LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, October 15, 2022

சுயநலம் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 சுயநலம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

பிறந்தது முதலே ஒட்டிப்பிறந்ததாய்
அந்த அழுக்கு அரைப்பாண்ட்டை அணிந்திருக்கும் மனிதனுக்கு இருநூறுக்கு மேல் வயதிருக்குமோ என்னவோ.
அந்த வயிறு இதற்குமேல் உள்ளொடுங்கியிருக்கவியலாது.
’பணம் வேண்டாம், டீ வாங்கித்தா’ என்ற குரல் வானத்தின் எந்த உயரத்திலிருந்து என்னை வந்தடைந்தது?
நான் வாங்கித்தந்த முழுக்கோப்பை என்ற பெயரிலான காலே அரைக்கோப்பை தண்ணித்தேனீர்
அந்த நடுங்கும் கைகளில் குலுங்கும் நெகிழிக்கோப்பையிலிருந்து
அந்த மனிதனின் உதடுகளுக்குள் நுழையும்
எத்தனத்தில்
என் கண்களில் நீராகிக் குத்துகிறது,
நிறையவே வலிக்கிறது…..
***
பிச்சையெடுக்கும் தாயுடன் நடந்துவரும் சிறுவன்
என்னைப் பொறுத்தருளட்டும்.
’அவனுடைய அவல எதிர்காலத்திற்கு நானும்தான் பொறுப்பேற்கவேண்டும்’
என்று திரும்பத்திரும்பச் சுட்டிக்காட்டும் இந்த மனசாட்சியை எந்த முதுமக்கட்தாழியிலடைத்து எங்குபுதைக்க?
பத்து குடும்பங்கள் மேஸ்திரியால் கைவிடப்பட்டு பட்டினி கிடப்பதாய்
பேரோலத்தை முணுமுணுப்பாய் வெளியிடும் அந்தத் தாயிடம்
முதலில் என்னிடமிருந்த நூறு ரூபாயைத் தருகிறேன்.
பின், மனசாட்சி வறுத்தெடுக்க ஒரு ஐந்நூறு ரூபாயைத் தருகிறேன்,
கூனிக்குறுகிக் கும்பிட்டு தளர்ந்த நடையுடன் அப்பால் செல்லும் அந்தச் சகோதரியின் முதுகு என் கண்களிலிருந்து மறைய மறைய வேகமாய் என் கால்கள் தன்னிச்சையாகப் பின்தொடர்ந்து செல்ல, எஞ்சியிருந்த இன்னொரு ஐந்நூறு ரூபாய்த்தாளையும் அவர் கைகளில் தருகிறேன்,
பத்து குடும்பங்களுக்கு ஒருவேளை சாப்பாட்டுக்காவது போதுமானதாகட்டும்
என்ற பிரார்த்தனையோடு….
***
இரவு எட்டுமணிக்கு கடைகளெல்லாம் அரைமூடியிருக்க
முப்பது ரூபாய் முழத்தை பத்து ரூபாய்க்குத் தருவதாய் களைத்த குரலில் கூவுகிறார் பூக்காரம்மா.
அவருடைய பின்புறத்திலிருந்து மாயமாய் முளைத்த சிறுமி
ஒரு ராஜகுமாரியின் தோரணையுடன்
செருப்பு வாங்கித்தரச்சொல்லிக் கேட்கும்போது
நான் எப்படி மாட்டேன் என்று சொல்வது?
ஒரு பார்வையில் தனக்குவேண்டியதை எடுத்துக்கொண்டு
‘தாங்க்ஸ் அக்கா’ என்று சொல்லி சடுதியில் மறைந்துவிடுகிறாள் கம்பீரமாய்.
நாளை அவளது கால்களைப் பொசுக்கமுடியாமல்
நன்றாக ஏமாறும் கதிரோனைப் பார்த்து கண்சிமிட்டக்கூடும்.
அந்த ஏழைச்சிறுமி
இளவரசியாகட்டும் எதிர்கால சாம்ராஜ்யத்தில்;
ஏழையென்றெவருமில்லாமல்
புரந்துகாக்கட்டும் குடிகளை.
***
என் ஒரு வார செலவுக்கான பணத்தைத் தந்து
எனக்கான பாவமன்னிப்பைப் பெறமுடியுமா தெரியவில்லை.
இந்த ஊரடங்கு காலத்தில்
அலாவுதீனின் அற்புதவிளக்கு
எங்கேனும் மலிவுவிலைக்குக் கிடைத்தால்
எத்தனை நன்றாயிருக்கும்……

No comments:

Post a Comment