(1)
முனைவர் பட்ட ஆய்வுக்காக
படைப்பாளியை வெட்டிக்கு
அக்குவேறு ஆணிவேறாக்கியவர்
இனி வாசகர்களால் அவரை நன்றாகப் புரிந்துகொண்டு
மெச்சமுடியும் என்றார் _
உயிரற்ற சோளக்கொல்லைபொம்மையாக்கிவிட்டு
பொன்னாடை போர்த்தியிருந்த
படைப்பாளிமேல்
தானே காக்கையாய் எச்சமிட்டுக்கொண்டிருப்பதைப்
புரிந்துகொள்ளாமல்.
(2)
அவர் எழுதிக்கொண்டிருந்தபோது
அரை டிராயர் சிறுவனாகக்கூட இருந்திருக்க மாட்டார்..
இவர்.
ஆனாலும்
Inverted Commaக்களேதும் இல்லாமலே
'அவர்
இதை நினைத்து எழுதினார்;
இந்தப் பொருளில் மட்டுமே
இந்த வார்த்தையை பயன்படுத்தினார்'
என்று அடித்துக்கூறுகிறார்.
அப்படியில்லை என்றால்
அடித்துவிடுவார் போலும்.
அச்சமாக இருக்கிறது
(3)
ஒருவர் எழுதிய ஆவணத்தை அலசியாராய்ந்து
ஆறாயிரம் பக்க கட்டுரையொன்றை எழுதுவதற்காக
'அவருடைய
நண்பரைப் பார்த்தேன்,
எதிரியைப் பார்த்தேன்
அவருடைய பேராசிரியரைப் பார்த்தேன்,
பள்ளியாசிரியரைப் பார்த்தேன்,
அவரோடு பாண்டியாடியவரைப் பார்த்தேன்,
பக்கோடா பகிர்ந்துண்டவரைப் பார்த்தேன்,
என்று பக்கம்பக்கமாகப் பட்டியலிட்டிருந்தவரைப்
பார்த்து
‘அவரை’ப்
பார்த்தீர்களா என்று கேட்டால்
ஆசாமி கப்சிப்.
(4)
வாழ்வின் பல்பொருளாழங்காட்ட
கவி வரைந்துசென்ற
புனல் விட்ட மணல் கட்டத்தை மிக கவனமாய்
புகைப்படமெடுத்துக்கொண்டுவிட்ட மாமுனைவர்
மறவாமல் அதனருகே நின்றொரு ஸெல்ஃபியும்
எடுத்துக்கொண்டு
எல்லையற்ற அதன் விரிபரப்பில்
நல்லதோர் ரியல் எஸ்டேட் வர்த்தகராய்
அடுக்குமாளிகைக் குடியிருப்பு கட்டி
One Hall, Two Bedrooms, Kitchen, Attached Bathroom
என்று
அச்சு ஒளி-ஒலி ஊடகங்களில்
பிச்சுப் பிச்சுக் காட்டி
கூவி விற்கும் பாங்கு
திறந்தமுனைக் கவிதையார்வலர்களுக்கு
குத்து கும்மாங்கு.
