LIFE GOES ON.....

LIFE GOES ON.....
Showing posts with label அநாமிகாவின் சிறுகதைகள். Show all posts
Showing posts with label அநாமிகாவின் சிறுகதைகள். Show all posts

Thursday, January 22, 2015

[விமர்சன] வெறுமாண்டி _ சிறுகதை

சிறுகதை
[விமர்சன] வெறுமாண்டி
அநாமிகா
[கவிதாசரண் ஏப்ர-ஜூன், 2005இல் வெளியானது]






’விமர்சன வீரன்’ என்ற பட்டம் வழங்கப்பட்டிருந் தால் அவர் வலுக்கட்டாயமாக மறுத்திருப்பார். வெறும் எதுகை மோனைக்காக ‘கட்டாயமாக’ என்பதை நான் ‘வலுக்கட்டாயமாக்கியிருப்பதாக உங்கள் வாசகப் பிரதிக்குப் பட்டால் அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. சிறு பத்திரிகைகள், பெரும் பத்திரிகைகளையெல்லாம் தொடர்ந்து படித்துவருபவர் நீங்கள் என்ற வகையில் ‘கட்டாய மாக மறுத்திருப்பார்’ என்பதற்கும் ‘வலுக்கட்டாய மாக மறுத்திருப்பார்’ என்பதற்கும் இடையேயான வேறுபாடு உங்களால் கட்டாயமாக உள்வாங்கப்பட் டிருக்கும். கவனிக்கவும் _ கட்டாயமாக; வலுக்கட் டாயமாக அல்ல. வீரன் என்பது கிட்டத்தட்ட பழந் தமிழ்ச்சொல். வெகுஜனங்களோடு, திராவிடக் கட்சி களோடு தொடர்புபடுத்திப் பார்க்கப்படும் சாத்தியப் பாட்டைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ‘விமர்சனச் செம்மலு’ம் வலுக்கட்டாயமாக மறுதலிக்கப்பட்டி ருக்கும். ‘விமர்சன வள்ளல்’ என்பதும் வெகுஜன வாடை வீசுவதாக இருந்தாலும் அது தனக்குப் பொருத்தமாக இருக்கும் என்று அவர் உள்மனத் திற்குப் பட்டது. எட்டாவது அதிசயம், ஒன்பதாவது அதிசயம் என்பதாக இன்று புதிதாகச் சேர்க்கப்படு வதைப் போல், பாரி, ஓரி, காரி முதலான கடையேழு வள்ளல்களின் வரிசை எண்ணிக்கையை இடம் மாற்றுவதால் தன் பெயர் இனி வரலாற்றில் இடம்பெறலாம்.

அதுவும் எப்படிப்பட்ட வள்ளன்மை! வேண்டியவர்களுக்கு அதீதப் புகழுரை களும், வேண்டாதவர்களுக்கு அதலபாதாளக் குழிகளுமாய் இரு துருவ சஞ்சாரங்களுக்கிடையேயான விரிபரப்பு அவருடைய வள்ளன்மையின்  அளவு. அந்தக் காலத்திலிருந்து அவர் ஆடிக்கொண்டிருக்கும் ’கூத்தை’ பம்மாத்து என்று சொல்லுகிறவர்கள் ஆத்தோடு போவார்கள். அதாவது, நதியில் முங்கிச் சாவார்கள். அப்படி நேரிடையாகச் சொன்னால் ‘சாப மிடுகிறவர்’ என்று நம்மை மற்றவர்கள் சரியாக, எளிதாக அடையாளங் கண்டு, காட்டிவிடுவார்கள். நாம் இலக்கியத்தில் இருண்மையைப் பழிக்கலாம். ஆனால், உள்ளத்தின் இருளைப் போற்றிப் பேணிவர வேண்டும். மற்றவர்க ளையும் அவ்வாறே நம் மனதின் இருளை மேதைமையாக இனங்காணப் பழகச் செய்ய வேண்டும்.

இதற்கென்று விமர்சன வீரன், இல்லை, விமர்சனச் செம்மல், இல்லை விமர்சன வள்ளல், இல்லை, விமர்சன மேதை, இல்லை, விமர்சனச் சக்கரவர்த்தி, இல்லை, விமர்சன வைபோகன், இல்லை, விமர்சன வித்தகன், இல்லை, வி….(அ) வி…., (அ) வி….., (அ) வி….. சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், பேசப்படுவோர் பெருமையைப் ஏசாமல், பேசுவோன் புகழைப் பறைசாற்றுவதாக ஆகிவிடும். அது முறையல்ல. அதைவிட முக்கியமாக, அது விமர்சனாதி பதியின் தனி பாணி. நான்காவது அல்லது ஐந்தாவது படித்த கட்சித்தொண்டர் ஒருவர், அல்லது, தொண்டர்களின் தளபதியாகப் பதவி உயர்வு பெற்றிருப்பவர், ஹெலன் கெல்லரின் பிறந்த நாள் விழாவில் தனது உரையில் ஒவ்வொரு பத்திக்கும் ஒரு தரம் தன் தலைவருக்கு அடைமொழி களை உச்சரித்துத் தன்னை உயர்த்திக்கொள்ள முயல்வதைப் போல்(பல நேரங்களில் இந்த முயற்சிகள் விழலுக்கிறைத்த நீராகி விடுமென்றாலும் விண்ணுலகில் அரைவட்டங்களும் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படுகின்றன என்ற உண்மை நம் நினைவிலி ருந்து நீங்கிவிடலாகாது. சம்பந்தப் பட்ட ‘விமர்சன விற்பண்ணல்’ பேச எடுத்துக்கொண்ட புத்தகத்தைப் பற்றி, அதை எழுதியவரைப் பற்றி இரண்டொரு வரிகளும்,மற்ற வரிகள் பத்திகள், பக்கங்களில் தனது ஆப்பிரிக்கப் பயணம், அர்ஜெண்டீனியாப் பரிச்சயம் பேசப்படும் படைப்பாளி சின்னப்பையனாயிருந்த போது தன் மடியில் அமர்ந்து பம்பரம் கேட்டது (விமர்சனம் வசைபாடலாக இருக்கும்போது, ‘அந்தப் பையன் பள்ளிக்கூட வாத்தியார் கேட்ட ஒன்னாம் வாய்ப்பாட்டை ஒப்பிக்க முடியாமல் முட்டி போட்டது’ என்பதாய் மூளை பிறவேறு அடுக்குகளி லிருந்து நினைவு களை வெளிக்கிளப்பும்) என்று தன் புராணமுமாய் பாடிவருவதன் விளைவா கவே ‘விமர்சனாழ்வார்’ என்ற பட்டமும் அவருக்குப் பரிந் துரைக்கப்பட்டது.

வழக்கொழிந்த நாட்டியக் கலைஞர்கள் சிலர் நடாப் பயிற்சி மையங்கள் ஆரம்பிப்பதைப் போல் இந்த ‘விமர்சனச் சித்தரு’ம் ஒரு பள்ளியை நாக்பூரி லும், இன்னொரு பள்ளியை நாகாலாந்திலும் திறந்திருக்கிறார். மூன்றாவது பள்ளி ‘நோய்டா’வில். விரை வில் ‘நியூயார்க்’கிலும் திறக்கலாம்.

அந்தப் பயிற்சிப் பள்ளிகளின் ஒரே பாடத்திட்டம் இதுதான்: நிர்வாணமாக ஒருவரைக் குதிரையில் ஏற்றி வலம்வரச் செய்வார்கள். பயிற்சி மாணவர்கள அந்த மனிதர் எந்த நிறத்தில் ஆடையணிந்திருக்கிறார், என்னவிதமான அணிகலன்கள் அணிந்திருக் கிறார் என்று கவனித்துப் பார்த்துச் சொல்லவேண் டும். அவர் ஒருவரே ‘விமர்சன விசுவரூபி’யாய்த் திகழும் காரணத்தால் பன்மையில் குறிக்கப்படுகிறார் ’ஆசிரியர்கள்’ என்பதாய்.  ஒருமை, பன்மை இலக்கணப் பிழைகளைக் கவிதைகளில் தோண்டித் துருவிக் கண்டெடுப் பவர்கள் இந்த ‘விமர்சன தேவனி’ன் ‘பன்மை’ அந்தஸ்தைப் பற்றிக் குரல் எழுப்புவதேயில்லை. எளிய கவிஞனை எவ்வளவு வேண்டுமானாலும் எள்ள லாம். மேல்மட்டத்தாரோடு மோதாமலிருப்பதே நயத்தக்க நாகரிகம்.

ஒருமுறை கட்டுவிரியன் பாம்பைப் பற்றிய கதை யொன்று அந்த ‘விமர்சன சிங்க’த்தின் கைகளில் கிடைத்தது. வெகு கவனமாய், தான் அதுகாறும் நேர்கொள்ள, எதிர்கொள்ளவேண்டியிருந்த சட்டை யுரித்த பாம்பு, பெருமாளின் படுக்கைப் பாம்பு, சிவன்தலைப் பாம்பு, பல்பிடுங்கிய பாம்பு, மிருகக் காட்சிச்சாலைப் பாம்பு, மற்றும் நெடுஞ்சாலைப் பாம்பு, குறுக்குத் தெருப் பாம்பு என எல்லாவற் றையும் பட்டியலிட்டுக் காட்டி ‘இந்தப் பாம்பு மகோன்னதமாகச் சட்டையுரிக்கிறது என்று புக ழாரம் சூட்டியதில் மட்டற்ற மகிழ்ச்சியடைந்த கட்டுவிரியன், புத்தகத்தின் பக்கங்களிலிருந்து படம் விரித்தாடிக்கொண்டே வந்து ‘விமர்சனக் கோமகனை’க் கட்டிக்கொண்டுவிட்டது! ஆனால், மாணிக்கம் ஒன்றும் தராமல் வெறுமே ‘ஜங்கிள் புக்’ ‘மோகிளி’யிடம் கண்கிறங்கக் கிசுகிசுத்து வசியம் செய்ய முயலும் தளுக்குப் பாம்பைப் போல் நடந்துகொண்டு போய்விட்டதே என்று உள்ளுக்குள் பொருமிக்கொண்டார் ’விமர்சன வாள்’. பல்லியின் வால் வெட்டப்படவேண்டியதே என்பார். ‘பல்லியும் முதலையே; முதலையும் பல்லியே’ என்பார். ஆனால், வெகு கவனமாக முதலையின் வாலை வெட்டுவது பற்றி மூச்சு விட மாட்டார். வெட்டுப்பட்ட பகுதி தன் கைக்கு வருமா, அதைத் தன்னால் விற்க முடியுமா, எவ் வளவு விலை பெறும் என்பதெல்லாம் திட்ட வட்டமாகத் தெரியாத நிலையில் எதற்கு முதலையின் வாலைப் பற்றிக் கருத்துத் தெரிவிப் பது! அவரால் வாழ்த்தப்பட்டவர்கள் அவரை ‘விமர்சனச் செங்கோலன்’ என, அவரால் வெட்டி வீழ்த்தப்பட்டவர்கள் அவரை ’விமர்சனக் கடுங் கோலன்’ என்றார்கள். அதைப்பற்றி அவருக் கென்ன? விமர்சனச் சக்கரவர்த்தியோ, விமர்சனச் சர்வாதிகாரியோ _ பீடம் கிடைத்துவிடுகிறது. அது தான் முக்கியம்.

முன்னுக்குப் பின் முரணாக இருந்தாலும், தன்னி கரற்ற விமர்சனப் பயிற்சி மையம் நடத்திவந்த அவரே அந்தப் பள்ளியின் பாடபுத்தகங்களுக்கான கோனார் உரை நூல்களையும் எழுதினார். ‘ஊரெங் கும் நடப்பது தானே, இதில் என்ன முரணைக் கண்டோம்? வெங்காயம்’ என்று நீங்கள் சொன் னால் எதிர்த்துச் சொல்ல என்னிடம் எதுவு மில்லை என்பது உண்மை. ஆனால், ’விமர்சன வேந்தனி’ன் பயிற்சி மைய அடிப்படைக் கோட் பாட்டின்படி பார்த்தால் ‘என்னிடம் எதுவுமில் லா ததே என்னை எல்லாம் இருப்பவராக்குகிறது அல் லவா!

‘விமர்சன பூபதி’யின் [சம்பந்தப்பட்ட திரைப்படத் தில் ‘ஆள்தோட்ட பூபதி’ பாடல் எப்படி கதைக்கு சம்பந்தமேயில்லாத போதிலும் சக்கை போடு போட்டது என்பதை நினைவுபடுத்திப் பார்க்கவும்] தனித்தன்மை வாய்ந்த நபும்சகத்தனத்தை, இல் லையில்லை, நிபுணத்துவத்தைப் பற்றிக் கேள்விப் பட்டு ஒருநாள் சூரியனும் நிலாவும் அவரைத் தேடி பூலோகம் வந்தார்கள். அவர்கள் வந்த சமய த்தில் அவர் ஒரு சிறுகதைத் தொகுப்பைத் தனது தனித்துவம் வாய்ந்த தராசுக்கோலில் நிறுத்திப் பார்ப்பதில் மும்முரமாய் இருந்தார். முப்பது படைப்பாளிகள் கொண்ட நூல் இது. தொகுப்பாசி ரியர்கள் தங்களது முன்னுரையில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்கள் :”சிலர் அவர்களுடைய சிறு கதைகளைத் தர விரும்பவில்லை. சிலருடைய முகவரிகள் எங்களுக்குக் கிடைக்கவில்லை. இன்னொரு தொகுப்பில் இதில் காணும் குறை பாடுகளை நிவர்த்தி செய்வோம்.”

தப்புக்குறியைத் தாளின் ‘நடுமையத்தில்’ போட்டு விட்டு எழுதத் தொடங்கினார் ’விமர்சன வேதா ளம்’. [ஒரு விஷயம், வேதாளம் என்பது வஞ்சப் புகழ்ச்சியல்ல. அதே சமயம் இந்த விமர்சனப் பெருச்சாளி’ வஞ்சப் புகழ்ச்சிக்குப் பெரிதும் தகுதி வாய்ந்தவரே]. ’இங்கே விடுபட்டுப் போயிருக்கும் படைப்பாளிகள் ஏன் இடம்பெறவில்லை? நான் அவர்களை எப்படியெல்லாம் எள்ளிநகையாடியி ருக்கிறேன் என்பது இங்கே தேவையில்லாத விஷயம்… இப்பொழுது அவர்கள் உரிமைக்காக நான் போராடுவதை நீங்கள் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்… இதில் இருபது முப்பது நல்ல படைப்பாளியைத் தொகுப்பாசிரியர்கள் புறக்க ணித்தது ஏன்? இதிலுள்ள உள் நோக்கம் என்ன? (மற்ற இருபது பேரைக் குறிப்பிடவில்லையே என் கிறீர்களா? அதனால் எனக்கு என்ன பயன், மன விகாரம் பிடித்தவர்களே!)

இப்படியே இருபது வரிகள் நீட்டிய பின், சிறு கதைக் கோட்பாடு என்பதாய் இரு வரிகளைப் போட்டு, ‘அடுத்த முறை அதிக கவனத்தோடு தொகுப்பு உருவாக்கப்படுவது அவசியம்,’ என்ற ‘அக்மார்க்’ வாசகத்தோடு(அப்படியொரு கோட் பாடே கிடையாது என்று யார் மறுத்தாலும், அது வெளியாக குறைந்த பட்சம் ஒரு மாதம் ஆகி விடும். தவிர, இப்பொழுது வெளியாகும் இலக் கிய இதழ்களில் சிலபல நின்றுபோய்விடும் வாய்ப்புகளும் அதிகம்.)

தன்னுடைய திருத்தமான மனக்கணக்கை சிலா கித்தவாறே, பேனாவை மூடி, நெட்டி முறித்து நிமிர்ந்தபோது, எதிரே நிலவும் சூரியனும் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தார்.

“என்ன வேண்டும் உங்களுக்கு?”

“எங்களைப் பற்றி நீங்கள் என்ன எழுதுவீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் இங்கு வந்தோம், ‘விமர்சன சற்குருவே’,” என்றது நிலவு.

“எத்தனை பயபக்தியோடு பேசுகிறாய்!” என்று மகிழ்ந்து கூறினார் ‘விமர்சன சீமான்’. “என்னு டைய பயிற்சி மையத்தில் சேர்ந்து பயின்றால் விமர்சன ஏணியின் மேல்படிக்கு நீ விரைவில் சென்றுவிடலாம்!”

“மேலே இருந்து அலுத்துப்போய்த் தானே இங்கே வந்திருக்கிறோம்” என்று நறுக்கென்று சொன்னது சூரியன்.

“ஆவேசப்படாதே, அமைதியாயிரு.” என்றார் விமர் சன விற்பன்னர்.

“நான் அழுத்தமாய் என் கருத்தைப் பதிவுசெய்வது உனக்கு ஆவேசமாய் படுகிறது. உமி மெல்வதாய் எப்பொழுதும் ‘கிசுகிசுப் பேச்சே உனக்குப் பழகி விட்டதால் அப்படித்தான் தோன்றும்.”

“அப்படியா சொல்கிறாய்?.... உன்னைப் பற்றிய என் மதிப்புரை எப்படி யிருக்கும் தெரியுமா?”

“சொல், கேட்கிறோம்,” என்று சமாதானப்படுத்து வதாய் மென்மையாய் கூறியது நிலவு.

“தேவைக்கு அதிகமாய்க் கதிர்களைக் கொட்டி உயிர்களைச் சூறையாடுகிறான் சூரியன்.”

“இது மிகவும் ஒருதலைப்பட்சமான மதிப்புரை.” என்று கோபமாகக் கூறியது சூரியன். “நான் பகலை உங்களுக்கு வரவாக்குவதில்லையா? பயிர் வளர்ப்பதில்லையா? எத்தனை செய்கிறேன் உங்களுக்கு.”

“அதெல்லாம் நீ எனக்கு ‘சலாம்’ போட்டால் தான் பட்டியலிடப்படும். சரி, அங்கே பார், அதோ ஆரோ கணித்திருப்பவர்கள் எத்தனை நிறங்களில் உடை தரித்திருக்கிறார்கள், சொல்.”

கூர்ந்து கவனித்துப் பார்த்துவிட்டு, பின், உதடு களைப் பிதுக்கியது சூரியன். “எல்லோரும் நிர் வாணமாய்த்தானே இருக்கிறார்கள்.”

“என்ன அநியாயம், எதைப் பார்த்தாலும் நிர்வா ணத்தையே நாடும் ‘மஞ்சள் பத்திரிகை’க் கண்கள் உனக்கு.”

“நான் நிர்வாணத்தைக் கேவலப்படுத்தவில் லையே.”

“அப்படியானால், நிர்வாணத்தை உயர்த்திப் பிடிக் கிறாய், அப்படித்தானே? அக்கிரமம்.”

“அவர்கள் உடையணிந்திருப்பதாய் நீ கூறுகிறாய். இல்ல என்கிறேன் நான். இதில் எதற்கு ஏதேதோ பேசுகிறாய்?”

“நீ ஒரு ஒளிக்கீற்றாய் இருந்தபோது நான் படம் பிடித்திருக்கிறேன். அந்தப் படம் ‘எக்ஸ்போஸ்’ ஆகிவிட்டது என்பது ஒரு விஷய மில்லை. ஆனால், உன்னை நான் பொருட்படுத்திப் புகைப் படம் எடுத்ததற்கான துளி நன்றியுணர்வு கூட உன்னிடமில்லையே,” என்று ’விமர்சனப் பேரொளி’ வினவ,

“எல்லாம் அந்த விமர்சனக் கழிவாளர் வெளி யேற்றிய நச்சுவாயுப் படலம்தான், நீங்காத கறை யாக என்மேல் படிந்துவிட்டது. சும்மாவா சொல் கிறார்கள், ‘துஷ்டர்களைக் கண்டால் தூர விலகிச் செல்’ என்று….”

“அப்படியே விட்டுவிடவும் முடியாதே. கேட்க ஆளில்லை என்று காட்டுச்செடியாய் வளர்ந்து விடுவார்கள். அவ்வப்போது சுட்டெரிக்க வேண்டி யதும் அவசியம். அதோ, அங்கே பார்…”

கதிரவன் கீழ்முகமாய் தன் ஒளிக்கீற்றைக் கொண்டு சுட்டிக்காட்டிய இடத்தில் ஓர் ‘இடை நிலை’ இதழின் நடுப்பக்கம் விரிந்துகிடக்க, அதன் அரைவட்டப்பகுதியில் ‘விமர்சன வீர்யன்’(ஓரள வுக்குப் பின்- நவீனமாக இருப்பதால் ‘விமர்சன விதூஷகர்’ புன்னகைத்துக்கொண்டிருக்க) என்ற வார்த்தைகளின் கீழான புகைப்படத்தின் வலப் புறமாய் கீழ்க்கண்ட வாசகங்கள் காணப்பட்டன:

“உலக விமர்சகன்! இவரைத் தேடி விண்ணு லகமே தரையிறங்கி வந்தது! ஆனால் சில தறுதலைகள் இவரை மறுதலித்துவருகிறார்கள். அவதூறு பரப்பியே தீருவோம் அவர்களைப் பற்றி. அதுவே எங்கள் இலக்கிய தர்மம். ‘அக்கப்போர்’ வெல்லும்.”

இதை வாசித்ததும் மூண்ட வெஞ்சினத்தில் விண் ணிலுள்ள கோள்களும் ஒளிமீன்களும் தங்களை மறுவரிசைப்படுத்திக் கொண்டதில், இங்கிருந்தே உற்றுப் பார்த்தாலும் போதும், தொலைநோக்கி யின் உதவியின்றியே நம்மால் படிக்கக்கூடிய அளவில் ஆகாயப்பரப்பில் காணத்தொடங்கி யுள்ள வார்த்தைகளே இந்தக் கதைக்குத் தலைப் பாக்கப்பட்டுள்ளன.




0

Friday, September 5, 2014

போகவேண்டிய தூரம் - சிறுகதை

சிறுகதை
போகவேண்டிய தூரம்.
’அநாமிகா’
(லதா ராமகிருஷ்ணன்)

* கணையாழி, ஜூன் 1999 இதழில் வெளியான சிறுகதை.
’நினைப்புக்கும் நடப்புக்கும் நடுவே’ சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது



கத்திப்பாரா ஜங்க்‌ஷன் தாண்டும்போதே இரவு ஒன்பதரை மணிக்கு மேல் ஆகிவிட்டிருந்தது. கிண்டி வந்துவிட்டது என்ற நினைப்பே நிம்மதியளித்தது.  ‘இன்னும் பத்து நிமிடங்களில் சைதாப்பேட்டை வளைவு வந்துவிடும்… முடிந்தால் நடந்துபோய் விடலாம். இல்லை, ஏதாவது ஆட்டோவைப் பிடித்துக்கொண்டு…. இல்லை, அது முடியாது. கைப்பையில் ஐந்து ரூபாய்க்கும் குறைவாகத்தான் இருக்கிறது. ‘ரயில் பாஸ் இருக்கிறதே’ என்ற நினைப்பில் இன்னும் இரண்டு மூன்று ரூபாய் திரட்டிக்கொள்ளாமல் தாம்பரத்திற்குப் போனது இன்றைய நிலவரத்தின்படி அசட்டுத் துணிச்சல் தான். என்ன செய்வது….? எப்படியோ, கிண்டி வரை வந்தாகிவிட்டது….

ஆனால், வண்டி நேராகப் போகாமல் கிண்டி எஸ்டேட் புறமாய் திரும்பிவிட்டது. மறியல் ஊர்வலமெல்லாம் முடிந்து ஆளுநர் மாளிகையிலிருந்து  அண்ணாசாலை யெல்லாம் ஒரே போக்குவரத்து நெரிசலாம். வண்டிகளெல்லாம் மனிக்கணக்காக ஆங்காங்கே காத்துக்கொண்டிருக்கின்றனவாம்.

யோசிக்க நேரமின்றி வண்டி வேறு தடத்தில் விரைந்துகொண்டிருந்தது. கே.கே.நகர் கண்டது. உதயம் திரையரங்கைப் பார்த்ததும் இதைவிட ஜெயராஜ் பக்கமாய் இறங்க வழியில்லை என்ற கணக்கில் இறங்கியாகிவிட்டது. கூட இறங்கியவர்கள் சௌதியில் காணாமல் போய்விட்டார்கள். அவர்களில் பெண்கள் இறந்ததாக ஞாபகமில்லை.

வகை தெரியாமல்  சற்று நேரம் தியேட்டர் பக்கமாய் இருந்த பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தாள். கடந்துசென்ற கார், சைக்கிள்கள் சிலவற்றிலிருந்து ஓரிருவர் திரும்பிப் பார்த்தார்கள். 5E வந்தால் ஏறி மேட்டுப்பாளையத்தில் இறங்கி எப்படியாவது மூச்சைப் பிடித்து நடந்துவிடலாம் என்று மனதில் ஒரு நப்பாசை.

“இங்கே எந்த வண்டியும் வராதும்மா. எதுக்கு வீணா நின்னுகிட்டிருக்கே?” போகும் வழியில் தகவல் தெரிவித்துவிட்டுச் சென்றார் ஒரு ரிக்‌ஷா ஓட்டுநர். ஆட்டோ ஒன்றும் கண்ணில் படவில்லை. இரவு பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டது. வனாந்திரத்தில்  நின்றுகொண்டிருப்பது போல் அசாதாரண அமைதியில் மஞ்சள் ஒளியில் நீண்டகன்ற வீதிகள் ஓய்ந்து கிடந்தன.

இனி இங்கே நின்று பலனில்லை. கிடுகிடுவென்று நடக்க ஆரம்பித்தாள். அடிவயிறு குலுங்கியது. மூன்று மணிக்கு, சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் ஆரம்பமாவதற்கு முன் சிறுநீர் கழித்தது. பேருந்தில் அழுந்த அமர்ந்திருந்ததால் அதன் கனத்தை ஓரளவு மறக்க முடிந்திருந்தது. இப்பொழுது குடல் சரிந்து தொங்குவதுபோல் ஒவ்வொரு அடிக்கும் முள்ளாய் குத்திற்று.

’பொதுக் கழிப்பறை எதுவும் பார்வையில் படவில்லை. பட்டால் மட்டும் துணிந்து உள்ளே போய்விட முடியுமா என்ன? அதுவும் இந்த அகாலநேரத்தில்…’ அடிக்கொரு தடவை பின்னால் யாரேனும் வருகிறார்களா என்று பார்த்துக்கொண்டாள். ரயில் நிலையத்தில் ஸ்டேஷனுக்கும், மேம்பாலப் படிகளுக்கும் இடையேயான வெட்டவெளியில் அடிக்கொன்றாய் ஆண்கள் நின்றுகொண்டு சர்வசகஜமாய் சிறுநீர் கழிப்பது தினசரிக் காட்சி. பெண்கள் தலையைக் குனிந்துகொண்டோ, அல்லது, அந்தப்புறமாய் முகத்தைத் திருப்பிக்கொண்டோ செல்வார்கள். ‘இந்தத் தருணத்தில் ஆணாய் மாற முடிந்தால் எத்தனை நன்றாயிருக்கும்,’ என்று சிறுநீரின் பாரத்தில் மனம் ஏங்கியது. இந்த ஏகாந்த இரவில், வெறிச்சோடிய வீதியில் எந்த ஒரு மூலையில் வேண்டுமானாலும் அடிவயிற்றின் பாரத்தை இறக்கிவைத்துவிட முடியும்.  பின், இந்த அகாலவேளையில் நடப்பதைக்கூட சற்று லேசான மனத்துடன் செய்ய முடியும் என்று தோன்றியது. பயத்தின் பாரத்தோடு சிறுநீரின் பாரமும் சேர்ந்ததில் மனம் மிகவும் பலவீனமாகியிருப்பதை உணர முடிகிறது.

நல்லவேளை, தலைக்குமேல் கொஞ்சம்போல் நிலா இருந்தது. மஞ்சள் விளக்குகள் எரியாத பிரதேசங்களிலும் நிலா மங்கலாக ஒளியேற்றிக்கொண்டிருந்தது. நிலாவை, நட்சத்திரங்களையெல்லாம் மனதாரப் பார்த்து மாமாங்கமாகிவிட்டது.

‘நோ டைம் டு ஸ்டாப் அண்ட் ஸ்டேர்’ என்பதோடு ‘நோ ப்ளேஸ்’ என்பதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் எந்த இடத்திலும் காற்று மட்டும் தன்னைப் புறக்கணித்துவிட முடியாதபடிக்கு தடவிக்கொடுத்துக்கொண்டேயிருக்கிறது! காற்றின் வருடலை இந்த ஆளரவமற்ற இரவில் துல்லியமாக உணரமுடிகிறது. ஆனால் முழுமையாக அனுபவிக்க முடியாதபடி மனதிலும் அடிவயிற்றிலுமாய் நிறைந்து தளும்பும் பயமும் சிறுநீரும்….

ரயில்பாதை வழியாகச் செல்லும்போது சில கூலிப்பெண்கள் நின்றபடியே சிறுநீர் கழிப்பதைப் பார்த்ததுண்டு. இவர்கள் இதை இயல்பாகச் செய்கிறார்களா, வேறு வழியில்லாமல் செய்கிறார்களா என்ற கேள்வி எழும். காலைவேளைகளில் ரயிலில் வரும்போது நுங்கம்பாக்கம் சுடுகாட்டுப்பக்கமெல்லாம் அங்கங்கே ஆண்களும், பெண்களுமாய் மலம் கழித்துக்கொண்டிருப்பார்கள். அப்போதைக்குத் தங்கள் அடையாளம் அழித்துக்கொள்ளும் முயற்சியாய் ரயில் வரும்போது முகங்களைக் குனிந்துகொண்டோ, அல்லது லுங்கியால் முகத்தை மறைத்துக்கொண்டோ காலைக்கடன் கழித்துக்கொண்டிருப்பார்கள். குடிசைப்பகுதி மனிதர்களோ, ஒண்டுக்குடித்தனக்காரர்களோ…. இதை மட்டும் இறக்கிவிட்டால் பின் நாள் முழுவதையும் இவர்களால் தைரியமாக எதிர்கொள்ள முடியும்.

மத்தியதர வர்க்கத்துப் பெண் அப்படியெல்லாம் ரயிலடியிலோ, வீதியிலோ ‘ஒண்ணு’க்கிருந்துவிட முடியாது. கூட யாரேனும் பெண் துணை இருந்தாலாவது தெருவோரம் ஒரு நிமிடத்தில் போய் முடித்துவிடலாம். ஒரு எதிர்பார்ப்போடு நிமிர்ந்தவள் கண்களில்பத்துப் பதினைந்து அடிகள் முன்னால் சென்றுகொண்டிருந்த ஒருவன் தென்பட்டான். பார்வைக்குக் கண்ணியமானவனாய்த் தெரிந்தான். சற்றே காலை எட்டிப் போட்டாள்.

அரவம் கேட்டுத் திரும்பிப் பார்த்தவன் நடையை துரிதப்படுத்தினான். இவளுக்கு அவமானமாயிருந்தது. சமாதானப்படுத்திக்கொண்டாள். ‘நாம் அவனைப் பற்றி சந்தேகப்படுவதைப் போல் அவனுக்கும் நம்மை சந்தேகப்பட உரிமையிருக்கிறது. இந்த நேரத்தில் தற்காப்புணர்ச்சியில் ஏற்படும் அவன் சந்தேகம் இயல்பானதும், நியாயமானதும் கூட….’

ஒரு கணம், பத்தடி தூரத்தில் நடந்துகொண்டிருந்த அந்த மனிதன் ஒரு பெண்ணாக இருக்கக்கூடாதா என்று ஏக்கமாயிருந்தது. ’இல்லை, சினிமாவில் வருவதுபோல், அந்த மனிதன் ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்தும் மனதிற்கு அத்தனை நெருக்கமாக உள்ள ஆனந்தரூபனாக இருக்கக்கூடாதா’ என்ற தாபம் இருந்தாற்போலிருந்து  மனதிற்குள் பரவியது.

“அதென்ன, ஆனந்தரூபன் என்ற பெயர்?”

“என்னைப் பார்த்தாலே எல்லோர் மனங்களிலும் ஆனந்தம் பொங்குமாம்!”

‘மீதிப்பேர் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், என்னை உன் நினைப்பே பொங்கவைக்கிறது!’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்.

நாட்கணக்கில் ஒரு வரி கூட எழுத மாட்டான். ரணமாகித் தவிக்கும் மனதில் ‘இனி இவன் சங்காத்தமே கூடாது’ என்ற தீர்மானம் பிறக்கும். ஆனால், தான் முன்மொழியும் தீர்மானத்திற்கு வழிமொழிய அவளால் என்றுமே இயன்றதில்லை.! அத்திபூத்தாற்போல் வரும் கடிதமும், அதையடுத்து நேரும் சந்திப்பும் தீர்மானங்களையெல்லாம் அடித்துக்கொண்டுபோய்விடும்! ஆறு மாதமோ, முக்கால் வருடமோ கழித்துநேரக்கூடிய அடுத்த சந்திப்பிற்காக மனம் அன்றிலிருந்தே கால்கடுக்க நிற்கத் தொடங்கும்!

‘இது என் மனதின் பலமா, பலவீனமா?’ என்று எத்தனையோ முறை தன்னைத்தானே கேட்டுக்கொண்டிருக்கிறாள்.

‘மனம் நிறைக்கும் அன்பில் கவசகுண்டலங்கள் கரைந்தோடிப் போய்விடுகின்றன. வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும் காத்திருப்பில் கோபத்திற்கு இடமில்லை,’ என்பதாகத் தானென்றுமே விடை கிடைக்கும்!

‘இந்த ஏகாந்த இரவில் ரூபனோடு இழைந்து நடக்கக் கொடுத்துவைத்திருக்க வேண்டும்!’ என்ற நினைப்பில் முகம் கனிந்து உள்ளுக்குள் சூடு பரவியது. அடிவயிற் றின் கனம் கூடியது. அவசரமாய் ரூபன் நினைப்பை அகற்றிக்கொண்டு முன்னே சென்றுகொண்டிருக்கும் மனிதனை வேகவேகமாக நெருங்கி, கண்ணியமான குரலில், “ஸார், நீங்களும் ஜெயராஜ் தியேட்டர் பக்கம் தான் போகிறீர்களா?” என்றாள்.

அவளைப் பார்த்ததும் அவன் கலவரமும் சற்றே அகன்றிருக்க வேண்டும். “ஆமாம்”, என்றான்.

“இன்றைக்குப் பார்த்து தாம்பரம் போகவேண்டியதாகிவிட்டது. இப்போ, இப்படி…”

“பரவாயில்லை, என்னோடு வாருங்கள்.”

“நன்றி”, என்று அவன் பின்னே நடக்கத் தொடங்கினாள்.

அவன் எச்சரிக்கையாக இரண்டடி இடைவெளியில் முன்னால் நடக்க, தானும் அதே எச்சரிக்கையோடு இரண்டடி பின்னாலேயே, அதே சமயம், ‘அவனோடு வருபவள்’, என்பதாகவும் பிறருக்குப் புரிபடும் விதத்தில் நடந்துசெல்வதைப் பார்க்க அவளுக்கே வேடிக்கையாக இருந்தது. ’போகும் வரை எதுவும் ஏடாகூடமாக நேராது’ என்ற நம்பிக்கையும், கூடவே, ‘வழியில் ஏதாவது நேர்ந்துவிடலாம்’ என்ற பயமும் தொடர்ந்துவந்தன.

ரொம்பத் தெரிந்த ஆண்களிடம் கூட, “சிறுநீர் கழித்துவிட்டு வருகிறேன்” என்று சகஜமாகக் கூறிவிட முடிவதில்லை.

‘சே, தேவையில்லாமல் எதெதற்கெல்லாம் அவமானமாக உணரவேண்டியிருக்கிறது’ என்று சலிப்பாக இருந்தது. ‘ரூபனாக இருந்தால் ஒரு ஓரத்தில் மறைப்பாகக் கால்களை அகற்றிவைத்தபடி அந்தப்புறம் பார்த்து திரும்பிநிற்கச் சொல்லி ஒரு நொடியில் பாரத்தை இறக்கிவைத்துவிடலாம்…..’ ஆனால், யோசித்துப் பார்த்ததில் அவனோடு கழித்த நேரங்களில் கூட இப்படிப்பட்ட இக்கட்டான சந்தர்ப்பங்கள் வாய்த்ததாக நினைவுக்கு வரவில்லை.

அக்கம்பக்கத்தில் தெரிந்தவர்கள் வீடு ஏதேனும் உண்டா என்று யோசித்துப் பார்த்தாள். எதுவும் நினைவுக்கு வரவில்லை. அப்படியே இருந்தாலும் இரவு பத்தரை பதினோறு மணிக்குக் கதவைத் தட்டி, குசலம் விசாரித்து, கையோடு “டாய்லெட் எங்கே?” என்று கேட்டால் எத்தனை அபத்தமாக இருக்கும்….

விரைந்து விரைந்து நடப்பதில் முழங்கால்களும், முழங்கால்களுக்குக் கீழுள்ள ஆடுசதையும், பாதங்களும், விரல்நுனிகளும் வலிக்க ஆரம்பித்திருந்தன. போதாததற்கு அடிவயிறு வேறு பாறாங்கல்லாய், வெடித்துவிடும்போல் இருந்தது. ‘போகிற போக்கில் மூத்திரம் பெய்துகொண்டே போனால் என்ன’ என்பதாக மனதில் தோன்றிய எண்ணத்தைத் தள்ளிவிட்டாள். முன்பு மருத்துவமனையில் பெரியம்மா கால் எலும்பு முறிந்துகிடக்க, இரண்டு மாதங்களுக்கும் மேல் ‘மூத்திரக் குடுவை’ வைத்ததுண்டு. ’சிறுநீர் கழிப்பதற்கும், மலம் கழிப்பதற்கும் மற்றவர்களைத் தொந்தரவுபடுத்தவேண்டி யிருக்கிறதே ‘ என்று முடிந்த மட்டும் அடக்கிக்கொண்டிருந்துவிட்டு, பின், தாங்க முடி யாத கட்டத்தில் கண்கலங்க இவளை அழைப்பாள் பெரியம்மா. பிரியும் சிறுநீரின் அளவு ஒரு ஹார்லிக்ஸ் புட்டிக்கு மேல் இருக்கும் என்று இவள் குத்துமதிப்பாகக் கணக்கிட்டதுண்டு.

’இவனுக்கும் ஒருவேளை சிறுநீர் பாரமாக அழுத்திக்கொண்டிருக்கலாம்… ஏதாவது ஓரமாய் சிறுநீர் கழிக்கலாம் என்று இவன் யோசித்துக்கொண்டிருக்கும்போது நான் வந்து சேர்ந்துகொண்டுவிட்டேனோ என்னவோ….!’

அபூர்வமாக ஓரிருவர் இவர்களை சைக்கிள், அல்லது, மோட்டார் சைக்கிளில் கடந்துசென்றார்கள். ‘நல்லவேளை, அவனிடம் விலையுயர்ந்த பொருள் அல்லது அணிகலன் எதுவுமில்லை. தன்னிடமும் எதுவுமில்லை’ என்ற நினைப்பு நிம்மதியளித்தது. ‘பார்ப்பவர்கள் தங்கள் இருவரையும் என்னவாய்க் கணித்துச்செல்கிறார்களோ…. சகோதரன் – சகோதரி…? கணவன் - மனைவி…? கள்ளக்காதலர்கள்…? எவரும் என்னவோ நினைத்துக்கொள்ளட்டும்! எக்கேடோ கெட்டுப்போகட்டும். இந்த இருண்ட கால்வாய்க் கரையோரத்தைக் கடந்துமுடிந்தால் போதும், ஜெயராஜ் தியேட்டர் வந்துவிடும்….’

ஏறத்தாழ முக்கால்மணிநேரமாக நடந்துகொண்டிருந்தார்கள். “நீங்கள் எந்தத் தெருவைச் சேர்ந்தவர்?” என்று கேட்க வாயெடுத்து அடக்கிக்கொண்டாள். அவனுக்கு அந்தக் கேள்வி விகல்பமாகப் படக்கூடும். அவனும் அவ்வண்ணமே நினைத்திருக்கலாம். வாய் மூடி நடந்தான்.

ஒருவர் பின் ஒருவராய் கால்வாய்க் கரையோரம் நடந்துசெல்கையில் பீடி குடித்த வண்ணம் இருவர் எதிரில் வந்தனர். ஒரு கணம் மூச்சு நின்றது இவளுக்கு. தங்களுக்குள் மெல்லிய குரலில் என்னவோ கூறிய வண்ணம் அவர்கள் இருவரும் இவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்று, பின், தங்கள் வழியே நடந்தனர்.

“மேடம், ஜெயராஜ் தியேட்டர் வந்தாகிவிட்டது.”

’வீட்டிற்குத் துணையாக வரவேண்டுமா? என்று கேட்க நினைத்து கேட்டால் தப்பாகிவிடுமோ என்று தயங்குகிறானா? அல்லது, ’இனிமேல் நாம் ஒன்றாகப் போவது சரியில்லை என்று சொல்ல விரும்பி, சொல்லத் தயங்குகிறானா….? பாவம், அவன் வீட்டில் அவனுக்காகக் காத்துக்கொண்டிருப்பார்கள்…. இளம் மனைவி பயந்துபோய் தவித்து நிற்கலாம்…’

இருளில் அவன் முகத்தைக் கூடச் சரியாகப் பார்க்க முடியவில்லை. “இனிமேல் நான் போய்க்கொள்கிறேன். ரொம்ப தேங்க்ஸ்” – மனப்பூர்வமாக நன்றி கூறினாள்.

சற்றே தயங்கினான். பிறகு, ‘விட்டால் போதும் என்பதாய் பொடிநடையாய் சடுதியில் காணாமல் போனான்.

அடிவயிற்றின் வலி மேர்புறமும் பரவிவிட்டது. வாயிலெடுக்கவரும்போல் இருந்தது. பெருமாள் கோயில் சந்தில் திரும்பியதும் மீண்டும் இருளும், வெறுமையும், வழியைக் கவ்வியது. ஒவ்வொரு மூடிய வீட்டிலிருந்தும் கண்கள் தன்னைக் கவனிப்பதாய் பிரமையேற்பட்டது. கோயிலைத் தாண்டிச் செல்லும்போது இரண்டு இளவட்டங்கள் கொச்சையான தமிழ்த் திரைப்படப் பாடல் ஒன்றை சீழ்க்கையடித்துக்கொண்டெரெ சைக்கிளில் அசுரவேகத்தில் வந்தார்கள்.

’இருளில் இவர்களுக்கு என் முன் நரை தெரிய வழியில்லையே’ என்று மனம் பதைத்துப் போயிற்று.

’வயதை எடுத்துக்காட்டும் நரை பின் தலையில் வந்திருந்தாலாவது அடிக்கடி பார்க்கவேண்டியிருக்காது. ஆனால், கொத்தாக முன் தலையில் படர்ந்திருக்கிறதே’ என்று கண்ணாடியில் முகம் பார்க்கும்போதெல்லாம் மனதிற்குள் வருத்தம் சேரும். இன்று அந்த நரையே பாதுகாப்புக் கவசமாக மனதிற்குப் படுகிறது….!’

”பாவம்டா… இந்த நேரத்தில் நடந்துவரவேண்டியதாகிவிட்டது இவர்களுக்கு. மறியல் செய்கிறவர்கள் இதையெல்லாம் யோசித்துப்பார்க்கக் கூடாதா?” என்று விர்ரென்று அவளைக் கடந்துசென்ற சைக்கிளின் பின்னிருக்கையில் அமர்ந்திருந்தவன் தன் சகாவிடம் சொல்வது அவளுக்குக் கேட்டது.

அழத் தோன்றியது.

இன்னும் ஓரிரு நிமிடங்களில் வீடு வந்துவிடும் என்ற நினைப்பின் நிம்மதியில் வயிற்றின் வலி கூட அப்பால் அகன்றுவிட்டதான பிரமையில், பாராட்டுகளும் பரிசுகளும் அற்ற ஒரு பந்தயத்தின் இறுதிக்கட்டமாய் இன்னும் வேகமாய் நடந்தாள்.





0

Sunday, July 3, 2011

உயிர் அறிய....

உயிர் அறிய....

_அநாமிகா



ஆற்றுக்கு மேலாக நீண்டுபோகும் அந்த ரயில்வண்டித் தண்டவாளங்களில் வழக்கம்போல் அன்றாடம் ஊற்றெனச் சுரந்தவாறிருக்கும் எண்ணங்களின் துணையோடு நடந்துகொண்டி ருந்தான். தன்னந் தனியாக மேலே ஆகாயமும், கீழே சுழித்தோடும் ஆறுமாக நடந்துபோகும்போது மனதிற்குள் தளும்பும் எண்ணங்கள், அவை எத்தனை சாதாரண விஷயங் களைப் பற்றியதாக இருந்தாலும், ஒருவித உன்னதத் தன்மை கொண்டு விளங்கும்.
உன்னதம் என்பதே ஒரு கற்பிதம்தான்என்பான் அருமை நண்பன். நம் வாழ்க்கையில் மீள முடியாத இயந்திரத்தனத்தால் மீட்சியற்று அமிழ்ந்து போய் விடாமலிருப்பதற்காக நமக்கு நாமே உருவாக்கிக் கொண்ட ஒரு கற்பனை தான் உன்னதம்.
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. ஒரு குழந்தை சிரிப்பதைப் பார்க்கும் போது ஏற்படும் பரவசநிலை, மழைச்சாரல் மேலே படும்போது, அருமையான இசையைக் கேட்கும்போது, ஒரு அரிய வகைப் பூவைப் பார்க்கும்போது, ஏன், சிட்டுக்குருவியை, குட்டி முயலைப் பார்க்கும் போதுகூட மனதில் பொங்கும் ஒருவித மகிழ்வும், நெகிழ்வும் உன்னதநிலை தான். மொழியிலும், உள்ளடக்கத்திலும் தேர்ந்த ஒரு கவிதையைப் படிக்கும்போது அதன் வரியிடை வரிகளில் அமிழும்போது நமக்குள் ஏற்படும் உணர்வுகூட உன்னதம்தான்...
இதையெல்லாம் நான் ஏற்கவில்லைஎன்பது போல் நண்பன் மெதுவாகச் சிரிப்பான். ஆனால், ஒரு போதும் விவாதத்தை, எதிர்க் கருத்தை அதன் ஆரோக்கியமான நிலையிலிருந்து வாய்ச் சண்டை யாக, கருத்துச் சுதந்திர மறுப்பாகக் குறுக்கிவிட மாட்டான், கொச்சைப்படுத்திவிட மாட்டான். நாம் மாறுபடுகிறோம் என்பதை மனதார ஏற்கிறோம்என்று மென்முறுவல் பூத்தவாறு சொல்லி வேறு விஷயத்தைப்பற்றிப் பேச ஆரம்பித்து விடுவான்.
எத்தனையோ விஷயங்களில் மாறுபட்ட கருத்து உடையவர்களாக இருந்தும் எப்படி இருவரும் இத்தனை வருடங்கள் ஒருவருக்கொருவர் அன்பும், மரியாதையும் தந்தவண்ணமிருக்கும் நட்பினராக இருக்கிறோம் என்று இவனுக்கு சமயங்களில் ஆச்சரியமாக இருக்கும். யோசித்துப் பார்த்தால் எந்தவொரு விஷயத்திற்கும் ஒன்றுக்கு மேற்பட்ட கோணங்கள், பார்வைகள் இருக்க வழியுண்டு என்ற அடிப்படையான புரிதல் தங்களிடம் இருந்தது தான் தங்களுக்கிடையேயான நட்பு நீடித்து வருவதற்குக் காரணம் என்பது விளங்கும். இந்த அடிப்படை விஷயம் குறித்துக்கூட அவர்கள் காரசாரமாக விவாதிப்பது உண்டு.
எந்தவொரு விஷயத்திற்கும் ஒன்றுக்கு மேற்பட்ட பார்வைகள், கோணங்கள், அர்த்தச் சாத்தியப்பாடுகள் உண்டு என்பது உண்மைதான். எனக்கு நியாயமாகத் தெரிவது இன்னொருவருக்கு அநியாயமாகக்கூடத் தெரியலாம். அதே சமயம் அடிப்படையான நியாயம், நீதி, நேர்மை என்பது ஆளுக்கு ஆள் மாறுபடவியலாதது. மாறுபடலாகாதது என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும், என்று ஒரு தீவிரதொனியில் கூறுவான் நண்பன்.
வேலை நிமித்தம் இரண்டு வருடங்களுக்கு முன்பு வடநாட்டின் வடகோடிக்கோ, தென்கோடிக்கோ ரயிலேறிச் சென்றவன். சமவயதினர் என்பதால் மட்டும் ஒருவரோடு சிநேகமாகிவிட முடிகிறதா என்ன? நண்பன் இடம் அவனால் மட்டுமே இட்டு நிரப்பப் படக் கூடியதாய், அவனுடைய மின்னஞ்சல்களாலும், கைபேசிக் குறுஞ்செய்திகளாலும், சமயங்களில் அவனுடைய மௌனங்களாலும்கூட இட்டு நிரப்பப் பட்டுக் கொண்டிருந்தது.
இன்றோ, நாளையோ ஒரு வாரம் விடுமுறையில் ஊருக்கு வருவதால் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான் காலையில். குறுஞ்செய்தியைப் படித்தது முதல் மன திற்குள் ஒரு பரபரப்பும், தழுதழுப்பும் நெகிழ்வாகி யிருந்தது. அத்தகைய அரிய மனநிலை உருவாகும் போதெல்லாம் அவன் இந்த ஆற்றுப் பாலத்தின் மீது நடக்க ஆரம்பித்துவிடுவான். அவ்வேளையில் இதுவும் ஒரு உன்னத உணர்வுதான். அப்படி நடக்கும் போது சில சமயங்களில் ரயில் வரும் ஓசை கேட்கும். உடனே பாலத்தில் பக்கவாட்டுப் பகுதிகளில் குறிப்பிட்ட இடைவெளிகளில் இருக்கக்கூடிய சதுரவடிவ, மூன்று பக்கங்களிலும் கம்பிக் கிராதியிட்ட மேடையில் ஏறி நின்றுகொண்டு விடுவான். அண்மையேகி வரும் ரயில் தன்னைக் கடந்து போகும்போது அடி முதல் முடி வரை அதிரும். பாதுகாப்பாய் நின்று கொண்டிருக்கிறோம் என்ற தெளிவில் அந்த அதிர்வு கூட அச்சத்தைத் தராமல் ஆனந்தமாக இருக்கும்.
இப்பொழுதுகூட ரயில் வரும் நேரம்தான். ஆற்றுப் பாலத்தைக் கடந்து போனால் சிறிது தொலைவில் வரக்கூடிய ரயில் நிறுத்தத்தில் ஐந்து நிமிடங்கள் நின்றுவிட்டுச் செல்லும் அந்த வண்டியில்தான் நண்பன் வரக்கூடும். ஆற்றுப்பாலத்தின் பக்கவாட்டிலுள்ள சதுர வடிவ மேடையில் மேலே ஆகாயமும், கீழே ஆறுமாக தான் நின்று கொண்டிருக்க தன்னைக் கடந்து போகும் ரயிலிலிருந்து நண்பன் எட்டிப் பார்த்து ஆச்சரியத்தில் கூவியவாறு தலையசைப்பதாய்க் கற்பனை செய்து கொண்டான். புன்னகையோடு சதுரவடிவ மேடைக் காய்த் திரும்பிய போது தான் சுரீரென உறைத்தது.
இருப்புப் பாதையின் பக்கவாட்டுப் பகுதிகளில் அந்தச் சதுரவடிவ மேடைகள் எங்கேயும் இல்லை. சே, காலையில் தான் ஊரெங்கும் ஒலி பெருக்கியில் அறிவித்துவிட்டுச் சென்றார்கள். ஆற்றின் மேலுள்ள இருப்புப்பாதை வழியாக யாரும் போக வேண்டாம். பலவீனப்பட்டுப் போயுள்ள சதுரவடிவ மேடைகள் அகற்றப்பட்டுள்ளன. நாளை அல்லது மறுநாள் புதிய, உறுதியான மேடைகள் பொருத்தப்பட்டுவிடும். அதுவரை சுற்றுவழிச் சாலையைப் பயன்படுத்தவும். ஒத்துழைப்பைத் தரவும்.
இப்பொழுது அந்த வாசகங்கள் அத்தனை தெளிவாக, அட்சர சுத்தமாக உட்செவியில் கேட்டது. உடலெங்கும் வியர்க்க ஆரம்பித்தது. உதறலெடுக்க ஆரம்பித்தது. சே, இதை எப்படி மறந்து போனோம். திரும்பிவிடலாமா என்று பின்னால் திரும்பிப் பார்த்தான். பாதிவழி வந்தாயிற்று. எந்நேரமும் ரயில் வந்துவிடும். திரும்பிச் சென்றாலும் ஆபத்து, முன்னேறிச் சென்றாலும் ஆபத்து. என்ன செய்வது...
கால்கள் நடுங்க ஆரம்பித்ததில் நடை தடுக்கியது. பக்கவாட்டு மேடை இருக்கும் பாதுகாப்புணர்வு தரும் தெம்பில் இருப்புப் பாதையின் இடையிடையே அமைந்துள்ள சிறு இடைவெளிகளை அநாயாசமாகக் கடக்க முடியும். இப்பொழுது அந்த இடைவெளி களினூடாய்த் தெரிந்த ஆறு ஏதோ ஒரு பயங்கர காந்த சக்தியோடு அவனுடைய பாதங்களைக் கீழிழுப் பதிலேயே குறியாக இருந்தது. வளைவில் ரயில் வந்து விட்டால் பின் இவனிருக்குமிடம் வர இரண்டு நிமிடங்கள்தான். வளைவில் அதன் இரும்பு முகம் எந்த நிமிடத்திலும் தெரியும்.
என்ன செய்வது... அப்படியே கட்டையாக இருப்புப் பாதையின் நடுவில் கண்களை இறுக மூடிப் படுத்துக் கொண்டு விட்டால்... திரைப்படங்களில் காண்பிப்பது போல் தப்பித்துவிட முடியுமா...? அல்லது, நடுவிலுள்ள கட்டையை அடிப்புறத்திலிருந்து இறுகப் பற்றியவாறு தொங்கினால்...? கையும், விரல்களும் தாங்குமா... மடமடவென்று கயிறு கட்டித் தொங்கினால்...? இடுப்பில் அரைஞாண்கயிறுகூட இல்லை. என்ன செய்வது... கைபேசியை எடுத்து யாருக்கேனும் விவரம் தெரிவிக்கலாமா... என்னவென்று தெரிவிப்பது... கைபேசி காற்சட்டைப் பையில் இருக்கிறதா, இல்லையா...
யோசிக்க நேரமில்லை. இந்தத் தருணத்தை நடந்து தான் கடக்க வேண்டும். பறக்க வழியில்லை. ஆற்றில் குதித்தால்... நீந்தவும் தெரியாது... ஆற்றில் பாறைகள் நிறையவுண்டு எனவும் கேள்விப்பட்டிருக்கிறான்...
உடல் வேகமாக உதறலெடுக்கத் தொடங்கியதில் ஓரெட்டு எடுத்து வைப்பதே பிரயத்தனமாகிவிட்டது. என்ன செய்வது... யோசனையில் நிற்கலாகாது... நடந்து தான் கடக்க வேண்டும் இந்த இக்கட்டான தருணத்தை... கடப்பேனோ... காவு கொள்ளப்படுவேனோ... கடவுளே...! நான் யாருக்காவது, ஏதேனும் தவறு செய்திருந்தால் என்னை மன்னித்துவிடு. எனக்காகவும், மற்றவர்களுக் காகவும் நான் வாழ எனக்கிருக்கும் நாட்கள் இல்லா மலாகிவிடக் கூடாது...
உயிர் வெல்லம்என்பான் நண்பன். உயிர் அதைவிட மேல்... உயிர் அனையஎன்பார்கள். எல்லாமே உயிர் அறியத்தான்... நான் வாழ வேண்டும். என் மனவீச்சில் ஏதோ காரணத்தால் அந்த ரயில் தாமதமாகி விடலாகாதா... நான் வாழ வேண்டும்... நான் வாழ வேண்டும்...
ஒரு அரைமயக்க நிலையில் ஆற்றின் மேலிருந்த இருப்புப் பாதையைக் கடந்து கீழிறங்கி அதீதக் களைப்பை மனமும், உடலும் துல்லியமாக உணர வீடு நோக்கி நடக்க ஆரம்பித்து, வீட்டின் வாசலை அடையும் போதுதான் அவன் அறிவு மீண்டும் இயங்கத் தொடங்கியது. ஏன், அந்த ரயில் வர வில்லை... எதனாலோ தாமதமாகியிருக்கிறது. நான் தப்பித்தேன்... உயிர் அறிய நான் பிழைத்திருக்கிறேன்... வாழப் போகிறேன்.
வீட்டினுள் நுழையும்போது கூடத்திலிருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் தென்னிந்திய ரயில் வண்டி ஒன்றில் வெடிகுண்டு வெடித்து ரணகளமாகி விட்டதாகச் செய்தி அலற ஆரம்பித்தது.


[*19 மே 2011 10:43, தேதியிட்ட உங்கள் நூலகம் இதழில் வெளியான சிறுகதை]