LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, January 12, 2025

நீளாதிநீளங்களும் நீக்குபோக்குகளும் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நீளாதிநீளங்களும் நீக்குபோக்குகளும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

இதுவரை எழுதப்பட்ட
சிறுகதைகளிலேயே
மிகவும் நீளமானது எழுதப்
பட்டிருப்பதாக
புதிய மோஸ்தரில் விளம்பரம்
தரப்பட்டிருந்தது.

சிலர் மர ஸ்கேலை எடுத்துக்
கொண்டனர்.
சிலர் இரும்பு ஸ்கேலை எடுத்துக்
கொண்டனர்.
சிலர் ‘இஞ்ச் டேப் எடுத்துக்
கொண்டார்கள்.
சிலர் கையால் முழம்போட
முடிவுசெய்தார்கள்.

ஆளாளுக்கு ஒரு அளவுகோலை
எடுத்துக்கொண்டபின்
அதி கவனமாக அளந்தார்கள்
அந்த ஒரேயொரு கதையைத்
திரும்பத்திரும்ப.

அவர்களுடைய அளவுகோல்கள் காட்டும்
வேறுபட்ட அளவுகளை
அவற்றின் வித்தியாசங்களை
அளவுகோல்களின் அளக்குங் கைகளின்
வேறுபட்ட நீளங்களை
ஆக்ரோஷமாய் அதி துல்லியமாய்
ஆங்காங்கே அடைமொழிகளோடும்
மேற்கோள்களோடும்
அழுத்தமாய்ச் சுட்டிக்காட்டியவா
றிருந்தார்கள்.

ஸ்கேலும் இஞ்சு டேப்பும்
ஸ்டேஷனரி கடைகளில்
அமோக விற்பனையாக

அலங்காரப் பொருளாகவோ
ஆய்வுக்கான கருப்பொருளாகவோ
அந்தஸ்துக்கான ஆஸ்தியாகவோ
பந்தோபஸ்துக்கான முன்னேற்
பாடாகவோ
முகக் கவசமாகவோ
மார்பில் பூணும் கேடயமாகவோ
மண்டைக்குப் பின்னாலான
ஒளிவட்டமாகவோ
அந்தக் கதை குறித்த கட்டுரை
யெழுத
அதியதிவேகமாக விலைகொடுத்து
வாங்கிக்கொண்டிருப்பவர்களின்
வாதப்பிரதிவாதங்களில் _

காலம் எழுதிய கதைகளையெல்லாம்
ஒன்றுவிடாமல் படித்தவர்
யாரென்ற விவரமும்
காலத்தினாற் செய்யப்பட்ட
அதி நீளக் கதை
யெதுவென்ற விவரமும்
கதை யென்ற ஒன்றுண்டு
என்ற விவரமும்
வெகு நேரத்திற்கு முன்பே
காணாமல் போயிருந்தன.

No comments:

Post a Comment