LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, February 21, 2026

யாதுமாகி நிற்கும் தமிழ்! - கவிதைகள் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

யாதுமாகி நிற்கும் தமிழ்!
‘ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)



1. அன்புத் தமிழுக்கு
என்றுமான நன்றி!
மொழியின் மீதுள்ள மாறாக்காதலைச் சுமந்தபடி
வழிபோகிறேன்.
கைபர் கணவாய் எங்கிருக்கிறதென்று
எனக்குத் தெரியாது.
குமரிமுனையை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன்....
அடுத்தென்னவாகுமென்று அறியாத
அகால வாழ்விதில்
எனக்குத் தெரிந்ததெல்லாம் தமிழும்
கொஞ்சம் ஆங்கிலமும்.
தெரிந்த தமிழ் என்று நான் சொல்லக்கேட்டு
செல்லமாய்க் குட்டிச் சிரிக்கிறது தமிழ்!
கற்றது கையளவு; கல்லாதது கடலளவு.
நான் வந்த வழியெங்கும்
வாழும் வழியெங்கும்
அன்புத் தமிழின் அரவணைப்பே
திசைகாட்டியாக
திக்கற்றவருக்கான பாதுகாப்பு
அரணாக....
தன் தாயை உத்தமியென்றபடி
இன்னொரு தாயை அவிசாரி என்று
நடுத்தெருவில் வசைபாடுபவருக்கொப்பாய்
என் மொழியைப் போற்றிய கையோடு
இன்னொரு மொழியைத் தூற்ற மாட்டேன்.
செத்த மனிதர்கள் உண்டு.
செத்தமொழி என்று எதுவுமில்லை.
அவரவர் அன்பு அவரவருக்கு.
அவரவர் மொழியின் அருமை
அவரவரே அறிவார்.
அத்தனை பேரின் தாய்மொழிகளுக்கும்
உரித்தாகட்டும் நம்
அன்பு வணக்கம்.

2. யாதுமாகி நின்றாய்…..

கனவுகள் குமுறல்கள் கண்ணீர் கோபம் தாபம்
கனிவு துணிவு உணர்வு அறிவு எண்ணம் செயல்
எல்லாவற்றிற்கும் வடிவம் தந்து
எத்தனையோ வடிகால்கள் அமைத்துத் தந்து
நம்மை நாம் வெளிப்படுத்த
நம்மொத்தவர்களோடு நல்லுறவாட
நேற்றும் இன்றும் நாளையும்
நற்பாலம் கட்டித்தந்து
நம்முள் கலந்திருக்கும்
தாய்மொழியாம் தமிழை
காற்றென்பதோ
காலத்தின் ஊற்றென்பதோ
உலகென்பதோ
உயிர்த்துடிப்பென்பதோ….
எத்தனை கோடி நன்றி சொன்னாலும்
ஈடாகுமோ தமிழின் வழித்துணைக்கு!

3. தாய்மொழிப் பற்று










எம் தாயும் உம் தாயும் வேறு வேறு என்றாலும்
தாய்மை வேறுவேறல்ல.
எம் தாய் மேல் எனக்குண்டாம்
அளப்பரிய அன்பும் மரியாதையும்.
போலவே உம் தாய் மேல் உமக்குண்டெனும்
தெளிவு எமக்குண்டு.
எம் தாயை யார் பழிக்கவும் அனுமதியேன்
நான்
யார் தாயையும் அவமதிக்க மாட்டேன்.
பெற்றால்தான் பிள்ளையா வென
பேரன்பிலூறிக் கேட்கும்
தாயுள்ளம்
பத்தரைமாற்றுத் தங்கமாக
தாய் என்பவர் தனது எல்லாப் பிள்ளைகளுக்கும்
தாயுமாக
தாயைச் சங்கிலியால் கட்டிச் சிறையில்
பூட்டிவைத்து
தமக்கு மட்டுமான சொந்தமெனக்
காட்டுவோர்
தற்பெருமையொரு நோயுமாக
யார் தாய் உயர்ந்தவர் என்ற
அக்கப்போர் பட்டிமன்றத்தில்
பிறர் தாயை இழித்துப்பேசி
தம் தாய்க்கு மகுடம் சூட்டுவதை
எந்தத் தாய்தான் விரும்புவார்?
எந்தவொரு மொழியும் யாருடையவோ
வந்தனைக்குரிய தாயாகிநிற்கும்
மந்தமாருத எழிற் புவிப்பரப்பு இது.
நிந்தனை செய்யோம் எந்தவொரு
மொழியையும்.
சுந்தரமென்போம்
சூழ்ந்துள மொழிகளையெல்லாம்.








All reactions:
யுகயுகன் யுகயுகன்

No comments:

Post a Comment