LIFE GOES ON.....

LIFE GOES ON.....
Showing posts with label ரிஷியின் கவிதைத் தொகுப்புகள். Show all posts
Showing posts with label ரிஷியின் கவிதைத் தொகுப்புகள். Show all posts

Sunday, March 8, 2015

மற்றும் சிலதிறவாக் கதவுகள் _ கவிதைகள் 36 _ 40

மற்றும் சிலதிறவாக் கதவுகள்  _ 
’ரிஷி’யின் 3ம் கவிதைத் தொகுப்பு
கவிதைகள் 36 _  40







36. சாட்சியங்கள்

சாட்சியாக மறுத்துவிட்ட நிலவின்கீழ்
நடந்துகொண்டிருக்கிறேன்
எனக்கு நானே காட்சிப்பொருளாகியபடி…
அடர்நெரிசலில் உடைப்பெடுக்கும் பெருந்தனிமையும்,
திரளொலிகளில் பெறக் கிடைக்கும் துல்லிய நிசப்தமும்
எப்பொழுதும் போல் தப்பாமல் தொடரும் தண்டனையாய்.
விண்டதும் கண்டதுமாய் கொண்ட பயணத்தில்
தடுக்கு விழுவதும், தடுமாறி எழுவதும் நியமமாய்.
இமயத்தில் உளி செதுக்கியதெல்லாம்
கரும்பலகையில் சாக்கட்டி யெழுத்தாகிவிட
முற்றுமாய்க் கலைக்கலாகாக் கற்றவைகள்
கபாலத்துள் குருதி கட்டிக் கொள்ளும்.
கழிவிரக்கம் வழிமறிக்க, எரிகாயங்கள் கருவறுக்க
அதிகம் பழுத்தவாறிருக்கும் தீரா அன்பின்
தழும்புகளும் கழுவேற்றும். அடிபடா பாவனையில்
முன்னேறும் முழங்காலின் மாறா ரணம் என்றும்
என் கட்புலனுக்கு மட்டும்.
விடா மழைப்பொழிவு விழிகளைப் பிய்த்தெறியும்.
கொடையின் குடையெங்கும் கிழிசல்கள் வரவாக
அடுத்த எட்டின் கதியறியாதவாறு
விதிவசப்பட்டதாய் விரையும் வேளை
உதவிக்கு வாராது உயிராற்றும் காற்றும்.
கரையுங் காலத்தே
நிறைவமைதியாய் உறையும் பிரியம் வரித்த
பூவிதழ்கள் சருகாகிச் சாகும்
தீராச் சோகத்திற்கு
சாட்சியாக மறுத்துவிட்டது சூரியனும்.


37. வெகுமானம்

ஐந்தடி நிலமும் வேண்டாம்
எரித்தால் பிடி சாம்பல்
கலந்திடலாம் காற்றில்
என்றிருந்தும்
கிட்டியது பட்டயம் நேற்று
பேராசைக்காரியென்று.



38. அத்துவானப் பயணம்

நோய்வாய்ப்பட்டிருந்த அறைவிளக்கின் குறையிருளில்
அனாதைச் சிறுக்கியாய் அமர்ந்திருந்தேன்
அன்பளிப்பின் நிராகரிப்பை அனுபவித்தபடி.
அசிரத்தையும், அலட்சியமுமாய் கடந்துசெல்கிறது காலம்.
அதன் மௌனக் கெக்கலிப்பில் என் துக்கம் சிக்கிக் குழம்பிக்
கிளர்ந்தெழுகிறது ஒரு தீப்பிழம்பாய்.
எனதே யான இழப்பொன்றின் வளர் சிடுக்குகளில்
திணறித் திணறிக் கனன்ற வண்ணம்
நிலப்படக் காட்சியாய் சட்டமிடப்பட்ட சூழலில்
கட்புலனுக்குட்படா சலனமா யொரு வீழல்.
ஆழம் அதியாழமாமோ வெனக் கலங்கும் மனம்
பின்னமாகிக் கொண்டிருக்கும். ஆங்கே
வலியின் நீலத்தில் நீண்டு சென்றிருக்கும்
தண்டவாள வண்டித் தொடரில்
திக்குகளை எக்கித் தாண்டி யென்
கண்களி லேறிப் போய் ஒண்டிக் கொள்கிறேன்.
சின்னதொரு ஜன்னலோரம் போதும், எங்கேனும்
அத்துவானமொன்றில்
என்னை இறக்கிவிட்டுக்கொண்டுவிட வேண்டும்.


39. இன்னொரு தோட்டம்

அசரீரி சொன்னது கண்காணாத அந்தத்
தோட்டத்தில் கொட்டிக் கிடக்கிறதென்று.
ஓட்டமாய் ஓடிச் சென்றவள்
தேடிப் பொறுக்கி யெடுத்து நிரப்பிய
கூடைக்குள் கனத்திருக்கும்
‘க்விக் ஃபிக்ஸ்’ மனங்கள்.



40.மாலுமென்னெஞ்சு

நீர்மேல் நடக்கும் மந்திரம் தேர்ந்திருந்தேன்
போய்வந்தவாறிருந்தேன் நிச்சலனமாய்
அச்சமயம் வந்த மச்சகன்னிகைகள் நீந்தி
விளையாடிக் களிக்கலாயினர் அநாயாசமாய்
அதிநிர்வாணமாய் சிறுமீன்களும் சுறாக்களும்
துள்ளி யெழும்பித் திரும்ப அழுந்தின வெள்ளத்தில்
விண்மீன்கள் மிதக்கலாயின சுபாவமாய்
தென்றல் அரவணைத்துக் கொண்டாடியது திரவப்பரப்பை
தன் அனேக அருவக் கைகளால் உரிமையோடு
நீருலா வரலானது நிலா நினைப்பில்
அனைத்தும் கண்டதில் அந்நியமானது போல்
வினை தீர்க்கும் மந்திரம் மறந்துபோக தரை
தண்ணீராகிப் பெருகும் தலைக்கு மேல்.

( கவிஞர் நகுலனுக்கு நன்றி: கவிதைத் தலைப்பிற்கு)










Monday, January 19, 2015

காலத்தின் சில தோற்ற நிலைகள் (ரிஷியின் 4ம் கவிதைத் தொகுப்பு) 1 - 5

காலத்தின் சில தோற்ற நிலைகள்
(ரிஷியின் 4ம் கவிதைத் தொகுப்பு) 1-5
[வெளியீடு: காவ்யா பதிப்பகம்.
முதல் பதிப்பு 2005

]

                       
                         சொல்லவேண்டிய சில
_ ரிஷி



’காலாதிகாலம் குடுவைக்குள்ளிருந்துவரும் பூதம்
மூச்சுத் திணறி விழி பிதுங்கி வெளிவந்தாக வேண்டிய நாளின் நிலநடுக்கங்களை
நன்றாக உணர முடியும் அதன்  நானூறு மனங்களால்.
முதலில் தகரும் குடுவையின் உறுதியை
அறுதியிட்டபடி நகரும் பகலிரவுகள்.
பாவம் பூதம், குடுவை, காலம், நான், நீ,
 யாவும்….



நானே குடுவையாய், நானே பூதமாய், எதுவோ தக்ர்ந்து, எதுவோ விடுதலையாகி எழுதப்படும் என் கவிதைகளில் எதிரொலிப்பதும் பிரதிபலிப்பதும் ஒரு மனமா? நானூறு மனங்களா? எல்லாம் என்னு டையவையா? ஒரு மனதின் கிளைகளோ, வெவ் வேறு மனங்களின் கூட்டிணைவோ _ கவிதையை எழுதி முடித்த பின் எதையும் தெளிவாக வரைய றுத்துச் சொல்ல இயலவில்லை. கவிதையை ‘அபோத நிலை’யில் எழுதுகிறேன் என்பதல்ல. முழுப் பிரக்ஞையோடு தான் எழுதுகிறேன். ஆனால், அந்தப் பிரக்ஞை, நம்முடைய பொதுவான, இயல் பான பிரக்ஞை யிலிருந்து ஏதோ ஒரு விதத்தில் துல்லியமாக வேறுபட் டிருக்கிறது என்று தோன்று கிறது. அதனால் தானோ என்னவோ, என் கவி தையை நானும் ஒரு வாசகராகப் படிக்கும் தருணங் களே அதிகம். இதன் காரணமாகவே ‘பெண் கவிஞர்’ என்ற அடைமொழியும் பொருளற்ற தாகத் தோன்று கிறது.

ஒரு விஷயம் அல்லது உணர்வு பூதமாக மனதில் அடைபட்டு மூச்சுத்திணறலை  அதிகரித்துக் கொண்டே இருக்கும் போது அதை எப்படியாவது வெளியேற்றிவிட வேண்டிய அவசரத் தேவையை மனம் அழுத்தமாய் உணர்ந்து அதன் விளைவாய் கவிதை எழுதப்படுகிறது. அல்லது, ஓர் உணர்வின் தாக்கத்தில் நாமே பூதமாகி விசுவரூபமெடுக்கி றோம் கவிதையில். அல்லது, நானாகிய இந்த் அன்புக்குரிய பூதம் அத்தனை ஆனந்தமாய் பீறிட்டு வெளியேறி குமிழ்களையும், வானவிற்களையும் தன் மொழியால், தீண்டலால் நிரந்தரமாக்கிக் கொண்டே போகிறது. அதாவது, போக முயற்சிக் கிறது. அப்படிச் செய்வதன் மூலம் அதனுடைய பூத குணங்களும், கணங்களும் கூட தாற்காலிகத் தைத் தாண்டிய அடுக்கில் இடம் பிடிக்கின்றன. மேலும், மிகத் தனியாக இந்த பூதம் ஒரு  சுமைதாங்கிக் கல் மேல் அமர்ந்து கொண்டு வேறொரு பூதத்தின் வரவைத் தனக்குள்ளிருந்தே எதிர்நோக்கியும், தனக்குள் தானே பழையபடி புகுந்துகொண்டும் கவிதையாய் காலங்கழித்துவருகிறது.

நுண்கணங்களின் கணக்கெடுப்பே கவிதை என்று சொல்லத் தோன்றுகிறது. யாராலும் திட்டவட்ட மாய் எண்ணிச்சொல்ல முடியாத ஒன்றை உணர் வார்த்தமாய் வகைபிரித்து, அவற்றின் உள்கட்டுமா னங்களையும் பகுத்துக்காட்ட மனம் மேற்கொள் ளும் காலத்திற்குமான பிரயத்தனமே கவிதை. இந்த முயற்சியின் வழி புதிய கருத்துருவாக்கங்கள் சில இயல்பாய் வரவாகலாம். ஆனால், கருத்துருவாக் கங்கள் மட்டுமல்ல கவிதை. அரூபக் கவிதைகள் என்று எள்ளிநகையாடப்பட வேண்டியவையல்ல. அவை ஒரு மனதின் வழித்தடங்களை முன்வைக் கின்றன. தூல மாக இருப்பவர் கவிஞர் என்னும் போது அவர் எழுதும் கவிதை கள் எப்படி அரூபக் கவிதைகளாகிவிட முடியும்?

என் கவிதைகள் காலங்கடந்து வாழுமா என்பது பற்றி எனக்கு அக்கறையில்லை.  என் காலத்தி லேயே அவை பேசப்படுமா என்பதும் எனக்கு ஒரு பொருட்டில்லை. எழுதுவதில் கிடைக்கும் மன நிறைவும், வலி நிவாரணமும், கலைடாஸ்கோப் காட்சிகளுமே பிரதானம். தனி ஆவர்த்தனமே சேர்ந்திசையாகவும் ஒலிப்பதை என் சக-கவிஞர்கள் பலருடைய கவிதைகளில் உய்த்துணர்ந்திருக் கிறேன். அப்படி, என் தனி ஆவர்த்தனமும் ஒரு வேளை சேர்ந்திசையாகலாம்…..ஆகவேண்டும் என்ற விருப்பமும், ஆகும் என்ற நம்பிக்கையுமாய் என்னுடைய நான்காவது தொகுப்பு வெளிவருகிறது.

தோழமையுடன்
ரிஷி
17.12.2005


1.அவரவர் நிலம்
உனக்குக் கால் கால் மண் தரை
எனக்கு மனம் தாள் நிலம் அலை
உன் காலே எனதுமாக நிர்பந்தம் ஏதுமிலை
காற்றோ மழையோ கடலோ முகிலோ
நடக்கப் பழகிய பின் நிலம் தானே….
பிடிப்பற்றது திடமில்லை யெனில்
தரையுனதெனக்கமிலமாய்.



2. காலம், கனவு மற்றும் கிலோ மீட்டர்கள்
கணக்கற்ற காததூரங்களைத் தனக்குள்
குவித்துவைத்திருக்கிறது காலம்.

ஒவ்வொரு நொடிக்கும் ஒரு ஒளியாண்டு.

மூற்றைம்பது நாட்களை மைல்களாக நீட்டிப் போட்டால்
மறுமுனை அண்டார்ட்டிக்காவைத் தாண்டி….
அந்த நிலாவைத் தாண்டி…..

இமயமலையின் உச்சிமுனைத் தொலைவு
இனி இல்லையாகிவிட்ட அந்த இரண்டுமணி நேரங்கள்….

புலியின் வாலில் தொங்கிக்கொண்டிருக்கும் அந்த உயிரின் அலைச்சல்
எத்தனைக் கடலாழங்கள்?

விடை கிடைக்காத கேள்விகளின் பாரங் களை விரித்துப் போட்டால்
உலகத்துப் பாலைகளையெல்லாம் ஒரு சேரத் தாண்டி நீளும்.

உலர்ந்தும் உருண்டோடிக்கொண்டிருக்கும் கண்ணீரின்
நீள அகலங்கள்
பாதாளவுலகின் பரப்பளவாய்.

உடல்களின் அருகாமைக்கும் உள்ளங்களின்
அருகாமைக்கும் இடையே
சமயங்களில் வரவாகும் அகழிகளின் ஆழம்
அளக்கமாட்டாது.

கண்ணின் காலமும் நெஞ்சின் காலமும்
வெவ்வேறு தொலைவுகளின் அலைவரிசைகளில்.

கனவின் மார்க்கத்திற்கு மார்க்கண்டேயப் புள்ளினங்கள் வரைந்திருக்கும்
விண்ணிலான அருவத்தடங்களின் நீள அகலங்கள் நிலாவிலுள்ளன.

நம்மிடமுள்ளதெல்லாம் வெறும் கிலோமீட்டர்கள் மட்டுமே.



3. விடியலின் படிமங்கள்
இரவில் முற்றுப்பெற்றுவிடும் பகலென
முழுப் பிரக்ஞை ஒற்றி வர
முடியாமல் தொடரும் பொழுதெல்லாம்
பயணத்தின் இரவுமொரு விடியலென்று
கற்றுத் தேரும் மனதில் வரவாகும்
மற்றொரு காலவெளி உறவுகள்
நிறமற்று வலியற்று நிரந்தரமாய்.



4. பீலி பெய் சாகாடு
வார்த்தைகள் தொண்டைக்குழி வழிய.
விழுங்கக் காத்திருக்கின்றன நிலநடுக்கங்கள்.
திரியாத பாலாய் உறவின் மாட்சிமை,
தாக்கம் நீக்கமற.
குரலழித்துக் கைகாலொழித்து வெறும் வெளி பரவும்
ஒளி நாழிகைகள் ஆலகாலமாய்.
கட்டாந்தரையில் நட்ட நாற்றுக்களா யின்னும்
எத்தனை நாட்களோ…..?
வித்தகமெல்லாம் வற்றிப் போகப் பற்றிய
மோகமே யன்பாய் அதுவே இதுவாக
முற்றிய பித்தம் வடிய
காற்றேகிக் கடந்திட வேண்டும் என்னை நானே.


5. சிறுமியும் யுவதியும் சமவயதில்
எழுதும் நேரம் வயது வழிவிலகிவிடுகிறது.
உள்ளே என்றைக்குமாய் கிளைபிரிந்துகொண்டிருக்கும் வீதியொன்றில்
ஒரு சிறுமி குதித்தோடத் தொடங்குகிறாள்.
திருப்பத்தில் முளைக்கும் இளம் யுவதி
நிரம்பிய அறிவிலும் அழகிலுமாய்
பொடிநடையாய் அளந்துகொண்டிருக்கிறாள் சில
அந்தர உலகங்களை.
பாதிவழியில் சிறுமி அணிலாகவும் முயலாகவும்
யுவதி பஞ்சவர்ணக்கிளியாகவும் புல்லாங்குயிலாகவும் மாறி
இருவருமே பறந்து பறந்து
காலத்தின் கணக்குகளை சரி செய்தும்
குண்டு குழிகளைச் செப்பனிட்டும்
தமது இறக்கைகளால் அதன் பரிமாணங்களைப் பெருக்கி
கைக்கெட்டும் தூரத்தில் நெருக்கமாக்கிப் புதுப்பித்தபடியே
பாடித் திரிகிறார்கள்.
ஓலமோ, ஆலோலமோ _ அவர்களுடைய குரல் வழியே
உருகிக் கசிகிறது உயிரின் உயிர்.
கயிற்றரவின் சொப்பனவெளியில் பெருகிப் பாய்கின்றன
காய்ந்து புதையுண்ட நதிகளெல்லாம்.
வரவாகும் பேரொளியில் சிறுபொழுது
இரட்டைத் தாழ்ப்பாள்களற்று விரியத் திறந்திருக்கும் நிரந்தரத்தின் நுழைவாயில்!





0

Sunday, January 18, 2015

மற்றும் சிலதிறவாக் கதவுகள் _ கவிதைகள் 31 - 35

மற்றும் சிலதிறவாக் கதவுகள்  _ 
’ரிஷி’யின் 3ம் கவிதைத் தொகுப்பு
கவிதைகள் 31 _ 35






31. உறவியல்

திரைகட லோடித் தேடிய
திரவியம்
விரயமான பிறகும்
அருவியாகும் பிரயத்தனத்தில்
தரங்கம் கரைந்தவாறு.



32. அன்றில்

கழிந்த காலத்தின் வழியே
பின்னேகி என்றுமாய்
இழந்த நாட்களுக்குள் மீண்டும்
நுழைந்துகொண்டேன்.
உதிர்ந்து போயிருந்த இலைகள் எழும்பிப்
பச்சைப்சேலாகப் பதிந்தன கிளைகளில்.
கிளைத்த வண்ணமிருந்தன அடிமுடியறியா
அலைகள்.
அலைந்து களைத்த கால்கள்
புதிதாய்ப் பயணப்படலாயின.
புத்தம்புதிதாய் முளைத்த வெளிகளில்
பாடிப் பறந்தன வேடனம்புக்கிரையான
புள்ளினங்கள்.
புள்ளிகளின் கோலங்கள் மறு
கோலத்திற்குத் தயாராகி….
தயாரிக்கப்பட்டிருந்த தத்துவங்கள்
திரும்பவும் தனித்தனி வார்த்தைகளாகிப்
பிறிதொரு வரிசையில்.
வரிசைகள் அழிந்து பிறந்த
தொடக்கங்களின் புதிர்வழிகளில்
என் முதல் சதுரங்கள் எங்கோ
பதுங்குகுழிகளில்.



 33. பரிமாணங்கள்
 குச்சிக் காலழகி, கோண மூக்கழகி ‘ஆலிவ் ஆயில்’ மேல்
தீரா இச்சையில்
எந்நேரமும் இருவர் தம்முள் பொருதியவாறு…..
பசலைக் கீரையைச் சுவைத்துச் சுவைத்துக் காதலை
தழைக்கவைத்துக் கொண்டிருப்பான் மாலுமி ‘பப்பாய்’.
குரோதமே காதலாய் உதைத்திருப்பான் ‘Bளூட்டோ’
நேரத்திற்கொருவரை நெருங்குவாள் சிந்தூரி!
ஆறாது வல்வினை யாற்றும் அன்பில்
வாழ்க்கை யொரு கேலிச்சித்திரமாய்.

  
34. வாகைகள்

ஒவ்வொரு முறையும் மாறிக்கொண்டே யிருக்கின்றன
ஓட்டப் பந்தய நியதிகள்.
மீறுவதற்கென்றே விதிமுறைகள்.
பக்கவாட்டுக் கோடுகளில் படாது விரைபவர் அருகில்
தரை பிளந்தோடும் காலில் தொக்கி நிற்கும் சக்கரம்.
தக்கபடி புதுக்கோடுகள் வரைந்து கொள்வார் வேறொருவர்.
ராஜாளிப் பறவையோடும் பேரம் படியச் செய்து
ரக்கை கட்டி எக்கிச் செல்வார் ஆறாம் எண்காரர்.
தட்டித் தடவி யேகுபவர் தங்கக் கோப்பைத் தாகத்தில்
குட்டிக் கரண மடிக்கத் தொடங்குவார்.
இறுதியில் வருபவரை கரம்பிடித் திழுத்து
விருதுக் கரை சேர்ப்பார் நடுவரும்….

தோல்விக் கப்பாலான துக்கம் முட்டி
கால் வலிக்கப் போய்க்கொண்டிருப்பான்
முற்றக் கற்றதொரு கத்துக்குட்டி.



35. மூன்றாம் கண்

பழம் வெல்ல வேண்டும்.
பிள்ளையாரின் வாகனம் பறந்து செல்லாது.
முருகனுக்குக் கவலையில்லை.
சித்தி விநாயகனோ சாதுர்யமாய்
அம்மையப்பனை வலம் வந்து அகிலம் என்றான்.
கனியோ
கார்த்திகேயன் மயிலை மூஞ்சூறாக்கி விழச் செய்து
கணபதி தொந்தியை பலூனாய் உந்தி யெழச் செய்து
ஒருவருக்கும் எட்டாமல் நழுவும் இனி.





0

மற்றும் சிலதிறவாக் கதவுகள் ’ கவிதைகள் 25 - 30

மற்றும் சிலதிறவாக் கதவுகள் 
’ரிஷி’யின் 3ம் கவிதைத் தொகுப்பு
கவிதைகள் 25 - 30

25. வாசம்

ஆளின் வாடையும் தோலின் வாடையும்
அலசித் தீர்க்கப்பட _
அணுகலாகாது கிடக்கும்
கலங்கிய
அடிமன வாடையின்
மூர்க்கங்கள்




26.  மேடுபள்ளங்கள்

தெருவெல்லாம் இறைந்து இடந்தன தங்கக் கைக்குட்டைகள்
திடீர் தானமாய் _

(அரசியல்வாதியின் இல்லத்தில் அன்று வருமான வரிச் சோதனை)

நம்மைப் புரக்க வந்தவர் தம்மைப் புரந்துகொண்டதில்
அதிகரித்த தரித்திரர்கள்
மடித்துக் கோவணமாய் உடுத்தவும் வழியின்றி.



27. தகனம்

நாயேனானது போதும் நக்கிக் குடித்ததெல்லாம் போதும்
வாலாட்டி தலையாட்டி விசுவாசங் காட்டியதும்
வெட்கம் விட்டுப் போய் வீசெலும்பு பொறுக்கியதும்
விளக்குக் கம்பம் தேடி வீதியெலா மோடியதும்
வலி கல்லெறிக்குப் பிறகும் வாயழைப்பிற்கும் உருகி
விழி நோக அண்ணாந்து துள்ளிக் கொண்டோடியதும்
அள்ளிய கைகளெல்லாம் அன்பெனக் கொண்டதும்
தொலைவோடிய பந்தைத் துரத்திப் பிடித்து வந்து
அலைகடலை வென்றதாய் அதிகம் களித்ததும்
அரை பிஸ்கோத்துக்காய் ஆறு குட்டிக் கரணமடித்து
குறையன்பே சரணமென்று காலடியில் கிடந்ததும்
எத்தும் பாதத்தை ஏக்கம் மிகப் பற்றிச்
சுற்றிச் சுற்றி வந்ததும் சொந்தங் கொண்டாடியதும்
முன்பற்றி பின்பற்றி முதுகு தொற்றிக் குதம் முகர்ந்
துற்றதில் பற்றிய தீயில் உயிர்ச்சுனை வற்றப்
பற்றிய உன்னியும் முற்றிய வெறிநோயுமா
யெந் நாளும் பேரென்பது ஜிம்மி பப்பியாக
தீராது ஊளையிட்டுத் தினந்தினம் மலம் விழுங்கித்
தெருநாயாய் சொறிநாயாய் செத்தும் புழங்குமொரு
துப்புக் கெட்ட வாழ்க்கை யினி ஒப்பேனே பராபரமே.




28.குகைமனிதன்

காட்டுமிராண்டி தான் நான்.
முட்ட முட்டத் தளும்பி வழியும் நறுமணத்தை
நாசூக்காய் அலங்காரக் குவளையில் கொட்டிஉதடு நலுங்காமல்
நளினமாய் உறிஞ்சிக் குடிக்கத் தேவையில்லை.
வாய் கொள்ளாமல் அள்ளி விழி கிறங்க அனுபவித்த ஆனந்தம் பற்றி
அரைபக்கக் கட்டுரையொன்று கனகச்சிதமாய் எழுத வரவில்லை.
நினைத்த மாத்திரத்தில் அக்குளில்முளைத்துவிடும் சிறகுகளையும்
அவை கொண்டு நானேகிய புவியீர்ப்பைத் தாண்டிய பூகோளப் பரப்புகளையும்
பதவிசாய்க் கவிதையாக்கும் பாங்கறியேன்.
திகட்டத் திகட்ட உன்னியவற்றை யெல்லாம் சகட்டுமேனிக்குக் கடைபரப்பி
காசு உண்டாக்குகின்ற கூலவாணிபம் பழகிலேன்.
நேச மொரு பொழுதுபோக்கென்ற நிதர்சனம் விளங்கா முழு மூட மனதில்
காற்று மட்டும் களங்கமில்லாமல் வீசியவாறு….





29. அமர்வு

கிடைத்த நேரத்தில்
முடைந்த நாற்காலியில்
நான்காம் கால் பின்னப்
பொழுது காணாமல்
நட்டுவைத்த மனது முட்டுக் கொடுத்தவாறு.



30.நெல்லிக்கனி

அகலிகையின் அடிபணிந்த ராமனை அறிமுகம் செய்தாய்.
ஜானகியின் கரம் பற்றிக் கானகமெங்கும் திரிந்த
காதல் மணாளனைப் பரிச்சயமாக்கினாய்.
நாதவெளியில் மிதக்கும் நற்றவம் கற்றுத் தந்தாய்.
பாதிப்பாதியாய் ஆளுக்கொரு முனையிலிருந்து
இழைபிரித்த கனவுச்சிடுக்குகள், நனவு முடிச்சுகள் நிறையவாய்.
சிக்கவிழ்த்தோம் சில மார்க்கங்களின் திக்குகளை.
ஒருபோதும் அதிராத உன் அடிமனக் குரல் எனக்கொரு பிடிமானமாய்.
அவரவர் வெந்தழலுக்குள் கனன்றபடி
நந்தலாலாவைச் சொந்தமாக்கிக் கொண்டோம்.
நிறைமாத கர்ப்பிணியின் எதிர்பார்ப்பும் குறைப்பிரசவக் கையறு நிலையுமாய்
நம்முடைய கலந்துரையாடல்கள்
மூன்று புள்ளிகளோடே முற்றும் திறம் வரமாய்ப் புரியப்
பெருகுமாக் கடலொரு பரிசாய் உனக்கு என்றும்.


(’பத்மினி மாடம்’க்கு)