LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, August 13, 2018

நாமற்ற நாம்..... - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

நாமற்ற நாம்.....


‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)



நாமற்ற நாமாக நாம் ஆக விரும்பும்போது
நாமற்ற நாமாக புறப்படுகிறோம் நாமாக…….


முதலில் நம் முகபாவனைகள் மாறத்தொடங்குகின்றன.


உருப்படியாக எதையுமே சிந்திக்காதபோதும்
ஆழ்ந்த சிந்தனையிலிருப்பதாய்
நம் புருவங்கள் சுருங்கியிருக்கின்றன.


காழ்ப்புள்ளே கரைபுரண்டோட
கவனமாய் சிரித்து மகிழ்கிறது வாய்.


ஆகாயத்தில் இல்லாத நட்சத்திரங்களையும் எண்ணுவதாக
அத்தனை குத்திட்ட பார்வையோடு
அண்ணாந்துபார்த்துக்கொண்டிருக்கிறோம்.


கன்னத்தில் கைவைத்துக்கொண்டிருப்பது
கவிழ்ந்துவிட்ட கப்பலுக்காகவல்ல –
கவிழ்க்கப்போகும் கப்பலுக்காக என்பதை
சுயவிமர்சனமாக அல்லாமல்
தத்துவவாதியின் தோரணையுடன் 
சொல்லிக்கொள்வதில் தேர்ச்சிபெற்றுவிடுகிறோம்.


என்றாவது பயன்படக்கூடுமென்ற எண்ணத்திலோ என்னவோ
கண்ணில் படுபவரோடெல்லாம்
ஸெல்ஃபியெடுக்கத் தொடங்குகிறோம்.
முக்கியமாக வாழ்வில் ஒரே முறை பாரக்கும் பிரபலங்களோடு.


ஒருவர் உதிர்க்கும் சொற்களை
காதுமடல்கள் வரையே அனுமதித்தபடி
பரிவும் அக்கறையுமாய்க் கேட்பதாய் விழிகளை உறைநிலையில் விரித்துவைத்திருக்கிறோம்.


நாளாக நாளாக 
நிலைக்கண்ணாடியில் காணக்கிடைக்கும்
நம் முகம்
அறிமுகமற்றதாகிவிடுகிறது.


காலமல்ல அதற்குக்காரணம்; வேறு பல
என்று குறிப்புணர்த்துவதாய்
அது நம்மைப் பார்த்துக் கண்சிமிட்டிப் புன்னகைக்கும்போதெல்லாம்
அதீதக் கோபத்துடன் அதை சபித்தபடி
இன்னும் கொஞ்சம் பவுடரை அப்பிக்கொண்டு
தப்பித்து வெளியேறிவிடுகிறோம்
ஒப்பிக்கவேண்டிய பாடங்களோடு.


நள்ளிரவைத் தாண்டிய ஏதோ ஒரு துளி கணத்தில்
எங்கோ தொலைதூரத்திலிருந்து கேட்கும்
அடியாழ மனக்குரல்
நாக்குழற பலவீனமாக ஒலிக்கத்தொடங்கும்போது
நாம் நன்றாகத் தூங்கிவிடுகிறோம்.








Sunday, August 12, 2018

வார்த்தைப்பொட்டலங்கள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


வார்த்தைப்பொட்டலங்கள்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

(*சமர்ப்பணம் : வாழத்தெரியாதவர்களுக்கு)



எப்போதும் தயாராய் தேர்ந்தெடுத்த சில வார்த்தைகளை
நான்கைந்து பொட்டலங்களாகப்
பிரித்து முடிந்துவைத்துக்கொள்ள வேண்டும்.


தேவைக்கேற்றவாறு அவை சின்னதும் பெரியதுமாக இருக்கலாம்.
சிக்கென்று எஸ்எம்எஸ் டெம்ப்ளேட் போல்
அல்லது, சித்தி தொடங்கி வாணி ராணி சாகாமெகா சீரியல்போல்.


மறந்துவிடாமலிருக்க அவற்றின்மேல்
குறியீடுகள் அல்லது குறிப்புகள் தந்தால் நலம்.
கூடவே, செய்முறைவிளக்கங்களுமிருந்தால்
மிகவும் உதவியாயிருக்கும்
மற்றவர்களுக்கு;
ஒருவேளை நீங்கள் மறந்துவிட்டால் உங்களுக்குமேகூட.


என்றாலும் பொட்டலங்களின் பட்டியல்களையும்
அவற்றின் பயன்பாடுகளையும்
மனதில் உருப்போட்டுக்கொண்டுவிடுவதே
சாலச் சிறந்தது.


உதாரணமாக, முட்கள் என்று தலைப்பிட்ட பொட்டலத்தை
மலரென்று எடுத்துக்கொண்டு
நல்லவர்மேல் தவறுதலாகத் தூவிவிடலாகாது.
அதாவது, நாம் நல்லவராக எடுத்துச்சொல்ல
விரும்புகிறவர் மீது.


அதேசமயம் முட்களால் காயப்படுத்தப்படவேண்டியவராய்
நம் மனம்போனபோக்கில் தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் மீது
அந்தப் பொட்டலத்திலுள்ளதைப் பயன்படுத்தத்
தவறவேகூடாது.


பாராட்டுச்சொற்களடங்கிய பொட்டலத்தை
சரியான நேரமாகப் பார்த்துப் பயன்படுத்தப்
பழகவேண்டும்.


பாராட்டு என்பதன் பல்பரிமாணங்களை
உண்மையான, பொய்யான, காக்கா, ஜால்ரா,
ஐஸ்கட்டி அல்லது பனிமலை அன்னபிற _
தருணம் பார்த்து தக்கதொரு அளவில் கொடுக்க
தினமும் பயிற்சிசெய்தல் இன்றியமையாதது.


உண்மை பொய் என்பதெல்லாம்
நமக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகளைப் பொறுத்து
மாறுமாகையால்
அந்தப் பொட்டலங்களிலுள்ள சொற்களை 
அவ்வப்போது இடம்மாற்றிக்கொள்ளலாம்.


முற்றற்ற சொற்களின் முற்றத்தில்
இயல்பாய் நடைபழகுவோர் ஏறக்குறைய
இல்லாமலாகிவிட்ட பின்
சற்றும் பாரபட்சமற்றுச் சொற்களைக் கையாளுவோர்
முக்காலே மூணு வீசம்
முட்டாள்களாக்கப்பட்டுவிட்டபின்
வார்த்தைப்பொட்டலங்களின்றி வாழும் வழியேது….?
அட, வாழ்க்கைதான் ஏது….?



Ø  






Wednesday, August 8, 2018

அப்பால்….. ‘ரிஷி’ லதா ராமகிருஷ்ணன்)


அப்பால்…..
ரிஷி 

லதா ராமகிருஷ்ணன்)



என்னிடம் பூனை பேசியது'
'
என்றாள் சிறுமி.

பூனை பேசாது' என்றார் பெரியவர்.

'பூனையின் பேச்சுக்கு தனியாக
இரண்டு காதுகள் என்னிடமிருக்கின்றன -
பாவம் உங்களுக்கு இல்லையே'
என்று இருசெவிகளின் பக்கமாக
கைகளால் சிறகடித்துக்காட்டி
மெய்யாகவே பரிதாபப்பட்டாள் சிறுமி.

''எங்கே, பூனையை பேசச்சொல்லு
பார்க்கலாம் என்றார்
மெத்தப் படித்த அந்த மனிதர்
மிக எகத்தாளமாய்.

நமக்கு வேண்டுமென்றால்
'
நாம் தான் பூனையிடம் பேசவேண்டும்
என்ற சிறுமி
மியா….வ்.... மியாவ்.....என்று
மென்மையாக அன்பொழுக
தன்பாட்டில் அழைத்தபடியே
அவரைக் கடந்துசென்றுவிட்டாள்.

Shame(less) Rishi (Latha Ramakrishnan)

Shame(less)


Rishi
(Latha Ramakrishnan)



Playing to the gallery
with all its permutations and 
combinations
day-in and day-out
come so easily to some
as their second skin…..
an all-time hideout….

Truth is not just 
stranger than fiction…….


வரலாறு - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


வரலாறு

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


சில தலைகள் எப்போதும் கைவசம் தேவை.
குட்டக் குட்டக் குனியவைக்க;
பட்டப்பகற்கொலைகொள்ளைக்கெல்லாம் பொறுப்பேற்கச் செய்ய;
தட்டுவதாலேயே தன் கையை மோதிரக்கையாக்கிக்கொள்ள;
தன் முதலாளித்துவத்தை சாதுர்யமாய் மனிதநேயவிரிப்பின் கீழ் தள்ள;
சரித்திரக் குற்றவாளியாக்கி  சரேலென்று அறுத்தெறிய;
பொருத்தமற்ற பொய்யுரைத்து புழுதிவாரியிறைக்க;
பேயரசைப் போர்த்திமறைக்க;
பிணந்தின்னும் சாத்திரங்களை ஒருசாராருக்கே உரித்தாக்க;
அவரவர் அதிகாரவெறியை அருவமாக்கித் திரிய....

வலியோரும் தம்மை எளியோராய் காட்டிக்கொள்ள வாகாய்;
மலிவாகும் வாழ்வுமதிப்புகளுக்கெல்லாம் கழுவேற்றத் தோதாய்;
பொத்தாம்பொதுவாய் போகிறபோக்கில் குண்டாந்தடியால் ஒரு போடு போட்டு உயிர்போக்க;
ஊருக்காயதைச் செய்ததாய்த் தன்னைக் கொலைக்குற்றத்திலிருந்து சுலபமாய்க் காக்க;
தத்தம் தீவினைகளையெல்லாம் தார்மீக எதிர்வினையாக நிலைநாட்ட….


எளிய தலைகளாய் எப்போதும் நான்கைந்து தலைகளைத் தயராய்க் கைக்கொள்ளத் தெரியவேண்டும்.
போலவே, மொந்தைகளாக்கப்பட்ட எளிய தலைகளை
மந்தைகளாக்கப்பட்ட மூளைகளில் 
முதன்மை எதிரிகளாக மிகச் சுலபமாய் சுட்டிக்காட்டவும்.


நேரங்கிடைக்கும்போதெல்லாம் ஆள்காட்டி அடையாளங் காட்டி உருவேற்ற மறக்கலாகாது.


பெரிதாக எதையும் செய்யத் தேவையில்லை.
பலிகடாக்களாக வாகாய் சில எளிய தலைகளை எப்போதும்
வன்முறையார்ந்த சொற்களால் எட்டித்தள்ளி யுருட்டிக்கொண்டே போகத் தெரிந்தால் போதும்.
ஏற்றத்தாழ்வுகளுக்கெல்லாமான சகலரோகத்தொற்றாகக் 
காட்டத் தெரிந்துவிட்டால் போதும் -
பல்லக்குகளையும் பல்லக்குத்தூக்கிகளையும் உங்கள் உடைமைகளாக
பலகாலம் பத்திரப்படுத்திக்கொண்டுவிட முடியும்.








சட்டி அகப்பை நாம் - ’ரிஷி' (லதா ராமகிருஷ்ணன்)


சட்டி அகப்பை நாம்

’ரிஷி'
(லதா ராமகிருஷ்ணன்)


எதுவும்

தெரியாவிட்டாலென்ன 

பரவாயில்லை_

எல்லாம் தெரிந்ததாகக்

காட்டிக்கொள்வதே

(உன்) அறிவின் 

எல்லையான பின்….


முன்னுக்கு 

வந்துவிடால் பின்

உண்மையென்ன

பொய்யென்ன 

அறிவில்….


என்னவொன்று

கண்ணுங்கருத்துமாய் என்னதான் நீ மறைத்தாலும்

புரையோடிய புண்வலியாய்

பொய் கொல்லும் நின்று..




அச்சம்(என்பது மடமையடா!) ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

அச்சம்(என்பது மடமையடா!)


ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)






அசாதாரணக்கவிதைகளை எழுதியவர்
அதிசாதாரணக் கவிதைகளையும் எழுதினா
ரென்றால்
அடிக்கவந்துவிடுவார்களோ…..?