ரிஷி(latha Ramakrishnan)
கிழக்கை மேற்கென்றும் தெற்கை வடக்கென்றும்
திரித்துச் சொல்வதற்கென்றே தயாரிக்கப்பட்டு
முக்கியத் திருப்பங்களில் நிறுவப்பட்டிருக்கும் திசைமானிகளின்
எதிரொலிகளாய் சில குரல்கள்
திரிபுரமிருந்தும் ஓங்கி யொலித்தபடியே…..
போகுமாறும் சேருமிடமும் தெரிந்து
ஆனபோதெல்லாம் பலமுறை போய்வந்து பழகிய பயணிக்கு
கிளைபிரியும் பாதைகள் _
அவற்றின் போக்கில் எதிர்கொள்ளவேண்டியிருக்கும்
அஃறிணை உயர்திணைகள்_ அசுர, தேவ கணங்கள்
அர்த்தனர்த்தங்கள்_ அதிரூப நர்த்தனங்கள்
ஆவென்று வாய்பிளந்திருக்கும் அதலபாதாளங்கள்
’வா, சற்றே உட்கார்ந்து இளைப்பாறு’
என்று அன்போடு அழைக்கும் சுமைதாங்கிக்கற்கள்
அத்தனையும் அத்துப்படி.
அகவொளியில் துலங்குமொரு வரைபடம் தீட்டி
பகலிரவாய் வழியோடியவாறு _ இப்படி
அவரே யவருக்கு திசைகாட்டி.
No comments:
Post a Comment