கவிதையாதல்
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
நாடுமல்ல காடுமல்ல நான் கவிதை
யென்றது;நரி காகம் கதையல்ல நான் கவிதை
யென்றது;
நான்குவரித் துணுக்கல்ல நான் கவிதை
யென்றது;
நீள நீள மறுமொழியல்ல நான் கவிதை
யென்றது;
நிறையக் கேட்டுவிட்ட தத்துவமல்ல நான் கவிதை
யென்றது;
நான்குமறைத் தீர்ப்பல்ல நான் கவிதை
யென்றது;
நான்கு பழமொழிகளின் திரட்டல்ல நான் கவிதை
யென்றது;
நச்சென்ற எதிர்வினையல்ல நான் கவிதை
யென்றது;
நாக்கால் மூக்கைத் தொடுவதல்ல நான் கவிதை
யென்றது;
நாய்வால் நிமிர்த்தலல்ல நான் கவிதை
யென்றது;
நன்றியுணர்வோ நபும்சகமோ அல்ல நான் கவிதை
யென்றது;
நகையின் இருபொருளுணர்த்தலல்ல நான் கவிதை
யென்றது
நல்முத்துமணியணிக்கோலமல்ல நான் கவிதை
யென்றது
நவரத்தின மயிற்பீலியல்ல நான் கவிதை
யென்றது
நட்சத்திரங்களின் எண்ணிக்கையல்ல நான் கவிதை
யென்றது
நிலவின் துண்டங்களல்ல நான் கவிதை
யென்றது
நல்லது நல்லது சொல் சொல் இன்னும் சொல்
என்றதற்கு
’ந’விலேயே வரிகளெல்லாம் தொடங்குவதல்ல கவிதை
யென்றது சொல்லிச் சென்றது.
நாணித் தலைகுனிந்தென் கவிதை (நற்)கதியிழந்து நின்றது.
No comments:
Post a Comment