LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, August 13, 2018

நாமற்ற நாம்..... - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

நாமற்ற நாம்.....


‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)



நாமற்ற நாமாக நாம் ஆக விரும்பும்போது
நாமற்ற நாமாக புறப்படுகிறோம் நாமாக…….


முதலில் நம் முகபாவனைகள் மாறத்தொடங்குகின்றன.


உருப்படியாக எதையுமே சிந்திக்காதபோதும்
ஆழ்ந்த சிந்தனையிலிருப்பதாய்
நம் புருவங்கள் சுருங்கியிருக்கின்றன.


காழ்ப்புள்ளே கரைபுரண்டோட
கவனமாய் சிரித்து மகிழ்கிறது வாய்.


ஆகாயத்தில் இல்லாத நட்சத்திரங்களையும் எண்ணுவதாக
அத்தனை குத்திட்ட பார்வையோடு
அண்ணாந்துபார்த்துக்கொண்டிருக்கிறோம்.


கன்னத்தில் கைவைத்துக்கொண்டிருப்பது
கவிழ்ந்துவிட்ட கப்பலுக்காகவல்ல –
கவிழ்க்கப்போகும் கப்பலுக்காக என்பதை
சுயவிமர்சனமாக அல்லாமல்
தத்துவவாதியின் தோரணையுடன் 
சொல்லிக்கொள்வதில் தேர்ச்சிபெற்றுவிடுகிறோம்.


என்றாவது பயன்படக்கூடுமென்ற எண்ணத்திலோ என்னவோ
கண்ணில் படுபவரோடெல்லாம்
ஸெல்ஃபியெடுக்கத் தொடங்குகிறோம்.
முக்கியமாக வாழ்வில் ஒரே முறை பாரக்கும் பிரபலங்களோடு.


ஒருவர் உதிர்க்கும் சொற்களை
காதுமடல்கள் வரையே அனுமதித்தபடி
பரிவும் அக்கறையுமாய்க் கேட்பதாய் விழிகளை உறைநிலையில் விரித்துவைத்திருக்கிறோம்.


நாளாக நாளாக 
நிலைக்கண்ணாடியில் காணக்கிடைக்கும்
நம் முகம்
அறிமுகமற்றதாகிவிடுகிறது.


காலமல்ல அதற்குக்காரணம்; வேறு பல
என்று குறிப்புணர்த்துவதாய்
அது நம்மைப் பார்த்துக் கண்சிமிட்டிப் புன்னகைக்கும்போதெல்லாம்
அதீதக் கோபத்துடன் அதை சபித்தபடி
இன்னும் கொஞ்சம் பவுடரை அப்பிக்கொண்டு
தப்பித்து வெளியேறிவிடுகிறோம்
ஒப்பிக்கவேண்டிய பாடங்களோடு.


நள்ளிரவைத் தாண்டிய ஏதோ ஒரு துளி கணத்தில்
எங்கோ தொலைதூரத்திலிருந்து கேட்கும்
அடியாழ மனக்குரல்
நாக்குழற பலவீனமாக ஒலிக்கத்தொடங்கும்போது
நாம் நன்றாகத் தூங்கிவிடுகிறோம்.








No comments:

Post a Comment