தவிப்பு
உறுமியது நாயொன்று பலவீனமாக.
அதைச் சுற்றி இரண்டு மூன்று நாய்கள்
வியூகமைத்துத் தாக்கத் தயாராய்.....
அடுத்த சில கணங்களில் நடுவீதியில்
வன்புணர்வுக்காளாக்கப்படும் அந்தப்
பெட்டைநாய்.
எங்கு விரைந்து பதுங்குமோ
எங்கெல்லாம் காயம்பட்டுத் துடிக்குமோ…
எனக்குப் பிடிக்கவில்லை என்று அதன் உறுமலில்
தெளிவாகவே புரிந்தாலும்
பொருட்படுத்துவார் யார்?
மனித வாழ்வே இங்கே நாய்ப்பாடாக
பெட்டைநாயின் வலியை சட்டை செய்ய ஏது நேரம்?
கனக்கும் மனதுடன் மேலே நடக்க
தெருவோரம் இருவர் பேசிக்கொண்டிருந்தார்கள்:
’இளம்பிள்ளைகள். இரவு நேரம்’ ’பாவம்’ என்ற வார்த்தைகள்
பாலியல் வன்புணர்வு செய்யும் பொறுக்கிகளுக்கு
வக்காலத்து வாங்குவதாய்
மண்டையில் சூடேற
ஒரு கணம் நின்று திரும்பிப்பார்த்தேன்.
’அவர்கள் அந்த நிகழ்வைத்தான் பேசினார்கள் என்று
அத்தனை சரியாக அறிவாயா நீ?’
என்று அறிவு கேட்டு
ஒருமாதிரி நிதானப்படுத்தியதில்
நடையைத் தொடர்ந்தபோது
கால்கள் நடுங்கித் தடுமாறுவதை உணரமுடிந்தது.


No comments:
Post a Comment