்தது
இன்னொரு காணொளிக்குரல்.
தெளிவு என்ற பெயரில்
ஒரு சொல்லுக்கும் மறுசொல்லுக்குமிடையே
மாமாங்கத்தை விரிப்பதான கால அளவில்
மிக மிக நிதானமாய் வாசித்துக்கொண்டிருந்த
குரலில்
ஓடிவந்து ஆரத்தழுவ முடியாதபடி காதலி முதுமையடைந்துகொண்டிருந்தாள்.
அரற்றல், கேவல், பிளிறல், வீறிடல்,
அடிவயிற்றிலிருந்தெழும் ஆங்காரவோலம்
அனைத்துமனைத்தும் பனிமூட்டத்துக்
குள்ளிருந்து
தெரியும் வடிவங்களாய்…….
அந்தரவெளிப் பயணக் கொந்தளிப்புமொரு
எந்திரத்தொனியில் வெளிப்படுவதே
நயத்தக்க கவிதைவாசிப்பாக…….
சுயமழிந்தும் சுரீர்க்கூர்மையடைந்தொரு
சூட்சுமவுயிராகியும்
ரசவாதம் நிகழவேண்டி
தனியறையோரம் அமர்ந்து
தனது வானவில்லின் மீதிருக்கும்
முள்ளிலும் மலரிலுமாய்
எதிரொலிக்கும் கவிதையை
வாசிக்கும்போது
அதெப்படியோ
அத்தனை இசைவாத்தியங்களும்
அத்தனை இயற்கைக் காட்சிகளும்
அத்தனை கனகச்சிதமாய்ப் பொருந்தி
இழைந்தோட _
நோயும் மருந்துமாகும் கவிதையில்
ஊடுபாவும் நானும்
குழைந்துருகிப் பெருகிவழிந்தோட……

சொல்லத்தோன்றும் சில லதா ராமகிருஷ்ணன்

 சொல்லத்தோன்றும் சில

லதா ராமகிருஷ்ணன்
ஆண்களில் நயவஞ்சகர்களும் உண்டு; நல்லவர்களும் உண்டு.
இப்பொழுதெல்லாம் நாளிதழைத் திறந்தால் தந்தை, மாமா, தாத்தா, சித்தப்பா, அண்ணன் என்று வீட்டிலுள்ள சிறுமியை, வளரிளம்பெண்ணைப் பாலியல்ரீதி யாகத் துன்புறுத்தியிருக்கும் செய்திகளை அடிக்கடி படிக்க நேர்கிறது.


பெண் களுக்கெதிரான வன்கொடுமைகளுக்காகக் களத் தில் போராடுபவர்கள், இது குறித்த ஆய்வலசல்கள் மேற் கொள்வோர் குடும்பங்களுக்குள், உறவுக்காரர்களால் பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள் அதிகம் என்று சுட்டிக் காட்டுகிறார்கள்.
ஆணவத்தால் நிகழ்த்தப்படும் பாலியல் வன்புணர்வுக ளைப் போல் இப்போது அதைப் படம்பிடித்து விற்றுக் காசுபார்க்கும் காரணத்திற் காகவும் நிறைய வன்புணர்வு கள் அந்நிய ஆண்களாலும், அந்நியோன்யக் காதலர்களா லும், அக்கம்பக்கத்துக் காமுகர்களாலும், வீட்டுப்பெரிய வர்களாலும்(?) நிகழ்த்தப்படுகின்றன என்று செய்திகள் வருகின்றன.
அதேசமயம். இதைப் பொதுமைப்படுத்திப் பேசிவிட முடி யாது; பேசிவிடலாகாது. வீட்டு ஆண்களே இப்படித்தான் என்று காமாலைக் கண்களோடு எல்லா ஆண்களையும் பார்ப்பதோ, அப்படிப் பார்த்து அஞ்சும்படி வீட்டிலுள்ள சிறுமிகளைச் செய்துவிடுவதோ சரியல்ல.
எனக்குத் தெரிந்த தபால்காரர் ஒருவர் தனது மூன்று குழந்தைகளையும் – அவர்களில் இருவர் பெண்கள், தனது 95 வயதுத் தாயையும் அத்தனை அக்கறையாகப் பார்த்துக்கொள் கிறார்.
சில வருடங்களுக்கு முன்பு மனைவி இறந்துவிட்டார். அவர் நோய்வாய்ப் பட்டிருந்தபோது செலவை சமாளிக்க வெற்றுக் காசோலைகளில் கையெழுத்திட்டு வாங்கிய கடன் இன்று அவரை அப்படி வாட்டிக்கொண்டிருக்கிறது.
எல்லா சம்பளத்தையும் வட்டி, முதலை வசூலிக்கிறோம் என்ற பெயரில் எப்போதோ அடைந்துவிட்ட கடனுக்காக இப்போதும் வெற்றுக் காசோலைகள் மூலம் அவருடைய சம்பளத்தை நினைத்தபோதெல்லாம் வழித்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த மாதிரி சமயங்களில் இரவில் எங்காவது பெயிண்ட் அடிக்கும் வேலை என்று ஏதாவது செய்வது வழக்கமாம்.
கேசு, கோர்ட்டு என்று அலைந்துகொண்டிருக்கிறார். தெலுங்கு அவருடைய மொழி. குழந்தைகளை ஆந்திரா வில் உள்ள பள்ளி விடுதியில் சேர்த்திருக்கிறார்.
தாய்க்கு 95 வயது. இப்போதும் ஊரில் இட்லி சுட்டு விற்கி றாராம்!.
தபால்காரத் தோழருக்கு சென்னையிலிருந்து மாற்றல் கிடைக்கவில்லை. தெலுங்குப் பள்ளி அதிகம் சென்னை யில் இல்லையென்பதால் அவருடைய பிள்ளைகளை இங்கே படிக்கவைக்கமுடியாத நிலை.
கடந்த வருடம் விடுமுறையில் சென்னைக்கு வந்திருந்த பெரிய மகள் வயதுக்கு வந்துவிட, ஊரிலிருக்கும் தாயாரி டம் தொலைபேசி இல்லையென்பதால் இரவு எனக்கு போன் செய்து என்ன செய்வது என்று கேட்டார். சில ஆலோசனைகள் கூறினேன். சென்னையில் அவர் வீடு எங்கேயோ தொலைவில். அங்கிருந்த பெண்கள் வந்து உதவினார்களாம்.
பிள்ளைகளைப் பார்க்க ஆறுமாதங்களுக்கு ஒருமுறை அவர் ஊருக்குப் போகும்போதெல்லாம் தெருவிலுள்ள சில வீடுகளில் புதிய, பழைய துணிமணிகள், முடிந்த பணம் என்று கொடுத்தனுப்புவோம்.
பலவீனமான உடல் அவருக்கு. ஆனால், ஒரு மகனாக, தகப்பனாக அவருடைய பாசமும் நேசமும் அத்தனை உறுதியானது!
அவருடைய கடன் தொல்லை தீர்ந்து அவருக்கு எப்படி யாவது ஆந்திராவுக்கு மாற்றல் கிடைக்கவேண்டும் என்பது என் என்றுமான பிரார்த்தனைகளில் ஒன்றாய்…...