LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, May 21, 2018

வழக்கு - ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)


ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)


இல்லையென்பதற்கும் பார்த்ததில்லை யென்பதற்கும்
இம்மிக்கும் பலமடங்கு மேலான வித்தியாசம்…….
எனவே இன்னொரு முறை சொல்லச் சொல்லிக் கேட்டேன்.
குருவி என்று எதுவும் கிடையாது என்றார் திரும்பவும்.
இன்றைய தலைமுறையைச் சேர்ந்தவர்.
புத்துசாலிதான்…..
குருவியைப் பார்த்ததில்லை யென்றால் புரிந்துகொள்ளலாம்.
குருவியென்று எதுவுமே இல்லையென்றால்…..
படங்களைக் காட்டினால்க்ராஃபிக்ஸ்என்றார்.
ஓவியங்களைக் காட்டினால் வரைந்தவரின்கிரியேட்டிவிட்டிஎன்றார்.
குருவிகள் சாகாவரம் பெற்று சிறகடித்துக்கொண்டிருக்கும் கவிதைகளை வாசித்துக்காட்டினால்
கவியின் மெய் பொய்தானேஎன்று கண்ணடித்தார்.
நானே பார்த்திருக்கிறேன் என்றேன்.
காட்சிப்பிழை என்றார்.
குருவி யொரு குறியீடு மட்டுமேஎன்றார்.
தூலமல்ல; சூக்குமமேயென்றார்.
ஆன்மா சூக்குமமா தூலமாயென்றேன்
அப்படியென்றால் குருவி ஆன்மாயென்கிறாயா?
ஆமென்றால் உன் கேள்விக்கு பதில் அதுவேஎன்றார்
அதிமேல்தாவியாய்.
பதிலுக்கு
குருவியின் குட்டிமூக்கு எத்தனை அழகு!’ என்றேன்.
தொட்டுப்பார்த்திருக்கிறாயா என்ன? கத்தாதேஎன்றார்.
கண்ணால் வருடிச் சிலிர்த்திருக்கிறேன்;
என் காமராவில் சிலையாய் வடித்திருக்கிறேன்என்றேன்.
யாருடைய கைக்கூலியாகவோ பொய்சாட்சியம் பகர்கிறாய்என்றார்
விட்டுவிடுதலையாகி நிற்பாய்என்ற பாரதி வரியை மொழியத்தொடங்குவதற்குள்
வசனம் பேசாதே, நிரூபிக்கும் வழியைப் பார்என்றார் வெற்றிப்புன்னகையோடு.
அன்றுமுதல் அலையோ அலையென அலைந்து,
ஏழு கடல் ஏழு மலை எத்தனையோ பாதாளம் வேதாளம் தாண்டி,
ஒரு குகைக்குள்ளிருந்த குருவியைக் கண்டுபிடித்து
இருநூறு இறக்கைகளை யதற்குப் பொருத்தி
ஒரே சமயத்தில் நாலாபக்கங்களிலும் அங்கிங்கெனாதபடி சிறகடித்துப் பறந்துகொண்டேயிருக்க
அதற்குக் கற்றுக்கொடுத்தேன்.
கச்சிதமாய் எச்சமிட்டுத் தன் இருப்பை
முற்றிலும் உண்மையென நிரூபிக்க
அந்த மனிதரின் உச்சிமண்டையை அடையாளங்காட்டியிருக்கிறேன்
.


·மனப்பிறழ்வு - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)




 ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)



ஒரு படைப்பாளியைவிட,
பெரிய அறிவாளியைவிட
திறமைசாலியைவிட,
தொலைநோக்குப்பார்வையாளரைவிட
சிந்தனாவாதியைவிட,
செயல்வீரரைவிட
நேர்மையாளனைவிட,
நீதிமானைவிட
இலட்சியவாதியைவிட,
மனிதநேயவாதியைவிட
முழுமனிதரைவிட
மாமனிதரைவிட
இவரன்ன இன்னும் பலரைவிட
ஒரு மண்ணாந்தையும் தன்னை
மேலானவராகக்காட்டிக்கொள்ள
மிக எளிய வழி
அவர்களைப் பைத்தியமாக
முத்திரை குத்திவிடல்.


சிருஷ்டி - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)



(
லதா ராமகிருஷ்ணன்)

கொஞ்ச நேரம் குழந்தையைக் கொஞ்சிவிட்டுத்தருவான்என்ற நம்பிக்கையில்தான் கைமாற்றியது.
எடுத்துக்கொண்டுபோனவன் வாய்கூசாமல் கூறுகிறான்
-
தன் வாரிசு என்று.
உன் குழந்தையெனில் என் கையில் எப்படி வந்தது?
நீ தானே விலைக்கு விற்றாய்?’
என்று ஊரின் நடுவில் நின்று பொய்யை உரக்கக் கூவி
அன்பில்லாத அரக்கனாய் அடையாளங்காட்ட முனைகிறான்
அந்த அன்புத் தந்தையை.
ஆறுகோடிகளை நேரில் கண்டபோதுகூட விரிந்ததில்லை
அந்தத் தகப்பனின் விழிகள்.
சுற்றிலுமுள்ள கண்டங்களிலெல்லாம் குத்துமதிப்பாக தலா
இரண்டு அல்லது இரண்டைந்து கூட கோபுரங்கள்
கட்டியெழுப்பியிருப்போரும்
ஒரே சமயத்தில் இருவேறு இடங்களில் பொழுதைக் கழிப்பது
ஏலாதுதானே!’ என்பான்.’
கற்றவனுக்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பல்லோ…..!
பெற்றெடுத்த பிள்ளைமேல் அவனுக்குக் கொள்ளைப்பிரியம்.
குழந்தை, வெள்ளைத்தாளில் விரிந்ததோர் புது உலகம்;
எழுதித்தீராப் பேரிலக்கியம்!
புத்திரசோகத்தில் அநாதரவாயுணர்ந்தாலும்
அந்தத் தகப்பன் கத்தியழவில்லை; கையேந்தித் தொழவில்லை.
ஆங்காங்கேயுள்ள ஆராய்ச்சிமணியை ஒலிக்கச்செய்தபடியே
தன் பிள்ளை திரும்பக் கிடைக்கவேண்டி
தக்கபல தர்க்கங்களும் ஆவணங்களோடும்
நடமாடும் நீதிமன்றங்களிலெல்லாம் வழக்காடியபடியே
சென்றுகொண்டிருக்கும் அந்த மனிதனைப் பார்த்து
பிள்ளை கடத்திய நபரும் அவரைப் போற்றிப்பாடும் சிலரும்
எள்ளிநகையாடிக்கொண்டிருக்கிறார்கள்
புலர்ந்தும் புலராததுமாயுள்ள நியாயத்தீர்ப்பு நாளை
வரவேற்பதாய்
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்புஎன்று
குரலெடுத்துப் பாடிக்கொண்டிருக்கிறது
தெருவோரப் பெட்டிக்கடை.


திசைகாட்டி - ரிஷி(latha Ramakrishnan)



ரிஷி(latha Ramakrishnan)




கிழக்கை மேற்கென்றும் தெற்கை வடக்கென்றும்
திரித்துச் சொல்வதற்கென்றே தயாரிக்கப்பட்டு
முக்கியத் திருப்பங்களில் நிறுவப்பட்டிருக்கும் திசைமானிகளின்
எதிரொலிகளாய் சில குரல்கள்
திரிபுரமிருந்தும் ஓங்கி யொலித்தபடியே…..
போகுமாறும் சேருமிடமும் தெரிந்து
ஆனபோதெல்லாம் பலமுறை போய்வந்து பழகிய பயணிக்கு
கிளைபிரியும் பாதைகள் _
அவற்றின் போக்கில் எதிர்கொள்ளவேண்டியிருக்கும்
அஃறிணை உயர்திணைகள்_ அசுர, தேவ கணங்கள்
அர்த்தனர்த்தங்கள்_ அதிரூப நர்த்தனங்கள்
ஆவென்று வாய்பிளந்திருக்கும் அதலபாதாளங்கள்
வா, சற்றே உட்கார்ந்து இளைப்பாறு
என்று அன்போடு அழைக்கும் சுமைதாங்கிக்கற்கள்
அத்தனையும் அத்துப்படி.
அகவொளியில் துலங்குமொரு வரைபடம் தீட்டி
பகலிரவாய் வழியோடியவாறு _ இப்படி
அவரே யவருக்கு திசைகாட்டி.