LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, May 2, 2022

மகிழ்ச்சியைத் தேடி... ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மகிழ்ச்சியைத் தேடி...
’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


//என்னுடைய எட்டாவது கவிதைத்தொகுப்பு ’போகிற போக்கில்’. 24 கவிதைகள் கொண்ட சிறுநூல். 2011இல் வெளியாகியது. அதில் கடைசிக் கவிதையாக இடம்பெறு வது இப்போது ஆஸ்கார் வி்ருது வாங்கியுள்ள நடிகர் வில் ஸ்மித் நடித்த அற்புதமான படம்The Pursuit of Happyness குறித்துப் பேசுவது. 2006இல் வெளியான படம் அது.
நேற்று 2022 சிறந்த நடிகராக அறிவிக்கப்பட்டு ஆஸ்கார் விருது வாங்கும் முன் விழாவில் நகைச்சுவை என்ற பெயரில் மேடையில்ருந்தவர் (stand-up comedy) வில் ஸ்மித்தின் புற்று நோய் வந்த மனைவியின் தோற்றத் தை (மனைவி புற்றுநோய் வந்து அதன் விளைவாய் தலைமுடி இழந்து மொட்டையடித்துக் கொண்டிருக்கி றார்) கேலி செய்து ஏதோ கூற நேரே மேடைக்கு சென்று அந்த மனிதரை அடித்துவிட்டார் வில் ஸ்மித்.
பின்னர் விருது வாங்கியதற்கான தன் ஏற்புரையில் தன் நடத்தை குறித்து வருத்தம் தெரிவித்திருக்கிறார். அவரு டைய ஏற்புரை அத்தனை ஆழமானது; ஆத்மார்த்தமானது.
ஆனால், எல்லோரும் வில் ஸ்மித் வன்முறையைப் பிரயோகித்துவிட்டார் என்று குற்றஞ்சட்டத்தொடங்கி விட்டார்கள்.
நல்ல வேளை, இருவரும் ஆப்பிரிக்க-அமெரிக்க இனத்த வர்கள் என்பதால் நிறவெறி என்பதாய் இந்த நிகழ்வு பகுக்கப்படும் அபாயம் நேரவில்லை.
வார்த்தைகளின் வன்முறையையையும் வன்முறைச் செயல்களில் ஒன்றாக ஏன் கணக்கிலெடுத்துக்கொள்ளக் கூடாது?
நடிகர் வில் ஸ்மித்திற்கு என்னுடைய இந்தக் கவிதை சமர்ப்பணம்


 மகிழ்ச்சியைத் தேடி...

ஆரம்பமும் முடிவும் காணலாகா வாழ்க்கையொன்று
என் கண் முன்.
அன்புமயமான அந்தத் தகப்பனின் கைபிடித்திருக்கும்
பிள்ளையோடு பிள்ளையாய் போகத் தொடங்குகிறேன்.
அவனை விட்டுப் பிரிந்துசென்ற மனைவியாகி
மீண்டும் அவனைத் தேடிவந்து முத்தமிடுகிறேன்.
அந்தக் கண்களில் குத்திநிற்கும் முட்களையெல்லாம்
வலிக்காமல் ஒவ்வொன்றாய் பிடுங்கியெறியும் வழிதான் தெரியவில்லை.
விரையும் வேகத்தில் 'ராணுவ வீரனின் பொம்மை
கைநழுவி
சாலை நடுவில் விழுந்து விபத்துக்குள்ளாக,
பேருந்திலிருந்து ஏங்கித் திரும்பும் சிறுவனின் விழிகளில்
நிறையும் நிராதரவில், குற்றவுணர்வில், உறவைப் பிரிந்த தவிப்பில்
இன்றும் நேற்றும் நாளையும் சிறைச்சாலையாகிவிடுகிறது உலகம்.
மகிழ்ச்சியைத் தேடி மகனை தோள்மீது சுமந்தபடி
நாளெல்லாம் ஓடித் திரிகிறான் க்ரிஸ்.
தினமும் தங்கவும் தூங்கவும் இடமில்லாமல்
அறைதேடி அல்லாடும் வழியெல்லாம் சிலுவைகள்.
அவரவர் உலகங்களை அன்பிணைக்க
இரத்ததானம் அளித்துப் பெறும் பணத்தில்
மகனுக்கு விருந்தளித்து மகிழ்பவன் மீண்டும் ஓடுகிறான்.
வேலை கிடைத்த மகிழ்ச்சியில் மகனை
மார்போடணைத்து
ராஜகுமாரனாக்குகிறான்!
அடுத்தவேளை சோறுக்கே வழியில்லாத நாளிலும்
ஆளரவமற்ற இரயில் நிலையத்தில்
மகனுக்காக
டினோசார் வாழும் காட்டையே
நிர்மாணித்தவனாயிற்றே!
”கோள்கள் எத்தனை?”
“ஏழு”
”இல்லை, ஒன்பது" ”வனராஜா யார்?"
"கொரில்லா”
”இல்லை, சிங்கம்”
தந்தையின் கேள்விகளுக்கு தயங்காமல் பதிலளிக்கும்
மகன்.
(தவறாய் இருந்தால்தான் என்ன!)
எனில், அன்றொரு நாள் மகன் கேட்கும் கேள்வியில்
கதிகலங்கி நிற்கிறான் தந்தை:
”அம்மா என்னால் தான் பிரிந்து போனாளா?”
“இல்லை, அம்மா தன்னால் தான் போனாள்”.
“நீ விரும்பினால் குகைக்கே திரும்பிவிடலாம்" என்று
பரிவோடு கூறுகிறது பிள்ளை.
”வெறுமே கடற்கரைக்குச் சென்றோம்
எல்லாவற்றிலிருந்தும் தொலைவாக;
ஏமாற்றத்திலிருந்து வெகுதொலைவாக
என் வாழ்க்கையின் இந்தப் பகுதி
’இந்தச் சின்னஞ்சிறு பகுதியே மகிழ்ச்சியென்று அழைக்கப்படுகிறது”
என்கிறான் க்ரிஸ்.
”என்ன நடந்தாலும் சரி, நீ செய்தது அற்புதமான
காரியம்
நல்லபடியாக கவனித்துக்கொள் உன்னை”
என்றவரை
வேண்டி விரும்பி வழிமொழிகிறேன் நானும்.
காரணம் புரியாமல் விழிநிரம்பும் கண்ணீர்
க்ரிஸ்ஸுக்காகவும் எனக்காகவும் உங்களுக்காகவும்
கருணை செய்யட்டும் காலம்.
...................................................................................................................

www.2019insight.blogspot.com - INSIGHT - A BILINGUAL INITIATIVE OF CONTEMPORARY TAMIL POETRY


www.2019insight.blogspot.com

www.2019insight.blogspot.com _INSIGHT - A BILINGUAL INITIATIVE OF TAMIL CONTEMPORARY POEMS

 


கூடுவிட்டுக்கூடுபாய்ந்து…. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கூடுவிட்டுக்கூடுபாய்ந்து….

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


(சமர்ப்பணம் : சக கவிஞர்களுக்கு)

[*வாசகராகவோ மொழிபெயர்ப்பாளராகவோ கவிதைகளை வாசிக்கும் போதெல்லாம் ஒரு கட்டத்தில் அத்தனை கவிகளும், கவிதைக்குள்ளிருப் பவர்களும் கவிதைகளின் புரிந்தும் புரியாமலுமான அர்த்தார்த்தங் களும் நானேயாகிவிடுவது நேர்ந்துவிடுகிறது!
ஒவ்வொரு கவிதையும் கதவைத் திறந்து நம்மை உள்ளே அனுமதிப்பதற்கு சற்று நேரமெடுத்துக் கொள்வதைப் போலவே நமக்குப் பிரியாவிடை கொடுத்து வழியனுப்பிவைக்கவும் நேரமெடுத்துக்கொள்கிறது.
இடைப்பட்ட நேரத்தில் நாமே அந்த வீடும் விருந்தாடியுமாய்….
அப்படி இந்த மாத ‘INSIGHT’-இல் பதிவேற்றியிருக்கும் கவிதைகளில் நான் கூடுவிட்டுக் கூடுபாய்ந்த உணர் வைக் கவிதையாக்க முயன்றிருக்கிறேன். _ ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்]
..........................................................................................................
கூடுவிட்டுக்கூடுபாய்ந்து….
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
பிழையான எண் எது என்ற புதிருக்கு
விடைதேடும் பிரயத்தனத்தில்
பேசாத அறுவரிலொருவர் சன்னமாய்
கவிமனதில் பேசத்தொடங்குகிறார்!
பார்த்துக்கொண்டேயிருக்கையில்
மரத்திலிருந்து விழும் இலையைப் பிடிக்க
சாக்கடையிலிருந்து கரங்கள் எழும்பிக்
குவிகின்றன கிண்ணமாய்!
எதுவென்றே தெளிவாகத் தெரியாமல்
மூச்சுத்திணற வைத்துக்கொண்டிருந்த
தோல்விகள் அந்தர மரத்திலிருந்து
விழுதுகளாய்த் தொங்க _
அனந்தகோடி கரங்களால் அவற்றைப்
பற்றிக்கொண்டு
ஆனந்தமாய் அப்படியுமிப்படியும்
ஆடும் கவியைப்
பார்த்துக் புன்சிரித்துக் கண்சிமிட்டுகிறான்
கடவுளாகிய சாத்தான்!
வறண்டிருந்த வாக்கியவியல் தொட்டிக்குள்
சிலந்தி வரிகளைப் புனைந்தவாறிருக்க
கவியின் அறைபிளந்துவரும் கடல்
அவன் கையைப் பிடித்திழுக்கிறது
தன்னோடு நடனமாடச் சொல்லி!
’கீச்சி’யும் ’டாமி’யும் கடலுக்குள்ளிருந்து
துள்ளிக்குதித்துவந்து
கவியின் இருதோள்களிலும் அமர்ந்து
கொள்கின்றன.
நிரம்பிவழியும் தீராப்பள்ளங்களில் அவற்றைத்
துள்ளிக்குதிக்க விடுகிறான் கவி!
விலகச் சொல்லலும் விலகிச் செல்லலுமே வாழ்க்கையென
விளங்கிக்கொள்ள முயலுபவள்
மூலைக்கு மூலை கடவுளைக் காண்கிறாள்
மீண்டும் மீண்டும் கடவுளாகிறாள்!
பெருநேசச் செழிப்புக்கு வழிசொல்லும்
பெண்ணுக்கு
சிறகுகள் கிடைத்துவிடுகின்றன!
தீர்ந்துவிடும் இரவின் துளிகளை
தீராத்தாகத்தோடு எண்ணிக்கொண்டிருக்கிறான்
ஒரு கவி.
புற்றினை மறுபடியும் தீண்டும் தருணத்திற்காய்
வேண்டிக்கொண்டிருப்பதே வாழ்வாக
நெகிழி போத்தலாய் இறுகத்திருகிய மூடியோடு
மிதந்துகொண்டிருக்கும் உடலை
கரை மீதமர்ந்து கண்காணித்துக்
கொண்டிருக்கிறான் கவி!
தேனீரை மலரச்செய்யும் ரசவாதம் அறிந்தவன்
அந்தரத்தில் நீண்ட கோடொன்றில்
அந்தராத்மாபோல் ஒன்றை தரிசிக்கிறான்.
அலைபேசியில் விரியும் ரோஜாக்காட்டில்
கவியின் சிட்டுக்குருவி மூக்கு நுகரும் வாசம்
சுவாசமாக _
பூமிக்குத் திரும்பவே மனமற்ற பறவைக்குத்
தன் எல்லையற்ற மனவெளியில்
இடமளிக்கிறாள் ஒரு கவி!
யசோதரையை நினைவுகூர மறக்கும்
வரலாறுகளைப் பிடித்திழுத்துவந்து
கூண்டில் நிறுத்துகிறாள் வேறொரு கவி!
வரலாறு மறந்தாலென்ன
அமைதியை விழுங்கிய பேரமைதிக்குள்
வருவோர் போவோரெல்லாம் அவளேயாக
இரங்கற்பா பாடிக்கொண்டிருக்கிறாள்
இன்னொரு கவி!
கவி வீசிய நான்காம் கல்லில்
நிறைசூலியாய் நிறைந்துவழிகிறது குளம்!
தன் ஆயிரமாயிரம் முத்தங்களை
வழியெங்கும் வீசிச்சென்றவன்
பின்னும் அட்சயபாத்திரமாய் பெருகியவற்றை
வரிகளாக உருமாற்றிவிட்டான்!
தன் கண்ணுக்குள் வசிக்கவந்திருப்பவளிடம்
என்ன வாடகை கேட்பது என்று புரியாமல்
அவளை ஏறிட்டுப்பார்த்து
அத்தனை அன்போடு வாலாட்டுகிறது நாய்க்குட்டி!
உடும்பாக மாறும் ரோஜாவை
எடுத்துக்காட்டுபவன்
இருளின் பசிக்கும் இருள் மீதான பசிக்கும்
இடையே
வேற்றுமை இருக்கிறதா இல்லையா
என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டிருக்கிறான்!
பி.கு: எல்லோரும் நானாகி நானெல்லோருமாகியதோர்
சொல்லவல்லாய நல்வினைப்பயனைச்
சொல்லிச்சொல்லி நெகிழுமென்
சொப்பனக்கிளி.


Sunday, May 1, 2022

மதிப்புரைகளும் மாஜிக்கல் ரியலிஸமும் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மதிப்புரைகளும்

மாஜிக்கல் ரியலிஸமும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
‘மிகவும் அருமையான கதை யிது
இருக்கும் எட்டு பக்கங்களில் ஏழிலுள்ளவை
ஏற்கெனவே எழுதப்பட்டிருப்பதே யென்றாலும்’
என்கிறார் ஒரு விமர்சகர் _
‘ரேட்டிங்’குக்கான ஐந்து வட்டங்களை யடுத்து
இன்னும் ஐந்து வட்டங்களை யிட்டு
பத்தாவதில் ’டிக்’ கொடுத்து.
’பார்த்துக்கொண்டிருக்கும்போதே முளைத்த பரு
புதுமையான கதைக்கரு’
’முளைத்த’ என்பதற்கு பதில்
’இளைத்த’ என்று எழுதியிருக்கலாம்.
மற்றபடியெந்தக் குறையுமில்லை’
என்று இன்னும் ஐந்து வட்டங்களை யிட்டபடியே
வலிக்காமல் குட்டுகிறார் ஒரு திறனாய்வாளர்.
வலித்தாலும் பரவாயில்லை யென்று
எல்லா விரல்களிலும் வகைவகையாய்
மோதிரங்களை அணிந்தபடி.
ஒரு கதையை யொருவர் எழுதினால்
அது அருமையாவதும் புதுமையாவதும்
அதை யின்னொருவர் எழுதினால்
கழுதையின் பின்னங்காலால்
உதைக்கப்படவேண்டியதாவதும்
மதிப்புரைகளின் மாஜிக்கல் ரியலிஸமாக…..

மாறும் மதிப்பீடுகள் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மாறும் மதிப்பீடுகள்

‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)

6 போடக் கற்றுத்தரப்பட்டது குழந்தைக்கு
ஆகச் சிறந்த நூலின் முனையில் ஒரு பூஜ்யத்தைக் கட்டித்
தொங்கவிட்டது குழந்தை.
8 போடக் கற்றுத்தரப்பட்டது.
சம அளவு அல்லது சற்றே சிறியதும் பெரியதுமான
இரண்டு பூஜ்யங்களை ஒன்றன்மீது ஒன்றாக
அடுக்கிவைத்து
கைதட்டிக் குதூகலித்தது குழந்தை.
10 போடக் கற்றுத்தரப்பட்டது.
ஒரு சிறிய தடுப்புச்சுவர் எழுப்பி
பூஜ்யம் உருண்டோடிவிடாமல் பாதுகாத்தது குழந்தை.
பெரியவர்களின் கணக்கில் பூஜ்யம்
அதனளவில் மதிப்பற்றது.
பிள்ளைகளுக்கோ விலைமதிப்பற்றது!


காலநிலை என்ற தலைப்பிட்ட ரிஷி(லதா ராமகிருஷ்ணன்) யின் ஏழாவது கவிதைத்தொகுப்பிலிருந்து (2010ஆம் ஆண்டு வெளியானது வெளியீடு : புதுப்புனல் பதிப்பகம்











முதிர்வயதின் மகத்துவம் ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 முதிர்வயதின் மகத்துவம்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

யாராலும் பார்க்கப்படாமல்,
பார்க்கப்படுகிறோமோ என்ற தர்மசங்கடவுணர்வோ
பார்க்கப்படவில்லையே என்ற பரிதவிப்போ
இல்லாமல்
ஒரு சிற்றுண்டிவிடுதியில் வெகு இயல்பாய் நுழைந்து
சீராகச் சுழன்றுகொண்டிருந்த மின்விசிறியின் கீழ்
எனக்கான இடத்தைத் தேடிக்கொண்டபோது
முதிர்வயதின் மகத்துவம் புரிந்தது.

காலநிலை என்ற தலைப்பிட்ட ரிஷி(லதா ராமகிருஷ்ணன்) யின் ஏழாவது கவிதைத்தொகுப்பிலிருந்து (2010ஆம் ஆண்டு வெளியானது வெளியீடு : புதுப்புனல் பதிப்பகம்

அரைக்கண காலவெளிகளும் உன் அறைகூவல்களும் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


 அரைக்கண காலவெளிகளும்

உன் அறைகூவல்களும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
கொஞ்சம் பொறு
தட்டாமாலை சுற்றிக்கொண்டிருக்கிறேன்
இன்னமும் நிலா வரவில்லை.
அழைத்தபடியிருக்கிறேன்.
விண்மீனின் கண்சிமிட்டலைக் கண்டு ரசித்தபடி
அண்ணாந்திருக்கிறேன்…..
கண்ணீர் பாதையை மறைக்கிறது.
தத்தளித்துக்கொண்டிருக்கிறேன்.
கடும்புயல் – வெள்ளத்தில்
கலகலத்துச் சரிந்தவண்ணமிருக்கிறேன்
காலன் எதிரில் கையறுநிலையில்
மண்டியிட்டவாறு….
‘கிட்டாதாயின் வெட்டென மற’வின் உட்பொருளைத்
துருவிக்கொண்டிருக்கிறேன்.
எட்டாக்கனி எதற்கெல்லாம் குறியீடாகும் என்பதையும்.
உடனடியாக எதிர்வினையாற்றவில்லையென்பதால்
உன் அறைகூவலைக் கேட்டு பயந்துவிட்டதாக அர்த்தமல்ல.


[*காலநிலை என்ற தலைப்பிட்ட ரிஷி(லதா ராமகிருஷ்ணன்) யின் ஏழாவது கவிதைத்தொகுப்பிலிருந்து
(2010ஆம் ஆண்டு வெளியானது. வெளியீடு : புதுப்புனல் பதிப்பகம்]

மெய்த்தோற்றங்கள் ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 மெய்த்தோற்றங்கள்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

பிறவி நடிகர் திலகங்களும்
நடிகையர் திலகங்களும்
தருவித்துக்கொண்ட நவரச முகபாவங்கள்
புகைப்படங்களை ஒரு திரைப்படத்தின் காட்சித்துணுக்குகளாக நம் முன் வைத்தவாறே.
அழும்போதும் ஆத்திரப்படும்போதும்
அழகாகக் காட்சியளிக்கவேண்டும் என்ற கவனமாகவே யிருக்கும் நடிகையர் திலகங்கள்
இயல்பாக நடப்பதாய்
இடுப்புவளைவை எடுப்பாக்கிக் காட்டியவாறே
ஒயிலாக நடந்துகொண்டிருக்கிறார்கள்
இணையப்பக்கங்களில்.
அவர்கள் வெட்டியொட்டும் வாசகங்களை
யெல்லாம்
அவர்களுடையதாக மாற்றிவிடும் வித்தையை
வெகு இயல்பாகக் கைக்கொண்டவர்கள்
இருகைகளிலுமான இருபதுவிரல்களால் எழுதிக்கொண்டேயிருக்கிறார்கள்.
இருக்கையை விட்டு இம்மியும் நகராமல்
வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருப்பவர்கள்
இந்தத் திரைப்படம் ‘ஆர்ட்’ படமா ‘மசாலா’ப் படமா
என்று தங்களைத்தாங்களே கேட்டுக்கொள்ளும் நாள்
தொலைவிலோ அருகிலோ
இருக்கிறதோ இல்லையோ….