பகடையாட்டம்
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
ஒரு கொலையாளி போராளியாவதும்
போராளி கொலையாளியாவதும்
அவரவர் கை துருப்புச்சீட்டுகளாய்
பகடையாட்டங்கள் _
அரசியல்களத்தில்
அறிவுத்தளத்தில்
ஆன்மிக வெளியில்
அன்றாட வாழ்வில்.
நேற்றுவரை மதிக்கப்பட்ட
தலைவர்
மண்ணாங்கட்டியாகிவிடுவதும்
முந்தாநேற்றுவரை மதிப்பழிக்கப்பட்ட தலைவர்
மகோன்னதமாகிவிடுவதும்
பிறழா விழிப்பு மனங்களின்
மிகு சூட்சுமச் செல்வழியாய்.
மக்கள் மக்கள் என்று மேலோட்டமாய்
செய்யப்படும் உச்சாடனங்களில்
மன்னர்களே மையக்கருவாய்
உட்குறிப்பாய்..
கட்டவிழ்ப்புக்குக் கட்டுப்படாததாய்
முழங்கப்படும்
கருத்துரிமை பேச்சுரிமை எழுத்துரிமை
ஒட்டுமொத்தமாய் பார்க்க
வெறும் மூளைச்சலவையாய்….
விட்டகுறை தொட்டகுறையாய்
தொடரும்
கண்ணியப்பேச்சு
முட்டாள்களுடையதாக்கப்பட்டு
வெகு நாளாயிற்று.
‘அடேய் சோமாறி என்று ஆரம்பித்து
மாற்றுக்கருத்தாளரை முதலிலேயே
உருட்டி மிரட்டி
வாயடைத்துவிடுவதே
ஆன்ற அறிவுசாலிகளுக்கும் அழகு.
அது இருக்கும் பதினைந்தாண்டுகள்
நான் திரையரங்கிற்குச்
சென்று படம் பார்த்து...
பொன்னியின் செல்வனைப் போய் பார்க்கவில்லையானால்
பிடித்திழுத்துச்சென்று கழுவேற்றிவிடுவார்களோ?
பயமாகவே இருக்கிறது.
மணிரத்னத்தை மணிமணியாய் பாராட்ட
படைப்பாளிகள் அணிதிரள்வதுபோல்
மாண்புமிகு திரையுலகினர்
சோபா சக்தியின் புதினங்களை
பிரம்மராஜனின் கவிதைகளை
யூமா வாசுகியின் கவிதைகளை
அமர கவி ஃப்ரான்ஸிஸ் கிருபாவை
பாலைவன லாந்தரை, ரியாஸ் குரானாவை
ரமேஷ் பிரேதனை, யவனிகா ஸ்ரீராமை,
அய்யப்ப மாதவனை……
நீளும் சமகால படைப்பாளிகளின் பெரும்பட்டியலிலிருந்து
யாரையேனும் பேச அணிதிரள்வார்களோ
அரங்கு நிறைப்பார்களோ....?
அட அவர்களோடு ஒன்றிவிட்ட
படைப்பாளிகளுக்காகவாவது
மடைதிறந்த வெள்ளமென்றொரு
நாள்
பாராட்டுவிழா நடத்துவார்களோ...?
தலைகொய்துவருவோரின் வீரபராக்கிரமங்களின் முன்
இலையனைத்தாய் துவளும் மனங்கொண்டோர்
எம்மாத்திரம் ......
அலைபாயும் வினாக்கள்
அலைபாயுதேக்களுக்கு அப்பால்.
No comments:
Post a Comment