LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Friday, September 5, 2014

நன்றொன்று சொல்வேன் - கட்டுரை

நன்றொன்று சொல்வேன்

_ லதா ராமகிருஷ்ணன்

[* 2014, ஆகஸ்ட் மாத ‘பல்சுவைக் காவியம்’ இதழில் வெளியாகியுள்ளது]





நான் அந்தச் சிறுகதையை எழுதி இருபது வருடங்களுக்கும் மேல் இருக்கும். கதையின் தலைப்பு கூட உடனடியாக நினைவுக்கு வர மறுக்கிறது. ‘’போகவேண்டிய தூரம்’’ என்று நினைக்கிறேன். வெளியே எங்கோ வேலையாய் போய்விட்டு இரவு வீடுதிரும்பும் வழியில், வயிற்றில் கனக்கும்சிறுநீரைவெளியேற்ற முடியாமல் ஒரு பெண் தவிக்கும் அவலம்; ’அதற்காகஅருகில் பரிச்சயமானவர் வீடு ஏதாவது இருக்குமா, அப்படியே இருந்தாலும் இரவு நேரத்தில் அங்கே கதவைத் தட்டி உடனே சிறுநீர் கழிக்கக் கழிப்பறை எங்கே இருக்கிறது?’ என்று கேட்பது எத்தனை அநாகரீகமாக இருக்கும் என்றெல்லாம் அந்தப் பெண்ணின் மனம் பரிதவித்துப்போகும்.

இன்றும் கூட நிலைமையில் பெரிய மாற்றமொன்றுமில்லை. பெண்களுக்கு மட்டும் தான் இந்தப் பரிதவிப்பு; ஆண்கள் எல்லோரும் தெருவில் எங்கு வேண்டு மானாலும் ஒதுங்கிநின்று சிறுநீர் கழித்துவிட முடியும் என்று பொதுப்படையாகச் சொல்லிவிடுவது சரியல்ல. போதுமான அளவு பொதுக்கழிப்பறைகள் பெரிய நகர்ப்புறப் பகுதிகளில் கூட இல்லை. உதாரணத்திற்கு, அகன்று விரிந்த அண்ணாசாலையில் இந்த முனையில் கிண்டியிலிருந்து அந்த முனையில் ஹிக்கின்ஸ் பாத்தம் வரை எத்தனை பொதுக் கழிப்பறைகள் இருக்கின்றன, அப்படி ஏதேனும் இருக்கின்றனவா என்று பார்த்தாலே போதும். மேற்கு சைதாப்பேட்டை 18K பேருந்துநிலையப் பகுதியில் ஓட்டுநர்கள்  -நடத்துனர்கள் கூட, கழிப்பறை வசதியற்ற நிலையில் தெருவோரம் நின்று சிறுநீர் கழிக்கும் அவல நிலை இன்றளவும் தொடர்கிறது.

சிறுநீர் கழித்தல், மலங்கழித்தல் போன்ற இயற்கை உபாதைகளைப் போக்கிக் கொள்ள உரிய வழிகள் இல்லையென்றால் அதனால் ஏற்படும் உடல்நலக்குறைவு கள் ஏராளம். மூன்று நான்கு வருடங்களுக்கு முன் புத்தகக் கண்காட்சி நடந்த சமயம் அரங்குகளில் காலை முதல் மாலை வரை இருந்த விற்பனைப் பெண்பிரதிநிதிகளில் எனக்குத் தெரிந்த சிலர் போதுமான கழிப்பறை வசதி இல்லாத காரணத்தால் தங்களுக்கு ஏற்பட்ட வயிறு சார்ந்த உபாதைகளைப் பற்றி வருத்தத்தோடு குறிப்பிட்டார்கள். இது குறித்து சில கட்டுரைகள் கூட அப்போது வெளியானதாக நினைவு. தொடர்ந்து வந்த வருடங்களில் புத்தகக் கண்காட்சியில் கழிப்பறை வசதிகள் சற்றே மேம்பட்டன என்பது ஆறுதலளிக்கும் விஷயம்.

ஜூன் 24 தேதியிட்ட தினமணி நாளிதழில்தமிழகத்த்தில் பாதுகாக்கப்பட்ட கழிவறையைப் பயன்படுத்துவது குறித்து அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகள் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என மாநில திட்டக்குழுவின் துணைத்தலைவர் சாந்தா ஷீலா நாயர்திறந்த வெளியில் மலம் கழிப்பதை தடை செய்யும் மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவது குறித்து சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் தெரிவித்ததாகச் செய்தியொன்று வெளியாகியிருந் தது. திறந்த வெளியில் மலம் கழிப்பதால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு மக்களுக்குப் பல்வேறு விதமான நோய்கள் ஏற்படுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர் ஒரு பகுதியில் எத்தனை கழிவறைகள் உள்ளன என்பதைவிட அவை எந்தளவுக்கு பராமரிப்புடன் பயன்படுத்தப்படுகின்றன என்பதே முக்கியம் என்று கூறியுள்ளது மிகவும் உண்மை.

மக்கள் நல அரசு என்பது கண்டிப்பாக மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதை யும் அவர்களுடைய வாழ்வாதாரங்களையும் உடல்நலனை யும் பாதுகாப்பதற்கான சுகாதார நலத்திட்டங்களை முழுமுனைப்போடு தொடர்ந்த ரீதியில் மேற்கொள்ள வேண்டியதையும் தன் தலையாய கடமையாகக் கொள்ளவேண்டும்.

நடப்பாண்டு மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் கிராமப்புறப் பகுதிகளில் மேம்பட்ட சுகாதாரம், உடல்நலனை சாத்தியமாக்கும் பொருட்டு கூடுதலாக நிதி ஒதுக்கப் பட்டுள்ளதாகவும் மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாளை சிறந்த  முறையில் கொண்டாடும் நோக்கில், 2019க்குள் கிராமப்புற வீடுகள் ஒவ்வொன்றுக் கும் முழு நிறைவான உள்கட்டமைப்புவசதிகளும், நலத்திட்டங் களும் கிடைக்க போய்ச்சேர வழிவகுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் கழிப்பறை வசதியும் அடக்கம். ஆனால், ஒவ்வொரு நிதி ஒதுக்கீட்டிலும் இந்த வாசகம் இடம்பெற்றுவருகி றதுதான். எனில், இந்த முயற்சிகள் ஏன் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதில்லை என்பதே நம் முன் நிற்கும் கேள்வி.

இப்பொழுது வட மாநிலங்களில் மலங்கழிக்க அதிகாலை வேளையில் திறந்த வெளிக்குப் போகும் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளானதாக வெளிவந்த ஓரிரு செய்திகளுக்குப் பிறகுதான் அரசுகளின் கவனம் இதுகுறித்துத் திரும்பியிருக்கிறதென்று சொல்லப்படுவது உண்மையெனில் அது எத்தனை அவலமான நிலை.

மத்திய மாநில அரசுகள், அவர்களுடைய மொழிவழக்கில், போர்க்கால நடவடிக்கையாக, போதுமான அளவு பொதுக்கழிப்பறை வசதிகளை மக்களுக்கு உருவாக்கித் தருவதிலும், கழிப்பறைகளை தூய்மையாக சுகாதாரமாக வைத்திருக்கவேண்டியதன் அவசியத்தையும் குறித்த விழிப்புணர்வைப் பரவலாக்கி, அதை நடைமுறையில் செயல்படுத்துவதற்கான வழிவகைகளை யும் ஏற்படுத்தித் தர முன்வருவதில்லை என்பதே இத்தனை கால நடப்புண் மையாக இருந்துவந்திருக்கிறது.

பார்வையிழந்தவர்களுக்கான விடுதியொன்றில் கழிப்பறைகள் எத்தனை அசுத்த மாக இருந்தன என்று முன்பு ஒரு கூட்டத்தில் மிகவும் வேதனையோடு தெரிவித் தார் திரு.கிறிஸ்துதாஸ் ..எஸ். பள்ளிகள், கல்லூரிகள் முதலான கல்விக் கூடங்களில் கழிப்பறைகள் எத்தனை மோசமான நிலையில் உள்ளன என்பது குறித்த செய்தியொன்று சமீபத்தில் வெளியாகியிருந்தது. ரயில் நிலையங்கள், ரயில்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். பொதுவாக, கழிப்பறை வசதி என்பதில் போதிய கவனம் செலுத்தாத போக்கையே, அதற்கான தேவையை உணராத போக்கையே, அரசுக்குச் சொந்தமான கட்டிடங்கள், நிறுவனங்களிலும் சரி, தனியாருக்குச் சொந்தமான கட்டிடங்கள், நிறுவனங்களிலும் சரி அதிகம் காண நேர்கிறது. (சமீபத்தில் ஓய்வூதிய அலுவலகம் ஒன்றில் அங்கு வருகின்ற மூத்த குடிமக்கள் அமர நாற்காலிகளே இல்லை, சரியான கழிப்பறைவசதியே இல்லை என்பதைப் பார்த்தபோது மிகவும் வருத்தமாக இருந்தது).

இவற்றில் விதிவிலக்குகள் உண்டுதான். ஆனால், அவை விதிவிலக்குகளாகவே இருக்கின்றனவே என்பதுதான் நம் ஆதங்கம். பல அலுவலகங்களில் உயர் அதிகாரிகளுக்கென ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கும் கழிப்பறைகள் அத்தனை துப்புரவாக இருக்கும். ஆனால், மற்ற ஊழியர்கள், பொதுமக்களின் பயன் பாட்டிற்காக உள்ள கழிப்பறைகள் ஏனோதானோவென்று பராமரிக்கப்பட்டு வரும் நிலையைப் பார்க்கும்போது வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது.

இதில் இன்னொரு மிக வேதனையான விஷயம், பள்ளிகளில் மிகச் சிறிய குழந்தைகள் சிறுநீர் கழித்தல், மலங்கழித்தல் என்பதை அவமானகரமான விஷயமாக, தண்டனைக்குரிய விஷயமாகப் பார்க்கும்படி நடத்தப்படுவதுதான். மூன்று வயது முதலே இன்று குழந்தை பள்ளிக்குச் செல்லும் நிலையில், சிறுநீர் கழிக்க, மலம் கழிக்க வேண்டிவந்தால் உடனே ஆசிரியைகளும், ஆயாக்களும் அதற்காக முகஞ்சுளிப்பதும், குழந்தையை வசைபாடுவதும், அதன் முதுகில் ஒன்று போடுவதும், அதன் கையை கரகரவென்று இழுத்துக்கொண்டு போவதும் பரவலாகக் காணக்கிடைக்கும் காட்சி. இது குழந்தையின் உளவியலை மிகவும் பாதிக்கக்கூடியது. ஆரம்பப்பள்ளிகளில்( குறிப்பாக அரசுப் பள்ளிகளிலும், மற்றும் அரைகுறை ஆங்கில மீடியம் பள்ளிகளிலும் இது அதிகம்.

அருகிலுள்ள ஒரு பள்ளியில் மலங்கழித்த பின் குழந்தையின் பின்புறம் தென்னந்துடைப்பத்தால் அழுத்தி இழுத்து அரைகுறையாய் தண்ணீர் ஊற்றிக் கழுவிவிடுவாராம் ஆயா. கேட்கவே மனம் பதறியது. [அதன் மென்மையான புட்டத்தில் சிவந்து காணப்படும் கோடுகளே எங்களுக்கு என்ன நடந்தது என்பதை உணர்த்திவிடும். சமயங்களில் குழந்தைகளும் அழுதுகொண்டே விஷயத்தைச் சொல்லும். குழந்தைகளுக்கெனக் கொடுத்தனுப்பும் தின்பண்டங்களைக் கூட சில ஆயாக்களும், ஆசிரியைகளும் எடுத்துச் சாப்பிட்டு விடுவதுண்டு. ஏதாவது கேட்டால் குழந்தையை இன்னும் அடித்துவிடப்போகிறார்களே என்றுதான் வாயை மூடிக்கொண்டிருக்கவேண்டியிருக்கிறதுஎன்று வருந்திச் சொல்லும் பெற்றோர்கள் நிறையவே உண்டு).திட்டு வாங்கக் கூடாதே, அடி வாங்கக் கூடாதே என்ற அச்சத்தில் குழந்தை சிறுநீர் கழிக்கவேண்டிய தேவையை வெளிப்படுத் தாமல் வகுப்பில் பரிதவித்துக்கொண்டிருக்கும். இறுதியில், அடக்கவொட்டாமல் வகுப்பறையிலேயே சிறுநீர் அல்லது மலம் கழித்துவிட்டாலோ அதிக அடியும் அவமானமுமே அதற்குக் கிடைக்கும். அகவலியும் புறவலியுமாய் கூனிக்குறுகிப் போகும் குழந்தை. மேலும், எப்பொழுதுமே துர்நாற்றம் வீசிக்கொண்டிருக்கும் கழிப்பறையும் சிறுநீர் கழித்தல், மலங்கழித்தலை ஒரு பெரிய அவமானகரமான செயல்களாகவே குழந்தைகளுக்குப் புரியவைக்கிறது.

ஆயாக்கள் அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாயிருக்கலாம். ஒரு ஆசிரியர் ஒரு ஆயா அதிகக் குழந்தைகளைக் கவனிக்கவேண்டிய நிலை இருக்கலாம். ஆனால், இந்தக் காரணங்களெல்லாம் வேறு மட்டங்களில் நிவாரணம் தேடிக் கொள்ளப்படவேண்டியவையே தவிர இதற்காய் குழந்தைகளைக் கொடுமைப் படுத்துவதை, அலட்சியமாக நடத்துவதை, மதிப்பழிப்பதை எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாது. இந்த நிலை ஏற்படாதிருக்க ஆயாக்களுக்கும் ஆசிரியை களுக்கும் இது குறித்த அவசியம் கடைப்பிடித்தாக வேண்டிய வழிகாட்டிக் குறிக் கோள்களும், நுண்ணுணர்வுகளும் கற்றுத்தரப்பட வேண்டியது அவசியம். அவற்றை அவர்கள் மீறினால் அதற்கான பதிலளிக்கும் பொறுப்பை அவர்கள் ஏற்கும்படி செய்யவேண்டும்.

கழிப்பறை தொடர்பான பிரச்னை ஒன்றிரண்டு கட்டுரைகளால், கருத்தரங்கு களால் முடியக்கூடிய விஷயம் அல்ல.. சுத்தமான, பாதுகாப்பான கழிப்பறைகளின் அவசியம், அவை போதுமான எண்ணிக்கையில், போதுமான சுகாதாரத்துடன் பராமரிக்கப்பட்டுவரவேண்டிய தேவை, அவற்றிற் கான தேவையை மக்கள் உணரச் செய்தல், விழிப்புணர்வுப் பிரச்சார இயக்கங்கள், கல்விக்கூடங் களிலேயே இது குறித்த புரிதலை ஏற்படுத்தவேண்டிய தேவை என ஒரு முழுநிறைவான அணுகு முறையே நேரிய பயனை அளிக்கும்.

அந்தந்த துறைகளில் அர்ப்பணிப்போடு இயங்கிவரும் தன்னார்வத்தொண்டு நிறுவனங்களிடமும் அரசு இத்தகைய பணிகளை ஒப்படைக்கலாம். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகில் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றால் மிகவும் சுத்தமாகப் பராமரிக்கப் பட்டுவரும் கழிப்பறைக் கூடத்தை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறமுடியும். PPP என்று சுருக்க மாகச் சொல்லப்படும் PUBLIC - PRIVATE PARTICIPATION என்ற வழிமுறையை, அரசுகள் பின்பற்றி இந்த சமூகப் பிரச்னைகளை அரசுகள் விரைவாகத் தீர்த்துவைக்க முடியும். இன்றுகார்ப்பரேட்டு கள்தங்கள் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மக்கள் நலத் திட்டச் செயல்பாடுகளுக் காகப் பயன்படுத்தியாக வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ள சூழலில் மக்கள் நலப்பணியில் இந்த வழிமுறையைக் கையாண்டு நிறைய நலத்திட்டங்களை நிறைவேற்ற வழியுண்டு.

மக்கள் நலனே முக்கியம் என்னும்போது அரசின் செயல்திட்டங்கள், கொள்கைத்திட்டங்கள் CLOSED DOOR ACTIVITY என்பதாக இல்லாமல் கட்சிபேதங்களைக் கடந்த அளவில் தகுதி\வாய்ந்த நிறுவனங்கள், வல்லுநர்கள் மற்றும் பொதுமக்களின் பங்கேற்பைக் கோருவதாகவும், வரவேற்பதாகவும் அதற்கு வழிவகுப்பதாகவும் அமையவேண்டியது அவசியம்.




போகவேண்டிய தூரம் - சிறுகதை

சிறுகதை
போகவேண்டிய தூரம்.
’அநாமிகா’
(லதா ராமகிருஷ்ணன்)

* கணையாழி, ஜூன் 1999 இதழில் வெளியான சிறுகதை.
’நினைப்புக்கும் நடப்புக்கும் நடுவே’ சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது



கத்திப்பாரா ஜங்க்‌ஷன் தாண்டும்போதே இரவு ஒன்பதரை மணிக்கு மேல் ஆகிவிட்டிருந்தது. கிண்டி வந்துவிட்டது என்ற நினைப்பே நிம்மதியளித்தது.  ‘இன்னும் பத்து நிமிடங்களில் சைதாப்பேட்டை வளைவு வந்துவிடும்… முடிந்தால் நடந்துபோய் விடலாம். இல்லை, ஏதாவது ஆட்டோவைப் பிடித்துக்கொண்டு…. இல்லை, அது முடியாது. கைப்பையில் ஐந்து ரூபாய்க்கும் குறைவாகத்தான் இருக்கிறது. ‘ரயில் பாஸ் இருக்கிறதே’ என்ற நினைப்பில் இன்னும் இரண்டு மூன்று ரூபாய் திரட்டிக்கொள்ளாமல் தாம்பரத்திற்குப் போனது இன்றைய நிலவரத்தின்படி அசட்டுத் துணிச்சல் தான். என்ன செய்வது….? எப்படியோ, கிண்டி வரை வந்தாகிவிட்டது….

ஆனால், வண்டி நேராகப் போகாமல் கிண்டி எஸ்டேட் புறமாய் திரும்பிவிட்டது. மறியல் ஊர்வலமெல்லாம் முடிந்து ஆளுநர் மாளிகையிலிருந்து  அண்ணாசாலை யெல்லாம் ஒரே போக்குவரத்து நெரிசலாம். வண்டிகளெல்லாம் மனிக்கணக்காக ஆங்காங்கே காத்துக்கொண்டிருக்கின்றனவாம்.

யோசிக்க நேரமின்றி வண்டி வேறு தடத்தில் விரைந்துகொண்டிருந்தது. கே.கே.நகர் கண்டது. உதயம் திரையரங்கைப் பார்த்ததும் இதைவிட ஜெயராஜ் பக்கமாய் இறங்க வழியில்லை என்ற கணக்கில் இறங்கியாகிவிட்டது. கூட இறங்கியவர்கள் சௌதியில் காணாமல் போய்விட்டார்கள். அவர்களில் பெண்கள் இறந்ததாக ஞாபகமில்லை.

வகை தெரியாமல்  சற்று நேரம் தியேட்டர் பக்கமாய் இருந்த பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தாள். கடந்துசென்ற கார், சைக்கிள்கள் சிலவற்றிலிருந்து ஓரிருவர் திரும்பிப் பார்த்தார்கள். 5E வந்தால் ஏறி மேட்டுப்பாளையத்தில் இறங்கி எப்படியாவது மூச்சைப் பிடித்து நடந்துவிடலாம் என்று மனதில் ஒரு நப்பாசை.

“இங்கே எந்த வண்டியும் வராதும்மா. எதுக்கு வீணா நின்னுகிட்டிருக்கே?” போகும் வழியில் தகவல் தெரிவித்துவிட்டுச் சென்றார் ஒரு ரிக்‌ஷா ஓட்டுநர். ஆட்டோ ஒன்றும் கண்ணில் படவில்லை. இரவு பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டது. வனாந்திரத்தில்  நின்றுகொண்டிருப்பது போல் அசாதாரண அமைதியில் மஞ்சள் ஒளியில் நீண்டகன்ற வீதிகள் ஓய்ந்து கிடந்தன.

இனி இங்கே நின்று பலனில்லை. கிடுகிடுவென்று நடக்க ஆரம்பித்தாள். அடிவயிறு குலுங்கியது. மூன்று மணிக்கு, சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் ஆரம்பமாவதற்கு முன் சிறுநீர் கழித்தது. பேருந்தில் அழுந்த அமர்ந்திருந்ததால் அதன் கனத்தை ஓரளவு மறக்க முடிந்திருந்தது. இப்பொழுது குடல் சரிந்து தொங்குவதுபோல் ஒவ்வொரு அடிக்கும் முள்ளாய் குத்திற்று.

’பொதுக் கழிப்பறை எதுவும் பார்வையில் படவில்லை. பட்டால் மட்டும் துணிந்து உள்ளே போய்விட முடியுமா என்ன? அதுவும் இந்த அகாலநேரத்தில்…’ அடிக்கொரு தடவை பின்னால் யாரேனும் வருகிறார்களா என்று பார்த்துக்கொண்டாள். ரயில் நிலையத்தில் ஸ்டேஷனுக்கும், மேம்பாலப் படிகளுக்கும் இடையேயான வெட்டவெளியில் அடிக்கொன்றாய் ஆண்கள் நின்றுகொண்டு சர்வசகஜமாய் சிறுநீர் கழிப்பது தினசரிக் காட்சி. பெண்கள் தலையைக் குனிந்துகொண்டோ, அல்லது, அந்தப்புறமாய் முகத்தைத் திருப்பிக்கொண்டோ செல்வார்கள். ‘இந்தத் தருணத்தில் ஆணாய் மாற முடிந்தால் எத்தனை நன்றாயிருக்கும்,’ என்று சிறுநீரின் பாரத்தில் மனம் ஏங்கியது. இந்த ஏகாந்த இரவில், வெறிச்சோடிய வீதியில் எந்த ஒரு மூலையில் வேண்டுமானாலும் அடிவயிற்றின் பாரத்தை இறக்கிவைத்துவிட முடியும்.  பின், இந்த அகாலவேளையில் நடப்பதைக்கூட சற்று லேசான மனத்துடன் செய்ய முடியும் என்று தோன்றியது. பயத்தின் பாரத்தோடு சிறுநீரின் பாரமும் சேர்ந்ததில் மனம் மிகவும் பலவீனமாகியிருப்பதை உணர முடிகிறது.

நல்லவேளை, தலைக்குமேல் கொஞ்சம்போல் நிலா இருந்தது. மஞ்சள் விளக்குகள் எரியாத பிரதேசங்களிலும் நிலா மங்கலாக ஒளியேற்றிக்கொண்டிருந்தது. நிலாவை, நட்சத்திரங்களையெல்லாம் மனதாரப் பார்த்து மாமாங்கமாகிவிட்டது.

‘நோ டைம் டு ஸ்டாப் அண்ட் ஸ்டேர்’ என்பதோடு ‘நோ ப்ளேஸ்’ என்பதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் எந்த இடத்திலும் காற்று மட்டும் தன்னைப் புறக்கணித்துவிட முடியாதபடிக்கு தடவிக்கொடுத்துக்கொண்டேயிருக்கிறது! காற்றின் வருடலை இந்த ஆளரவமற்ற இரவில் துல்லியமாக உணரமுடிகிறது. ஆனால் முழுமையாக அனுபவிக்க முடியாதபடி மனதிலும் அடிவயிற்றிலுமாய் நிறைந்து தளும்பும் பயமும் சிறுநீரும்….

ரயில்பாதை வழியாகச் செல்லும்போது சில கூலிப்பெண்கள் நின்றபடியே சிறுநீர் கழிப்பதைப் பார்த்ததுண்டு. இவர்கள் இதை இயல்பாகச் செய்கிறார்களா, வேறு வழியில்லாமல் செய்கிறார்களா என்ற கேள்வி எழும். காலைவேளைகளில் ரயிலில் வரும்போது நுங்கம்பாக்கம் சுடுகாட்டுப்பக்கமெல்லாம் அங்கங்கே ஆண்களும், பெண்களுமாய் மலம் கழித்துக்கொண்டிருப்பார்கள். அப்போதைக்குத் தங்கள் அடையாளம் அழித்துக்கொள்ளும் முயற்சியாய் ரயில் வரும்போது முகங்களைக் குனிந்துகொண்டோ, அல்லது லுங்கியால் முகத்தை மறைத்துக்கொண்டோ காலைக்கடன் கழித்துக்கொண்டிருப்பார்கள். குடிசைப்பகுதி மனிதர்களோ, ஒண்டுக்குடித்தனக்காரர்களோ…. இதை மட்டும் இறக்கிவிட்டால் பின் நாள் முழுவதையும் இவர்களால் தைரியமாக எதிர்கொள்ள முடியும்.

மத்தியதர வர்க்கத்துப் பெண் அப்படியெல்லாம் ரயிலடியிலோ, வீதியிலோ ‘ஒண்ணு’க்கிருந்துவிட முடியாது. கூட யாரேனும் பெண் துணை இருந்தாலாவது தெருவோரம் ஒரு நிமிடத்தில் போய் முடித்துவிடலாம். ஒரு எதிர்பார்ப்போடு நிமிர்ந்தவள் கண்களில்பத்துப் பதினைந்து அடிகள் முன்னால் சென்றுகொண்டிருந்த ஒருவன் தென்பட்டான். பார்வைக்குக் கண்ணியமானவனாய்த் தெரிந்தான். சற்றே காலை எட்டிப் போட்டாள்.

அரவம் கேட்டுத் திரும்பிப் பார்த்தவன் நடையை துரிதப்படுத்தினான். இவளுக்கு அவமானமாயிருந்தது. சமாதானப்படுத்திக்கொண்டாள். ‘நாம் அவனைப் பற்றி சந்தேகப்படுவதைப் போல் அவனுக்கும் நம்மை சந்தேகப்பட உரிமையிருக்கிறது. இந்த நேரத்தில் தற்காப்புணர்ச்சியில் ஏற்படும் அவன் சந்தேகம் இயல்பானதும், நியாயமானதும் கூட….’

ஒரு கணம், பத்தடி தூரத்தில் நடந்துகொண்டிருந்த அந்த மனிதன் ஒரு பெண்ணாக இருக்கக்கூடாதா என்று ஏக்கமாயிருந்தது. ’இல்லை, சினிமாவில் வருவதுபோல், அந்த மனிதன் ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்தும் மனதிற்கு அத்தனை நெருக்கமாக உள்ள ஆனந்தரூபனாக இருக்கக்கூடாதா’ என்ற தாபம் இருந்தாற்போலிருந்து  மனதிற்குள் பரவியது.

“அதென்ன, ஆனந்தரூபன் என்ற பெயர்?”

“என்னைப் பார்த்தாலே எல்லோர் மனங்களிலும் ஆனந்தம் பொங்குமாம்!”

‘மீதிப்பேர் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், என்னை உன் நினைப்பே பொங்கவைக்கிறது!’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்.

நாட்கணக்கில் ஒரு வரி கூட எழுத மாட்டான். ரணமாகித் தவிக்கும் மனதில் ‘இனி இவன் சங்காத்தமே கூடாது’ என்ற தீர்மானம் பிறக்கும். ஆனால், தான் முன்மொழியும் தீர்மானத்திற்கு வழிமொழிய அவளால் என்றுமே இயன்றதில்லை.! அத்திபூத்தாற்போல் வரும் கடிதமும், அதையடுத்து நேரும் சந்திப்பும் தீர்மானங்களையெல்லாம் அடித்துக்கொண்டுபோய்விடும்! ஆறு மாதமோ, முக்கால் வருடமோ கழித்துநேரக்கூடிய அடுத்த சந்திப்பிற்காக மனம் அன்றிலிருந்தே கால்கடுக்க நிற்கத் தொடங்கும்!

‘இது என் மனதின் பலமா, பலவீனமா?’ என்று எத்தனையோ முறை தன்னைத்தானே கேட்டுக்கொண்டிருக்கிறாள்.

‘மனம் நிறைக்கும் அன்பில் கவசகுண்டலங்கள் கரைந்தோடிப் போய்விடுகின்றன. வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும் காத்திருப்பில் கோபத்திற்கு இடமில்லை,’ என்பதாகத் தானென்றுமே விடை கிடைக்கும்!

‘இந்த ஏகாந்த இரவில் ரூபனோடு இழைந்து நடக்கக் கொடுத்துவைத்திருக்க வேண்டும்!’ என்ற நினைப்பில் முகம் கனிந்து உள்ளுக்குள் சூடு பரவியது. அடிவயிற் றின் கனம் கூடியது. அவசரமாய் ரூபன் நினைப்பை அகற்றிக்கொண்டு முன்னே சென்றுகொண்டிருக்கும் மனிதனை வேகவேகமாக நெருங்கி, கண்ணியமான குரலில், “ஸார், நீங்களும் ஜெயராஜ் தியேட்டர் பக்கம் தான் போகிறீர்களா?” என்றாள்.

அவளைப் பார்த்ததும் அவன் கலவரமும் சற்றே அகன்றிருக்க வேண்டும். “ஆமாம்”, என்றான்.

“இன்றைக்குப் பார்த்து தாம்பரம் போகவேண்டியதாகிவிட்டது. இப்போ, இப்படி…”

“பரவாயில்லை, என்னோடு வாருங்கள்.”

“நன்றி”, என்று அவன் பின்னே நடக்கத் தொடங்கினாள்.

அவன் எச்சரிக்கையாக இரண்டடி இடைவெளியில் முன்னால் நடக்க, தானும் அதே எச்சரிக்கையோடு இரண்டடி பின்னாலேயே, அதே சமயம், ‘அவனோடு வருபவள்’, என்பதாகவும் பிறருக்குப் புரிபடும் விதத்தில் நடந்துசெல்வதைப் பார்க்க அவளுக்கே வேடிக்கையாக இருந்தது. ’போகும் வரை எதுவும் ஏடாகூடமாக நேராது’ என்ற நம்பிக்கையும், கூடவே, ‘வழியில் ஏதாவது நேர்ந்துவிடலாம்’ என்ற பயமும் தொடர்ந்துவந்தன.

ரொம்பத் தெரிந்த ஆண்களிடம் கூட, “சிறுநீர் கழித்துவிட்டு வருகிறேன்” என்று சகஜமாகக் கூறிவிட முடிவதில்லை.

‘சே, தேவையில்லாமல் எதெதற்கெல்லாம் அவமானமாக உணரவேண்டியிருக்கிறது’ என்று சலிப்பாக இருந்தது. ‘ரூபனாக இருந்தால் ஒரு ஓரத்தில் மறைப்பாகக் கால்களை அகற்றிவைத்தபடி அந்தப்புறம் பார்த்து திரும்பிநிற்கச் சொல்லி ஒரு நொடியில் பாரத்தை இறக்கிவைத்துவிடலாம்…..’ ஆனால், யோசித்துப் பார்த்ததில் அவனோடு கழித்த நேரங்களில் கூட இப்படிப்பட்ட இக்கட்டான சந்தர்ப்பங்கள் வாய்த்ததாக நினைவுக்கு வரவில்லை.

அக்கம்பக்கத்தில் தெரிந்தவர்கள் வீடு ஏதேனும் உண்டா என்று யோசித்துப் பார்த்தாள். எதுவும் நினைவுக்கு வரவில்லை. அப்படியே இருந்தாலும் இரவு பத்தரை பதினோறு மணிக்குக் கதவைத் தட்டி, குசலம் விசாரித்து, கையோடு “டாய்லெட் எங்கே?” என்று கேட்டால் எத்தனை அபத்தமாக இருக்கும்….

விரைந்து விரைந்து நடப்பதில் முழங்கால்களும், முழங்கால்களுக்குக் கீழுள்ள ஆடுசதையும், பாதங்களும், விரல்நுனிகளும் வலிக்க ஆரம்பித்திருந்தன. போதாததற்கு அடிவயிறு வேறு பாறாங்கல்லாய், வெடித்துவிடும்போல் இருந்தது. ‘போகிற போக்கில் மூத்திரம் பெய்துகொண்டே போனால் என்ன’ என்பதாக மனதில் தோன்றிய எண்ணத்தைத் தள்ளிவிட்டாள். முன்பு மருத்துவமனையில் பெரியம்மா கால் எலும்பு முறிந்துகிடக்க, இரண்டு மாதங்களுக்கும் மேல் ‘மூத்திரக் குடுவை’ வைத்ததுண்டு. ’சிறுநீர் கழிப்பதற்கும், மலம் கழிப்பதற்கும் மற்றவர்களைத் தொந்தரவுபடுத்தவேண்டி யிருக்கிறதே ‘ என்று முடிந்த மட்டும் அடக்கிக்கொண்டிருந்துவிட்டு, பின், தாங்க முடி யாத கட்டத்தில் கண்கலங்க இவளை அழைப்பாள் பெரியம்மா. பிரியும் சிறுநீரின் அளவு ஒரு ஹார்லிக்ஸ் புட்டிக்கு மேல் இருக்கும் என்று இவள் குத்துமதிப்பாகக் கணக்கிட்டதுண்டு.

’இவனுக்கும் ஒருவேளை சிறுநீர் பாரமாக அழுத்திக்கொண்டிருக்கலாம்… ஏதாவது ஓரமாய் சிறுநீர் கழிக்கலாம் என்று இவன் யோசித்துக்கொண்டிருக்கும்போது நான் வந்து சேர்ந்துகொண்டுவிட்டேனோ என்னவோ….!’

அபூர்வமாக ஓரிருவர் இவர்களை சைக்கிள், அல்லது, மோட்டார் சைக்கிளில் கடந்துசென்றார்கள். ‘நல்லவேளை, அவனிடம் விலையுயர்ந்த பொருள் அல்லது அணிகலன் எதுவுமில்லை. தன்னிடமும் எதுவுமில்லை’ என்ற நினைப்பு நிம்மதியளித்தது. ‘பார்ப்பவர்கள் தங்கள் இருவரையும் என்னவாய்க் கணித்துச்செல்கிறார்களோ…. சகோதரன் – சகோதரி…? கணவன் - மனைவி…? கள்ளக்காதலர்கள்…? எவரும் என்னவோ நினைத்துக்கொள்ளட்டும்! எக்கேடோ கெட்டுப்போகட்டும். இந்த இருண்ட கால்வாய்க் கரையோரத்தைக் கடந்துமுடிந்தால் போதும், ஜெயராஜ் தியேட்டர் வந்துவிடும்….’

ஏறத்தாழ முக்கால்மணிநேரமாக நடந்துகொண்டிருந்தார்கள். “நீங்கள் எந்தத் தெருவைச் சேர்ந்தவர்?” என்று கேட்க வாயெடுத்து அடக்கிக்கொண்டாள். அவனுக்கு அந்தக் கேள்வி விகல்பமாகப் படக்கூடும். அவனும் அவ்வண்ணமே நினைத்திருக்கலாம். வாய் மூடி நடந்தான்.

ஒருவர் பின் ஒருவராய் கால்வாய்க் கரையோரம் நடந்துசெல்கையில் பீடி குடித்த வண்ணம் இருவர் எதிரில் வந்தனர். ஒரு கணம் மூச்சு நின்றது இவளுக்கு. தங்களுக்குள் மெல்லிய குரலில் என்னவோ கூறிய வண்ணம் அவர்கள் இருவரும் இவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்று, பின், தங்கள் வழியே நடந்தனர்.

“மேடம், ஜெயராஜ் தியேட்டர் வந்தாகிவிட்டது.”

’வீட்டிற்குத் துணையாக வரவேண்டுமா? என்று கேட்க நினைத்து கேட்டால் தப்பாகிவிடுமோ என்று தயங்குகிறானா? அல்லது, ’இனிமேல் நாம் ஒன்றாகப் போவது சரியில்லை என்று சொல்ல விரும்பி, சொல்லத் தயங்குகிறானா….? பாவம், அவன் வீட்டில் அவனுக்காகக் காத்துக்கொண்டிருப்பார்கள்…. இளம் மனைவி பயந்துபோய் தவித்து நிற்கலாம்…’

இருளில் அவன் முகத்தைக் கூடச் சரியாகப் பார்க்க முடியவில்லை. “இனிமேல் நான் போய்க்கொள்கிறேன். ரொம்ப தேங்க்ஸ்” – மனப்பூர்வமாக நன்றி கூறினாள்.

சற்றே தயங்கினான். பிறகு, ‘விட்டால் போதும் என்பதாய் பொடிநடையாய் சடுதியில் காணாமல் போனான்.

அடிவயிற்றின் வலி மேர்புறமும் பரவிவிட்டது. வாயிலெடுக்கவரும்போல் இருந்தது. பெருமாள் கோயில் சந்தில் திரும்பியதும் மீண்டும் இருளும், வெறுமையும், வழியைக் கவ்வியது. ஒவ்வொரு மூடிய வீட்டிலிருந்தும் கண்கள் தன்னைக் கவனிப்பதாய் பிரமையேற்பட்டது. கோயிலைத் தாண்டிச் செல்லும்போது இரண்டு இளவட்டங்கள் கொச்சையான தமிழ்த் திரைப்படப் பாடல் ஒன்றை சீழ்க்கையடித்துக்கொண்டெரெ சைக்கிளில் அசுரவேகத்தில் வந்தார்கள்.

’இருளில் இவர்களுக்கு என் முன் நரை தெரிய வழியில்லையே’ என்று மனம் பதைத்துப் போயிற்று.

’வயதை எடுத்துக்காட்டும் நரை பின் தலையில் வந்திருந்தாலாவது அடிக்கடி பார்க்கவேண்டியிருக்காது. ஆனால், கொத்தாக முன் தலையில் படர்ந்திருக்கிறதே’ என்று கண்ணாடியில் முகம் பார்க்கும்போதெல்லாம் மனதிற்குள் வருத்தம் சேரும். இன்று அந்த நரையே பாதுகாப்புக் கவசமாக மனதிற்குப் படுகிறது….!’

”பாவம்டா… இந்த நேரத்தில் நடந்துவரவேண்டியதாகிவிட்டது இவர்களுக்கு. மறியல் செய்கிறவர்கள் இதையெல்லாம் யோசித்துப்பார்க்கக் கூடாதா?” என்று விர்ரென்று அவளைக் கடந்துசென்ற சைக்கிளின் பின்னிருக்கையில் அமர்ந்திருந்தவன் தன் சகாவிடம் சொல்வது அவளுக்குக் கேட்டது.

அழத் தோன்றியது.

இன்னும் ஓரிரு நிமிடங்களில் வீடு வந்துவிடும் என்ற நினைப்பின் நிம்மதியில் வயிற்றின் வலி கூட அப்பால் அகன்றுவிட்டதான பிரமையில், பாராட்டுகளும் பரிசுகளும் அற்ற ஒரு பந்தயத்தின் இறுதிக்கட்டமாய் இன்னும் வேகமாய் நடந்தாள்.





0

மலாய்-தமிழ் கவிஞர்கள் சந்திப்பு

மலாய்-தமிழ் கவிஞர்கள் சந்திப்பு

சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டுவிழா அரங்கில்
ஜூன் 10, 11 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற நிகழ்வு

-லதா ராமகிருஷ்ணன்

 [*28 ஜூலை, 2014 திண்ணை இணைய இதழில் வெளியானது]





சொல்லவேண்டிய சில.....

வாழ்க்கைக்குக் கவிதை தேவையா? வாழ்க்கைக்குக் கவிதையால் என்ன பயன்? வாழ்க்கைக்கும் கவிதைக்கும் என்ன தொடர்பு? கவிதையைப் படிப்ப தால் என்ன கிடைக்கிறது? கவிதை எழுதுவதால் என்ன கிடைக்கிறது _ இவற்றிற்கும்  இவையொத்த பிறவேறு கேள்விகளுக்கும் நம்மிடம் உள்ள ஒரே பதில்  “காற்றைப் போன்றது கவிதை   

மனதுக்கும் அறிவுக்கும் இடையே பாலம் அமைப்பது கவிதை. மனதின் காயங் களுக்கு மருந்தாவது கவிதை. கனவுகளுக்கும் கற்பனைகளுக்கும் வண்ணமும் வடிவமும் தருவது கவிதை. நேற்று இன்று நாளையைக் கூட நொடியில் இரண்டறக் கலந்துவிடுவது, இடம் பெயர்த்துவிடுவது கவிதை. மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தைத் தொலைக்க வழியமைத்துக்கொடுப்பது கவிதை. அன்பின் மொழியாவது கவிதை. திரவத்தை திடமாக்கி, திடத்தை திரவமாக்கி _ ஐயோ, இந்தக் கவிதை என்னவெல்லாம் மாயம்   செய்கிறது! ஒரு நல்ல கவிதை எனக்கு மொழியைப் பிழையறப் பழக்குகிறது, மொழியின் அளப்பரிய சாத்தி யக்கூறுகளை அறிமுகப்படுத்துகிறது, வாழ்க்கை பயண மாகும் பல்வேறு வழிகளைப் பரிச்சியமாக்குகிறது, வாழ்வின் மகத்துவத்தை எனக்கு உணர்த்துகிறது, தன்னுள் ததும்பும் பரிவதிர்வின் காரணமாக என்னுள் இரண்டறக் கலந்துவிடுகிறது.....

அதென்னவோ தெரியவில்லை, கவிதையென்றாலே மனம் உருகத் தொடங்கி விடுகிறது. அதனால்தான் கலைஞன் பதிப்பகம் தமிழ்-மலாய் கவிஞர்கள் சந்திப்புக் கருத்தரங்கை நடத்த உள்ளதாகவும், அதை ஒருங்கிணைத்துத் தரும்படியும், கருத்தரங்கில் இடம்பெறும் கவிஞர் களின் கவிதைகள் மூலத்திலும் ஆங்கில மொழிபெயர்ப்பிலும் இடம் பெறும் தொகுப்பு ஒன்றை உருவாக்க தமிழ்க் கவிஞர்கள் ஏறத்தாழ 25 பேரிடம் கவிதைகளைக் கோரிப் பெறும்படியும் என்னிடம் கேட்டுக்கொண்டபோது மிகுந்த மகிழ்ச்சியோடு ஆர்வமாக ஒப்புக் கொண்டேன். இன்னொரு காரணம், தமிழில் தரமான கவிஞர் கள் கணிசமான எண்ணிக்கையில் இருந்தபோதும் ஒரு சிலரைத் தவிர மிகப் பலர் தமிழ் மண்ணைத் தாண்டி [தமிழ் மண்ணிலேயே கூட] அறியப்படாத வர்களாகவே இருக்கிறார்கள். தமிழ்க்கவிஞர்கள் போதுமான அளவு அயல் மொழிகளில், குறிப்பாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படாத நிலையே இதற்குக் காரணம். இந்த நிலையை மாற்ற என்னால் முடிந்த அளவு முயற்சி செய்யவேண்டும் என்ற எண்ணமும் எனக்குக் கிரியாவூக்கி..

அடர்செறிவான கவிதைகளுக்குத் தமிழில் என்றுமே பஞ்சமிருந்ததில்லை. தொன்று தொட்டு இன்று வரை. எனக்குத் தெரிந்த, என்னிடம் தோழமை கொண்ட தரமான கவிஞர்களே குறைந்தபட்சம் 100 பேர் உண்டு! இதில் 25 பேரைத் தெரிவு செய்து கொள்வது என்பது உண்மையாகவே கடினமான காரியமக இருந்தது. ஒரு வசதிக்கு சில அடிப்படைகளை மனதில் கொண்டு கவிஞர்களைத் தேர்ந்தெடுத்த பின் அவர்களிடம் தொலைபேசியிலும், மின்னஞ் சல் மூலமாகவும் கவிதைகள் அனுப்பித்தரும்படியும், கருத்தரங்கில் பங்கேற் றுச் சிறப்பிக்கும்படியும் கேட்டுக்கொண்ட போது அத்தனை ஆர்வத்தோடு சம்மதம் தெரிவித்து கவிதைகளை அனுப்பித்தந்த அவர்களுடைய அன்பும், தோழமையும், கவிதையின்பால் அவர்கள் கொண்டிருக்கும் அளவிலா பற்றும் ஈடுபாடும் என்னை உண்மையிலேயே நெகிழ்ந்துபோக வைத்தது!

கலைடாஸ்கோப் கோலங்களாய் அவர்களுடைய கவிதைகளிலும், [அவ்வாறே மலாய் கவிஞர்களின் கவிதைகளிலும்] விரிந்த வாழ்க்கைவெளியில் அலைந்து திரியும் பெரும் பேறு பெற்றவளானேன்!

TRANSLATION CAN BE AT BEST APPROXIMATION   என்ற கூற்று முற்றிலும் உண்மை. மூலமொழியின் அழகும் அர்த்தமும் தொன்மமும் உட்குறிப்புகளும் உவமான உவமேயங்களும், பேச்சுவழக்கும் இலக்குமொழியில் பாதி வெளிப் பட்டாலே அதிகம். தமிழில் எழுதும் என் சக-கவிஞர்களையும், மலேய மொழிக் கவிஞர்களையும் [தமிழாக்கத்திலிருந்து] ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்போது என்னால் இதை அனுபவரிதியாக உணர்ந்துகொள்ள முடிந்தது. முப்பது வருடங்களுக்கும் மேல் சமகாலத் தமிழ்க்கவிதையோடு பரிச்சயங் கொண்டவள் என்ற அளவில் கவிதைகள் எனக்கு அர்த்தமான வகையில், என் ‘வாசகப் பிரதிகளையேஅடிப்படையாகக் கொண்டு ஆங்கிலத்தில் அவற்றை மொழிபெயர்த்து முடித்தபோது  ஏற்பட்ட மனநிறைவைக் காட்டிலும் இன்னும் நன்றாக மொழிபெயர்த்திருக்கலாமே என்ற எண்ணமே மேலோங்கியது. ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு இந்த மனக்குறை ஏற்படுவது இயல்பு. என்றாலும் முடிந்தவரை மூலக்கவிதைக்கு நியாயம் சேர்க்கும்படியாகவே என் ஆங்கில மொழிபெயர்ப்பு இருக்கும் என்ற நம்பிகையும் எனக்கு உண்டு.

TRANSLATION IS BI-LINGUAL AS WELL AS BI-CULTURAL என்பார்கள். மலேயக் கவிஞர்களின் கவிதைகளில் வெளிப்பட்ட பண்படு-கலாச்சாரம், சொல்வழக்கு, உவமான உவமேயங்கள் போன்றவற்றை என்னால் முழுமையாக உள்வாங்கிக் கொள்ள முடிந்ததாகச் சொல்ல இயலவில்லை. என்றாலும், மானுட ஏக்கங்களும், துயரங்களும், லட்சிய வேட்கைகளும் எங்கும் ஒருபோலத் தானே! அந்த வகையில் மலாய் மொழிக் கவிஞர்களுடைய கவிதைகளுக்குள்ளும் என்னால் ஒரு வாசகராக உள்நுழைய முடிந்தது; பரிவதிர்வை உணர முடிந்தது! அந்த அடிப்படையில் அவர்களுடைய கவிதைகளையும் ஆங்கிலத் தில் என்னால் முடிந்த அளவு நேர்த்தியாக மொழிபெயர்த்திருக்கிறேன்

மலாயாக் கவிஞர் முகமது லுட்ஃபி இஷாக் எழுதியுள்ள கவிதை போருக்குப் பின்னான நகரையும், மனித மனநிலையையும் கவிநயத்தோடு படம்பிடித்துக் காட்டுகிறது. துவா சுஜானா எழுதிய கவிதை உலகம் ஒரு கோலி உருண்டை தான் அதற்குமேல் ஒன்றும் இல்லை. வெறும் ஒரு விளையாட்டு. அவ்வளவேஎன்று கச்சிதமாய் வாழ்க்கையை அர்த்தப்படுத்திவிடுகிறது! நிம் யோர்ஸாவின் கவிதை இன்றைய பாசாங்குத்தனமான வாழ்க்கையை நுட்பமாக எடுத்துக்காட்டுகிறது. ஸை ஃபுலிழான் யோர்ஸாவின் கவிதை உருவிலும் உள்ளடக்கத்திலும் மிக நுட்பமான நவீன கவிதையாய் மிளிர்கிறது. இப்படி மலாய்க் கவிஞர்கள் ஒவ்வொருவருடைய கவிதை குறித்தும் நிறையவே அடிகோடிட்டுக் காட்ட முடியும். மலாய் கவிஞர்களின் கவிதைகளை வாசிப் பதும், மொழிபெயர்ப்பதும் எனக்கு அர்த்தமுள்ள அனுபவமாயிற்று.

இது கலைஞன் பதிப்பகத்தின் 60வது ஆண்டுநிறைவு. கலைஞன் பதிப்பகத்திற்கு என் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த கருத்தரங்கு – மொழி பெயர்ப்புப்ப் பணியை நம்பிக்கையோடு என் கையில் ஒப்படைத்தமைக்காக கலைஞன் பதிப்பகத்தாருக்கு,  என் என்றுமான நன்றி உரித்தாகிறது.


இந்த வருடம் ஜூன் மாதம் 10, 11 தேதிகளில் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற மலாய்-தமிழ் கவிஞர்கள் சந்திப்பின் போது வெளியான நூலில் நான் எழுதியுள்ள என்னுரை தான் மேலேயிருப்பது. இந்தக் கருத்தரங்கை ஒருங்கிணைத்துத் தரவேண்டும், 20, 25 தமிழ்க் கவிஞர்களிட மிருந்து கவிதைகள் கேட்டு வாங்கி அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தரவேண்டும் என்று கலைஞன் பதிப்பக இயக்குநர் திரு.நந்தன் மாசிலாமணி கேட்டுக்கொண்டபோது நான் ஒப்புக்கொண்டதற்கு இரண்டு காரணங்கள். முதற்காரணம் மேலே உள்ளது. இரண்டாவது காரணம், கலைஞன் பதிப்பகம் தான் என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பான அலைமுகம் நூலை வெளியிட்டது .[’என்னைத் தாண்டி என் கவிதைகள் வாழக்கூடாது. அநாதர வாய் அவை அபத்தமான விமர்சனங்களை எதிர்கொள்ளக்கூடாது என்றெல் லாம் கருத்துரைத்தபடி திரு. கோவை ஞானி போன்றோர் என் கவிதைகளைத் தொகுப்பாக்க முன்வந்த போது மறுத்துக்கொண்டிருந்தேன். “அத்தகைய பயமெல்லாம் உங்களுக்கு வேண்டாம், நீங்கள் உயிர்வாழும் போதும் சரி, போனபின்னாலும் சரி, அப்படியெல்லாம் யாரும் உங்கள் கவிதைகளைப் பொருட்படுத்தப்போவதில்லை!” என்று நண்பரொருவர் அனுபவ பூர்வமாய் தைரியம் சொன்ன பிறகு தான் சரி என்று ஒப்புக்கொண்டேன்! ].

கலைஞன் பதிப்பகத்தின் 60ஆவது ஆண்டுவிழாவைக் கொண்டாடும் பொருட்டு இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருப்பதாகக் குறிப்பிட்ட கலைஞன் பதிப்பக நிர்வாக இயக்குனர் திரு. நந்தன் மாசிலாமணி புத்தக விற்பனை என்பது வெறும் வியாபார மல்ல; அது நல்ல விதைகளை சமுதாயாத்தில் தூவுவதற்கு ஒப்பானது என்று தன் தந்தையும் கலைஞன் பதிப்பக நிறுவருமான திரு.மாசிலாமணி அடிக்கடி கூறுவதை நினைவுகூர்ந்து அந்த நோக்கிலான ஒரு செயல்பாடாகவே இந்த தமிழ்-மலாய் கவிஞர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருப்பதாய் தெரிவித்தார். மலேஷியத் தமிழ்க்கவிஞர்கள் இந்தியாவுக்கு வந்ததுண்டு என்றாலும் மலேயமொழிக் கவிஞர்கள் வருவது இதுவே முதல் தடவை என்று குறிப்பிட்டார்.

கவிஞர்கள் தேர்விலும், கவிதைகள் தேர்விலும் எனக்கு முழு சுதந்திரம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டபோது திரு.நந்தன் உடனடியாக சரி என்று சொன்னார். இறுதி வரை சொன்ன சொல்லைக் காப்பாற்றினார்.

மலாய் கவிஞர்களை வழிநடத்திக்கொண்டுவந்தவர்கள் திரு. கிருஷ்ணன் மணியம், மலாய் பல்கலைக்கழக, இந்திய ஆய்வுக்கல்வித் துறைத் தலைவராக இயங்கி வருபவர், முனைவர், மோஹனதாஸ், மற்றும் மலேஷியாவிலுள்ல PENA என்ற அமைப்பைச் சேர்ந்த முனைவர் முகமது சலீஹ் ரஹமத் ஆகியோர். சென்னையைச் சேர்ந்த கவிஞர்கள் 25 பேரும். மலாய் கவிஞர்கள் பேரும் இந்த இரு நாள் நிகழ்வில் கவிதைகள் வாசித்தனர். அவரவர் தாய்மொழியில் கவிஞர்கள் ஒன்றிரண்டு கவிதைகள் வாசிக்க பின்னர் அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பு வாசிக்கப்பட்டது. திரு.கிருஷ்ணன் மணியமும், திரு.மோஹனதாசும் மிகச் செறிவாக மலாய்க் கவிஞர்களின் கவிதைகளையும், உரைகளையும், கேள்விகளையும் மொழிபெயர்த்துத் தந்த விதம் குறிப்பிடத்தக்கது. மிகவும் உத்வேகத்தோடு, சிரித்த முகத்தோடு தங்கள் பணிகளைச் செய்தார்கள். அதேபோல், சென்னைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வித்துறையைச் சேர்ந்த இணைப்பேராசிரியர் முனைவர் ஒப்பிலா மதிவாணன் இந்த இருநாள் நிகழ்வு நல்ல முறையில் நடந்தேற ஆரவாரமில்லாமல் உறுதுணைபுரிந்ததும் கட்டாயம் குறிப்பிடவேண்டியது. இருநாள் விழாவின் துவக்க விழா, நிறைவு விழா நிகழ்ச்சிகளைத் தன் இனிமையான குரலில் சிறப்பு விருந்தினர்களை ரத்தினச் சுருக்கமாக அறிமுகம் செய்துவைத்தார் முனைவர் அபிதா சபாபதி.[தலைவர், தமிழ்த்துறை, டாக்டர் எம்.ஜி.ஆர்-ஜானகி கலைக் கல்லூரி]

துவக்கவிழாவின் போது சிறப்புவிருந்தினர்களாக சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் திரு, தாண்டவன், சென்னையிலுள்ள மலேஷிய தூதர் திருமதி சித்ரா ராமையா, தமிழக அரசுச் செயலர்கள் இருவர் அழைக்கப்பட்டிருந்தனர். தமிழின் குறிப்பிடத்தக்க மூத்த கவிஞர் யாரையேனும் சிறப்புவிருந்தினர்களாக சென்னைப் பல்கலைக்கழகம் கூப்பிட்டிருந்திருக்கலாமே, ஏன் கூப்பிடவில்லை என்று வருத்தமாக இருந்தது. அதிலும், சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த பிரமுகர் ஒருவர் ‘புரியும் படி கவிதை எழுதவேண்டும் என்ற ரீதியில், வைரமுத்துவை உதாரணங்காட்டிப் பேசிய போது பெண்ணியத்தைப் போலவே ஏன் நவீன கவிதையையும், [அவற்றின் வளர்ச்சி நிலைகளைக் கணக்கிலெடுத்துக்கொள்ள மறுப்பவர்களாய்] மிகவாரம்பத்திலிருந்தே பேசப்புகுவேன் என்று பிடிவாதம் பிடித்துவருகிறார்கள் சிலர் என்று கோபம் வந்தது. என்னுடைய முறை வந்த போது, தமிழ்நாட்டில் நவீன கவிதை வெளியில் இயங்கிவருபவர்களுக்கு பெரிய அந்தஸ்து என்றைக்குமே இருந்ததில்லை, எதிர்ப்பும் புறக்கணிப்புமே என்றும் பரிசாகக் கிடைத்துவருகிறது என்றும் [’மிடில் மாகஸீன்ஸ்’ எனப்படும் இதழ்கள் நிறைய வெளியாகத் தொடங்கியதும்  நவீன கவிதை வெளியில் இயங்கிவருவோருக்கு நிறைய இடம், அங்கீகாரம் கிடைக்கும்என்று மனதில் மகிழ்ச்சி ஏற்பட்டது. ஆனால், மேல் சாதி, ஆணாதிக்கம் என்று பல்வேறு காரணங் கற்பிக்கப்பட்டு நவீன கவிதை வெளியில் அமைதியாக எந்த அங்கீகாரமுமில்லாமல் இயங்கிவந்தவர் களெல்லாம் அடக்குமுறையாளர்களாகச் சித்தரிக்கப்படுவார்கள் என்றோ, அவ்விதமாய் அவர்கள் வெகு எளிதாக வெளியேற்றப்பட்டு இந்த விரி கவி வெளியை சிலர் தமக்கு மட்டுமானதாக்கிக் கொண்டுவிடக்கூடும் என்றோ அப்போது முன்னூகிக்க முடியவில்லை] அதையும் மீறி இயங்கிவருபவர்கள் கவிதைபால் உள்ள அன்பு, ஈர்ப்பின் காரணமாகவே தொடர்ந்து இயங்கிவருகிறார்கள் என்றும் புரியாக்கவிதை தான் எழுதுவேன் என்று எந்தக் கவிஞரும் கங்கணம் கட்டிக்கொண்டு எழுதுவதில்லை என்றும் நிறைய அழுத்தமாய் எடுத்துரைத்தேன்.  ஆனால், நான் பேசுமுன்பே அந்தப் பிரமுகர் அவசர வேலை நிமித்தம் எழுந்துபோய்விட்டார்!

நவீன தமிழ்க் கவிதையின் தோற்றமும் வரலாறும், நவீன தமிழ்க்கவிதை வளர்ச்சியில் சிறுபத்திரிகைகளின் பங்கு, நவீன தமிழ்க்கவிதையில் சமூகம், நவீன தமிழ்க்கவிதை யும் மொழிபெயர்ப்பும் என்ற தலைப்புகளில் கட்டுரைகள்[சி.மோகன், எஸ்.சண்முகம், லதா ராமகிருஷ்ணன்]வாசிக்கப்பட்டன. இந்தக் கட்டுரைகள் ‘கவிதையாய் விரியும் வாழ்வு தொகுப்பில் இடம்பெறவில்லை என்பது வருத்தம் தருகிறது. நேரமின்மையே காரணம்.

மலாய்ப் பிரதிநிதிகளும் தங்கள் மண்ணில் கவிதை வளர்ந்த விதம் பற்றி, மலாய் கவிதைகளின் தற்காலப் போக்குகள் குறித்து அதற்கு அரசு அளித்துவரும் ஊக்கம் குறித்து கட்டுரைகள் வாசித்தனர். முனைவர் கிருஷ்ணன் மணியம் மூன்று இனங்கள் வாழும் தங்கள் நாட்டில் அரசியல் ஆதாயத்திற்காக சிலர் பிரிவினை உண்டாக்க முயற்சி செய்தபோது முத்தரப்பு மக்களும் ஒன்றாகி அந்த முயற்சியை முறியடித்ததை எடுத்துரைத்த அவர் மலாய் மக்களில் மூத்த தலைமுறையினருக்கே நாட்டின் வளர்ச்சியில் தமிழர்களின் மகத்தான பங்களிப்பு குறித்துத் தெரிந்திருக்கிறது எனவும் இப்போதுள்ள தலைமுறையினர் தமிழர்களை வந்தேறிகளாகப் பார்க்கத் தலைப்படுவதும் நடக்கிறது எனவும், தமிழகத்திலிருந்தும், இந்தியாவிலிருந்தும் வருகைபுரியும் பிரமுகர்கள் சிலர் நம் நாட்டைப்பற்றி, தமிழ்நாட்டைப் பற்றி கேலிபேசி விமர்சிக்கிறார்கள் எனவும் வருத்ததோடு குறிப்பிட்டார்.

                               
தமிழகக் கவிஞர்களின் கவிதைகள் ஆளுக்கு மூன்று வீதம் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன; அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பும் இடம்பெற்றுள்ளன. மலாய்க் கவிஞர்களைப் பொறுத்தவரை ஆளுக்கு ஒரு கவிதை மட்டுமே இடம்பெற்றுள்ளது. அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம்பெற்றுள்ளன. நேரமின்மை காரணமாக மலாய்க் கவிஞர்களோடு பெரிய அளவு கவிதை பற்றிப் பேச வாய்ப்புக் கிடைக்கவில்லை என்றாலும் கவிஞர் இன்பா சுப்பிரமணியன், முபீன் சாதிகா, நந்தமிழ் நங்கை, கடற்கரை, அய்யப்பமாதவன் போன்றோர் அன்பும் அக்கறையுமாக நேரம் கிடைத்தபோதெல்லாம் அவர்களோடு அளவளாவிக்கொண்டிருந்தனர். கவிஞர் கவின் மலர் உடல்நலம் சரியில்லாத நிலையிலும் வந்திருந்தார். இளங்கவிஞர் சபரிநாதன் சால்வை போர்த்த அழைத்த போது வேண்டாம் என்று அன்போடு மறுத்தபோது நினைவுப்பாதையில் பின்னோக்கி நடந்தேன்! கவிஞர் கிருஷாங்கினி தன்னில் ஒரு கவிதை எவ்வாறு உருவாகிறது, உருப்பெறுகிறது என்பதை அழகாக எடுத்துக் கூறினார். நவீன தமிழ்க் கவிதைகள் திரும்பத் திரும்ப மனதிற்குள்ளாகப் படித்து உள்வாங்கிக் கொள்ள வேண்டியவை என்பதால் கவிதை வாசிப்பு என்பது கொஞ்சம் சடங்கார்த்த மாகவே அமைந்ததாய் தோன்றியது. மலாய் கவிஞர்களும், நம் கவிஞர்களும் இரண்டு நாட்களும் உற்சாகமாகவும், சினேகபூர்வமாகவும் இருந்தனர். நிறைவு விழாவுக்கு முன்பு ஒரு மணிநேரம் இரு தரப்புக் கவிஞர்களின் கருத்துப்பகிர்வு நடந்தது. நம் தரப்பிலிருந்து கவிஞர்கள் கடற்கரை, கிருஷாங்கினி, துவாரகைத்தலைவன் முதலியோர் கருத்துரைத்தார்கள். நிறைவு விழாவில் கவிஞர்கள் இன்பா சுப்ரமணியன், தமிழ் மணவாளன் முதலியோர் நிகழ்வு குறித்த தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துகொண் டார்கள். கவிஞர் முபீன் சாதிகா இந்த இருநாள் நிகழ்வுகளின் வீடியோப்பதிவுகளை ஆர்வத்தோடு YOUTUBEல் பதிவேற்றியிருக்கிறார்.






0

Monday, September 1, 2014

சகவுயிர் - கவிதை

கவிதை

சகவுயிர்

ரிஷி


பொம்மையின் தலையை யாரோ திருகியெறிந்துவிட்டார்கள்.
தாங்க முடியாமல் தேம்பிக்கொண்டிருந்தாள் சிறுமி.
வேறொன்று வாங்கிவிடலாம் என்று சொன்ன ஆறுதல்
அவளை அதிகமாய் அழச்செய்தது.
“இல்லை, என் வள்ளி தான் எனக்கு வேண்டும்…
எத்தனை வலித்திருக்கும் அவளுக்கு..”
என்று திரும்பத்திரும்ப அரற்றினாள் சிறுமி.
சுற்றிலுமிருந்தவர்களுக்கு ஒரே சிரிப்பாயிருந்தது.
‘குவிக்ஃபிக்ஸி’ல் தலையைக் கழுத்தோடு விரைந்தொட்ட முயன்றார் தந்தை. முடியவில்லை.
சற்றே தொங்கிய பொம்மைத்தலையை யொருவர்
அவசர அவசரமாக அலைபேசியில் படம்பிடித்துக்கொண்டார்.
’உச்சகட்ட வன்முறைக்காட்சிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும்போது பயன்படுத்திக்கொள்ள முடியும்…’
தலையற்ற வள்ளியின் உடலை மார்போடு அணைத்துக் கண்ணீர் பெருக்கிக்கொண்டிருந்தாள் சிறுமி.
‘பாவம், வள்ளிக்குப் பசிக்குமே’ என்ற பரிதவிப்பில்
அள்ளிய உணவுக்கவளத்தை அவளால் உண்ணமுடியவில்லை.
அவளுக்கு இன்றே புரியவைத்துவிடுவது நல்லது;
பொம்மைகள் மனிதர்களுக்கென்றே தயாரிக்கப்படுபவை.
அவற்றிற்கு உயிர் கிடையாது….
”யார் சொன்னது? வள்ளி எத்தனை நல்லவள் தெரியுமா?
வெள்ளிக்கிழமைக்கு அடுத்துவரும் விடுமுறைகளில்
எனக்குச் சொல்வதற்காகவே எங்கிருந்தெல்லாமோ
அதிசயக்கதைகளை அள்ளியெடுத்து வருவாள்….
அழுதுகொண்டே கூறினாள் சிறுமி.
“கண்ணைத் துடைத்துக்கொள்-
யாரேனும் பார்த்தால் கிறுக்கி என்பார்கள்_”
பொறுக்கமுடியாமல் முதுகில் ஒன்று வைத்தாள் தாய்.
“ஐயோ….” என்று வீறிட்டாள் சிறுமி.
’கையால் அடித்ததற்கே இத்தனை வலிக்கிறதே…
கழுத்து வெட்டுப்பட்ட நேரம் எத்தனை துடித்திருப்பாள் வள்ளி …’
பள்ளிக்குக் கிளம்பும்போதெல்லாம் கையாட்டி விடைதருவாள்.
வள்ளல் அவள் – தனக்குத் தரப்படும் இனிப்புகளையெல்லாம்
எனக்கே தந்துவிடுவாள் பெருவிருப்போடு.
இனி என்னோடு தட்டாமாலை சுற்ற யார் இருக்கிறார்கள்….’
மனம் பதறிய சிறுமியின் விழிகளிலிருந்து பெருகிய கண்ணீர்
சிற்றோடையாய், நதியாய் கடலாய் பெருகிக்கொண்டேயிருந்தது.
ஆழிசூழ் உலகில் அன்றும் இன்றும் என்றும்….
அனைத்தும் தனக்கே படைக்கப்பட்டதாய் பாவிக்கும் அனேகரும்
அந்தச் சிறுமியும் வள்ளியும் அன்னபிறரும்
”அது வெறும் பொம்மை”
”இல்லை அது வள்ளி. என் அன்புத்தோழி. அதுவே உண்மை”.
ஏங்கியழுதுகொண்டிருந்த சிறுமியைப் பார்த்து
ஏதாவதொரு காட்டி லொரு மானோ முயலோ
எண்ணிக்கொண்டிருக்கக் கூடும் _
மனிதர்கள் குழந்தைகளாகவேயிருந்துவிட்டால் எத்தனை நன்றாயிருக்கும்..



 [* ஆகஸ்ட் 2014 திண்ணை இணைய இதழில் வெளியானது] 


0

என்ன தவம் செய்தேன்....! _ கவிதை

கவிதை

                                           என்ன தவம் செய்தேன்!

ரிஷி’


கிண்ணங்கள், கரண்டிகள், தட்டுகள், எண்ணெய்புட்டிகள்…..
இன்னும் பல துலக்கியவாறே
அண்ணாந்தேன் தற்செயலாய்.
அற்புதத்திலும் அற்புதமாய்
ஊருக்கே ஒளியூட்டிக்கொண்டிருக்கும் நிலவு -
சின்னஞ்சிறு செவ்வகத்திறப்புக்கு வெளியேயிருந்து
என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தது!
எத்தனையோ காலமாய்
நான் ஏறெடுத்துப் பார்க்கவும் மறந்துபோயிருந்தது
புன்னகையில் கன்னங்குழிய
மின்னும் கண்களில் கனிந்துவழியும் அன்போடு
என்னையே பார்த்துக்கொண்டிருக்கும் இந்நேரம்
இன்னும் எத்தனையெத்தனை பேருக்குத்
தண்ணொளியால்
அருள்பாலித்துக்கொண்டிருக்கிறதோ…!
வெண்ணிலவே வெண்ணிலவே
உன் மௌனப் பண் கேட்டு என்னிரு விழிகளில்
தளும்பும் கண்ணீர்
சொல்லிலடங்கா சுகம், சோகம்
எல்லாவற்றிற்கும்.







0