LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, June 9, 2022

சொல்லலாகாத எனில் சொல்லியாகவேண்டிய சில….. _ லதா ராமகிருஷ்ணன்

 சொல்லலாகாத

எனில்
சொல்லியாகவேண்டிய சில…..

_ லதா ராமகிருஷ்ணன்




ஒருவர் உண்மையாகவே ஒரு படைப்பாளியை – முக்கியமாக அந்நியமொழிப் படைப்பாளியை (நேரடியாக ஸ்பானிய ஜப்பானிய லித்துவேனிய இத்தியாதி மொழிகளிலிருந்தோ அல்லது ஆங்கிலம் மூலமாகவோ) படித்திருக்கிறாரா அல்லது வெறுமே NAME DROPPING(மற்றவர்களிடம் தம்மைப் பெரிதாகக் காட்டிக்கொள்வதற்காக ஒரு படைப்பாளியைப் பற்றி மேம் போக்காகப் பேசுதல்) செய்கிறாரா என்று எப்படிக் கண்டுபிடிப்பது?

வெகு சுலபம்:

1. NAME-DROPPING செய்பவர்கள் உலகத்தரமான ஒரு படைப் பாளியைப் பற்றி இன்னொருவர் பேசியதற்குப் பிறகே அவரைத் தானும் படித்ததாகக் காட்டிக்கொள்வார்கள். அவர்களாக யாரையும் அறிமுகம் செய்யமாட்டார்கள்.
2. தாம் படித்திருப்பதாகச் சொல்லும் படைப்பாளியி னுடையதாக பரவலாகப் புழங்கும் வாசகங்களையே மேற்கோள் காட்டுவார்கள்.
3. சம்பந்தப்பட்ட படைப்பாளியின் புத்தகத்தைக் கையி லேந்தி ‘போஸ்’ கொடுப்பார்களே தவிர அவருடைய எழுத்தைப் பற்றி ஆழமாக எதையும் கூறமாட்டார்கள் (கூறத் தெரியாது). அயல்மொழி படைப்பாளிகள் விஷ யத்தில்தான் இப்படி என்றில்லை. பாரதியார், திருவள்ளு வர் போன்றவர்களின் விஷயத்திலும் இப்படித்தான்.
கற்றது கையளவு; கல்லாதது கடலளவு. முடிந்தவரைக் கற்போம். மற்றவர்களின் அறிவை மதிப்போம். போலி யாக மெத்தப்படித்த அறிவாளியாகக் காட்டிக்கொள்வது மெய் அசட்டுத்தனத்தைக் காட்டிலும் அபாயகரமானது.

நாமெல்லோரும் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 

நாமெல்லோரும்


ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

நாமெல்லோரு மிதைப் பேசலாம்

இதைப் பேசலாகாதென இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் நம்மெல்லோரையும்

ஒன்று திரட்டி

மாவுருண்டையாய் உருட்டி

குலோப் ஜாமுன் குடமிளகாய் பஜ்ஜி

கொத்துபரோட்டா பிரியாணி குருமா

சாதா தோசை மசாலா தோசையென

வகைவகையாய் நமக்கே

பரிமாறிக்கொண்டிருக்கப்போகிறார்கள் நாமெல்லோருமானவர்கள்

நம்மைக் கேட்காது நம்மைச் சேர்க்கும்

நாமின்

நெரிசலான ஜன்னலற்ற சிறைக்கொட்டடிகள்

நம்மை நாமாக்குவதுமொரு தண்டனையாய்.

நம்மை நாமாக்கவும் நாமை நம்மாக்கவும்

அழையா விருந்தாளியாய்

அறவுரைகளையும் ஆலோசனைகளையும் அள்ளிவழங்கிக்கொண்டிருப்பவர்கள்

அவற்றின் மூலமே தம்மையொரு

ஆளாய்காணவும் காட்டவும்

ஆலாய்ப் பறப்பதை யறியமாட்டோமா நாம்?

நமது நாமெல்லோரில் நாமெல்லோருமில்லாததுபோலவே

அவரவர் நாமெல்லோரிலும்

நம்மெல்லோருடைய நாமெல்லோரிலும்.

நமக்கான நாமை

அவருக்கான நாமாய் வனையும்

அவருடைய நாமின் நாம்

தலையாட்டிபொம்மைகளாம்

எனச் சொன்ன கணத்தில் நாம்

அந்நியமாகிவிடுவோம்

என்றறிவோம்.

இடமுணர்த்தல் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 இடமுணர்த்தல்

 

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)


ஒவ்வொன்றின் இடமும் அளவும்

ஒவ்வொன்றைக் குறிப்புணர்த்துகிறது

உணவுமேஜையில் அந்தப் பெரிய நாற்காலியின் இடம்

அதில் அமர்பவர் அந்த வீட்டுத்தலைவர்

என்பதை உணர்த்துகிறது.

அந்த மேஜையின் மீதிருந்த தண்ணீர்க்கோப்பைகள்

எல்லாமே கண்ணாடியில் செய்யப்பட்டதாயிருக்க

பிடிவைத்த செம்புக்கோப்பையிருந்த

மேசைப்பக்கமிருந்த கைப்பிடிகொண்ட நாற்காலி

வீட்டிலிருந்த பாட்டிக்கானது.

சுவற்றில் அலைபேசியை வைக்கக்கூடிய

அகலத்திலிருந்த கைப்பிடிக்கு அருகே

வைக்கப்பட்டிருந்த நாற்காலி

சதா கைப்பேசி வைத்திருக்கவேண்டிய ஸாஃப்ட்வேர் நிறுவன

உயர் அதிகாரிப் பிள்ளைக்கானது.

பளபளவென்றிருந்த இருக்கை அதிகம் சம்பாதிக்கும்

மகளுக்கானது

முதுகு சாயுமிடத்தில் நிறம் மங்கியிருந்த நாற்காலி

மூச்சு வாங்க நடந்துவரும் பெருத்த உடலுக்கானது

பெரிய நாற்காலியும் அடுத்திருக்கும் சிறிய நாற்காலியும்

விவாகரத்தான முப்பத்தியிரண்டு வயதுத் தந்தைக்கும்

அவருடைய ஆறு வயதுப் பிள்ளைக்குமானது.

அத்தனையையும் கவனித்தவாறே அங்கு வந்தவள்

உணவுமேசையைச் சுற்றியிருந்த இருக்கைகளில்

இரண்டு மட்டும்

ஒன்றையொன்று தொட்டபடிநெருக்கமாக இருந்ததைக்

கவனித்தும் கவனிக்காத பாவனையில்

விழுங்கத் தயாராய் எடுத்துவந்திருந்த

வைட்டமின் E மாத்திரை Evion 400இன் நெகிழ்வை

உள்ளங்கையில் உணர்ந்தபடி

தனக்கான இருக்கையை நோக்கிச் சென்றாள்.

 

Monday, May 2, 2022

கவிதைக்கான ஆயத்தம் போலும் ஒரு சொல்… 'ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கவிதைக்கான ஆயத்தம் போலும் ஒரு சொல்…

'ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)





முன்பின் பார்த்தறியாத அரிய பறவையொன்றின்
ஒற்றைச் சிறகிதழ் காற்றில் மிதந்து வருவதைப்
போலொரு சொல்
மூச்சை உள்ளிழுக்கும்போதாயிருக்கலாம் _
அத்தனை மென்மையாக என் நுரையீரல்களுக்குள் நிறைந்து
என் இரத்தநாளங்களில் ஊடுருவிச் செல்லத் தொடங்குகிறது….
சொப்பனத்தில் எங்கென்றே சொல்லமுடியாத ஒரு வனாந்தரத்தில்
அல்லது ஒரு தெருவில்
நான் கால்கடுக்க நடந்துகொண்டிருக்கும்போது
ஒரு தேவதை எதிரே வந்து
‘என்ன வேண்டும் கேள்’ என்று சொன்னால்
பேந்தப்பேந்த விழிப்பதுபோலவே _
விழித்தபின் காலின்கீழ் எங்கோ புதையுண்டிருக்கும்
அந்த வனாந்திரத்தை அல்லது தெருவை
நினைவில் மீட்டுயிர்ப்பிக்க மீண்டும் மீண்டும் முயலும்
பிரக்ஞையின் கையறுநிலையாய்
காந்தும் அந்தச் சொல்……
பூங்கொத்தாகுமோ
உதிரிப்பூவாகவே நின்றுவிடுமோ
எப்படியிருந்தாலும்
இப்போது அது எனக்குள் தன்னை எழுதிக்கொண்டிருக்கும்
கவிதையாக….

(*குறுக்குவழிகளற்ற நெடுந்தொலைவு’ தொகுப்பிலிருந்து)

TWO ISSUES OF INSIGHT IN PRINTED BOOK FORM. EACH HAVING AROUND 90 TO 100 PAGES.

 TWO ISSUES OF INSIGHT IN PRINTED BOOK FORM. EACH HAVING AROUND 90 TO 100 PAGES. PRICE RS. 100 EACH

புதுப்புனல் பதிப்பகத்தில் விற்பனைக்கு




கவியின் அரிச்சுவடி ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கவியின் அரிச்சுவடி

’ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)


ஒரு கவிதையில் தனக்குக் கிடைத்த வாசகப்பிரதி

அருவருப்பாக இருந்ததாக உணர்ந்தவர்கள்
கவியின் கையை முறித்துப் போடுகிறார்கள்
எண்ணம்தானே எழுத்தாகிறது என்று
இருதயத்தை அறுத்துப்போடுகிறார்கள்
குருதி பெருக்கெடுத்தோட உறு வலியில்
முனகியபடியே
வருந்திப் புன்னகைத்தவாறு
முணுமுணுக்கிறார் கவி மெல்ல:
"இருதயமும் இதயமும் ஒன்றல்ல......

INSIGHT - APRIL 2022 A BILINGUAL INITIATIVE FOR CONTEMPORARY TAMIL POEMS

INSIGHT - APRIL 2022 
A BILINGUAL INITIATIVE FOR 

CONTEMPORARY TAMIL POEMS

www.2019 insight.blogspot.com

மத நல்லிணக்கம் என்றால் என்ன?

 மத நல்லிணக்கம் என்றால் என்ன?

விடைகாணப் படிக்கவேண்டிய நூல்

மூஸா ராஜா வின் ’ஒருமையைத் தேடி’ -

(வெளியீடு: புதுப்புனல் பதிப்பகம் )

_லதா ராமகிருஷ்ணன்
(பதிவுகள் – இணைய இதழ் 07 மார்ச் 2022)


இந்த ஆண்டு ஜனவரி மாதம் புதுப்புனல் பதிப்பகத்தால் வெளியிடப் பட்டுள்ள நூல் ஒருமையைத் தேடி. திரு. மூஸா ராஜா அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய நூல் IN SEARCH OF ONENESS. இதன் தமிழ் மொழிபெயர்ப்பே இந்நூல் . மத நல்லிணக்கம், மனிதநேயம் மானுட மேம்பாட்டிற்கு மிக முக்கியம். இதை திரு.மூஸா ராஜாவின் இந்த நூல் அழுத்தமாக எடுத்துரைக்கிறது. அனுபவ ரீதியாக அவர் கண்டவற்றின் அடிப்படையில், அவருடைய ஆழ்ந்த வாசிப்பை ஆதாரமாகக் கொண்டு சக மனிதர்கள் பால் மிகுந்த அன்பும் அக்கறையுமாக எழுதப்பட்ட நூல் இது. இந்த நூலை வாங்க விரும்புவோர் தொடர்புகொள்ள: புதுப்புனல் பதிப்பகம்.
தமிழிலிருந்து ஆங்கிலத்திற்குப் பல நூல்களை, நவீன தமிழ்க் கவிதைகள் பலவற்றை மொழிபெயர்த்துள்ள டாக்டர் கே.எஸ்.சுப்பிர மணியனின் நெருங்கிய நண்ப ரான திரு. மூஸா ராஜா மிர்ஸா காலிபின் கவிதைகளை பாரசீக மொழியிலிருந்தும் உருது மொழியிலிருந்தும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.
அந்த ஆங்கில நூலை தன் நண்பர் மொழிபெயர்க்க வேண்டுமென்று விரும்பினார் திரு.மூஸா ராஜா. திரு.கே.எஸ்.சுப்பிரமணியனின் வேலைப்பளு காரணமாக அந்த மொழிபெயர்ப்புப் பணியை என்னிடம் தந்தார் அவர். என் மொழிபெயர்ப்புகளை மேற்பார்வை யிட்டார். சில திருத்தங்களைப் பரிந்துரை செய்தார்.
அதேபோல், IN SEARCH OF ONENESS என்ற தலைப்பில் குரானையும் பகவத் கீதையையும் அவற்றிலுள்ள ஒற்றுமைகளையும் அகல்விரிவாக அலசியாராய்ந்து அவற்றைத் தனது வாழ்வனுபவங்களின் பின்னணியில் எடுத்துரைத்துள்ள இந்த நூலையும் தனது நண்பர் டாக்டர் கே.எஸ். மொழி பெயர்க்கவேண்டுமென்று விரும்பிக் கேட்டுக்கொண்ட போது டாக்டர் கே.எஸ். சுப்பிரமணியனின் கண்பார்வை சற்று பிரச்சனை கொடுத்துக் கொண்டிருந்ததால் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பெண் மொழிபெயர்ப்புப் பணியில் இறங்கியிருந்த என் தோழி தேவிகாவிடம் இந்த நூலை மொழிபெயர்க் கும் பணியைத் தந்தார்.
தேவிகா, பெயர்பெற்ற தெலுங்கு எழுத்தாளரான டாக்டர் வி.வி.பி ராமராவின் சிறுகதைத் தொகுப்பையும் வேறு சில சிறுவர் நூல்களையும் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
தேவிகாவின் மொழிபெயர்ப்பை அத்தியாயம் அத்தியா யமாக நான் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனுக்கு வாசித்துக் காட்டுவேன். தேவையெனத் தோன்றும் சில திருத்தங்களைச் செய்வார் டாக்டர் கே.எஸ். பகவத் கீதைக்கு பாரதியார் எழுதிய தமிழ் விளக்கவுரைகளே இடம்பெறச் செய்தார் டாக்டர் கே.எஸ்.
ஒரு நூலாசிரியரின் எழுத்துநடை, வார்த்தைப்பிர யோகங்கள் முதலியன அவருடைய படைப்பின் நோக்கத்தை வெளிப்படுத்திவிடும். உதாரணமாக, மத நல்லிணக்கம் பேசுவதாகப் பறையறிவிக்கப்படும் ஒரு நூலில் ஒரு மதத்தைப் பற்றி தடித்த வார்த்தைப் பிரயோ கங்கள் இருந்தால் அல்லது சில வரலாற்றுண்மைகள் போகிற போக்கில் திரித்துக் கூறப்பட்டிருந்தால் – அந்த நூலின் நோக்கம் அம்பலமாகிவிடும்.
டாக்டர் மூஸா ராஜாவின் இந்த நூலைப் படிப்போருக்கு மானுடத்தின் பால் ஆசிரியருக்கு உள்ள உண்மை யான அன்பும் அக்கறையும் கட்டாயம் புரியும். இந்த நூலைப் படிப்பது நம்மை மேம்படுத்திக்கொள்ள உதவும் என்றால் மிகையாகாது.
நூலில் இடம்பெறும் திரு.மூஸா ராஜாவின் விரிவான ‘முன்னுரை’யின் ஆரம்பப் பத்திகள் இரண்டு கீழே தரப்பட்டுள்ளன:
// 2001இல் நியூயார்க்கில், இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப் பட்டதன் பின்விளைவாக, உலகம் முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வலைகள் எழுந்தன. அதன் உத்வேகம் இன்னமும் தணியவில்லை.
முந்தைய நிகழ்விற்குப் பிற்பட்ட காலத்தில், பெப்ரவரி- மார்ச் 2002 இல், குஜராத்தில் ஏற்பட இனப்படு கொலை கள், இந்திய சமுதாயத்தின் சில பிரிவுகளிடையே முஸ்லிம்களுக்கு எதிரான, மற்றும், இஸ்லாமிய கொள்கை களுக்கு எதிரான உணர்வுகளை உண்டாக் கியது. 'முஸ்லிம் பிரச்சனை'க்கு ஒரு இறுதித் தீர்வி னைக் காணவேண்டும் என்று இங்கு விவாதங்கள்கூட நடந்தன.
2002 ஆண்டு ஏதோ ஒரு சமயத்தில், அப்பொழுது, ராஜஸ் தானின் ஜெயின் விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த செல்வி. சுதாமஹீ ரெகுநாதன், கலக்கமுற்ற மனநிலையில் என்னை அணுகினார்.
ஜைனக் கோட்பாடான, அநேகன்ட்வாட்டில், நம்பிக்கை கொண்டவரான அவர், பல்வேறுபட்ட மதங்களி டையே நிலவிய தவறான கருத்து வேறுபாடுகளை, அதிலும் குறிப்பாக இந்தியாவின் உயர் குலத்தோர் இடையே நிலவும் வேறுபாடுகளை, அகற்ற தீவிரமாக முயல வேண்டும் என்று உணர்ந்தார்.
அவர், தில்லியில் உள்ள பலவேறுபட்ட பெரு நிறுவனங் களின் உயர் அதிகாரிகள் மற்றும் பிற பல்கலைக் கழகங் களின் பேராசிரியர்கள் கொண்ட குழு விடையே நான் உரையாற்ற விருப்பப்படுவேனா, அவர்களிடம் இஸ்லா மைப் பற்றி பேச முடியுமா என்று அக்கறையோடு வினவினார்.
நான் தில்லியில் உள்ள நேஷனல் மியூசியம் கலையரங் கத்தில், இஸ்லாமைப் பற்றி தொடர்ச்சியாக மூன்று விரிவுரைகள் ஆற்றினேன். அவையோரில் பெரும் பாலோர் முஸ்லீம் அல்லாதவர்களாக அதிகம் ஹிந்துக் களாக இருந்தனர். எனவே, என்னுடைய விரிவுரைகள், இஸ்லாம் மற்றும் அதனை தோற்று வித்தவர்களை, இந்தியா, இந்துமதம், வேதங்கள், உபநிஷதங்கள், பகவத் கீதை மற்றும் இந்தியாவின் மேன்மையான காவியங்கள் ஆகியவற்றை இந்தியச் சூழலிலேயே பொருத்திக் ககாட்ட வேண்டியிருந்தது.
நான், இஸ்லாமைப் பற்றி இஸ்லாமிய மறைமெய்ஞ் ஞானியர்களின் பொருள்விளக்கங் கள் பற்றியும், இஸ்லாம் மத வாழ்வில் இஸ்லாமிய மறைமெய்ஞ் ஞானிகள் ஆற்றிய பங்கு பற்றியும் சிறிதளவு மேற் கோடிட்டுக் காட்டினேன். பின்னர் இந்த விரிவுரைகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு குறுந்தகட்டினை சுதா மஹிஜி, உருவாக்கியதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது.
நான் பகவத் கீதையில் இருந்தும், சூபி நூல்களில் இருந் தும் அவற்றின் அடிப்படை நம்பிக்கைகள், தத்துவம் மற்றும் இஸ்லாமின் இறைநிலை உள்ளுணர்வு ஆகிய வற்றைப் பற்றி தங்குதடையின்றி மேற்கோள் காட்டி உரையாற்றியதால், அவர் பின்னர் மற்றொரு மக்கள் குழுவிற்கு பகவத் கீதையைப் பற்றி விரிவுரை தர முடி யுமா என்று என்னை அணுகினார்.
நான் அத்தகைய உரை நிகழ்த்துவதற்கு விருப்பமில்லாத வனாக இருந்தேன். ஏனென்றால், கீதையைப் பற்றிய எனது ஞானமானது அறிவார்ந்த மற்றும் புலமை வாய்ந்த மக்களிடையே எடுத்துக் கூறுவதற்கு ஏற்ற அளவில் இல்லை என்று தீர்மானமாக எண்ணினேன். இன்றும் என் எண்ணம் அவ்வாறே இருப்பினும், அவர் எவ்வாறோ என்னை வற்புறுத்தி இணங்கச் செய்துவிட்டார்.
”நான் 'பகவத் கீதையும் நானும்' என்ற தலைப்பில் கீதையைப் பற்றி ஒரு உரை நிகழ்த்தினேன். நான் இந்தத் தலைப்பினைத் தேர்ந்தெடுத்தது, இந்தப் பனுவலுடன் எனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அனுபவங்களின் அடிப்படை யிலும், இதன் கொள்கைகளை தங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒருங்கிணைத்துக் கொண்டவர்களுடன் ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையிலும், கீதை யைப் பற்றி நான் உரை நிகழ்த்தப் போகிறேன் என்பதைத் தெளிவுபடுத்தும் நோக்கத்துடனே இந்தத் தலைப்பு, நான் அந்த மகத்தான நூலை ஆழ்ந்து கற்கவில்லை என்ற ஒரு விமர்சனத் திலிருந்து தப்பித்துக்கொள்வதற்கு எனக்கு மிகவும் உதவியாக இருந்தது.
இந்த உரையைக் கேட்ட பல நண்பர்கள், ஒரு மணி நேர உரையில் முழுமையாகக் கூறமுடியாத அந்த அனுபவங் களின் முழு விவரங்களை விரிவாகக் கூறும் வகையில் இந்த உரையை நான் விரிவாக்கவேண்டும் என்று விரும் பினர். இவ்வாறாக இந்த நூலானது கருக்கொண்டது.
________________________________________
இந்தியாவில் உள்ள இந்துக்களும் முஸ்லிம்களும் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றாக வாழ்ந்த போதிலும், மத நூல்களைப் பற்றிய பரஸ்பர அறிவு, வெகுவாக இல்லை. அப்படியே இருந்தாலும் அது பொதுவாக மேலோட்டமான அறிவாகவே இருக்கிறது என்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.
இந்தியா வைப் பற்றி அல்-பெருனியின் நூலான, கிதாப்-அல்-ஹிந்திற்கு பின்னர் மேலும் இந்திய மதங்களைப் பற்றி அவர் அர்ப்பணம் செய்த பதினான்கு அத்தியாயங் களுக்குப் பின்னர், எந்த முஸ்லீம் எழுத்தாளரும் சம்ஸ்க்ருதத்தை கற்கவோ அல்லது இந்துமத நூல்களை அதன் மூல வடிவில் படிக்கவோ இல்லை. அதைப் போலவே, இஸ்லாமைப் பற்றியும், மற்றும் இஸ்லாமிய நூல்களான குரான் மற்றும் குறிப்பாக ஹதீத்துகளை பற்றியும் அதிகாரபூர்வமாக, நம்பத்தகுந்த வகையில் எழுத வல்ல ஒரு இந்து எழுத்தாளரை நான் இன்றுவரை சந்திக்கவில்லை.
ஐரோப்பிய அறிஞர்கள், இஸ்லாம் மற்றும் அதன் நூல் கள், இந்துமதம் மற்றும் அதன் நூல்கள் இரண்டிற்குமே கணிசமான கவனத்தை அர்ப்பணித்துள்ளனர். அவர்கள் நன்கு ஆராயப்பட்ட மற்றும் ஆழ்ந்த புலமை வாய்ந்த நூல்களை நூறு ஆண்டுகளுக்கும் மேலான காலங்களில் உருவாக்கியுள்ளனர். ஆயினும், எட்வர்ட் சைட் எந்த எண்ணத்தில் அதை அர்த்தம் கொண்டாரோ அந்த வகையில் அவர்களுடைய பார்வை கீழ்த்திசை மொழிப்புலமையாளர்களைப் போலிருந்தது.
அவ்வாறாக இருந்தபோதும், சமீப காலத்தில், இந்தப் போக்கு மாறிவருவதை நான் கவனித்திருக்கிறேன்.
இங்கு என்னுடைய முயற்சி, இந்திய மதங்களின் இரண்டு மேன்மையான நூல்களைச் சார்ந்துள்ள தவ றான கருத்துவேறுபாடுகளைக் களைவதும் தெளிவு படுத்துவதுமே ஆகும். (பகவத் கீதை மற்றும் குரான்).
இந்த நூல்களின் மற்றும் அவை தொடர்பான இலக்கியங் களின் எனது ஆழ்ந்த ஆராய்ச்சியானது, பண்டைய வர லாற்று சிறப்புடைய நாகரீகங்களின் மோதல் என்று சாமுவேல் ஹன்டிங்டன்னின் வகைப்படுத்துவதைவிட, அவைகள் ஒன்றுக்கொன்று நெருக்கமாக உள்ளன, ஆன்மிக வடிவம் மற்றும் மொழி ஆகிய இரண்டிலும், அவைகள் பிரிவினை உணர்வைவிட ஒற்றுமையுணர் வையே ஊக்குவிக்கின்றன என்று எனக்கு வெளிப்படுத் தியது.” //