LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Wednesday, November 17, 2021

அணுகுமுறைகள் - லதா ராமகிருஷ்ணன்

 அணுகுமுறைகள்

லதா ராமகிருஷ்ணன்

சொல்லத்தோன்றும் சில’…என்ற தலைப்பில் 14.11.2021 தேதியிட்ட திண்ணை இணைய இதழில் வெளியாகியுள்ள கட்டுரை)

(www.thinnai.com) 


(அ) தொலைக்காட்சிகளில் தலைவிரித்தாடும் குரூர நகைச்சுவை:

திருமதி ஹிட்லர் என்பது ZEE தமிழ் தொலைக்காட்சித் தொடர் ஒன்றின் தலைப்பு. நகைச்சுவை என்ற பெயரில் கிச்சுகிச்சு மூட்டினாலும் சிரிப்பு வராத திராபை காட்சிகள்; வசனங்கள்; கதாபாத்திரங்களின் முகபாவங்கள். ஆனால் ஹிட்லர் என்ற பெயரை எத்தனை சுலபமாக ‘நகைச்சுவைக்கான’ பெயராக்கி விட்டார்கள் என்பதைப் பார்க்கும்போது வருத்தமாயிருக்கிறது. இது அப்பட்டமான insensitivity யல்லாமல் வேறென்ன?

இப்படித்தான் ‘சுனாமி’ என்ற சொல்லை பலவிதமாய் சிரிப்புமூட்டப் பயன்படுத்து கிறார்கள். சுனாமியின் கொடூரத்தை அனுபவித்தவர்களுக்கு அதைக் கேட்கும்போது எப்படியிருக்கும்?

முன்பெல்லாம் பெண்களை குறிப்பாக வீட்டுவேலை செய்யும் பணிப் பெண்களை நகைச்சுவை என்ற பெயரில் கேவலப்படுத்துவதும், மாநிறமாக உள்ள பெண்களை மட்டந் தட்டுவதும் உடற்குறையுடையவர்களை, குறிப்பாக பார்வைக்குறைபாடு உடையவர்களை ‘வேடிக்கைப்பொருளாக்குவதும்’ வெகு இயல்பாய் வெகுஜனப் பத்திரிகைகளிலும் சினிமாக் களிலும் இடம்பெற்று வந்தன. இப்பொழுது ஓரளவு குறைந்திருக்கிறது எனலாம். ஆனால், அது சட்டத்திற்கு அல்லது சம்பந்தப்பட்ட மக்களின் எதிர்ப்புக்கு பயந்து என்பதாகத் தான் இருக்கிறதே தவிர அந்த மனப்போக்கு மாறி விடவில்லை. அது பலவிதங்களில் தன்னை வெளிப்படுத்திக்கொண்டேயிருக் கிறது. இன்றளவும் மாநிறத்தில் கதாநாயகியை இயல்பாகக் காட்டமுடியாமல்தானே நம் சின்னத்திரையும் பெரியதிரையும் குடம்குடமாக மேக்கப்பை அப்புவதிலேயே குறியாக இருக்கின்றன.

விஜய் தொலைக்காட்சியில் ஒரு நகைச்சுவை நடிகரை எல்லோரும் திரும்பத்திரும்ப நகைச்சுவையாக ’கேடி ராமர்’ என்று அழைக்கிறார்கள். விஜய் தொலைக்காட்சியில் பொதுவாகவே இந்துக்கோயில்களில்தான் மாமியாருக்கு எதிராக மருமகளும் மருமகளுக்கு எதிராக மாமியாரும் புதிது புதிதாய் சதித்திட்டங்கள் தீட்டுவார்கள்.

எதற்கெடுத்தாலும் குற்றம் கண்டுபிடிப்பவர்கள், தொட்டாற்சுருங்கிகள் என்று சொல்லி விடுவது சுலபம். ஆனால், தலைவலி தனக்கு வந்தால் தெரியும் என்ற கூற்று நினைவு கூரத்தக்கது.

சில வருடங்களுக்கு முன்பு இந்தியக் கலாச்சாரத்தை எடுத்துக்காட்டுவதாய் சில லட்சங்கள் GRANT வாங்கி எழுதப்பட்ட படைப்பு ஒரு குறிப்பிட்ட நிஜ ஊரில் குறிப்பிட்ட திருவிழாவின் இறுதி நாளன்று குழந்தையில்லா பெண்கள் மலைமேல் உள்ள கோயில்பக்கம் சென்று யாரோடு வேண்டுமானாலும் பிள்ளை பெறுவது வழி வழி வழக்கம் என்பதாய் கதையெழுதி அது எழுத்துச்சுதந்திரமாகப் பல அறிவு ஜீவிகளால் வகுத்துரைக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட ஊர்ப் பெண்களைப் பற்றி யாருக்கு என்ன கவலை?

எந்தவிதமான சுதந்திரத்திற்கும் பொறுப்பேற்பும் உண்டு. உண்மை சம்பவத்தை முழு ஆவணப்படமாக உண்மைத் தரவுகளின் பின்னணியில் உரியவிதமாய் எடுத்தால் அது பார்வையாளர்களிடம் ஏற்படுத்தவேண்டிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அப்படியில் லாமல் உண்மைக்கதையில் கற்பனை கலந்து தந்தால் பிரச்சினை ஏற்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம். சமீபத்தில் வெளியாகியுள்ள திரைப்படத்தைப் பற்றி ஒட்டியும் வெட்டியும் பலர் பேசுவதே அந்தப் படத்திற்கான மிகப்பெரிய விளம்பரமாகிவிட்டது.

***   ***   ***

(அ) ஜெய்பீமைப் பேசுவோம்மாடத்தியைப் பற்றி மூச்சுவிட மாட்டோம்…..

 

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திரையுலகை எழுத்தாளர்கள் தாங்கிப் பிடிப்பதுபோல் ஒரு நாளும் திரையுலகினர் எழுத்தாளர்களை நடத்துவதில்லை. இது நடப்புண்மை. நாட்டின், உலகின் பிற பகுதிகளிலும் இதேதானா நிலைமை என்று எனக்குத் தெரியாது.

கொஞ்சம் நல்ல படமாக அமைந்துவிட்டால்கூட அதை அனேக தமிழ் எழுத்தாளர்கள் அக்குவேறு ஆணிவேறாக அலசத் தவறுவதில்லை. அவர்கள் பாராட்டும் அந்தப் படத்தை யாரேனும் வேறுவிதமாக எழுதினால் அதற்கு உடனே உள்நோக்கம் கற்பிப்பதும் நடக்கும்.

அப்படித்தான் இப்போது வெளியாகியிருக்கும் ஜெய் பீம் என்ற திரைப்படமும் தமிழ் எழுத்தாளர்கள் மத்தியில் பரவலான கவனத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

உண்மை நிகழ்வு ஒன்றைப் பற்றிய படம் என்னும்போதே ஒரு கதை அல்லது படத்திற்கு ஒருவித ஆவணத் தன்மை வந்துவிடுகிறது. அதன் பிறகு உண்மை நிகழ்வைச் சுற்றி பின்னப்பட்ட கற்பனைக் கதை என்று நம் இஷ்டத்திற்கு விவரங்களை சேர்ப்பது எடுப்பது சரியல்ல.

 ஜெய் பீம் படத்திற்கு எழுத்தாளர்கள் மத்தியில் இத்தனை பரபரப்பான கவனம் தரப்படுவதைப் பார்க்கும்போது சமீபத்தில் வெளியான கவிஞர் லீனா கவிஞர் யவனிகா ஸ்ரீராம் பங்கேற்றிருந்த மணிமேகலையின் அருமையான படைப்பாகியமாடத்திகுறித்து பல மனிதநேய, சமூகப் பிரக்ஞை மிக்க எழுத்தாளர்களிடையே பரவலாக நிலவிய / நிலவும் கனத்த மௌனம் தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வருகிறது.

ஒட்டியோ வெட்டியோ ஏதொன்றையும் எழுதாமல் எளிதாக அந்தப்புறம் பார்த்தவாறு கடந்துபோய்விடுவதே இந்தப் படத்தைப் பொறுத்தவரையான சினிமா-ஆர்வல எழுத்தாளர்கள் பலரின் அணுகுமுறையாக இருப்பது ஏன்? தெரியவில்லை.

பெரிய நடிகர்கள் எவரும் இல்லாமலேயே முழுநிறை வாக எடுக்கப்பட்டுள்ள படம் அது. சமூகத்தில் இன்றும் நிலவும் தீண்டாமைக்கொடுமையின் இன் னொரு பரி மாணத்தை நுட்பமாக எடுத்துக்காட்டுகிறது. உலக அளவில் பல்வேறு அரங்குகளில் அகல்விரிவாக விவாதிக்கப்பட்டுவரும் படைப்பு மாடத்தி.

 பெண் என்பதான எந்தவிதமான சலுகையும் தேவைப்படாத அளவு இதுவரையான எந்தவொரு பெரிய திரைப்பட உருவாக்குனரோடும் இணையாக கவிஞர் லீனா மணிமேகலை தன்னை நிலைநிறுத்திக்கொண் டிருக்கும் முழுநிறை வான மாற்று சினிமா மாடத்தி.

மாடத்தியின் கருப் பொருள் குறித்து மிகத் தெளிவான கருத்துகளைத் தன் பேட்டிகளில் தந்திருக்கிறார் அவர்.

சிலருடையதைப்போல் வெறும் name dropping அல்ல மாற்று சினிமா குறித்த அவருடைய அறிவும் ஆர்வமும் என்பது அவருடைய விரிவான பேட்டிகளிலிருந்து தெளிவாகவே புலப்படுகிறது.

நம் தமிழ் இலக்கிய வாதி ஒருவர் பல்வேறு இடையூறு களுக்கு இடையில் உருவாக்கி யிருப்பது. தங்கள் மௌனத்தால் எத்தனை எளிதாக இந்தப் படைப்பைக் கடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள் தமிழிலக்கிய அறங்காவலர்கள் என்ற திகைப்பிலிருந்து இன்ன மும் என்னால் மீள முடியவில்லை.

மாடத்தி வெளிவந்ததும் தாங்களும் காமராவைப் பிடித்துக்கொண்டிருந்த பழைய புகைப் படங்களையெல்லாம் தூசு தட்டிப் பதிவேற்றுவதில் (அவர்கள் இயங்குவதுமெயின்ஸ்ட்ரீம்திரைப்பட வெளியில்தான்அங்குகூட அவர்கள் தனிமுத்திரை எதையும் பதித்து விடவில்லை) சில படைப்பாளிகள் காட்டிய அதீத ஆர்வத்தைப் பார்க்க முடிந்தது.

 நல்ல சினிமா என்று பேசுபவர்கள் மாடத்தியை பேசுவதை ஏன் தவிர்க்க வேண்டும்?

மாடத்தி சங்கடமான சில கேள்விகளை எழுப்புகிறது. தீண்டாமை என்பது இன்னும் ஒரு படி மேலே போய் பார்க்கக்கூடாதவர்கள் என்ற ஒரு பிரிவை வளர்த்தி ருக்கும் அவலமான உண்மையை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.

எல்லாவற்றுக்கும் ஒற்றைக் காரணத்தைச் சுட்டி அவரவ ருக்கான தனிநபர் பொறுப்பேற் பிலிருந்து தப்பித்துக் கொண்டுவிடுவது சுலபம். ஆனால், சக மனிதர்களை அவமானப் படுத்துவதும் அதிகாரம் செய்வதும் பரவலாக எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. இதற்கு சாதி,மதக் கட்டுமானங்களை நாம் துணைக்கழைத்துக்கொள்கிறோம். இந்த உண்மையை போட்டுடைக்கிறது மாடத்தி.

கோயில் விழாவுக்காகப் பணம் வசூலிப்பதில் ஊர்த்தலை வன் கையாடல் செய்திருப்பது காட்டப்படுவதன் மூலம் தலைவர் எப்படியோமக்கள் அப்படி என்று கோடிட்டுக் காட்டப் படுகிறது.

 தலைவருக்குப் பாடம் புகட்ட அவருடைய மனைவி யைப் பெண்டாள்வது சரியான வழியாகப் பேசப்படுகிறது. எந்த சாதியானாலும் பெண் இழிவுபடுத்தப்படுவது என்ற நிலை அங்கே குறிப்பு ணர்த்தப்படுகிறது.

மாடத்தி தங்கள் ஊர் இளைஞர்களால் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டிருப்பதை அறிந்தும்கூட அந்த ஊர்ப் பெண்கள்பெண்ணுக்குப் பெண்என்ற அளவில் அதைப் பார்க்க முனையாத அவலம் முகத்திலறைவதாய் காட்டப்படுகிறது படத்தில்.

படத்தை எடுத்த விதம் அத்தனை நேர்த்தியாக அமைந்தி ருக்கிறது. இறுதிக் காட்சிகள் நிதி நெருக்கடி காரணமாக அடுத்தடுத்துக் காட்டப்படும் புகைப்படங்களாக அமைந்து விட்டனவா அல்லது அப்படித்தான் எடுக்க வேண்டும் என்ற பிரக்ஞாபூர்வமான தெரிவுடன் அப்படி எடுக்கப்பட் டனவா தெரிய வில்லை. படத்தின் இறுதிக்காட்சிகள் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டிருந்தால் அது பேசப்படும் பிரம்மாண்டமாய் சாதாரண ரசிக மனதுக்குக் கூடுதல் தாக்கம் ஏற்படுத்தக்கூடியதாய் அமைந்திருக் கும் என்று தோன்றுகிறது. ஆனால், அத்தகைய செயற்கையாய் உருவாக்கப்படும் அதீத தாக்கம் தேவையில்லை என்று படத்தை உருவாக்கியவர்கள் நினைத்திருக்கலாம்.

 இந்த மதம் அந்த மதம் என்றில்லாமல் மாடத்தி கடவுள் நம்பிக்கையை, இன்னும் குறிப்பாகச் சொல்வதென்றால்கடவுள் மீதான பயம், நம்பிக்கை என்று மக்கள் சொல்லிக்கொண்டிருப் பதைக் கேள்விக்குட்படுத்துகிறது. கடவுளைக் கும்பிடுகிறோம். அநியாயம் செய்வதற்கும் அப்படிக் கும்பிட்டுவிட்டு செயல்படத் தொடங்குகிறோம் . அப்படியென்றால்.....? கடவுள் அன்பு மயம் என்கிறோம் - திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்கிறோம் - ஆனால், ஆதரவற்ற வர்களைத்தான் அவர்களுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்களும் ஏறி மிதிக்கிறோம். அப்படி யென்றால்.....? தாத்பர்யம் புரியாமல் செய்யும் சடங்குகள் எப்படி கடவுளாகும்? என பலப்பல கேள்விகளை மாடத்தி கிளர்த்துகிறாள்.

 மாடத்தியில் ஜோதிகாவோ நயந்தாராவோ முதன்மை கதாபாத்திர வேடத்தில் நடித்திருந் தால் அந்தப் படம் இன்னும் பேசப்பட்டிருக்குமோ? இந்த அருமையான படத்தை எடுத்திருப்பது கவிஞர் லீனா மணிமேகலை என்பதும் படம் பெரும்பாலான தமிழ்ப் படைப்பாளிகளால், பேசப்படாமல் புறக்கணிக்கப்படுவதற்கு ஒரு முக்கியக் காரணமோ?

கையாளப்பட்டிருக்கும் கதைக்கரு, எடுக்கப்பட்டிருக்கும் விதம் என எல்லாவற்றிலும் குறிப்பிடத்தக்க அளவு தனித்துவம் வாய்ந்த படைப்பாக உருவாகியிருக்கும் மாடத்தி திரையுலகினரால், நல்ல சினிமா ரசனையுடை யவர்களாகத் தங்களைப் பறைசாற்றிக் கொள்ளும் தமிழ்ப் படைப்பாளிகளால் போதிய அளவு பேசப்படவில்லை, இல்லை, பேசப்படவேயில்லை என்ற உண்மையின் பின்னுள்ள அரசியல், என்ன? அதிகாரம் என்ன? என்று இன்னமும் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

 ***  ***  ***

மாணவிக்கு நடந்த அநீதியும் நாமாகிய கூட்டுப்பொறுப்பாளிகளும்

இந்த இரண்டு நாட்களில் மூன்று செய்திகள் – சிறுமிகளைப் பாலியல் வன்புணர்வுக் காளாக்கப்படுதல் தொடர்பானவை. திருமணம் செய்துகொள்கிறேன் என்ற வாக்களித்து 13 வயதுச் சிறுமியைக் கெடுத்து கர்ப்பமாக்கியிருக்கிறான் ஒருவன். உறவுக்காரனாம். தந்தைக்கு விஷயம் தெரிந்தும் புகார் செய்ய முன்வரவில்லையாம். பெண்கள் அமைப்பினர் விஷயத்தைக் கையிலெடுத்து புகார் செய்திருக்கிறார்கள். அந்தச் சிறுமிக்கு ஒரு குழந்தை பிறந்துவிட்டது. இன்னொரு வழக்கு தகப்பனே மகளிடம் தவறாக நடந்துகொண்டதாக தாயும் மகளும் புகார் தந்திருப்பது. தகப்பன் சில வருடங்கள் சிறைத்தண்டனையும் அனுபவித்த பிறகு இப்போது சரியான ஆதாரங்களே இல்லை என்றும், மனைவி கணவன் மேல் கொண்ட கோபத்தில் அப்படி குற்றஞ்சாட்டினார் என்றும் நீதிபதி குறிப்பிட்டு இத்தகைய போக்கு மிகவும் ஆபத்தானது என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இப்போது கோவையில் ப்ளஸ் 2 மாணவி ஒருத்தர் தன்னிடம் ஆசிரியர் சில மாதங்க ளாக தகாத முறையில் நடந்துகொண்டதாகவும் தலைமையாசிரியையிடம் புகார் செய்தும் அவர் அந்த மாணவிக்குப் பாதுகாப்பளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அந்த மாணவி தற் கொலை செய்துகொண்டுவிட்டார். இப்போது அந்த ஆசிரியையும் தலைமையாசிரியையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்திருக்கிறார்கள். இத்தகைய விஷயங்களில் பாதிக்கப் படுபவர் செத்தால்தான் நியாயம் கிடைக்கும் என்றவிதமான அணுகுமுறை மாறவேண்டி யது அவசியம்.

இந்த அநியாயம் தொடர்பாய் கோவையில் நடக்கும் போராட்டங்களை சில குறிப்பிட்ட தொலைக்காட்சிகள் ஒரு குறிப்பிட்டவிதமாக அணுகுவதும் வெளிச்சம் போட்டுக் காட்டுவ தும் ஏன் என்று தெரியவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணின் படத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஊடகங்களும் இருக்கின்றன. இது சட்டப்படி தப்பு என்று தெரியாதா?

போராடுபவர்களில் ஒரு பெண் ‘இது ஆர் எஸ் எஸ் – பிஜேபி கூட்டுச்சதி. பார்ப்பனீயப் போக்கு என்று சகட்டுமேனிக்குக் கருத்துரைப்பது திரும்பத்திரும்ப சில தொலைக் காட்சி சேனல்களில் காட்டப்பட்டது. சம்பந்தப்பட்ட பள்ளி சின்மயா வித்யாலயா. ஆனால் தலைமையாசிரியர் பெயர் மீரா ஜாக்ஸன். மாணவியிடம் முறைகேடாக நடந்துகொண்ட ஆசிரியர் பெயர் மிதுன் சக்கரவர்த்தி. தற்கொலை செய்துகொள் வதற்கு முன் அந்த மாணவி எழுதிவைத்துள்ள கடிதத்தில் ரீடாவின் தாத்தா, எலிஸா வின் அப்பா இந்த ஆசிரியர் யாரையும் விடக்கூடாது என்றவிதமாக எழுதியிருக் கிறாள். இவர்களெல்லாம் யார் என்பது இனிமேல்தான் தெரியவரும்.

குற்றமிழைத்தவர்கள் ஒரு சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் என்று காட்டப் படும் போக்கு எப்படி சரியாகும்? இதில் உள்ள ‘அரசியல்’ அசிங்கமானது.

பல வருடங்களுக்கு முன்பு தமிழகக் கல்லூரியொன்றில் மாணவிகள் போதைமருந்து உட் கொள்ளும் பழக்கத்திற்கு ஆளாக்கப்படுவதாகவும் கிராமங்களிலிருந்து வரும் மாணவி களுக்கு சின்னச்சின்ன வசதிகள் செய்துகொடுத்து அவர்களை கல்லூரியின் மூத்த மாணவி கள் சிலரின் உதவியோடு இந்தப் பழக்கத்திற்கு அடிமையாக்கி விடுவதாகவும், நாளடை வில் அவர்கள் விபச்சாரத்திலும் ஈடுபடுத்தப்படுவதாகவும் அந்தக் கல்லூரியில் வேலை பார்க்கும் ஒருவருக்குத் தெரியவந்தபோது எல்லா மகளிர் கல்லூரிகளிலும் போதைமருந்து குறித்த விழிப்புணர்வுக் கூட்டங்கள், சொற்பொழிவுகள் நடத்தப்பட மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளெதையும் கல்லூரி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. 

சில வருடங்களுக்கு முன்பு அரசுப் பள்ளி யொன்றில் எட்டாம் வகுப்பு மாணவியொருவர் சிறுநீர் கழிக்க மிகவும் சிரமப்படுவதாக அவருடைய தோழிகள் வகுப்பாசிரியரிடன் தெரிவிக்க அந்தப் பெண்ணை அழைத்துக் கேட்டதில் அவளுடைய வீட்டில் தாத்தா, சித்தப்பா என மூன்று பேர் அவரை பாலியல் துன்புறுத்தலுக்குத் தொடர்ந்து ஆளாக்கி வருவதும் வீட்டிலுள்ள பாட்டிக்கும் அது தெரியும் என்பதும் தெரியவந்தது என அந்தப் பெண்ணுக்கு உதவிய ஒரு பெண்மணி கூறியது அதிர்ச்சியாக இருந்தது. பள்ளியில் பயிலும் பெண்களுக்கு இது குறித்து உதவிக்கு தைரியமாக அணுக நிறைய ஆலோசனை மையங்கள் கட்டாயம் தேவை. யாரேனும் ஒரு மாணவி உயிரை நீத்தால் தான் இதுகுறித்தெல்லாம் கவனம் செலுத்துவோம் என்ற போக்கும். இத்தகைய அநீதிகளை ’அரசியல் ஆதாயத்திற்கும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை, அரசியல்கட்சியைப்பழிக்கவும் ’பயன்படுத்திக் கொள் வோம் என்ற போக்கும் அநாகரீகமானவை; ஆபத்தானவை.

பெற்றோர்கள் சங்கம் இன்னும் முனைப்பாகச் செயல்பட வேண்டும். இத்தகைய அத்து மீறல்கள் குறித்து அனைத்துப் பள்ளிகளிலும் விழிப்புணர்வும் தொடர் கண் காணிப்பும் இன்றியமையாதது. இத்தகைய இன்னல்களுக்கு ஆளாகும் பெண்கள் தைரியமாக அணுகத் தோதாய் சேவை மையங்கள் ஆங்காங்கே அமைக்கப்பட வேண்டும்.

Friday, October 22, 2021

துளி பிரளயம் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 துளி பிரளயம்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

திடீர் திடீரெனத் தளும்பும் மனம்...
சில சமயம் லோட்டா நீராய்
சில சமயம் வாளி நீராய்
சில சமயம் தண்ணீர் லாரியாய்
சில சமயம் ஆடிப்பெருக்கு காவிரியாய்
சில சமயம் சமுத்திரமாய்….
ஐஸ்கட்டிக்கடலாய் உறைந்திருக்கும்
நேரமெல்லாம்
அடியாழத்தில் தளும்பக் காத்திருக்கும்
லாவா....

துளி ஞானம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 துளி ஞானம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
அவர் போடாத வேசமில்லை யென்றார் இவர்
இவர் போடாத வேசமில்லை யென்றார் அவர்
அவ ரிவரா யிவ ரவராய்
எவ ரெவ ரெவ ரெவ ரென
எனக்குமுனக்கும வர்க்கு மிவர்க்கும்
எல்லாம் தெரியும்தானே யானாலுமேதும்
தெரியாதுதானே
காதுங்காதும் வைத்ததாயும்
ஏதுஞ்சொல்லாதிருத்தலே நன்றாமே
யாதும் ஊரேயாயின் யாவரு மெதிரியாக
தீதும் நன்று மென்றும் பிறர் தர வாராததாக
சூதும் வாதுமறிந்தும் அறியாதியங்குமொரு
மனமெனும் அருவரமே
வாழ்வின் ஆகப்பெருஞ்சாதனையா மென்
றறிவேனே பராபரமே.

திறனாய்வைக் கட்டுடைத்தல் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 திறனாய்வைக் கட்டுடைத்தல்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

பிரதிகளில் பாரபட்சம் பார்க்கப்படவேண்டும் என்பதே
திறனாய்வுக் கட்டுடைத்தலின் பாலபாடம்.
வேண்டப்பட்டவர் எழுதும் அபத்தங்களைச்
செல்லக் குழந்தையின் கிறுக்கலாக
சின்னதாக ஓரிரு குட்டோடு நிறுத்திக்கொள்ளவேண்டும்.
மோதிரக்கையராக மாறிவிடவும் முடியும்.
ஆகாதவர் ஓகோவென்றெழுதினாலும்
போகாத ஊருக்கு வழிசொல்லும் போக்கத்த எழுத்து
என்று அந்தப் படைப்பையே உடைத்தெறிவதாய்
மடைமீறிய ஆவேசத்தோடு பழிக்கவேண்டும்.
இடையிடையே சில பெயர்கள் வருடங்கள் தேதிகள்
எழுதப்பட்ட படாத வரலாறுகள்
தனக்குத் தெரிந்த அரசியல்
சினிமா தர்க்கவியல் தத்துவம்
பழமொழிகள்
Quotable quote கள் என சரியான விகிதத்தில்
கலந்துவைக்கத் தெரியவேண்டும்.
தன்னை முன்னிலைப்படுத்தத் தெரியாத,
தனிநபர்த் தாக்குதலில் ஈடுபடாத
திறனாய்வெல்லாம் திறனாய்வாயென்ன?
அதிசிறந்த படைப்பானாலும்
அதைப்பற்றி யொரு வரியும் எழுதாமல்
கடந்துபோகத் தெரிந்தவரே
ஆகச்சிறந்த திறனாய்வாளர்.

Wednesday, October 6, 2021

INSIGHT - a bilingual blogspot for contemporary Tamil Poetry - September 2021

 2019insight.blogspot.com



கவிஞர் பிரான்சிஸ் கிருபாவின் அற்புதக் கவித்துவம் _ என் எளிய மரியாதை.

தமிழின் தரமான கவிஞர்களில் ஒருவரான ஜெ.பிரான்சிஸ் கிருபா அமரராகிவிட்டார். அவருக்கு என்னால் செய்ய முடிந்த எளிய அஞ்சலி இந்த மொழிபெயர்ப்பு. அவருடைய இந்த அற்புதக் கவிதையின் ஆழத்தை என் மொழி பெயர்ப்பால் எட்டிப்பார்க்கக் கூட முடியவில்லை. _ லதா ராமகிருஷ்ணன்.

ஜெ.பிரான்சிஸ் கிருபா வின் கவிதை

(வலியோடு முறியும் மின்னல்(டிசம்பர் 2004) தொகுப்பிலிருந்து)

இரண்டே இரண்டு விழிகளால் அழுது
எப்படி இந்தக் கடலை
கண்ணீராக நான் வெளியேற்ற முடியும்.
என் கனவும் கற்பனைகளும்
என் இதயமும் குருதியும்
கிழிந்த மிதியடிகளாக மாற்றப்படும்போது
எப்படி நான் அழாமலிருக்க முடியும்.
கண்ணீரின் ஒரு துளியை
அவித்த முட்டையைப்போல்
இரண்டு துண்டாக அறுத்துவிட முடியவில்லை.
அன்பும் இங்குதான் தொலைகிறதோ என்னவோ
நண்பர்களே தோழிகளே துரோகிகளே
ஆறுதலுக்கு பதில்
ஒரு ஆயுதம் தாருங்கள்
கடலை கப்பலின் சாலையென்று
கற்பித்தவனைக் கொன்றுவிட்டுப்
போகிறேன்.

A POEM BY FRANCIS KIRUPA

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

Weeping with just two eyes
How can I release this Sea
as tears
When my Dreams and Fantasies
my Heart and Blood
are turned into a pair of torn doormats
how to abstain from crying
Can’t slice the teardrop into two
as a boiled egg.
It could be that it is here
Love is lost.
Dear Friends of both genders and
ghastly betrayers
Instead of consolation
Give me a weapon
Let me kill that one
who has taught that Sea is but
Ship’s thoroughfare,
and be gone.



* மிதியடி என்ற சொல் செருப்பையும் குறிக்கிறது. doormat, footwear. இருந்தாலும் காலின் கீழ் மிதிபடும் துணியெனும் பொருளில் doormatயையே பயன்படுத்தியுள்ளேன்.

தினம் நிகழும் கவியின் சாவு - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 தினம் நிகழும் கவியின் சாவு

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
அடிவயிறு சுண்டியிழுக்க பசி உயிரைத்
தின்னும்போதும்
ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து
அங்கில்லாத பட்டுக்கருநீலத்தையும் பதித்த நல்வயிரத்தையும்
அன்பு மனைவிக்கோ ஆழ்மனக் காதலிக்கோ
சிறு கவிதையொன்றில்
குசேலனது அவிலென அள்ளி முடிந்துகொண்டு
தரச்சென்றவனை
ஒரு கையில் கடப்பாரையும்
மறு கைநிறைய ஈரச்சாணியும் ஏந்தி
வழிமறித்த வாசக - திறனாய்வாளர் சிலர்
கண்ணனை மறைமுகமாய் புகழ்ந்தேத்தும் நீ
கொடூர நீச மோச நாச வேச தாரி
யென் றேச, பழி தூற்ற
ஏதும் பேசாமல் காற்றுவெளியிடைக் கண்ணன் மனநிலையைக் கண்டுவர
தன்வழியே காலெட்டிப்போட்ட கவி
தனக்குத்தானே சொல்லிக்கொள்வான்:
’கிட்டும் வாசகப் பிரதிகள் வரம் மட்டுமல்ல...
கட்டுடைத்தலில் தட்டுப்படுவது
படைப்பாளியின் அடையாளம் மட்டுமல்ல’.

அணுகுமுறை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அணுகுமுறை

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


சாரத்தை உட்கொண்டு சக்கையை உமிழ்ந்துவிடச் சொன்ன
பழமொழி
சக்கையை உட்கொண்டு சாரத்தை உமிழச்சொல்லும்
நவீனமொழியாகியதில்
வீடெல்லாம் குப்பைகூளங்கள்
குவிந்திருக்க
கழிவுத்தொட்டிகளெல்லாம்
பசுங்கனிகளும் புதுமலர்களும்
நிரம்பிவழிய………

உலக மொழிபெயர்ப்பு தினம் _ நினைவுகூரலும் நன்றி நவிலலும் லதா ராமகிருஷ்ணன்

 30 செப்டெம்பர் _ உலக மொழிபெயர்ப்பு தினம்

 நினைவுகூரலும் நன்றி நவிலலும்

லதா ராமகிருஷ்ணன்

                      

”ஆங்கிலத்தில் திறம்பட எழுதத் தெரிந்தவர். அதிலேயே எழுதி வாழ்வாங்கு வாழ்ந்திருக்கலாம். ஆனால், ஆர்வத் தோடு மனதார தமிழில் எழுதுவதைத் தேர்ந்தெடுத்தார்’, என்று எழுத்தாளர் க.நா.சுவைப் பற்றி பிறர் கருத்துரைக்கக் கேட்டிருக்கிறேன்.

கவிஞர் பிரம்மராஜனும் அப்படியே. ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றியவர். அயராத வாசிப்புப்பழக்கம் கொண்டவர். மியூஸ் இண்டியா என்ற இணைய இதழில் அவருடைய ஆங்கில மொழி பெயர்ப்பில் இடம்பெற்றிருக்கும் தமிழ்க் கவிதைகள் அவருடைய ஆங்கில மொழித் திறனுக்குக் கட்டியங்கூறுபவை.


சமகால உலக இலக்கியம் பற்றி ஏராளமாக வாசித்தறிந்தவர். வரு மானத்தில் முக்கால்வாசி புத்தகங்கள் வாங்குவதற்கே செலவழிப் பவர்.

அவருடைய மீட்சி இலக்கிய இதழில் அவர் தமிழில் அறிமுகப் படுத்திய அயல்மொழி ஆக்கங்கள் ஏராளம். படைப்பாளிகளும் அனேகர்.
அவருடைய வாசிப்பின் அடிப்படையில் அவரே தேர்ந்தெடுத்து தமிழில் மொழிபெயர்த்துத் தந்த உலகத்தரமான கவிஞர்கள், படைப்பாளிகளும் நிறைய பேர்.

    

அவர் ஒரு படைப்பாளியை தனது மீட்சி இதழ்களில் அல்லது வேறு இலக்கிய இதழில் அறிமுகப்படுத்தினால் உடனே அந்தப் படைப் பாளியின் எழுத்தாக்கங்கள் வேறு இலக்கிய இதழ்களில் மொழி பெயர்ப்பில் வெளியாவதை பலமுறை கவனித்திருக்கிறேன்.

தனது பரந்துபட்ட வாசிப்பின் பின்புலத்தில் கவிதையாக்கத்தில் பரி சோதனை முயற்சிகள் மேற்கொண்டவர். அந்த பரிசோதனை முயற்சிகளை வெகு எளிதாக ’போலி’ என்று புறந்தள்ளிவிடுவதன் மூலம் அவருடைய கவிதைகளில் இயல்பாக இரண்டறக் கலந்தி ருக்கும் அடர்செறிவான தமிழ்மொழிப் பயன்பாடு, தமிழ் மரபு, தொன்மவியல் சார்ந்த குறியீடுகள், தளும்பிக்கொண்டிருக் கும் ஆழ் மனம், வெளிப்படும் அறிவுநாணயம் எல்லாவற்றையும் ஓரங்கட்டிவிடும் அராஜகப் போக்கு இன்றளவும் தொடர்கிறது.





ஆனால், அவரது அறிவாற்றல், கவித்துவம், மொழிபெயர்ப்புத் திறன், வாசிப்பு யாவற்றையும் உணர்ந்து மதிக்கும் வாசகமனங் களின் எண்ணிக்கை எந்நாளும் அதிகரித்தபடியே.

போலி, பம்மாத்து, என்பதான பொத்தாம்பொதுவான, கொச்சைத் தனமான தாக்குதல்களுக்கெல்லாம் அஞ்சாமல், அவற்றிற்கெல் லாம் அப்பாற்பட்டு, தமிழ் இலக்கிய வெளியில் கவி பிரம்மராஜ னின் பங்களிப்பு இன்றளவும் அதேஆர்வத்தோடும் வீரியத்தோடும் தொடர்கிறது.
உலக மொழிபெயர்ப்பாளர் தினத்தையொட்டி ஒரு வாசகராக கவி பிரம்மராஜனுக்கு நன்றி தெரிவிக்கத் தோன்றுகிறது.

கவியின் இருப்பும் இன்மையும் _ ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கவியின் இருப்பும் இன்மையும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
சிலர் சதா சர்வகாலமும் SELF PROMOTION
செய்தவாறும்
உரக்க மிக உரக்கக் கத்தி
சரமாரியாக அவரிவரைக்
குத்திக்கிழித்து
தம்மைப் பெருங்கவிஞர்களாகப்
பறையறிவித்த படியும்
பெருநகரப் பெரும்புள்ளிகளின்
தோளோடு தோள்சேர்த்து நின்று
தமக்கான பிராபல்யத்தை நிறுவப் பிரயத்தனப்பட்டுக்கொண்டும்
புதிதாக எதையோ எழுதுவதான
பாவனையில்
அரைத்த மாவையே அரைத்தரைத்து
நிறைவாசகரைத் தம்
குறைக் கவித்துவத்தால்
கதிகலங்கச் செய்துகொண்டிருக்க _
வேறு சிலர் வெகு இயல்பாக
கவிதையின் சாரத்தை நாடித்
துடிப்பாகக் கொண்டு
நிறையவோ கொஞ்சமோ
நல்ல கவிதைகள் எழுதி
யவற்றில் வாழ்வாங்கு வாழ்ந்து
இருந்த சுவடே தெரியாமல்
மறைந்துவிடுகிறார்கள்.