LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, January 12, 2025

கவிதையெழுதுதல் வாசித்தல், மொழிபெயர்த்தல் குறித்து சொல்லத்தோன்றும் சில…. 1 லதா ராமகிருஷ்ணன்

 

கவிதையெழுதுதல் வாசித்தல், மொழிபெயர்த்தல் குறித்து

சொல்லத்தோன்றும் சில…. 

 

லதா ராமகிருஷ்ணன்

ஒரு வாசகராக எனக்கு முழுவதும் புரியாத கவிதையை நான் மொழிபெயர்ப்பது சரியா? இந்தக் கேள்வி ஒரு மொழிபெயர்ப்பாள ராக என்னுள் தொடர்ந்து எழுந்தவாறிருப்பது. ஆனால் ஒரு கவிதையைப் படிக்கும்போது அதில் கிடைக்கும் அர்த்த அடுக்குகள் புரிந்தும் புரியாமலுமாய் மனதை ஈர்க்க அது அடர்செறிவானது என்று உள்ளுணர்வுக்குப் பிடிபட அதை மொழிபெயர்க்கும் ஆர்வம் தோன்றுகிறது.

 

ஒரு வாசகராக அதைத் திரும்பத்திரும்பப் படிப்பது வழக்கமே. கவிஞர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். ஆனால் அது ஒரு வாசகராக என்னை மதிப்பி றக்குவதுபோல் தோன்றுகிறது. சமயங்களில்நீங்கள் என்ன நினைத்து எழுதினீர்கள்?’ என்று கவிஞரிடம் கேட்பது அவருடைய அந்தரங்கத்துள் அத்துமீறிப் பிரவேசிப்பதாகி விடுமோ என்று தோன்றுகிறது. கவிதையின் அடிநாதமே. அகவயமானது மட்டுமல்ல அந்தரங்கம். புறவயமான தும்கூட. காதல் மட்டும்தான் அந்தரங்கமானதா என்ன? அரசியலும் கூடத்தான்!

கவிஞர்கள் பூடகமாகக் கவிதையெழுதுவதை ஒரு உத்தியாகக் கையாள் வதில் தவறில்லை. உள்ளடக்கமும், நடையும்அரைத்த மாவையே அரைப்பதாக இல்லாமல் மாறுபட்டு, புதுமையாக அமையவேண்டும் என்ற அவா இலக்கியத்திற்கு செறிவூட்டுவது.

 

எல்லாக் கவிஞர்களும் எல்லா நேரங்களிலும் பூடகமாகவே எழுதுவ தில்லை. நேரிடையான கவிதைகளும் எழுதியிருக்கிறார்கள். எடுத்துக் கொண்டுள்ள கருப்பொருளும், இலக்கு வாசகர்களும், ஒரு கவிதையை எழுதுவதில் கவிஞருக்கு இருக்கும் இலக்கும் (வடிகால், குறிப்பிட்ட ஒருவருக்கு அல்லது ஒரு தரப்பினருக்கு ஒன்றை உணர்த்துதல் என்பதாய்)

 

கவிஞர்கள் தங்களது ஏதேனுமொரு கவிதை உருவான விதத்தைப் பற்றி, வார்த்தைத் தேர்வுகளைப் பற்றி, எழுதும் போக்கில் கவிதையில் நேர்ந்த மாற்றங்களைப் பற்றியெல்லாம் எழுதினால் படிக்க சுவாரசியமாக இருக்கும். கவிதை வாசிப்பு தொடர்பான சில தெளிவுகளும் பிறக்கலாம்.

 

ஒரு சொல்லை கவிஞர் பயன்படுத்தியுள்ள அர்த்தமும், அதை வாசகர் உள்வாங்கிக்கொள்ளும் அர்த்தமும், அகராதியில் தரப்பட்டுள்ள அர்த்தமும் எல்லா சமயங்களிலும் ஒரேபோல் இருப்பதில்லை. எடுத்துக்காட்டுஅலாதிஎன்ற சொல்.

 

பின்வரும் நான்கு கவிதைகளுமே குறியீடுகளாலான பூடகக் கவிதைகள்தான்.

 

.................................................................................................................

சிரிப்பை உதிர்த்தல்

_________________

சிரிப்பை உதிர்க்கிற மாதிரி

பூவை உதிர்கிகிறது செடி

உன் விரல்களால் நீளும் பாம்பின்

ஊர்தலை

குளிர்ச்சியாக கொத்திச் செல்லும்

கழுகின் மூக்கு இங்கு

பாறையில் சுகம் தீட்டுகிறது

இன்றைக்கு நீ முட்டாளாகும்

கிழமையை நிறைவு செய்கிறாய்

கனமற்ற வெளியில்

அசைந்து மிதக்கும் பொங்கின்

அலாதி எனதின் காட்சி

தலையை சொரிந்து கொண்டு

நாற்காலிக்கு நுழைவு சீட்டு

பெறும் வரிசையில்

கிழிந்த படி இருக்கும்

சட்டையை பற்றிக் கொண்டு

நகரத்துக்குள் நுழையும் கவனம்

வுன் முக இறுக்கம் காட்டுகிறது

கட

_ பொன் இளவேனில்

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 

 

நாட்களை ஒவ்வொன்றாக

எடுத்து வீசிக்

கொண்டிருக்கிறேன்.

அதில் இருந்த

கழுதைகளும்

கோமாளிகளும்

என்னுடனேயே

தங்கிவிட

சிறுவயதில்

அம்மாவால்

அறையப்பட்ட என்

கன்னங்கள்

முழுதும் உரோமக்

குவியலாகி

எனது கையாலேயே

கோதிவிடப்படுகின்றது.

பசியால்

அழுது கொண்டிருக்கும்

குழந்தைக்காக இரங்கிய

கழுதையை

ராஜா வெட்டி வீழ்த்துகிறான்.

நான் சிரித்துக் கொண்டிருக்கிறேன்.

 

சுந்தர் நிதர்சன்

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 

 

கனவில் நகரம்

கனவுக்குள் மிக எளிதாக புகுந்து விடும்

நகரம் விதவிதமாக குளிக்கிறது

கனவுக்குள் வரும் நகரவாசிகள்

பிச்சை எடுப்பதில்லை

புகைபிடிப்பதில்லை

மட்டமாகவோ தரமாகவோ பாடுவதே இல்லை

ஆனால் மதுபாட்டில்களை தோள்களில்

கட்டிக் கொண்டு

அதன் எழுத்துகளைக்கூட சுரண்டுகிறார்கள்

ஒருநாள் ஒளியை தாவித் தாவி பிடிக்கும் மனிதனைச் சந்தித்தேன்

பின்னொரு நாளில்

தன் கபாலத்தைத் திறந்து

மூளையை கையில் எடுக்கும் ஒருவனை

சாலைகளுக்கு மேகம் போர்த்தும் ஒருவனை /

சிட்டுக் குருவிகளை கூடை கூடையாய்

சுமக்கும் ஒருவனை /

தண்ணீரைப் பாதரசமாக்கும் சிறுமியை/

பாம்புச் சட்டையை அணியும் கைகளை /

குறவன் எழுத்துருக்களை குகைமேல் உருவாக்குவதை/

உதிரமரத்துப் பட்டை ஊருக்குள் வலம் வருவதை/

நிலா நிமிர்ந்து கோடாகி

கோலாகி குத்திட்டு நிலத்தில் நிற்பதை/

கடல் சங்குகள் வானத்தில பறப்பதை /

வானவில்லின் நிறங்கள் உருகுவதை/

ஆயிரம் ஆலய மணிகள் கூடுவதை/

நிலத்தின் உள்ளே கும்பங்கள் சுற்றுவதை/

மஞ்சள் கிழங்குகள் குமரிகளாவதை/

ஆலவேர்கள் நாகங்களாவதை /

பனம்பூ மாலை கட்டி ஆடும் கிழவிகளை/

மேகத்தில் நடராஜ பிம்பத்தை/

இலைகள் பேசுவதை/

வெள்ளெருக்கு வேர் முனிவராகுவதை/

சிவப்புச் சூரியன் உதிப்பதை /

பூமி தகடாகப் பறப்பதை /

புல்கிரீடம் சூடி ஆடும் எறும்பை /

நீலத்தாமரை என் முதுகுத் தண்டில் முளைப்பதை/

இப்படி எவ்வளவோ இரவுகள்

இதனுள் இந்த நகரம் குளித்து

தங்க உடை மாற்றியதும் உண்டு

மலைகளை ஆமைகள் சுமந்ததும் உண்டு

 

தேன்மொழி தாஸ்

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> 

 

உன் வசமிருக்கும் நிழல் துண்டை வெட்டி எடு..

*

ஒரு பிடிவாதத்தைக் கைவிடுவது என்பது முடியாத காரியம்

ஒரு மௌனத்தை விலை பேசுவதென்பது கடினமான காரியம்

ஒரு துயரத்தை பணயம் வைப்பது என்பது பந்தயம்

நீயாகிய இருப்பை இல்லாமல் செய்வது என்பது தற்கொலை

பேச்சுவார்த்தை நோக்கி விடுக்கும் அழைப்பை மறுதலித்து

ஒற்றை சூட்சுமத்தின் இலைத்துடிப்பு

அந்தரங்கத்தின் நிழல் பகுதியாகி முளைக்கும் விஷச் செடியில் பூக்கும்

கணங்களின் நறுமணத்தை சுவாசிக்கும் கரிசனம்

எனக்கு வாய்த்திருக்கிறது

வெயிலடித்துக் கொண்டிருக்கும் நம் சந்தையின் நடைபாதையில்

விலைபோகும் மௌனங்களின் துயரத்தை பேரம் பேச

உன் வசமிருக்கும் நிழல் துண்டை வெட்டி நடு

பணயமோ பிடிவாதமோ

கைவிடுதல் என்பது முடியாத காரியம்

தற்கொலைப் பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் பேசிக்கொள்வோம்

துணைக்கு இரண்டொரு ஆட்கள் சேரட்டும்

உபயோகமற்றுப் போன பழைய உரையாடல்களை

பரணிலிருந்து இறக்கி வைக்க யாரையாவது அனுப்பிவை

அது இப்போதைய உபரித் தேவை

நீயாகிய இருப்பை இல்லாமல் செய்வதென்பது முட்டாள்தனம்

பேரத்தைக் கவனி

****

 

- இளங்கோ

.................................................................................................................

ஒரு கவிஞரை அறிந்தவர்களுக்கு அவருடைய கவிதையில் இடம்பெறும் அவரை ஓரளவு அடையாளங்காண முடியும் என்று தோன்றுகிறது. அப்படியும் உறுதியாகச் சொல்ல முடியாது. கவிஞரை தனிப்பட்ட முறையில் அறிந்திராதவருக்கு?

 

ஒரு கவிஞரைத் தொடர்ச்சியாகப் படித்துவந்தால் அவர் பயன்படுத்தும் சொற்கள், சொற்சேர்க்கைகள், அவர் முன்வைக்கும் கருத்து அல்லது காட்சியின் பின்னுள்ள குறிப்புணர்த்தல்களைப் புரிந்துகொள்ள முடியும் என்று சிலர் சொல்வது முழுக்க உண்மையாக இருக்க வழியில்லை.

அப்பட்டமாக ஒற்றை அர்த்தத்தில் புரியும் கவிதைகளிலும் நெகிழ்வூட்டுவதும், அடர்செறிவானதும் உண்டு. வறண்ட கவிதை களும் உண்டு. அதைப்போலவே, முழுக்கப் புரியாமல் போனாலும் மனதை நெகிழச்செய்யும் கவிதைகளும் உண்டு. ஒரு சிறு திறப்பின் மூலமேகூட உள்ளிருக்கும் விலைமதிப்பற்ற பொக்கி ஷங்களின் ஒளிப்பொறிகளைக் காட்டிவிடும் கவிதைகளும் உண்டு.

 

ஒரு கவிதையை வாசகராகப் படிக்கும்போது அதன் பல்வேறு அர்த்த சாத்தியப்பாடுகளை எண்ணிப்பார்க்க அவகாசம் இருக்கி றது. ஆனால், அதுவே ஒரு மொழிபெயர்ப்பாளராக இயங்கும்போது இலக்குமொழியான ஆங்கிலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்களைக்கொண்டுவந்துவிட வழியிருக்கிறதா என்று பார்த்து, அப்படி வழியில்லாதபோது எந்த அர்த்தத்தை முன்னி லைப்படுத்தவேண்டும் என்று முடிவெடுக்கவேண்டிய நிலை.

ஒரு கவிதை நன்றாகவே புரிந்துவிடும். ஆனால், அதில் பயன்படுத்தப் பட்டுள்ள ஒற்றை வார்த்தை புரியாது. அல்லது, அது பயன்படுத்தப்பட்டிருக் கும் அளவில் திட்டவட்டமான ஒரு பொருளைத் தராது குழப்பமேற்படுத்தும். அத்தகைய நிலைமை யில் அந்த ஒற்றை வார்த்தைக்காய் அந்தக் கவிதையையே மொழிபெயர்க்காமல் விட்டுவிடுவதா? சமகாலக் கவிஞரென்றால் தொடர்புகொண்டு கேட்டறியலாம். காலத்தால் முந்திய, தற்போது இல்லாத கவிஞரென்றால்?

***


நேரிடையான கவிதைகளிலும் நெகிழ்வூட்டும் கவிதைகள் உண்டு என்று குறிப்பிட்டிருந்தேன். நேரிடையான கவிதைகள் அத்தனை நேரிடையானவையா என்றவொரு கேள்வி அத்தகைய ஒரு கவிதையை மொழிபெயர்க்கும்போதெல்லாம் தவிர்க்கமுடியாமல் எழும்.
நேரிடையான கவிதை எல்லோருக்கும் பொதுவான ஒரு வலியை இழப்பை, அவமானத்தைப் பேசும்போது அதில் வாசகரால் இயல்பாகப் பொருந்திக்கொண்டுவிட முடிகி றது. ஆனால், எல்லா நேரிடையான கவிதைகளும் எல்லோருக்கும் அதேயளவு நேரிடையான கவிதையாகி விடுவதில்லை.
எடுத்துக்காட்டாக கவிஞர் ராஜாஜி ராஜகோபாலனின் பின்வரும் கவிதையை எடுத்துக்கொள்ளலாம்.
கடவுள்கள் தூங்கிக்கொண்டிருந்தவொரு நாளில்
அந்த நாடு கொல்லப்பட்டது
அதன் ஆத்மா அந்தரித்துச் சஞ்சரித்த வான்வெளி
பீரங்கிகள் எழுப்பிய புகை மூட்டத்தால்
இரும ஆரம்பித்தது
குருதி வெள்ளம் அடிவானத்தை மூழ்கடித்தது
ஆத்மாவின் அந்தரிப்பு அலறலாய் எழுந்தது
எந்தக் கடவுளின் காதிலும் அது விழவில்லை
இறுதியில் அது ஓய்ந்து அடங்கியபோது
கடவுள்கள் தூக்கம் கழிந்தனர்
நாம் விழிப்பாக இருந்திருந்தால்
அந்த நாடு கொல்லப்பட்டதை
அனுமதித்திருக்கமாட்டோமென ஆர்ப்பரித்தனர்
ஆத்மாவையாவது உயிர்த்திருக்க வைத்திருக்கலாம்
அதைக் கொன்றது பீரங்கிகளல்ல
கேளாதிருந்த கடவுள்களுமல்ல
இப்போது உயிர்பிழைத்து வாழ்கின்ற நாம்
இந்தக் கவிதை புலம்பெயர்ந்துவாழும் தமிழர்களுக்குத் தரக்கூடிய குறிப்புணர்த்தல்கள் எத்தனையெத்தனை! இந்த நேரிடையான கவிதைக் குள் அடர்ந்திருக்கும் மௌனமும் பெருமூச்சும் ஆற்றொணாத் துயர மும் எத்தனை அடர்த்தியானது.
நேரிடையான கவிதைதானே என்று மொழிபெயர்ப்பாளர் இத்தகைய கவிதையை அரைகுறை கவனத்தோடு அணுகிவிடலாகாது. அது கவிதைக்குச் செய்யும் நியாயமாகாது.
ஒருவகையில் இத்தகைய நேரிடையான கவிதைகளில் நிறைந்திருக்கும் மௌனங்களும், பேசா மொழிகளும் கூட குறியீடுகளே;
நான் தமிழில் மொழிபெயர்த்த ஆரம்ப நூல்களில் ஒன்றான இத்தாலிய எழுத்தாளர் ப்ரைமோ லெவியின் சிறுகதைகள் நினைவுக்கு வருகிறது. கவிஞர் பிரம்ம ராஜன் அறிமுகப்படுத்திய எழுத்தாளர். ப்ரைமோ லெவி யின் நூல்களையும் கவிஞர் பிரம்மராஜனே அனுப்பித் தந்துதவினார். நான் மொழிபெயர்த்த சிறுகதைகள் புதுப் புனல் பதிப்பக வெளியீடாக வந்தது
யூதராகப் பிறந்த காரணத்தால் ஹிட்லரின் வதைமுகா முக்குள் இருக்கும் வேதியியலாளர்(chemist) ப்ரைமோ லெவி. அந்த முகாமில் பல்வேறு மனிதர்களை அந்தக் கொடியச் சூழலுக்குள்ளும் பல மனித மாண்புகளைக் காணநேர்கிறது. கெமிஸ்ட் என்பதால் அவர் கொல்லப் படுவது தள்ளிப்போடப்படுகிறது. நேற்றுவரை அவரோடு உரையாடிக் கொண்டிருந்தவர்கள் ‘கேஸ் சேம்பருக்கு’ அழைத்துக்கொண்டுபோகப் படுவதை எதுவுமே செய்யமுடியாமல் பார்த்துக்கொண்டிருக்கும் ப்ரைமோ லெவி வதைமுகாமிலிருந்து விடுவிக்கப்பட்டவுடன் அங்கு நடந்தவற்றை ஆவணப்படுத்தவேண்டுமென்ற வேகத்தில் எழுத்தாளராக உருவெடுக்கிறார்.
வதைமுகாமில் தன்னோடு இருந்தவர்களை பின்னர் எங்கு பார்த்தாலும் அவர்கள் பேசியதெல்லாம், வேறு மொழியாக இருந்தாலும்கூட, ஒரு வார்த்தைவிடாமல் தன்னுள் எதிரொலிக்கும் என்று அந்த நாட்கள் தன்னைத் தொடர்ந்து அலைக்கழித்துக்கொண்டிருப்பதைப் பற்றிக் குறிப் பிட்டுள்ளார்.
அதைக் கொன்றது பீரங்கிகளல்ல
கேளாதிருந்த கடவுள்களுமல்ல
இப்போது உயிர்பிழைத்து வாழ்கின்ற நாம்
என்ற வரிகள் என்ற கவிஞர் ராஜாஜி ராஜகோபாலனின் இறுதிவரிகள் என்னுள் ப்ரைமோ லெவியை மீட்டுயிர்ப் பித்தன!
இந்த வகை குற்றவுணர்ச்சி நம் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விஷயத்தில், ஒவ்வொரு விதமாய், ஒவ் வொரு அளவில் கண்டிப்பாக இருக்கும். இத்தனை எண்ணவோட்டங்களை என்னுள் கிளர்த்தும் கவிஞர் ராஜாஜி ராஜகோபாலனின் கவிதையை நான் நேரிடை யான கவிதை என்று ஏனோதானோவென்று மொழி பெயர்த்துவிட இயலுமா என்ன?
மேலும், melodramaவைக் கையாளாமலேயே(underplay of emotions மூலம் என்றும் சொல்லலாம்) கவிஞர் தன் பரிதவிப்பைப் பகிர்ந்திருப்பதும் கவனிக்கத்தக்கது. எனவே, இலக்குமொழியில் அதை மொழிபெயர்க்கும் போது மூல கவிதையின் இந்தத் தன்மை குறித்து ஒரு மொழிபெயர்ப்பாளராக கவனம் செலுத்தவேண்டியதன் அவசியத்தை உணர முடிந்தது.
மூல கவிதையில் கசிந்துவழியும் அந்தப் பரிதவிப்பை ஓரளவேனும் என் மொழிபெயர்ப்பு எதிரொலிக்க வேண் டும் என்பதே மொழிபெயர்ப்பாளராக நான் மனமார விரும்புவது; முயற்சிப்பது.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
அபஸ்வரம் நுழையாத் தொலைவில் நான்
******************************************
எப்பொழுதோ வந்தாயிற்று
வெளி வட்டத்துள்
கேசம்
நரையைத் தத்தெடுத்தபின்னும்
சூரியனுக்கு
எதிர்த் திசையிலிருக்கும்
உகத்தின் நிறமாய்
மனது
தமருகம் அதிர அதிர
உருவேறும் பூசாரியாய் உனது சொற்களில்
வெறியாட்டு நிகழ்த்துகிறது
எனது யாக்கை
உச்சி வெயிலில்
குளத்தில் கல்விட்டெறிய
தெறிக்கின்ற ஈரச் சூரியனென
நினைக்கிறாய்
பூவையும் உதிர்க்கும்
சருகையும் நகர்த்தும்
மரத்தையும் முறிக்கும் காற்றாய்
வாழ்க்கை
உனக்கு மேலும்
ஒரு
பூவோ சருகோ மரமோ
இருக்கலாம்
முதுகில் துயரச் சிலுவையும்
தலையில் முள்முடியும்
நீ சூட்டினாலும்
எனது
வாழ்க்கை சாரம் மிக்கதாய்
நொடிதோறும்
ஈர்ப்பு விசை எதுவுமற்ற
பேரண்ட வெளியில் பறக்கிறேன்
இறகாய்
உனது அபஸ்வரம்
நுழையாத் தொலைவில்
எனது செவிப்பறை
ஆதலால் நிறுத்து!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
ப்ரியா பாஸ்கரன்.கவிதை இது: இது உறவுமுறிவைப் பேசுகிறது என்று ஒரு பார்வைக்குப் படுகிறது. எத்தனை பேர் உறவுமுறிவை நாகரிகமாகக்கடந்துபோகிறார்கள்? ஒரு தரப்பினர் இன்னொரு தரப்பினரை empathy யோடு பார்ப்பதெல்லாம் அரிதாகவே இருக்கிறது.
அபஸ்வரம் என்ற சொல் சுபஸ்வரத்தைக் குறிப்புணர்த் துகிறது
தமருகம் அதிர அதிர – கவிஞர் உடுக்கை என்றோ மேளம் என்றோ சொல்லாமல் தமருகம் என்ற சொல்லைப் பயன்படுத்தியிருப்பது கவிதை முன்வைக்கும் சந்நத நிலைக்கு வலுசேர்க்கிறது. இதற்கு சரியான ஆங்கில வார்த்தையைத் தேர்ந்தெடுக்க முடியவில்லையே என்று நானாகிய மொழிபெயர்ப்பாளரை நானாகிய வாசகர் திட்டிக்கொண்டேதானிருந்தார் மொழிபெயர்க்கும் நேரமெல்லாம்!
ஒரு வலியை அல்லது இழப்பைச் சொல்வதாலேயே ஒரு கவிதை கவிதையாகிவிடுவதில்லை. அதைச் சொல்லும்விதத்தாலேயே கவிதையாகிறது.
கேசம் நரையைத் தத்தெடுத்தபின்னும் – அப்படியெனில் சொந்தக் குழந்தை கருங்கூந்தல் தானே!
காரிருட்டு மனம் என்று சொல்லியிருக்கலாமே – ஏன் சூரியனுக்கு எதிர்த்திசையிலிருக்கும் உகத்தின் நிறமாய் என்று பேசவேண்டும்? சூரியனின் எதிர்த்திசையிலிருக் கும் உகமும் நேர்த்திசைக்கு வரும் என்ற உட் குறிப்பா?
ஈரச்சூரியன் என்ற சொல்லாக்கம் எத்தனை அடர்செறி வானது! ’ஈரமாயிருந்தாலும் நான் சூரியன் என்ற உட் குறிப்பு; ‘நான் ஈரச்சூரியனல்ல நீ எள்ளிநகையாடுவதற்கு’ என்ற அறைகூவல் –
இந்தக் கவிதையை மொழிபெயர்க்கும் நேரமெல்லாம் இந்த உட்குறிப்புகள் மனதில் அலைமோதியவண்ணமே.
சில சமயம் வேறு வழியில்லாமல் drum போன்ற வார்த் தையை ‘தமருகம்’ போன்ற அடர்த்தியான சொல்லுக்கு இணையாகத் தந்துவிட நேர்கிறது.
அதிர அதிர என்ற சொல், அதுவும் அடுத்தடுத்து இரு முறை இடம்பெறும் போது thundering, roaring vibrating என்று எந்தச் சொல்லுமே அதற்கு ஈடாவதில்லை!
இதில் என் மொழிப்போதாமையும், போதிய கால அவகா சம் எடுத்துக்கொள்ளாமல் மொழிபெயர்ப்பதும்கூட காரணமாக அமையலாம்.
ஆனால், அப்பழுக்கற்ற மொழிபெயர்ப்புக்கான கால அவ காசத்தை யாரால் திட்டவட்டமாக நிர்ணயித்துச் சொல்ல முடியும்?

 

No comments:

Post a Comment