LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, October 1, 2017

புவியீர்ப்பு விசை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

புவியீர்ப்பு விசை
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)





நான் பார்த்த நீயல்லாத நீ
பார்க்கும் நானற்ற நான்
தான் நான் தானா வலி ஆணா பெண்ணா
விடை தெரிந்து ஆவதென்ன
காலத்தீயில் கடையெரிந்து கரிந்து
உடல் வெந்து சாம்பலாகிப் போன பின்
வந்ததென்ன வருவதென்ன….


Ø  

தலையென்ன காலென்ன முண்டமென்ன
குலைகுலையாய் முந்திரிக்கா காய்த்த
மரத்தைக் கண்டதுண்டமாய் வெட்டிய கை
நட்ட செடிகளும் நிறையவே உண்டுதான்.
சுட்ட பழமும் சுடாத பழமும்
கட்புலனுக்கானதோ? அவரவர் கைப்பக்குவமோ…..


Ø  

நாத்தம் பிடித்த ஊத்தைக்குழியென்று
பாட்டுப் படித்தவாறே
காத்தடிக்கும் திசைபாத்து
நாளுமொன்றில் நாத்து நட்டுப் பாத்தி கட்டி
நீர்வார்த்துப் பூப்பறித்துப் போகும்
பெருந்தவ வித்தகத்தின் முன்
பேரன்பு எம்மாத்திரம்?


Ø  


இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க
எதற்கடீ நடந்தாய் அத்தனை காததூரம்?
உருவேற்றப்பட்ட ஊருக்கா உனக்கா, இல்லை _
உணர்வார்த்த நிறைவுக்கா?
அயர்விலூறிய உன் மனதை உள்சுமந்திருக்கும் கனம்
மாற்றியிருக்கிறது என்னை
யொரு மாபெரும் சுமைதாங்கிக்கல்லாய்.


Ø  

புண்ணியமா புருஷார்த்தமா என்று
கண்ணடித்துக் கேட்பவரிடம்
வலி புலப்படாதவாறு விடைதருவாள்:
எண்ணும் எழுத்தும் எழுத்துப்பிழையும்
எல்லாமும்தான்; எல்லாருக்கும்தான்.’


Ø  


மனமாகியிருந்த உடல்
தினங்கடந்து தினங்கடந்து
நடந்து கிடந்து நடந்து கிடந்து
இடமாகி
வரைபடமாகி
இன்றுறையும் வெறும்
இன்னொரு குறையுடம்பாய் ..…..


Ø  

எதுவானாலும் யோகம்
என்றொரு மனநிலை வாய்க்காது போனதில்
ஏகமாயிருந்த தாகம் தீராது
நாவறள நெஞ்சுலர நீரளைந்தபடியிருக்கும் பெண்ணை
களைப்பாற்றவேண்டி யிழுத்துத் தன்
மடியிருத்திக்கொள்ளும்
காலத்தின் அன்பிற்கு யார் என்ன கைம்மாறு செய்யவியலும்?


Ø  

வரலாறு வரள் ஆறாகியும் வறள் ஆறு வரலாறாகியும்
விட்டகுறை தொட்டகுறையாய் வாழ்க்கை....



Ø       

வெற்றி

வெற்றி
ரிஷி
(
லதா ராமகிருஷ்ணன்)

 
உன்னால் ஓடமுடியாதுஎன்கிறாய்;
உன்னால் ஓடவே முடியாதுஎன்கிறாய்;
உன்னால் அத்தனை தொலைவு ஓடமுடியாதுஎன்கிறாய்;
உன்னால் அத்தனை வேகமாக ஓடவே முடியாதுஎன்கிறாய்;
நீ முயலுமல்ல, நான் ஆமையுமல்லஎன்கிறாய்.
உன் கால்கள் கால்களெனில் என்னுடையவை
சிறகுகள்என்கிறாய்;
உன் மனத்துணிவு ஒரு கூடையெனில்
எனதோ கடற்கரைமணலளவுஎன்கிறாய்…….
உன் என்னிடையேயான
தன்மை முன்னிலை மயக்கத்தை எண்ணியபடி
அன்போ வன்மமோ அற்றுச் சொன்னேன்:
என்னை நீ வெல்லவே யியலாது _
ஏனெனில் நான் பந்தயத்தில் இல்லவே யில்லை.


"என்ன வேண்டுமானாலும் செய்வாள்."

"என்ன வேண்டுமானாலும் செய்வாள்."
ரிஷி
(
லதா ராமகிருஷ்ணன்)









வெற்றிக்காக அவள் என்ன வேண்டுமானாலும் செய்வாள்
தத்தமது மனதின் எண்ணிறந்த வன்புணர்வுகள்
படுகொலைகளையெல்லாம்
வசதியாய் புறமொதுக்கிவிட்டு
ஒவ்வொரு வார்த்தையையும் அதற்கான தனிப்பொருளை
சொற்களிடையே தூவிவைத்துக்
கண்ணால் கூடுதல் குறிப்புணர்த்தி
யுரைக்கிறார்கள்.
BIGG BOSS
போட்டியில் வேகமாய் முன்னேறிக் கொண்டிருக்கும் இருவர்.
(
தியாகசீலர்களோ, தீர்க்கதரிசிகளோ அல்லர்.)

"வெற்றிக்காக அவள் என்ன வேண்டுமானாலும் செய்வாள்."
வெறும் பெண்ணின் உடலாக மட்டும் அது இருந்தவரை
பிரச்னையேதுமில்லைஆரவ்களுக்கும்சினேகன்களுக்கும்
அவரனைய அனேகருக்கும்…..
அது படிப்படியே பெருகி
அச்சுறுத்தும் அலைகடலாகி
அணையாச் சுடரொன்றை பிடித்திருக்கும்
உடல் மீறிய உடலாய்
அவர்களெதிரில் விசுவரூபமெடுத்தபோது
அங்கீகரிக்கலாகாமல் அவதூறுகளைக்
கிசுகிசுக்கத்தான் முடிகிறது.
"வெற்றிக்காக அவள் என்ன வேண்டுமானாலும் செய்வாள்."

(Bigg Boss இல் பங்கேற்ற சுஜா வருணிக்கு)

பேச்சுரிமை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்

பேச்சுரிமை
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


நான் பேசிக்கொண்டேயிருப்பேன்;
நீ கேட்டுக்கொண்டே யிருக்கவேண்டும்.
இப்படித்தான் உண்மையான சமத்துவம்பேணவேண்டும்.
இனியேனும் தெரிந்துகொள்.
உன் நாவை அறுத்துக்கொடுத்துவிடு
அன்பளிப்பாய்.
பண்பாளர் நான்.
கண்ணால் கண்டால்தானா?
கற்பனையில் கண்டுனது அண்டைவீட்டுப்பெண்ணை
அவிசாரியாக்கி
குரலெடுத்துக்கூவுவேன் உரக்க இன்னும் உரக்க
ஆமாம்சாமிகளாகவேண்டும் நீயும் அவள் கணவனும்.
உன் வழிகாட்டியை அத்தனை இழித்துப் பழிப்பேன் நான்;
கிழிகிழியென என் தலைவரைக் கிழிக்க எழுந்தாலோ
பிற்போக்குவாதி நீ -
யுனக்கிருப்பதோ பெருவியாதி.
என் முழக்கங்களுக்கெல்லாம் என்றும்
பக்கவாத்தியக்காரராக இருந்தால் பிழைத்துப்போவாய்.
எக்குத்தப்பாய் ஏதேனும் எதிர்க்கேள்வி கேட்டாலோ
இந்தா பட்டம் –’ ஒநாய்
எகிறிப்போய்விடும் உன் டாப்பு
என்றுமே கிடையாது உனக்கு மாப்பு.
எதுகை மோனைக்காய் சொல்லவில்லை_
என்னிடமுண்டு
எல்லோரைப்பற்றியும் பலப்பல கோப்பு….
எனக்குத் தெரியும் _
இதிலுள்ள நான் நீயென்பதுனக்கு
நன்றாகவே தெரிந்தாலும்
நீயை நானாகவும் நானை நீயாகவும்
வசதியாய் இட்டுக்கட்டிக்கொண்டு
வழியேகுவாய்.
வட்டநாற்காலிப்பேரணியில் இவற்றை
உன் வரிகளாகச் சொல்லிக் கைத்தட்டல் பெறமாட்டா
யென்று என்ன நிச்சயம்?
வாராய் நீ வாராய் என வழிபார்த்திருக்கும் மேடைகள்....
சாடைமாடையாய் சகலரையும் சாடி யேச உனக்கு
சொல்லியா தரவேண்டும்?
மக்குப்ளாஸ்த்திரி யென்று என்னைத் தூற்றித் தூற்றியே
மேதாவியாக உன்னை உருவேற்றிக்கொண்டாயிற்று.
ஊதாரி நாதாரி என்று என்னைத் திட்டித்திட்டியே
பரோபகாரியாகிவிட்டாய்.
மிட்டா மிராசு நீ,
வெட்டிக்குக் குட்டிக்கரணம் போட்டுக்கொண்டிருப்பாய்
வேலைக்குச் சென்றால்தான்
எனக்கு ஒருவேளை சோறு.
ஜய்ஞ்ஜக் ஜால்ரா போட
வேறு ஆளைப் பாரு.


மறுபக்கம் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

மறுபக்கம்
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமென்பார்
வடிகலனில் பொடிகற்களைக் கலந்தபடி;
ஒற்றை நாசித்துவாரம் மட்டுமே உள்ளதென்பார்
பக்கவாட்டுத் தோற்றத்தைப் பார்த்தபடி;
கருத்துரிமைக்காய் குரல் கொடுப்பார்
கனகம்மாவின் பார்வையைக் கொடும்பாவி எரித்தபடி;
பெண்முன்னேற்றப் பதக்கங்களைத் தந்திருப்பார்
தத்தம் சானல்களில் அவளைத் துகிலுரிந்தபடி;
வீணாப் போனவர்கள் எண்ணிக்கை
எக்கச்சக்கமாகிவிட்டதிப்படி
யென்று(ம்)
அங்கலாய்த்தபடி
காணாப்பொணமாக்கிவிட்டுக்
கண்ணீரஞ்சலிக் கூட்டங்கள் நடத்தியபடி;
ஒற்றை விடைக்கேற்ற ஓராயிரம் கேள்விகள்
கற்றுத்தரப்பட்டுக்கொண்டிருப்பது எப்படி
யெப்படி
தப்படி
அப்படி
யிப்படி
படி படி படி நாளும் படி மேலும் படி
கற்கக் கசடறக் கற்றபின் அதற்குத் தக நில்லாமல் எப்படி?
காணாமல்போனகற்பவையைத் தேடி
திக்குத்தெரியாத காட்டில் ஓடியோடி
ஓடியோடி ஓடியோடி
ஓடியோடி ஓடியோடி….
இந்த நாளும் ஆடியடங்குகிறது
அட சர்தான் போடிஎன்றபடி


மனக்குருவி -வைதீஸ்வரன் கவிதைகள் - முழுநிறைவான தொகுப்பு








Wednesday, September 13, 2017

எச்சரிக்கை

எச்சரிக்கை
ரிஷி’ 
(லதா ராமகிருஷ்ணன்)


தற்கொலையை உயிர்த்தியாகமாக
உருவேற்றிக்கொண்டிருக்கிறார்கள்
தத்தமது வீட்டுப்பிள்ளைகளை
தனியார் பள்ளிகளில் படிக்கவைத்தபடியே;
திக்குக்கொன்றாய் அயல்நாடுகளுக்கு
அனுப்பிவைத்தபடியே
நம்மைச் சுற்றி நிறையவே
நீலத்திமிங்கலங்கள்.