LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, October 1, 2017

புவியீர்ப்பு விசை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

புவியீர்ப்பு விசை
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)





நான் பார்த்த நீயல்லாத நீ
பார்க்கும் நானற்ற நான்
தான் நான் தானா வலி ஆணா பெண்ணா
விடை தெரிந்து ஆவதென்ன
காலத்தீயில் கடையெரிந்து கரிந்து
உடல் வெந்து சாம்பலாகிப் போன பின்
வந்ததென்ன வருவதென்ன….


Ø  

தலையென்ன காலென்ன முண்டமென்ன
குலைகுலையாய் முந்திரிக்கா காய்த்த
மரத்தைக் கண்டதுண்டமாய் வெட்டிய கை
நட்ட செடிகளும் நிறையவே உண்டுதான்.
சுட்ட பழமும் சுடாத பழமும்
கட்புலனுக்கானதோ? அவரவர் கைப்பக்குவமோ…..


Ø  

நாத்தம் பிடித்த ஊத்தைக்குழியென்று
பாட்டுப் படித்தவாறே
காத்தடிக்கும் திசைபாத்து
நாளுமொன்றில் நாத்து நட்டுப் பாத்தி கட்டி
நீர்வார்த்துப் பூப்பறித்துப் போகும்
பெருந்தவ வித்தகத்தின் முன்
பேரன்பு எம்மாத்திரம்?


Ø  


இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க
எதற்கடீ நடந்தாய் அத்தனை காததூரம்?
உருவேற்றப்பட்ட ஊருக்கா உனக்கா, இல்லை _
உணர்வார்த்த நிறைவுக்கா?
அயர்விலூறிய உன் மனதை உள்சுமந்திருக்கும் கனம்
மாற்றியிருக்கிறது என்னை
யொரு மாபெரும் சுமைதாங்கிக்கல்லாய்.


Ø  

புண்ணியமா புருஷார்த்தமா என்று
கண்ணடித்துக் கேட்பவரிடம்
வலி புலப்படாதவாறு விடைதருவாள்:
எண்ணும் எழுத்தும் எழுத்துப்பிழையும்
எல்லாமும்தான்; எல்லாருக்கும்தான்.’


Ø  


மனமாகியிருந்த உடல்
தினங்கடந்து தினங்கடந்து
நடந்து கிடந்து நடந்து கிடந்து
இடமாகி
வரைபடமாகி
இன்றுறையும் வெறும்
இன்னொரு குறையுடம்பாய் ..…..


Ø  

எதுவானாலும் யோகம்
என்றொரு மனநிலை வாய்க்காது போனதில்
ஏகமாயிருந்த தாகம் தீராது
நாவறள நெஞ்சுலர நீரளைந்தபடியிருக்கும் பெண்ணை
களைப்பாற்றவேண்டி யிழுத்துத் தன்
மடியிருத்திக்கொள்ளும்
காலத்தின் அன்பிற்கு யார் என்ன கைம்மாறு செய்யவியலும்?


Ø  

வரலாறு வரள் ஆறாகியும் வறள் ஆறு வரலாறாகியும்
விட்டகுறை தொட்டகுறையாய் வாழ்க்கை....



Ø       

No comments:

Post a Comment