LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, December 7, 2025

மனசாட்சி - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மனசாட்சி

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
தானே உலகத்தின் ஆகச்சிறந்த அழகு என்று
திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டேயிருந்தார் அவர்.
தானே உலகத்தின் ஆகச்சிறந்த அறிவு
என்றும் திரும்பத்திரும்பச்சொல்லிக்கொண்டேயிருந்தார் அவர்
மானே தேனே சேர்த்துக்கொண்டு ஆரவாரமாக ஆமோதித்தார்கள் அந்த சிலபலர்
அவருக்கு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும்.
விடுதலையென்பது எனக்கு அடங்கியிருப்பது
என்று போதித்தார்.
”வாஹ்! வாஹ்!” என்று வாய்நோக
வழிமொழிந்தார்கள் அந்த சிலபலர்
தானே தனக்குப் பொய்சொல்லிக்கொள்வதை
தனது படைப்புப்பணியின் உள்ளார்ந்த அம்சமாகக் கொண்டவர்
நிலைக்கண்ணாடி மட்டும் தன் சொல் கேளாமலிருப்பது கண்டு
கடுங்கோபம் கொண்டார்.
கையால் அதை சுவரிலிருந்து பிடுங்கியெறிந்தார்
தரைவிழுந்து சிதறிய துண்டங்களிலும்
அவர் முகம் அவராகவே கண்டது.

No comments:

Post a Comment