LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, March 8, 2015

மற்றும் சிலதிறவாக் கதவுகள் _ கவிதைகள் 36 _ 40

மற்றும் சிலதிறவாக் கதவுகள்  _ 
’ரிஷி’யின் 3ம் கவிதைத் தொகுப்பு
கவிதைகள் 36 _  40







36. சாட்சியங்கள்

சாட்சியாக மறுத்துவிட்ட நிலவின்கீழ்
நடந்துகொண்டிருக்கிறேன்
எனக்கு நானே காட்சிப்பொருளாகியபடி…
அடர்நெரிசலில் உடைப்பெடுக்கும் பெருந்தனிமையும்,
திரளொலிகளில் பெறக் கிடைக்கும் துல்லிய நிசப்தமும்
எப்பொழுதும் போல் தப்பாமல் தொடரும் தண்டனையாய்.
விண்டதும் கண்டதுமாய் கொண்ட பயணத்தில்
தடுக்கு விழுவதும், தடுமாறி எழுவதும் நியமமாய்.
இமயத்தில் உளி செதுக்கியதெல்லாம்
கரும்பலகையில் சாக்கட்டி யெழுத்தாகிவிட
முற்றுமாய்க் கலைக்கலாகாக் கற்றவைகள்
கபாலத்துள் குருதி கட்டிக் கொள்ளும்.
கழிவிரக்கம் வழிமறிக்க, எரிகாயங்கள் கருவறுக்க
அதிகம் பழுத்தவாறிருக்கும் தீரா அன்பின்
தழும்புகளும் கழுவேற்றும். அடிபடா பாவனையில்
முன்னேறும் முழங்காலின் மாறா ரணம் என்றும்
என் கட்புலனுக்கு மட்டும்.
விடா மழைப்பொழிவு விழிகளைப் பிய்த்தெறியும்.
கொடையின் குடையெங்கும் கிழிசல்கள் வரவாக
அடுத்த எட்டின் கதியறியாதவாறு
விதிவசப்பட்டதாய் விரையும் வேளை
உதவிக்கு வாராது உயிராற்றும் காற்றும்.
கரையுங் காலத்தே
நிறைவமைதியாய் உறையும் பிரியம் வரித்த
பூவிதழ்கள் சருகாகிச் சாகும்
தீராச் சோகத்திற்கு
சாட்சியாக மறுத்துவிட்டது சூரியனும்.


37. வெகுமானம்

ஐந்தடி நிலமும் வேண்டாம்
எரித்தால் பிடி சாம்பல்
கலந்திடலாம் காற்றில்
என்றிருந்தும்
கிட்டியது பட்டயம் நேற்று
பேராசைக்காரியென்று.



38. அத்துவானப் பயணம்

நோய்வாய்ப்பட்டிருந்த அறைவிளக்கின் குறையிருளில்
அனாதைச் சிறுக்கியாய் அமர்ந்திருந்தேன்
அன்பளிப்பின் நிராகரிப்பை அனுபவித்தபடி.
அசிரத்தையும், அலட்சியமுமாய் கடந்துசெல்கிறது காலம்.
அதன் மௌனக் கெக்கலிப்பில் என் துக்கம் சிக்கிக் குழம்பிக்
கிளர்ந்தெழுகிறது ஒரு தீப்பிழம்பாய்.
எனதே யான இழப்பொன்றின் வளர் சிடுக்குகளில்
திணறித் திணறிக் கனன்ற வண்ணம்
நிலப்படக் காட்சியாய் சட்டமிடப்பட்ட சூழலில்
கட்புலனுக்குட்படா சலனமா யொரு வீழல்.
ஆழம் அதியாழமாமோ வெனக் கலங்கும் மனம்
பின்னமாகிக் கொண்டிருக்கும். ஆங்கே
வலியின் நீலத்தில் நீண்டு சென்றிருக்கும்
தண்டவாள வண்டித் தொடரில்
திக்குகளை எக்கித் தாண்டி யென்
கண்களி லேறிப் போய் ஒண்டிக் கொள்கிறேன்.
சின்னதொரு ஜன்னலோரம் போதும், எங்கேனும்
அத்துவானமொன்றில்
என்னை இறக்கிவிட்டுக்கொண்டுவிட வேண்டும்.


39. இன்னொரு தோட்டம்

அசரீரி சொன்னது கண்காணாத அந்தத்
தோட்டத்தில் கொட்டிக் கிடக்கிறதென்று.
ஓட்டமாய் ஓடிச் சென்றவள்
தேடிப் பொறுக்கி யெடுத்து நிரப்பிய
கூடைக்குள் கனத்திருக்கும்
‘க்விக் ஃபிக்ஸ்’ மனங்கள்.



40.மாலுமென்னெஞ்சு

நீர்மேல் நடக்கும் மந்திரம் தேர்ந்திருந்தேன்
போய்வந்தவாறிருந்தேன் நிச்சலனமாய்
அச்சமயம் வந்த மச்சகன்னிகைகள் நீந்தி
விளையாடிக் களிக்கலாயினர் அநாயாசமாய்
அதிநிர்வாணமாய் சிறுமீன்களும் சுறாக்களும்
துள்ளி யெழும்பித் திரும்ப அழுந்தின வெள்ளத்தில்
விண்மீன்கள் மிதக்கலாயின சுபாவமாய்
தென்றல் அரவணைத்துக் கொண்டாடியது திரவப்பரப்பை
தன் அனேக அருவக் கைகளால் உரிமையோடு
நீருலா வரலானது நிலா நினைப்பில்
அனைத்தும் கண்டதில் அந்நியமானது போல்
வினை தீர்க்கும் மந்திரம் மறந்துபோக தரை
தண்ணீராகிப் பெருகும் தலைக்கு மேல்.

( கவிஞர் நகுலனுக்கு நன்றி: கவிதைத் தலைப்பிற்கு)










No comments:

Post a Comment