LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, January 2, 2014

இலக்கியத்தில் மாற்றுத்திறனாளிகள்

-       லதா ராமகிருஷ்ணன்
     
[*இது நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் குறுநூல் வரிசையில் பிரசுரமாகி யுள்ளது ]




இலக்கியம் மனிதவாழ்க்கையின் பிரதிபலிப்பு

இலக்கியம் என்பது மனிதவாழ்க்கையின் பிரதிபலிப்பு என்றும், மனித வாழ்க்கை எப்படியிருக்க வேண்டும் என்ற இலட்சிய நோக்கினைப் பிரதிபலிப்பதாய் இலக்கியம் விளங்க வேண்டும் என்றும், இவ்விரண்டு பிரதிபலிப்புகளும் கலந்ததே இலக்கியம் என்றும் நம் வாசிப்பனுபவத்தில் விளங்கிக்கொண்டிருக் கிறோம்.

எழுத்தின் வலிமை எல்லோருக்கும் தெரியும். சிறந்த நேர்மையான படைப்புகள் பல சமூகத்தில்
 சீரிய மாற்றங்கள் உருவாகக் காரணமாய் இருந்திருக்கின்றன; இருந்துவருகின்றன.

உண்மையின் அடிப்படையில் உருக்கொள்வதுதான் புனைவு அல்லது கற்பனை. உலகில், காலங்
காலமாக மாற்றுத்திறனாளிகளின் இருப்பு என்பது நடப்புண்மை. எனில், அவர்களைப் பற்றிய சித்திரிப்புகள் இலக்கியப் படைப்புகளில் இடம்பெற்றுள்ளனவா? உள்ளது எனில் எப்படிப்பட்ட சித்தரிப்புகள்? இலக்கியப் படைப்புகளில் பண்டைய இலக்கியந்தொட்டு சமகாலஇலக்கியம் வரை, உள்ளூர் இலக்கியம் முதல் உலகளாவிய இலக்கியம் வரை எத்தனை கதாபாத்திரங்கள் மாற்றுத்
திறனாளிகளாக இடம்பெற்றிருக்கிறார்கள்? அவர்கள் எவ்விதம் சித்திரிக்கப்பட்டிருக்கிறார்கள்?


இலக்கிய ஊடக வெளிகளில் மாற்றுத்திறனாளிகள்:

மாற்றுத்திறனாளிகள் மதிப்பழிக்கப்படுவது, கேலிப்பொரு ளாக பாவிக்கப்படுவது சின்னத்திரை பெரியதிரைகளில் காலங்காலமாக இருந்துவரும் போக்கு. ஏதாவதொரு சமயத்தில் தான் இது
குறித்து எதிர்ப்புக்குரல் ஒலிக்கிறது. தொடர்ந்த ரீதியில் இத்தகைய போக்குகள் கேள்விக்குட் படுத்தப்படுவதில்லை.

பெரும்பாலான நேரங்களில் மாற்றுத்திறனாளிகள் ஒன்று, அனுதாபத்துடன் அணுகப்படுகிறார்
கள், அல்லது, அலட்சியமாக, அசிரத்தையாக அணுகப்படுகிறார்கள்.

பாதிப்புக்குள்ளானவர்களால்தான் தங்களுடைய பிரச்னை களை சரிவர எடுத்துரைக்க முடியும் 
என்ற பார்வையின் அடிப்படையில் பார்த்தோமானால் மாற்றுத்திறனாளிகள் எத்தனைபேர் இலக்கியப்படைப்பாளிகளாய் விளங்கு கிறார்கள்? விளங்கியிருக்கிறார்கள்?

இதுபோன்ற கேள்விகளை உள்ளடக்கிய ஆழமான ஆய்வலசல் எதுவும் தமிழில் வெளிவந்தி 
ருப்பதாகத் தெரியவில்லை. வரவேண்டியது அவசியம்.

கடந்த 30 வருடங்களாக நான் பங்கேற்றிருக்கும் வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட் [WELFARE FOUNDATION OF THE BLIND] என்ற ‘பார்வையற்றோர் நன்நல அமைப்பில் இந்த நோக்கில்
 கடந்த பத்துவருடங்களுக்கும் மேலாக பார்வையற் றோரின் பிரச்னைகள்/ வாழ்க்கை குறித்துப் 
பேசும் நூல்களையும், பார்வையற் றோரின் படைப்பாற்றல்களை வெளிப்படுத்தும் நூல்களயும் வெளியிட்டுவருகிறோம். இதுபோல் வேறு சில தனிநபர்களும் அமைப்புகளும் முயற்சிகள் மேற்கொண்டிருக்கக்கூடும். ஆனால், இவை போதுமா?

‘பெண் என்பதால் பெண்களின் பிரச்னைகளைப் பற்றி மட்டும்தான் எழுத வேண்டுமா?  பெண் என்பதாலேயே எல்லாத்தரப்புப் பெண்களுக்குமான பிரதிநிதி யாய் பெண்களின் பிரச்னைகளை, இயல்புகளை, வாழ்க்கையை துல்லியமாக எழுத்தில் வடித்துவிட இயலுமா? என்பதான கேள்வி
களைப் போலவேதான் மாற்றுத்திறனாளிகள் விஷயத்திலும் கேள்விகள் எழுவது இயல்பு. 
தவிர, மாற்றுத்திறனாளிகள் என்ற பிரிவில் பலதரப்பட்ட உடற்குறை உள்ளவர்களும் அடங்குவர்.

எப்படியிருந்தாலும், சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளும் சீரிய பங்களிக்கும் [உரிய வழிவாய்ப்பு
கள் தரப்பட்டால் அங்கத்தினர்கள் இன்னும் சிறப்பாகப் பங்களிக்கக் கூடிய வர்கள்]என்பதில் மாற்றுக்கருத்திருக்க முடியாது. சமூக அங்கத்தினர்கள் என்ற அளவில் இலக்கியப்படைப்பு
களிலும், ஒளி-ஒலி ஊடகங்களிலும் அவர்களின் பங்கேற்பும் சித்திரிப்பும் எத்தகையதாய் விளங்கு
கிறது?


படைப்புவெளியில் பார்வையற்றோர்

இலக்கியம் நமக்கு எதிராக இயங்குகிறதா? [IS LITERATURE AGAINST US?] என்ற அகல்விரிவான கட்டுரையொன்றை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. டாக்டர் கென்னெத் ஜெர்நிகன் என்ற பார்வை
யற்றவர் இருபது முப்பது வருடங்களுக்கு முன்பு எழுதியிருக்கும் அந்தக் கட்டுரை அழுத்தமான ஆதாரங்களுடன் ‘இலக்கியப் படைப்புகள் பார்வையற்றோரைப் பார்க்கும் ‘அறியாமை நிரம்பிய 
பாரபட்சப் பார்வையை எடுத்துரைத்திருக்கிறது. பார்வையின்மை என்பது தண்டனையாகவும், 
தெய்வம் தந்த வரமாகும்படியான தூய பண்பாகவும், பார்வைக்குறைபாடுடையவர் பரிதாபத்திற்
குரியவர், கயவர், ஏமாற்றுக்காரர், திருமண வாழ்க்கையில் திருப்தி கரமாக ஈடுபட முடியாதவர், தனித்ஹ்டியங்க இயலாதவர் என பலவிதமான எதிர்மறைச் சித்திரிப்புகளாய் காலங்காலமாய் இலக்கியப்படைப்பு களில் தரப் பட்டிருப்பதை எடுத்துக்காட்டியுள்ளார். பார்வையிழப்பிற்குப்பின் ‘பாரடைஸ் லாஸ்ட்’[இழந்த சொர்க்கம்] என்ற அமர காவியத்தை எழுதிய மில்ட்டன்கூட
 சமூகத்தில் பார்வையற்றோர் குறித்து நிலவும் எதிர்மறைப் பார்வைகளால் ஆக்கிரமிக்கப்
பட்டவராய் அத்தகைய எதிர்மறைக் கருத்துகளையே, அதாவது பார்வையின்மை இறப்பை
விடக் கொடியது, பார்வையற்றவர் சபிக்கப்பட்டவர் என்ற ரீதியில்,சொல்லியிருப்பதைச் 
சுட்டிக்காட்டி யுள்ளார். நம்முடைய உண்மைநிலையை உலகுக்கு எடுத்துச்சொல்ல நாம் 
உடனடியாகச் செயலில் இறங்க வேண்டும் என்று கூறியுள்ளார். கண்டிப்பாகத் தமிழில்
மொழி பெயர்க் கப்படவேண்டிய இந்தக் கட்டுரை நம் கையில் கிடைப்பதற்கே இருபதாண்டு
களுக்குமேல் ஆகிவிட்டது.

கணினி, கைபேசி ஆகிய தொழில்நுட்ப வளர்ச்சிகளின் மூலம் இன்று பார்வைக் குறைபாடு
டைய மனிதர்களால் இதுவரை படிக்கக் கிடைக்காமலிருந்த பல புனைவு, அ-புனைவுப்
 பிரதிகளை அவர்களால் படிக்கமுடிகிறது.

ஆனால், இந்த இருபது, முப்பது ஆண்டுகளில் படைப்பு வெளியில் படைப்பாளிகளாகவும், பாத்திரங்களாகவும் இடம்பெறுதல் அளவிலும் தரத்திலும் [quantity-wise and quality-wise]அதிகமாகியிருக்கிறதா என்றால் இல்லை யென்றே சொல்லவேண்டும்.



காலிழந்தவர் கதாநாயகியாகக்கூடாதா?

முப்பது வருடங்களுக்குமேல் இருக்கும். விபத்தில் தனது ஒரு காலை இழந்து விட்ட 
பதினாறுவயதுப் பெண் சுதா சந்திரன் தன் விடாமுயற்சியால் நடுவில் நின்று போன நாட்டியப்
பயிற்சியை செயற்கைக்காலுடன் நிறைவுசெய்து ‘மயூரிபடத்தில் நடித்து பரவலாகப் பேசப்பட்டுக்கொண்டிருந்த சமயம். அப்போதைய பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் ஒருவரு
டைய தொடர்கதையின் கதாநாயக னுக்கு செயற்கைக்கால். அவன் மூலம் வாசகர்களுக்கு 
அறிவுரை தருவதாய் அந்த எழுத்தாளர், ‘நம்முடைய உடற்குறையை நாம் மறுதலிக்கலாகாது. 
இயலாத விஷயத்திற்கு முயற்சி செய்யலாகாது. திரைப்படங் களில் நடித்தால் ஒன்றிரண்டு 
தடவைகள் பரிதாபத்திற் காய் பார்ப்பார்கள். பிறகு...?என்றெல்லாம் கேள்விகளை அடுக்கிக்
கொண்டே போய் ‘மயூரி ஒரு முட்டாள்என்று ‘மனிதநேயத்தோடு முடித்திருந்தார். அந்த 
சுதா சந்திரன் இன்றளவும் நடித்துக்கொண்டிருக்கிறார்.

மாறாக,டப்பிங்அதாவது இரவல் குரல் கொடுத்தல் என்ற, இன்று சின்னத்திரையிலும் வண்ணத்திரையிலும் பெருமளவு பயன்படுத்தபட்டுவரும் உத்தியைப் பயன் படுத்தி காது
கேளாத, வாய்பேசாத பெண்ணொருத்தியைத் தங்கள் படத்தில் இயல்பான கதாநாயகியாக 
நாடோடி படத்தில் நடிக்கச்செய்த முயற்சி பாராட்டிற்குரியது. இதுபோன்ற முயற்சிகள் 
ஒளி-ஒலி ஊடகங்களில் அதிகம் இடம்பெறவேண்டியது அவசியம். அதற்கு, சமூகத்திலும், 
குறிப்பாக படைப்பாளிகளிடம் மாற்றுத் திறனாளிகள் குறித்தபுரிதலும், அவர்களாலும் 
இயல்பாக வாழ்க்கையை எதிர்கொள்ள இயலும் என்ற புரிதலும் அதிகமாக வேண்டும்.


வேண்டுவது அனுதாபமல்ல: அங்கீகாரமே

பெண்கவிஞர் என்ற ஒற்றைச் சொற்பிரயோகத்தில் இலக்கியம் தெரிந்த தெரியாத, கவிதை
தெரிந்த தெரியாத, நவீன கவிதை தெரிந்த தெரியாத ஆண்களெல் லோருமே படைப்புத்
துறையில் ஈடுபட்டுள்ள பெண்களை மதிப்பாய்வு செய்யும் தகுதியுடையவர்களாகிவிடுவது
போல்,  வெகு சுலபமாய் தங்களை புரவலர் நிலையில் ஆலோசகர் நிலையில் மேலடுக்கில் நிலைபெறச்செய்து கொண்டு விடுவது போலவே உடற் குறையுடையவர்கள் அவர்கள் எழுத் தாளர்களோ, வாசகர்களோ உடற்குறையுள்ள படைப்பாளிகளை அனுதாபத் தோடு பார்ப்பதும், அவர்களுக்கு அறிவுரை கூற முற்படுவதும் தொடர்ந்து நடந்துவரும் ஒன்று.

ஏதேனும் உடற்குறையுடையவர்கள் படைபாக்கத்தில் ஈடுபட்டால் உடனே அவருக்கு
 ஆலோசனை கூறவும் அறிவுரை தரவும் பலர் முன்வந்துவிடுகிறார்கள். ‘பார்வைக்குறை 
உடையவர்கள் பார்வையின்மை, அது சார்ந்த பிரச்னைகளையே முன்னுரிமைப்படுத்தி 
எழுத வேண்டும். ஏனெனில், அவற்றையெல்லாம் அத்தனை நம்பகத்தன்மையோடு மற்றவர்
களால் எழுத இயலாதல் லவா?என்று தங்கள் ஆலோசனைகளுக்கு நியாயம் கற்பிப்பார்கள். பார்க்கமுடியாது, பேச முடியாது, கேட்க முடியாது என்ற நிலையிலும் கல்வி கற்று தேர்ச்சி 
பெற்று பார்வையற் றவர்களின் நலவாழ்வுக்காகப் பெரும்பங்காற்றிய ஹெலன் கெல்லருக்கும் 
இந்த அனுபவம் உண்டு. அவர் தன்னுடைய சுயசரிதையை, தான் பட்ட துன்பங்களை எழுதிய
போது அவருடைய எழுத்தைக் கொண்டாடிய சமூகம், சமூகத்தின் ஓர் அங்கத்தினராய் அவர்
 சமூக அவலங்கள் குறித்து எழுதியபோது, அவை குறித்த தனது அக்கறையான பார்வைகளை, கருத்துகளை முன்வைத்தபோது அந்த முயற்சியை எளிதாகப் புறந்தள்ளிவிட்டதாம்.
REBEL LIVES என்ற வரிசையில் வெளியிடப்பட்டுள்ள ‘ஹெலென் கெல்லர் நூல் இதை 
விளக்கமாக எடுத்துக் காட்டுகிறது என்று விவரம் கிடைத்தது.


பார்வையின்மையும் படைப்பாக்கமும்

சில வருடங்களுக்கு முன் எங்கள் அமைப்பின் சார்பாக ‘பார்வைக்குறைபாடுடைய கவிஞ
 ரொருவரின் கவிதை களைத் தொகுப்பாகக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டபோது 
கவிஞரின் பார்வைக்குறையைக் குறிப்பி டுவதா, வேண்டாமா என்ற ஒரு கேள்வியெழுந்தது. 
அது வேண்டுமா, வேண்டாமா என்பதைவிட,  தேவையா தேவையில்லையா? ஆனால், பாட
புத்தகங்களை வாசித்துக்காட்டவே ஆளில்லாமல் பார்வையற்ற மாணவர்கள் சிரமப்படுவதைக் கருத்தில்கொண்டு பார்க்கும்போது அதைத்தாண்டி இலக்கிய ஆர்வத்தையும், பரிச்சயத்தையும் வளர்த்துக்கொண்டு படைப்பாளியாக வும் உருப்பெறுவதிலுள்ள  கூடுதல் உழைப்பை, 
முனைப்பை, அக்கறையை, ஆர்வத்தை அடிக்கோடிட்டுக் காட்ட அவருடைய பார்வை
யின்மையை சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம் என்று தோன்றியது. தர்மபுரி அரசுக் 
கலைக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி  புரிந்துவரும் கவிஞர் கோ.கண்ணனின் 
முதல் கவிதைத்தொகுப்பான ‘ஓசைகளின் நிறமாலை’ , அதைத் தொடர்ந்து நவீன விருட்சம் 
வெளியீடாக பிரசுரம் கண்ட ‘மழைக்குடை நாட்கள்ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புகளுமே குறிப்பிடத்தக்க கவிதைகளைக் கொண்டவை.

தனது கவிதையொன்றில் காலங்காலமாய் பார்வையற்றவர்கள் எத்தனையோ சாதித்து 
வருகின்றனர். இருந்தும், காசி படத்தில் வருவதுபோல் இரக்கத்திற்குரிய பிச்சைக்கார
னாகவே பார்வையற்றோர் ஊடகங்களில் தொடர்ந்து சித்திரிக்கப்பட்டு வருகிறார்கள் என்று வேதனையோடு சாடியிருப்பார் கவிஞர்.


சமூகமும் மாற்றுத்திறனாளிகளும்

சமூகத்தில் இன்று பார்வையற்றோர் பிச்சைக்காரர்களாக வலம் வருவதே யில்லையா என்று 
எதிர்வாதம் செய்யலாம். ஆம், உடற்குறை உள்ளவர்களும், உடற்குறையற்றவர்களுமாய்
 எண்ணிறந்த பிச்சைக்காரர் கள் நம் நாட்டில் இருக்கிறார்கள். பிச்சைக்காரர்கள் வங்கிகளில் கொள்ளைகொள்ளையாகச் சேர்த்து வைத்திருக்கிறார்கள் என்று நகைச்சுவையாகப் பேசி, 
வெடிச்சிரிப்பு சிரிப்பதோடு நம் சமூகப்பிரக்ஞை முடிந்து விடுமானால் அது எத்தனை அவலம்.
இந்தப் பிச்சைக்காரர்கள் எப்படி உருவாகிறார்கள், இவர்களைப் பிச்சைக்காரர்களாகவே இருக்கச்செய்வதன் மூலம் எத்தனை அதிகமான மனிதவளத்தை விரயமாக்கிக் கொண்டிருக்
கிறோம், இவர்களுக்கான மறுவாழ்வில்லம் உண்மை யிலேயே இவர்களுக்கு மறுவாழ்
வளிக்கும் விதத்தில் இயங்குகின்றனவா?  இந்தக் கேள்விக ளுக்கெல்லாம் பதில்தேட என்று 
நாம் முழுமனதோடு முயற்சிசெய்யப் போகிறோம்?

சமூகம் என்பது எல்லாவகையான மனிதர்களின் அக புற வளர்ச்சிக்கு இடமளிப்பதாக, 
வழிவகுப்பதாக இருக்க வேண்டும். உடற்குறையுள்ளவர்களை அந்நியமாகப் பார்க்கும் போக்கு மாறவேண்டும். சிறுவயதிலிருந்தே மாற்றுத்திறனாளிகள் பற்றிய புரிதலை வளர்க்க வேண்டியது அவசியம். அதற்கேற்றார்ப்போல் கல்வித் திட்டம் உருவாக்கப்படவேண்டும். உடற்குறை என்பது மனிதருக்குச் சிறுமை சேர்ப்பதல்ல, அவரை அரைமனிதராக்குவது அல்ல என்ற உண்மை 
மனிதர்கள் மனங்களில் பதியவேண்டும். எத்தனை ஆரோக்கியமான உடல் இருந்தாலும், 
ஒருவருக்குத் தேவையான எல்லாவற்றையும் அவராலேயே செய்து கொண்டுவிட முடிகிறதா 
என்ன? எடுத்துக்காட்டாக, இரண்டு கால்களும் உறுதியாக இருப்ப தாலேயே ஒருவர் தினமும்
 நாற்பது மைல்கள் நடந்துபோகிறாரா என்ன? யாரோ ஒருவர் இயக்கும் பேருந்தில்தானே
 போகிறார்? யாரோ அமைத்த சாலையில் தானே போகிறார்? அவ்வளவு ஏன், முகமறியாத 
யாரோ உழுது பயிரிட்டு விளைச்சல் செய்த அரிசியையும், காய்கறிகளையும் உண்டுதானே
 நாமெல் லோரும் உயிர்வாழ்ந்துகொண்டிருக்கிறோம்! வாழ்க்கையைப் பற்றிய இந்தப் புரிதல்
 நம் ஒவ்வொருவருக்கும் மிகவும் தேவை.‘ மாற்றுத்திறனாளிஎன்ற சொற்பிரயோகம் 
இதைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மனித நேயத்திற்கே ஆதாரம் இந்தப் புரிதல்தான்.
 இலக்கியம் மனிதவாழ்க்கையின் இத்தகைய அடிப்படைக் கேள்விகளையும், புரிதல்களையும்
 தன் கதைக்களங்களாக, பின்புலங் களாகக் கொண்டு இயங்கும்போதுதான் அது வாழ்க்கையை
 அதன் பல்பரிமாணங் களில் பிரதி பலிப்பதாக மேம்படும். அத்தகைய மேம் பாட்டிற்கு 
‘படைப்புவெளிமாற்றுத் திறனாளி களையும் எழுதுவோராகவும் வாசிப்போராகவும்,
 கதைக் கருக் களாகவும், முதன்மைப் பாத்திரங்களாகவும் உள்ளடக்கியதாக மாறவேண்டியது மிகவும் அவசியம். அதற்குச் செய்யவேண்டியவை யாவை?


செய்யவேண்டுவன

தமிழைப் பொறுத்தவரை இன்றுவரையான படைப்பு வெளியில் பார்வையற்றவர்கள் 
உள்ளிட்ட மாற்றுத் திறனாளிகளை முதன்மைப்பாத்திரங்களாக முன்னிறுத்தி வெளியாகி
யுள்ள படைப்புகள் யாவை, எத்தனை, அவற்றில் மாற்றுத்திறனாளிகள் எவ்விதம் சித்திரிக்கப்பட்டிருக்கிறார்கள், படைப்பு வெளியில் எழுதுவோராக, வாசிப்போராக அவர்கள்
 பங்கு எத்தகை யதாக இருந்து வந்திருக்கிறது போன்ற தரவுகளை சேகரித்துத் தொகுக்க 
வேண்டியது அவசியம்.

மாற்றுத்திறனாளிகள் என்று கூறுவதாலேயே ‘நாம்’, ‘அவர்கள்என்ற இருமுனைப் பிளவை
 நாம் முதன்மைப் படுத்துவதாகிவிடக்கூடாது. யாரோ மூக்குக்கண்ணா டியைக் கண்டுபிடித்து
விட்ட காரணத்தால்[அவர் என்றும் நன்றிக்குரியவர்] இன்று அதை விதவிதமான வண்ணங்
களிலும் வடிவங்களிலும் அணிந்துகொண்டு வலம் வருவோர் நம்மில் எத்தனையெத்தனை பேர்! அப்படித்தான், இங்கே யாருடைய உடலுமே முழுநிறை வானஆரோக்கியத்துடன் இல்லை; இருந்துவிடுவதில்லை. இந்த உண்மை நம் எல்லோருக்கும் புரியவேண்டியது  
அவசியம்.

வெகுமக்கள் ஊடகங்களில் மாற்றுத்திறனாளிகளை மதிப்பழிக்கும் சித்திரிப்புகளை, காட்சி யமைப்புகளை, சொற்பிரயோகங்களை சமூகப்பிரக்ஞையோடு வன்மை யாகக் கண்டிக்க
வேண்டும். ‘தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடுஎன்பார் வள்ளுவர். 
எனவே, மாற்றுத்திறனாளிகளைக் காயப்படுத் தும் சொற்களைப் பயன்படுத்துவது இயல்பு, 
அதனால் அன்பு இல்லையென்று ஆகிவிடாது என்ற வாதம் சரியல்ல. இதை நாம் எல்லோரும் உணரவேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் படைப்பாளிகளாக உருவாவதற் கான வழிவகைகளை சமூகம் 
உருவாக்கித் தரவேண்டும். உதாரணமாக, காதுகேளாத மனிதர் கதையோ கவிதையோ 
எழுத முனைந்தால் அந்த முயற்சிக்கு அவருடைய குடும்பமோ சக மனிதர்களோ முட்டுக்
கட்டையிடுவதாய் பேசுவதோ செயல்படுவதோ கூடாது.

மாற்றுத்திறனாளிகளின் பிரச்னைகள், திறனாற்றல்கள் குறித்த விழிப்புணர்வு சமூகத்தில் பரவலாக்கப்படுதல் எத்தனை அவசியமோ அத்தனை அவசியம் படைப்பு வெளியில் அவர்கள் படைப்பாளிகளாகவும் பாத்திரங்களாகவும் இடம்பெறுதல். அவற்றின் மூலம் சமூகத்தில்
 அவர்களுடைய இடமும் பங்காற்றலும் மேலும் வலுப்பெறும்.


ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!

உலகம் போற்றும் திருவள்ளுவர் பெண்களைப்பற்றிக் கூறியுள்ள சில கருத்துகள் மிகவும் பிற்போக்கானவை என்றும் அவற்றை அகற்றிவிட்டு இனி திருக்குறள் பிரசுரிக்கப்பட
வேண்டும் என்றும் சில வருடங்களுக்கு முன் ஒரு கருத்து பெறப்பட்டது. அது தேவை 
யில்லை. உரிய மரியாதையோடு திருவள்ளுவரின் சில கருத்துகளை மறுத்துக்கொண்டு 
மேலே செல்வதுதான் முறை. போரைப் போற்றிப் புகழும் பாடல்களும் கதைகளும் நம்மிடம் எத்தனையெத்தனை!  எனில், சமூகநேயம் மிக்கவர்களால் போரின் தேவையை கேள்விக் 
குட்படுத்தாது வாளாவிருக்க முடியுமா?

காலங்காலமாக இருந்துவந்த பிழையான போக்குகளை திருத்திக்கொள்ளத்தான் நமக்குப் 
பகுத்தறிவு இருக்கிறது. அதைப்போலவே, மாற்றுத்திறனாளிகள் குறித்த சமூகத்தின் பார்வை
 யும் அணுகுமுறையும் மாறவேண்டியதும், மேம்பட வேண்டியதும் இன்றியமையாதது.

கண்ணுடையர் என்பர் கற்றோர் என்று மூன்றே வார்த்தைகளில் ‘பார்வைக்கு இலக்கணம்
 வகுத்து விட்டார் வள்ளுவர். உள்ளத்து ஊனமே உண்மையில் ஊனம்என்று எத்தனையோ பெரியவர்கள் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். எனவே,உடற்குறையுடையவர்களை ‘படைப்பு வெளியில் ஒதுக்கும் போக்கு இனியேனும் மாறவேண்டும். முன்பொரு முறை பார்வைக்குறைபாடு டைய படைப்பாளி, மொழிபெயர்ப்பாளர், பார்க்கும் திறன் கொண்ட படைப்பாளிகள், மொழிபெயர்ப்பாளர்கள் சில உதவியாளர்களைக் கொண்ட மொழிபெயர்ப்புப் பட்டறை ஒன்று நடத்தப்பட்டது. இதுபோன்ற கூட்டுமுயற்சிகளும் பரவலாக் கப்படவேண்டும். இன்று கல்லூரிகளில் எத்தனையோ பார்வையற்றவர்கள் ஆசிரியர்களாக, ஆங்கிலப் புலமையும், தமிழ்ப்புலமையும், பிற பாடங்களில் சிரந்த தேர்ச்சியுமாக இயங்கிவருகிறார்கள். அவர்களுடைய அறிவாற்றலைப் பயன்படுத்திக்கொள்ள பதிப்பகங்கள் முன்வரவேண்டும்.

சமீபத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கென்று தமிழகஅரசில் ஒரு தனித்துறை ஏற்படுத்தப்
 பட்டுள்ளதை அறிவோம். இது ஒரு குறிப்பிடத்தக்க முன்முயற்சி. எனில், இன்றளவும் 
நம்முடைய சட்டமன்றங்கள், நாடாளுமன்றங்கள், அரசியல் கட்சிகள் ஆகியவற்றில் 
மாற்றுத் திறனாளிகள் வெகுசிலரே இருந்துவந்திருக்கிறார்கள் என்பதும் கவனத்திற்
குரியது.

மாற்றுத்திறனாளிகளுக்கென்று தனி படைப்பாக்கப் போட்டிகள் நடத்துவது ஒரு தீர்வாகி 
விடாது. அதேபோல், கைத்தட்டலுக்காகவும், தனி கவனம் பெறுவதற் காகவும், தரமான,
தரமற்ற விருதுகளை ‘வளைத்துப் போடுவதற் காகவும்மாற்றுத்திறனாளிகளை முக்கியக் கதாபாத்திரங்களாக்கிக் கதையெழுதுதல் என்றில்லாமல் உண்மையான அக்கறையோடு மாற்றுத்திறனாளிகளை முழுமை யான சக மனிதர்களாக பாவித்து எழுதப்படும் படைப்பிலக் 
கியங்களே நமக்குத் தேவை. அவை பரவலான கவனம் பெறவும், அவை குறித்த விவாதங்
களும், பல்குரல் விமர்சனங்களும் திறனாய்வுகளும் முன்வைக்கப்படவும் வழிவகை 
செய்யப்பட வேண்டும்.

பெண்கள், விளிம்படுத்த பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் குறித்து எழுதுவதில் படைப்
பாளிகள் உணரக்கூடிய ஒரு மனத்தடை, அத்தகைய எழுத்தாக்கங்களுக்கு உரிய பிரிவினரி
டமிருந்து எதிர்ப்பு ஏற்படுமோ என்ற கவலை, பயம் காரணமாக உண்டாகக்கூடியது. இத்
தகைய எதிர்ப்புக்கு சம்பந்தப்பட்ட பிரதியும் காரணமாகலாம், அல்லது, ஒரு முன்நிபந் 
தனையோடு அந்தப் பிரதியை அணுகுவதும் காரணமாக வழியுண்டு.  என்றபொதும், தேர்ந்த
வாசகருக்கு ஒரு எழுத்தை வாசிக்கும்போதே அதன் மெய்நோக்கமும் மேலோட்டமான 
நோக்கமும் பிடிபட்டுவிடும். எனவே, மாற்றுத்திறனாளிகளையும் தம் படைப்பில் முழுமை 
யான கதாபாத்திரங்களாக இடம்பெறச்செய்ய படைப்பாளிகள் முன்வர வேண்டும்.


மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் புறமொதுக்கப்படுகிறார்கள் அவர்களுக்கு அடிப்படை 
வசதிகளும், உரிமைகளும், மனிதமாண்பும்கூட மறுக்கப்படுகிறது என்றுபார்த்தால்,
உடற்குறையற்ற வேறு எத்தனையோ தனிநபர்களின், குழுவினரின் நிலையும்கூட
அதுவே. எனவே, மாற்றுத் திறனாளிகளும் சமூகமே தனக்கு எதிரி என்றவிதமாய் 
கருதக்கூடாது.

இரு கைகள் தோழமையோடும் நம்பிக்கையோடும் ஒன்றையொன்று நோக்கி நீண்டு சேர்த்துகொண்டால்தான், அது ஆக்கபூர்வமான கரங்குலுக்கல். அதேபோல் தான், பலதரப்
பட்ட மனிதர்களையும் உள்ளடக்கியதே சமூகம். எல்லோரும் சரிநிகர் சமானம் என்ற 
உணர்வு சிறுவயது முதலே நம்மிடம் வேர்கொள்ள வழிவகைகள் முழுமுனைப்போடு
மேற்கொள்ளப் பட்டால் அதன் விளைவாய் சமூகத்தின் மனிதவளமும், நலமும் 
மேம்படும்; உறுதிபெறும். அதற்கான கலந்துரையாடலையும் கருத்துப்பகிர்வையும்,
விவாதங்களையும், செயல்பாடுக ளையும் வேண்டி விரும்பி இந்தச் சிறுநூல்
எழுதப்பட்டுள்ளது.




மக்கள் நலவாழ்வுக்கான தேவையும் அளிப்பும்
 2. சுத்தம் சுகாதாரம் பேணல்

_லதா ராமகிருஷ்ணன்
[26 மே, 2013 திண்ணை இதழில் வெளியானது]



ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான UNICEF  சார்பாய் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையொன்றின்படிசுத்தமான தண்ணீரைப் பருகாதபயன்படுத்தாத காரணத்தால் உலகில் நாள்தோறும் 1800 சிறுகுழந் தைகள் இறந்துவருவதாகவும்அதில் இந்தியாவில் மட்டும் 500 குழந்தைகள் நாள்தோறும் உயிரிழப்பதாகவும் தெரியவருகிறது. இந்த இறப்புவிகிதத்தில் உலகிலேயே நம் நாட்டிற்கு முதலிடமோ இரண்டாவது இடமோ கிடைத் திருக்கிறது. எத்தனை அவலமான உண்மை இது!
ஓரிரு வாரங்களுக்கு முன் எதேச்சையாக தந்தி தொலைக்காட்சியில் காண நேர்ந்த நிகழ்ச்சியொன்றில் தூய்மையான குடிநீராக நாம் நம்ப வைக்கப்பட்டி ருக்கும் கேன் வாட்டர்’ உண்மையில் சுத்தம் குறைவனதே என்றும்இந்த மினரல் வாட்டர்’ விற்பனை செய்யும் நிறுவனங்களில் முறையான உரிமம் பெறாமல் நடத்தப்பட்டுவருபவை ஏறத்தாழ 2000 அளவு இங்கே இருப்ப தாகவும்உரிமம் பெற்று நடத்தப்பட்டுவருபவைகளிலும் பல சரியானபடி சுத்திகரிக்கப் படாத தண்ணீரையே தருகின்றன என்றும்வீடுகளில் விநியோ கிக்கப்படும் ப்ளாஸ்டிக்கினால் ஆன தண்ணீர்குடுவையை உண்மை யில் இரண்டு தடவைக்கு மேல் பயனபடுத்தலாகாது என்றும்ஏனெனில்அவ்வாறு பயன் படுத்தினால் குடுவையின் ப்ளாஸ்டிக் நீரில் சேர்ந்துவிடும் என்றும்ஆனால்சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பயன்படுத்தும் ப்ளாஸ்டிக் குடுவைகளைப் பொறுத்தவரை மேற்படி மேற்படி கவனம் செலுத்தப் படுகிறதா என்பது மிகவும் சந்தேகமே என்றும் ஆதாரபூர்வமான தரவுகளுடன் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் திரு.தேசிகன் எடுத்துரைத்தது இங்கே நினைவுகூரத் தக்கது.
மேலும்தண்ணீர் வழியாகப் பரவும் நோய்கள் இந்தியாவில் மிகவும் அதிகம் என்றும் தெரியவந்திருக்கிறது. கைகளைக் கழுவும் பழக்கம் இல்லாமையும்கழிப்பறைகள் சுத்தமாக இல்லாமையும் மக்களின் உடல்நலனைப் பலவகை யிலும் பாதித்துவருகின்றன என்றும் ஆய்வுபூர்வமான ஆய்வறிக்கை கள் தெரிவிக்கின்றன. வீதியில் மலங்கழித்தல்சிறுநீர் கழித்தல் சுகாதாரக் கேட்டிற்கு முக்கியக்காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால்வீடுகளிலும் சரிவீதிகளிலும் சரிபள்ளிக்கூடங்கள். வணிக வளா கங்கள்ரயில்நிலையங்கள்ஏன்மருத்துவமனைகளிலும் கூட கழிப்பறை வசதி என்பது மிகவும் கடைசிபட்சமாக கவனத்தில் எடுத்துக்கொள்ளப் பட்டிருக்கும் நிலையைத்தான் நம்மைச்சுற்றிப் பரவலாகக் காண முடிகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் சார்ந்திருக்கும் வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட்’ உறுப்பினர்களோடு சேர்ந்து தில்லியில் நடந்த ஒரு அகில இந்திய மாநாட்டிற்குச் சென்றபோதும் திரும்பிவரும் போதும் ரயிலிலும் ரயில் நிலையங்களிலும் இந்த அவலநிலையை சுத்தம்-சுகாதாரம் பேணல் குறித்த உச்சபட்ச அலட்சியத்தைக் கண்கூடாகக் காண நேர்ந்தது;அனுபவிக்க நேர்ந்தது. சமீபத்தில் ரயில் பயணத்தின் போது கழிப்பறை சுத்தமாக இல்லாததால் பயணத்தில் அனுபவிக்கவேண்டியிருந்த  நரகவேதனையை ஒரு வாசகர் டெக்கான் க்ரானிக்கிள் செய்தித்தாளில் பதிவு செய்திருந்தார். பதிவுசெய்வதும் புகார்செய்வதும் ஒருசிலரே. பெரும்பாலோர் தினசரி வாழ்வின் நெரிசலில் இவற்றையெல்லாம் பொறுத்துக்கொண்டு போவதுதான் நடக்கிறது.
வீதிகளில் எங்காவது அங்கொன்றும்இங்கொன்றுமாக அமைந்திருக்கும் இலவசக் கழிப்பறைகளில் உள்ளே நுழையமுடியாத அளவு துர்வாடையும் அசுத்தங்களும் நிரம்பியிருக்கும். சிறுபிள்ளைகள் மட்டுமல்லாமல் வளர்ந்த ஆண்களும் சாலையோரம் சர்வசாதாரணமாக சிறுநீர் கழித்துக்கொண்டிருப் பார்கள். பெண்களுக்குத்தான் திண்டாட்டம். கட்டணக் கழிப்பறைகள்’ அமைப் பது நியாயமா என்ற கேள்வி ஒருபுறமிருக்கஅப்படி அமைக்கப்பட்டிருப் பவையும் போதுமான அளவு சுத்தமாகப் பராமரிக்கப்பட்டு வருகின் றனவா என்ற கேள்வியும் தேவையாகிறது. இந்தத் தருணத்தில் சென்னை திருவல் லிக்கேணி பார்த்தசாரதி கோயில் சார்பில் தொண்டுநிறுவனம் ஒன்றால் பராமரிக் கப்பட்டுவரும் இலவசக் கழிப்பறை வசதி’ எத்தனை அருமையாகதூய்மையாகப் பராமரிக்கப்பட்டுவருகிறது என்பதையும் நினைத்துப்பார்க்கா மல் இருக்க முடியவில்லை.
மக்கள் நல அரசுகள் ஆர்வமுள்ள தொண்டுநிறுவனங்களின் பணியையும்பங்கேற்பையும் பயன்படுத்திக் கொண்டு பல நோய்களின் பிடியிலிருந்து மக்களைக் காக்க வல்ல சுகாதாரமான தண்ணீர்கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் மக்களுக்குக் கிடைக்கச் செய்யும் முயற்சிகளை முழு முனைப்பாக மேற் கொள்ள வேண்டியது இன்றைய இன்றியமையாத் தேவை.

பளிங்கின் கலங்கல்

பளிங்கின் கலங்கல்

ரிஷி

[முதல் தொகுப்பு அலைமுகம்-இலிருந்து]


மாறிய வண்ணமிருக்கும் காட்சிகளில் ஒன்றில்
எனக்கானதை ஆற அமர உள்வாங்கு முன்
அடுத்ததில் அதைத்  தொலைத்து அழுதபடி யிருக்க
இரண்டாவதன் திரை விழுவதற்குள் எட்டாவதன்
பின்னணியிசை அலைக்க
பாத்திரப் பரிதவிப்பிலும் பார்வையாளப் பரிகசிப்பிலும்
அரங்கின் மேசை நாற்காலி முள்ளொடிந்த கடிகாரம்
பிற நானாவித தட்டுமுட்டுப் பண்டங்களி லெங்கும்
ஒட்டியுமெட்டியுமிருக்கு மென்னைத் தொட்டுணர முடிவதில்
துல்லியமாய்க் கொள்ளும் கள்வெறியில் உன்முகம் திரியச்
சூழும் சாராய நெடியில் பெருங்குமட்ட லெடுக்க
விட்டு விடுதலையாகும் போதையில் விண்முட்டுங் கப்பல்
கண்சிமிட்டலில் கரைதட்டப் பட்ட கால் உடைந்தும்
கடையடைக்கலா காது கண் காது
மூக்கும் நாக்கும் நாகாக்கலும் நடிப்பேயாக
யாதுமான ஊரில் கேளிர் யாவரும்
பாப புண்ணியப் பொதியப்பிய முதுகுகளோடு
அப்பப்பா நான் அப்பனல்ல ஆயியுமல்ல
நோயும் பேயும் நினைவும் சொப்பனமுமாக
உப்பளங்களிலெல்லாம் சேகரமாகும் சர்க்கரையில்
இக்கரையக் கரையில் வனையப் படுகையிலேயே
உருமாற்றங் கொளும் சிற்ப தர்மங்கள்
சைத்தான்களாயும் சாட்சாத் தெய்வங்களாயும்
போகவும் வரவும் எங்கே என்று
நின்று கொல்லும் நீர்க்குமிழிகளின்
மார்க்கண்டேயப் பொறுப்பாளி யாரோ என்ன பேரோ
என் உன் நானோ நீயோ அவனோ அவளோ
அதுவோ எதுவோ பொதுவோ தனியோ
இனிசெய் விதியோ சதியோ வென்றறியும் கதியற்று
காலாக்னிப் பிரவாகத்தில் அடித்துக் கொண்டோடும்
நாட்களின் தீரத்தில் நிறமிழந்து சிதையும்
ஏகமாய் உற்ற மதப்பும் மிதப்பும் மதியும்
தொலைதூரம் பதித்திருக்கும் பதைத்திருக்கும் காத்திருப்பு
வாராக் காலங்களுக்காய்
வந்த காலங்களில் நலங்கெடப் புழுதிசேர்
நாதோபாசனத்தில் சிலநேரம் வசமாகும்
ஞானம் போகுமாறில் பகலும் இரவும்
பிரிவும் இணைவும் பிரிவில் இணைவும்
இணைவில் பிரிவும் மாறி மாறி மாறி
ஆள்மாறி பால்மாறி சோமாறி கேப்மாறி
பூமாரி பொன்மாரி காரி ஓரி
பாரியாய் வாரி வாரி வழங்கும் காலம்
பளிங்கின்  சேர் கலங்கலாய்.













Monday, July 29, 2013

தில்லி மாணவிக்கு நடந்த கொடூரமான பாலியல் வன் கொடுமையும் அது தொடர்பாய் பெறப்பட்ட சில எதிர் வினைகளும்

தில்லி மாணவிக்கு நடந்த கொடூரமான 
பாலியல் வன் கொடுமையும் 
அது தொடர்பாய் பெறப்பட்ட 
சில எதிர் வினைகளும்

_  லதா ராமகிருஷ்ணன்

26.5.2013 திண்ணை இணைய இதழில் வெளியான கட்டுரை


*இந்த என்னுடைய கட்டுரை திண்ணை இணையதள இதழில் வெளி யாகியது.ஒட்டியும் வெட்டியும் நிறைய கருத்துகள் வெளியாகின விரும்புவோர் அவற்றை திண்ணை இணையஇதழில் படித்துக் கொள்ள முடியும்.  
                                                                                                                                 
– லதா ராம கிருஷ்ணன்]



தில்லியில் 
ஓடும்பேருந்தில் நடந்தபாலியல் வன்முறை
இந்தியாவை ட்டுமல்ல,  
உலகத்தையே  உலுக்கியது எனலாம். 
அந்த ஃபிஸியோதெரபி மாணவியின்அகபுற  வலியை எண்ணியெண்ணி,
அவளைக் காப்பாற்றவியலாத கையறுநிலையில் 
அவளுடைய தோழனின் மனம்  எப்படியெல்லாம்தவித்திருக்கும்;
அலைக்கழிந்திருக்கும்....



தில்லியில் ஓடும் பேருந்தில் நடந்த பாலியல் வன் முறை இந்தியாவை மட்டுமல்ல, உலகத்தையே உலுக்கியது எனலாம். அந்த ஃபிஸியோ தெரபி மாணவியின் அக புற வலியை எண்ணியெண்ணி அலைக்கழிந்தது மனம். அவளைக் காப்பாற்றவிய லாத கையறுநிலையில் அவளுடைய தோழனின் மனம் எப்படி யெல்லாம் தவித்திருக்கும்.



இப்போது, ஐந்துவயதுச் சிறுமி தில்லியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறாள்.

இத்தகைய சமூகச் சீர்கேடுகளை எதிர்த்து பொதுமக் கள் அணி திரண்டு போராட முன்வருவது நல்ல அறி குறி. ஆனால், வட இந்தியாவில் இப்படி எத்தகைய மக்கள் எழுச்சி நடந்தாலும் அதை விமர் சனம் செய் வதும், நையாண்டி செய்வதுமே தமிழகத்தில் சில சமூகப் பிரக்ஞையாளர்கள்/போராளிகளின் வழக்க மாக இருக்கிறது. இது வருத்தத்திற்குரியது.

தில்லி மாணவியின் குடும்பநிலை, சாதி முதலிய விவரங்கள் ஊடகங்கள் வழி தெரியவராத நிலையில் அவரைப் பற்றித் தாங்களாக சில அனுமானங்களை கற்பித்துக்கொண்டு [மேல் சாதி, மேல்தட்டு வர்க்கம், அன்னபிற], அவற்றின் அடிப்படையில், ‘இந்தியா வில், முக்கியமாக தமிழகத்தில் தினந்தினம் எத்த னையோ அடித்தட்டுப் பெண்கள் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாகி உயிரை விடுகிறார்கள். அவற்றிற்கெல்லாம் அணிதிரள்கிறார்களா? இந்த தேசிய ஊடகங்கள் அவற்றை முன்னிலைப்படுத்தி செய்தி வெளியிடுவதில்லையே’ என்றெல்லாம் ஏளனமாய் ஒலித்த விமர்சனக்குரல்களை இங்கே கேட்க முடிந்தது. 


இங்கு, அதாவது தமிழகத்தில் இருக்கும் ஒளி-ஒலி, அச்சு ஊடகங்கள் பெரும்பாலும் நேரடியான அளவி லேயே அரசியல் கட்சிகளுடையவைகளாக இருக் கையில் தமிழகத்தில் நடக்கும் பாலியல் வன் கொடு மைகளைப் பற்றிய செய்திகளுக்கு அவர்கள் மனம் வைத்தால் முக்கியத்துவம் தரலாமே, தொடர்ந்த ரீதியில் இத்தகைய எதிர்ப்பியக்கங்களைப் பற்றிய விவரங்களைத் தரமுடியுமே.  அப்படிச் செய்யாதது ஏன்? 


தில்லி பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு, அது தொடர்பான மக்கள் எழுச்சி, அது ஊடகங்களில் முக்கியத்துவம் அளிக்கப்பட்ட விதம் ஆகியவற்றிற் குப் பிறகே இங்கே தலித் பெண் ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்முறையைக் கண்டித்து தி.முக பேரணி யொன்றை நடத்தியது. [சமூகச் சீர்கேடுகளுக்கு எதி ராக இடதுசாரி கட்சிகள் எப்பொழுதுமே கண்டனக் கூட்டங்கள், பேரணிகள் நடத்திவந்திருக்கின்றன. அவற்றை மற்ற அரசியல்கட்சி களின் ஒளி-ஒலி ஊடகங்கள் போதிய அளவுக்கு முன்னிலைப்படுத்து வதில்லை].அதற்கு முன்பும் பாலியல் வன்கொடு மைக்கு எத்தனை யோ அடித்தட்டுப் பெண்கள் ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள், ஆனால், அவை குறித்து, அவை தொடர்பான மக்கள் போராட்டங்கள் கள் குறித்து ஆங்கில ஒளி-ஒலி ஊடகங்கள் ஏன் செய்திவெளியிடவில்லை என்று அங்கலாய்ப்பதற்கு பதிலாக நம்மூர் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஏன் வெளியிடுவதில்லை என்று எண்ணிப் பார்ப்பதும் கேள்விகேட்பதும் அவசியம்.

கொடூரமான  விதத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளாகி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அந்தப் பெண் – நிர்பயா, என்றும் தாமினி என்றும் ப்ரேவ் ஹார்ட் என்றும் ஊடகங்களால் அழைக்கப்பட்ட வள். உண்மையான பெயர் ஜோதி சிங் பாண்டே – அந்தப் பெண் குறித்து அரசியல்வாதிகள் சிலர் தெரி வித்த பிற்போக்குத்தனமான கருத்துகள் எந்த அளவு க்குக் கண்டனத்திற்குரியவையோ அதேயளவு கண்ட னத்திற்குரியவை அந்தப் பெண்ணுக்கு இழைக்கப் பட்ட அநீதிக்காகக் குரல் கொடுப்பவர்களைக் கொச் சைப்படுத்துவதாய் ‘மற்ற அநீதிகளுக்கு அவர்கள் குரல் கொடுத்தார்களா’, என்று விமர்சனம் செய்து மட்டம் தட்டுவதும். இப்படி எதிர் விமர்சனம் செய்வது சுலபம். அப்படிச் செய்பவர்கள் ஒன்று சேர்ந்து அநீதிகள் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரங் களையும் எதிர்ப்பியக்கங்களையும் கட்டமைக்க லாம்; அப்படித் தாங்கள் கட்டமைக்கும் எதிர்ப்பியக் கங்களுக்கு எல்லாத் தரப்பு மக்களும் வருவதில்லை யென்றால் அதற்கான காரணங்களை பரிசீலனை செய்துபார்க்க முன்வரலாம்.

பிறகு, தில்லிப்பேருந்தில் பாலியல்வன்கொடுமை க்கு ஆளான பெண்ணின் உண்மையான பெயர் ஜோதி சிங் பாண்டே என்பதும், அவர்கள் குடும்பம் பொருளாதார ரீதியாக நலிந்த குடும்பம் என்பதும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தது என்றும், அந்த மாணவியின் தந்தை விமான நிலையத்தில் சரக்கு களை ஏற்றியிறக்கும் தொழிலாளி என்பதும், தன்னுடைய மகளைப் படிக்க வைப்பதற்காக அவர் தனக்கிருந்த கொஞ்சநஞ்ச சொத்தை விற்றிருந்ததும் [பெண்ணின் படிப்புக்கான செலவை சமாளிப்பதற் காக எங்கள்குடும்பம் பல நாட்கள் வெறும் உருளை க்கிழங்குகளை மட்டுமே உண்டு வாழ்ந்திருக்கிறது என்று அந்த மாணவியின் தந்தை ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்], தில்லியில் ஒரே அறை கொண்ட குடியிருப்பில் அந்தக் குடும்பம் வாழ்ந்துவந்ததும், தன்னுடைய படிப்புச்செலவுகும் குடும்பச் செலவுக் குமாய் அந்த மாணவி ஓய்வுநேரங் களில் ‘ட்யூஷன்’ எடுத்துவந்ததும் தெரிய வந்தது. 

உடனே அகில உலகஅறிவுஜீவியாகக் கொண்டாடப் படும் அருந்ததி ராய் ‘தில்லிப்பேருந்தில் அந்தக் கல் லூரி மாணவியை பாலியல் வன் கொடுமை செய்த வர்கள் குடிசைப்பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தான் தில்லியில் அத்தனைபெரிய கொந்தளிப்பு எழக் காரணம். இதுவே, இராணுவத்தாரும், காவல் துறை யினரும் நடத்தும் பாலி யல் அத்துமீறல்களு க்கு இவர்கள் இப்படி எதிர்ப்பு காட்டுவதில்லையே’ என்று கருத்துரைத்தார்.

முதலில், இராணுவத்தாரும், காவல்துறையினரும் நடத்தும் பாலியல் வன்கொடுமைகளுக்கு மக்கள் கொந்தளிப்பதில்லை என்பது தவறு. வெவ்வேறு விதங்களில் மக்களின் கொந்தளிப்பு வெளிப்படத் தான் செய்கிறது. 

அதேபோல், சீருடையணிந்த காவல்துறை. ராணுவத் தில் பணிபுரியும் அத்தனை பேரும் பெண்களை வன் கொடுமை செய்பவர்கள் என்று பொதுப்படையாகப் பழித்தலும் தவறு.

முன்பு இத்தகைய மக்கள் எழுச்சி இயக்கங்கள் கட்ட மைக்கப்படவில்லையே என்று விமர்சிக்கும் சமூகப் பிரக்ஞை யாளர்கள் அதைக் காரணமாகக் காட்டி இப் போது மக்கள் மத்தியில் உருவாகியுள்ள எதிர்ப்பியக் கத்தைக் கொச்சைப்படுத்துவது எந்த வகையில் நியா யம்? குடிசைவாழ் பகுதியைச் சேர்ந்த ஆண்களுக்கு நல்லொழுக்கம் தேவையில்லையா?அவர்கள் பெண் களைக்கேவலப்படுத்தினால் அது பரவாயில்லையா

இதை குடிசை வாழ் பகுதி மக்களே ஒப்புக்கொள்ள மாட்டார்கள். தில்லிப்பேருந்துக் கொடூரத்தில் ஈடு பட்டுள்ளவர்கள் குடிசைவாழ் பகுதி மக்களில் விதி விலக்குகள் மட்டுமே என்பதை நாம் மறந்து விடலா காது.

அடித்தட்டுமக்களுக்கு இந்தச் சமூகத்தில் நீடிக்கும் அவல நிலைமைகளை எடுத்துரைத்து அவற்றால் அவர்கள் உளவியல் ரீதியில் அடையும் பாதிப்பு களை அகல்விரிவாய் பேசவேண்டியதும், அலசியா ராய வேண்டியதும் கண்டிப்பாக அவசியம். அதற் காக, மேற்கண்ட விதமான வாதத்தை, அதுவும் ஒரு கொடூர நிகழ்வை அறிவுபூர்வமாக அலசுவதான பாவத்தில் முன்வைப்பது height of insensitivity, to say the least.

இத்தகைய எதிர்ப்பியக்கங்களை மட்டந்தட்ட மேற் கொள்ளப்படும் முயற்சிகளில் ஒன்று middle class mentality [ மத்திய தர வர்க்க மனோபாவம்] என்று முத்திரை குத்துவது. இந்த அடைமொழி இலக்கற்ற வர்கள், இறுதிவரை ஒரு போராட் டத்தை நடத்தத் திராணியில்லாதவர்கள், ஒரு பிரச்னையை நுனிப்புல் மேய்வதாய் அணுகுபவர்கள்,முற்போக்குச் சிந்தனை யற்றவர்கள், உணர்ச்சி வேகத்தில் சில வீரவசனங் களை முழங்குபவர்கள், பயந்தாங்கொள்ளிகள், சொரணையற்றவர்கள், சுயநலவாதிகள், ஏட்டுச்சுரை க்காய்கள் என மிகப் பல எதிர்மறைப் பொருள்களை உள்ளடக்கியதாய் பயன்படுத்தப்பட்டுவரும் சொற் றொடர். அன்னா ஹஸாரேயின் ஊழலுக்கு எதிரான இயக்கத்தை மட்டந்தட்ட இந்த அடைமொழியைத் தான் பயன்படுத்தினார்கள். ஆனால், அந்த இயக்கக் கூட்டங்களை நேரில் சென்று பார்த்தவர்கள் அங்கே அடித்தட்டு மக்கள் உட்பட பலதரப்பினரும் இடம் பெற்றிருந்ததைச் சுட்டிக்காட்டினார்கள்.

எனில்,தாங்கள் இழுத்தஇழுப்புக்கு மந்தைத்தனமாக வராமல் கேள்விகேட்கத் தெரிந்தவர்களும், மாற்றுக் கருத்துகளை முன் வைக் கக் கூடியவர்களும் மத்திய தர வர்க்க மனோபாவக்காரர் களாய் மதிப்பழிக்கப் படுகிறார்கள் என்பதே பல நேரங்களில் நடப்புண் மையாக இருக்கிறது.

இது கூட்டணிஅரசுகளின் காலம். இரு துருவங்களாக இயங்கிவருபவர்கள்கூட ஒரு common minimum progra mme–ன்கீழ் ஒருங்கிணைந்து செயல்படுவது இன் றைய காலகட்டத்தின் தேவையாகியிருக்கிறது. சாத்தியமாகியிருக்கிறது. ஆனால், தமிழகச் சூழலில் சமூகச் சீர்கேடுகள் சார்ந்த எதிர்ப்பியக்கங்களை பல தரப்பு மக்களும் பங்கேற்கும் வகையில் கட்டமைப் பது ஏன் சாத்தியமாகவில்லை? இதற்கு middle class mentality தான் காரணம் என்று சொல்லி விடுவதோ, அல்லது, படித்த வர்க்கம் இங்கே சொரணையற்று இருக்கிறது என்று சொல்லிவிடுவதோ சுலபம். ஆனால், அதுவா உண்மை?

ஒரு குறிப்பிட்ட சமூகச் சீர்கேடு தொடர்பாய் எதிர்ப் பியக்கங்களைக் கட்டுபவர்களில் பெரும்பாலோர் package deal என்பதாய் பல்வேறு விஷயங்கள் தொடர்பான அவர்களுடைய கருத்துகள், நிலைப் பாடுகள் எல்லாவற்றிற்கும் ‘கட்டாய ஆதரவு’ திரட் டும் வாய்ப்பாகவும் அதைப் பயன்படுத்திக்கொள் கிறார்கள். 

எடுத்துக்காட்டாக, ‘ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண் டும்’ என்று கோரும் இயக்கத் திற்கான ஆதரவைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களால் நடத்தப்படும் கூட்டத்திற்குச் சென்றால் ‘இந்தியா ஒழிக’ என்றோ, ராஜீவ்காந்தியைக் கொலை செய்தது சரியே’ என்றோ குறிப்பிடும் வாசகங்களும் அடங்கிய தீர்மான அறிக் கையில் செய்து கையெழுத்தி டும்படி கோரப்படுகி றது. மறுப்போர் middle class mentalityக்காரர்களாக மதிப்பழிக்கப்படுகிறார்கள்.

இன்னொன்று, மாற்றுக்கருத்துகளை சாதியின் பெய ரால் புறமொ துக்கி விடுவது, அல்லது, அதற்கு சாதிச் சாயம் பூசிவிடுவது.

சமீபத்தில் ஒரு இலக்கியக் கூட்டத்திற்குப் போயி ருந்தபோது அப்படித்தான் ஒரு ‘மெய் இலக்கிய வாதி’ [அவரைப் பொறுத்தவரை அவருக்கு முன்பி ருந்த  இலக்கியவாதிகளும்,அவருடைய கருத்து களை ஏற்காத, எதிரொலிக்காத, அடியொற்றி நடக் காத, அவர் கூப்பிட்ட கூட்டத்திற்கு  குபீரென்று போய் பங்கேற்காத சமகால இலக்கிய வாதிகளும் ‘பொய் இலக்கியவாதிகள்’ என்பதால் அவருக்கு இந்த அடைமொழி] ’முந்தைய தலைமுறை இலக் கியவாதிகளெல்லாம் ஆதிக்கசாதியினர். எனவே, அவர்களுக்கு சமூகப்பிரச்னைகளைப் பற்றிய அக் கறை கிடையாது என்று ஒரே போடாகப் போட்டு, எழுத்தை தவமாகக் கொண்டு வறுமையில் உழன்ற வர்களையெல்லாம் ஒரே மிதி, காலால் மிதித்துத் தள்ளி விட்டார். அதனால்தானோ என்னவோ, ’நட்சத்திரப் பேச்சாளராக’ நடத்தப்பட்ட அவர் முத லில் பேசிவிட்டு சக-பேச்சாளர்கள் என்ன சொல்கி றார்கள் என்று கேட்கும் அக்கறையின்றி போயே போய் விட்டார். அவரால் மட்டுமே தீர்க்கப்பட வேண்டிய சமூகப் பிரச்னைகள் எத்தனையோ இருக் கின்றனவே!

இது ஒரு அனுபவமென்றால் வேறு சில கூட்டங்க ளுக்கு சமூகப் பொறுப்போடும், அக்கறையோடும் மூன்று பேருந்துகள் மாறி [தமிழகப் பேருந்துகளில் பயணமாவோர் சம்பளமில்லாத தாற்காலிக உதவி நடத்துனர்களாகக் கட்டாயம் பணியாற்றியே தீர வேண்டும். ஒரு கையால் அலைபேசியில் பேசிக் கொண்டே மறு கையால் நாணயத்தை நீட்டுபவர் களிடம் பவ்யமாக அதை வாங்கி, பத்து கரங்கள் வழியாக அது பத்திரமாகக் கடத்தப்பட்டு நடத்து னரைச் சென்றடைந்து பின் அந்த அதி மெல்லிய துண்டுக் காகிதம் – டிக்கெட் எனப்படுவது – பறந்து விடாமல், நழுவி விடாமல், அதேவிதமாய் நம் கையை அடைய, அதீதப் பதற்றத்தோடு அதை வாங்கி, இன்னும் அலைபேசியில் மும்முரமாய் அளவளாவிக்கொண்டிருப்பவரிடம் ஒப்படைக்கும் போது மிகவும் பலவீனமாக உணரும் மனது] சென்ற டைந்தால் ‘மேல் சாதியினர்’, ஆதிக்க சாதியினர்’ என்று எல்லாப் பிரச்னைக்கும் இப்படிச் சாடுவதே ‘சகல ரோக நிவாரணி’ என்ற கண்ணோட்டத்தைக் கொண்ட ’நட்சத்திரப் பேச்சாளர்கள்’, காரிலும் விமா னத்திலும் விழா அரங்கிற்கு வருகை தந்திருப்பவர் கள் மேடையில் முழங்கிக்கொண்டிருப்பார்கள்.

மேலும், கூட்டத்தில் ‘நட்சத்திரப்பேச்சாளர்கள்  முன் வைக்கும் கருத்துகள், தீர்மானங்களில் ஏதேனும் ஒன் றோடு நாம் முரண்பட்டாலும் கூட ஆதிக்க வாதிகள், பழமை வாதிகள், அடிப்படைவாதிகள், சமூகப்பிரக் ஞையற்றவர்கள்  போன்ற  முத்திரைகள் சரமாரியாக நம்மீது குத்தப்பட்டுவிடும். இந்தப் போக்கின் காரணமாகவே ’கூட்டங்களுக்குப் போகாமலிருந்து விடுவதே மேல் என்று ‘மத்திய தர மனோ பாவக் காரர்கள்’ பலருக்குத் தோன்றவிடுகிறது.

இப்பொழுது ஐந்து வயதுச் சிறுமி ஒருத்தி தில்லியில் நினைத்துப்பார்க்கவே முடியாத அளவு கொடூரமான முறையில் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்கப் பட்டிருக்கிறாள். குழந்தையின் பிறப்புறுப்பில் மெழுகுவர்த்தி, சிறிய புட்டி என்று செருகப்பட்டு, அவள் கழுத்து நெரிக்கப்பட்டு 40 மணிநேரங்கள் சோறு, தண்ணியில் லாமல் துடித்துக்கிடந்திருக்கி றாள் சிறுமி. இப்பொழுது மருத்துவமனையில் இருக்கிறாள். இந்தக் கொலைபாதகச் செயலில் ஈடுபட்டிருப்பவர்கள் இருபது இருபத்திரண்டு வயதான இளைஞர்கள்.

அந்தச் சிறுமிக்காக தில்லியில் மீண்டும் மக்கள் திரண்டெழுந்து எதிர்ப்புக்குரல் எழுப்பிக்கொண்டி ருக்கிறார்கள்.பிரதமர்,சோனியாகாந்தி வீடுகள் முற்று கையிடப்பட்டிருக்கின்றன. காவல்துறையினரின் தடுப்புகளையும்,  தடியடிகளையும் மீறி மக்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.

‘இதற்கு முன் எத்தனையோ சிறுமிகளுக்கு இத்த கைய கொடுமை நிகழ்ந்தபோதெல்லாம் இவர்கள் எங்கே போயிருந்தார்கள் என்று இப்பொழுதும் சில சமூகப் பிரக்ஞையாளர்கள் தமிழ் மண்ணிலும், பிற வேறு நிலங்களிலும் கூட அறிவுபூர்வமாகக் கேள்வி யெழுப்பக் கூடும். May be, with the best of intentions or may be with some hidden agenda. எப்படியாயினும், பாலி யல் வன்கொடுமைகளில் எது அதிகக் கொடூரமானது என்பதான பட்டிமன்றங்கள் நடத்தப்படும் நிலை எத்தனை அபத்தமானது; அவலமானது…

சமீபத்தில் நடந்தேறியுள்ள ஆய்வொன்றின்படி  ’சிறு வர்-சிறுமிய ரு’க்கான காப்பகங்கள் பலவற்றில் இத் தகைய பாலியல் வன்கொடுமைகள் வாடிக்கையாக, அந்தக் குழந்தைகளைப்பாதுகாக்கும்பொறுப்பிலுள் ளவர்களால் நிகழ்த்தப்பட்டு வருவதாகவும், தமிழ கத்தில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள  காப்பகம் ஒன்றில் அவ்வாறு பாதிக்கப் பட்ட பெண் அவ்வாறு தனக்கிழைக்கப்பட்ட கொடுமை குறித்துப் பேசுவ தையும் புதிய தலைமுறை தொலைக் காட்சி அலை வரிசையின் ‘ரௌத்ரம் பழகு’ நிகழ்ச்சி ஒளிபரப்பி யது. ஒவ்வொரு காப்பகத்திலும் அவசியமாக இருக்கவேண்டிய, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப் பினரின் பிரதிநிதிகளும் இடம்பெறுகின்ற  ‘கண்கா ணிப்புக் குழு’ அறவேயில்லாத நிலையை அந்த நிகழ்ச்சியில் சுட்டிக்காட்டியிருந்தார்கள். 

சமீபத்தில் CNN-IBN செய்தி அலை வரிசையில் தில்லி யில் ஐந்து வயது சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வன் கொடுமை குறித்து ஒளிபரப்பப்பட்ட விவாதத்தில் ‘வளரிளம் பருவத்தினரையும் சரி, வளர்ந்த ஆண்க ளையும் சரி, இத்தகைய கொடூரச் சிந்தனைகளையும் செயல்களையும் மேற்கொள்ளத் தூண்டுவதில் சின்னத்திரை, வெள்ளித் திரைகள் முன்வைக்கும் பெண் பிம்பங்களுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது என்று பங்கேற்ற உளவியலாளர்கள் கருத்துத் தெரி வித்தது கவனத்திற்குரியது. 


இந்த சம்பவம் தொடர் பாக பொதுமக்களிடம் கருத்துக் கேட்டுக்கொண்டிருந்த இளம் பெண் ஊடக வியலாரை அங்கிருந்த ஒரு பள்ளிப்பேருந்தில் அமர் ந்திருந்த மாணவர்கள் கொச்சையாக கேலிசெய்து சிரித்துக்கொண்டிருந்த காட்சியும் ஒளிபரப்பட்டது. இதிலிருந்து, பள்ளிகளில் பெண் குறித்த, நல்லொ ழுக்கம் குறித்த விழிப் புணர்வும், நுண்ணுணர்வும் மாணவர்களிடையெ பரவலாக்கப்படப் போதுமான கவனமும், முயற்சிகளும் கல்விக்கூடங்களில் மேற் கொள்ளப்படுகின்றனவா என்பதே சந்தேகமாக இருக்கிறது.

பெண் மீதான பாலியல் வன்கொடுமைகள் தொடர் ந்து அதிகரித்த வண்ணம். அவ்வாறே அரசியல் சார், சமூகம்சார் சீர்கேடுகளும். இந்நிலையில், இவற்றைக் கண்டித்து உருவாகும் எதிர்ப்பியக்கங்களை அக்கறை யோடல்லாமல், எள்ளிநகையாடுவதாய், மதிப்பழிப் பதாய் விமர்சனம்செய்வதைக் காட்டிலும், இவற்றை ஒரு தொடக்கமாகக் கொண்டு, தில்லியில் நடந்த வன்கொடுமைபோன்றசமூகச்சீர்கேடுகளை வேரறு ப்பதற்கான வழிவகைகளை முனைப்போடு கண்ட றிந்து prevention is better than cure என்ற அளவில், இனி இத்தகைய வன்கொடுமைகள் நடவாதிருக்க சமூகத் தின் அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து குர லெழுப்பத் தேவையான அணுகுமுறைகளைக் கைக் கொள்வதே ஏற்புடையது; இன்றியமையாதது.